நற்செய்தி அறிவிப்பு

இணையப் பத்திரிகைகள், ஃபேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற பொது வெளிகள் எதிலும் நான் பலகாலமாக எழுதாமலே இருந்து வருகிறேன். விட்டகுறையாக ட்விட்டரில் மட்டும் சமீப மாதங்கள் வரை எழுதி வந்தேன்.

இப்போது அதுவும் இல்லை. கடந்து சென்ற அக்டோபர் 24, விஜயதசமி தினம் தொடங்கி எனக்கான பிரத்தியேகக் குறுவரிப் பலகையை இத்தளத்துக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டு அங்குதான் எழுதி வருகிறேன்.

இனி எழுதலாம் என நினைப்பவற்றையும் இங்கும் அங்குமாகத்தான் எழுதுவேனே ஒழிய, சமூக வலைத்தளங்கள், டம்ளர், டேக்சா போன்ற புதுக்கவர்ச்சிகளைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை. அவ்வண்ணமே அடுத்தவர் வலைப்பதிவுகளில் கமெண்ட் போடும் உத்தேசமும் இல்லை.

இதெல்லாம் எதற்காகவென்பீர்களேயானால், அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன் அரங்கமாநகருளானே என்னும் ஆழ்வார் வாக்குக்கேற்ப, என் பேரில் வெளியிடங்களில் நீங்கள் எதைக்கண்டாலும் அதன் உரிமையாளன் நானல்ல என்பதை நிறுவுவதற்காகவே.

சில நிமிடங்களுக்கு முன்னர் எனது ட்விட்டர் பக்கத்துக்குள் போக முயற்சி செய்தபோது கடவுச்சொல் தவறு என்று வந்தது. ஏழெட்டு முறை முயன்றும் அதே நற்செய்தி. ஒருவழியாக நண்பர் பெனாத்தல் சுரேஷின் உதவியால் உள்ளே நுழைந்து கடவுக் கதவை மாற்றிவைத்துவிட்டு இதனை எழுதுகிறேன்.

எனக்கு ஊர்ப்பட்ட வேலை இருக்கிறது. முன்னைப்போல் இணையத்தில் அதிக நேரம் புழங்குவதுமில்லை. வருகிற சில நிமிடங்களில் யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று முழுதாகப் பார்த்துப் போகக்கூட முடிவதில்லை. இந்த லட்சணத்தில் சந்து வெளி நாகரிகத்தை அகழ்வாராய்ந்து, பேர் கெடுக்கும் புண்ணியவான்களின் முகத்திரை கிழிக்கவெல்லாம் எனக்கு திராணியில்லை.

ஆகவே இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நிகழும் நந்தன வருடம் கார்த்திகை 25ம் தேதி முதலாகவும், கிபி 2012, டிசம்பர் 10ம் தேதி முதலாகவும் என்னுடைய இந்த writerpara.com மற்றும் இதன் ஒட்டுத்தளமான slate.writerpara.com என்கிற இரு இடங்கள் தவிர, இணையவெளியில் நான் வேறெங்கும் வெறும் ஸ்ரீராமஜெயம் கூட எழுதுவதில்லை என உறுதிபூண்டிருக்கிறேன்.

சுபமஸ்து.

5 comments

  • அரங்கமாநகருளானே என்று முடிப்பவர் தொண்டரடிப்பொடியாழ்வார்.

    அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன் என்று பாடியவர் பெரியாழ்வார்.

    இருவரையும் இணைத்து ஒரு புதிய பாசுரம் பாடியிருக்கிறீர்கள்.

    நன்று.

    • குலசேகரன்: ஆழ்வார்கள் என் பெட். என்ன வேண்டுமானாலும் செய்வேன். கேட்கமாட்டார்கள். இந்தத் தளத்திலேயே தேடிப்பார்த்தீர்களென்றால் இம்மாதிரி இன்னும் பல காக்டெயில் கிட்டும். மொழியின் சாத்திய எல்லைகளை விரிவு படுத்திப் பார்க்க இம்மாதிரியான முயற்சிகள் தேவை என்பது என் கருத்து. பாட்டன் சொத்தை நாறடிக்காத பேரன் யார் உலகில்?

    • அரங்கம் = ஸ்ரீரங்கம்; நகருளான் = நகரில் உள்ளவன். ஸ்ரீரங்கநாதரை ஆழ்வார் அப்படிக் கூப்பிட்டார்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version