சென்னை புத்தகக் கண்காட்சி 2013

bookfair 039நந்தனம் ஒய்யெம்சியேவுக்கு இடம் பெயர்ந்திருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இன்று மாலை சென்று வந்தேன். அண்ணாசாலை முகப்பிலிருந்து கண்காட்சி அரங்கைச் சென்றடைவதற்குள்ளேயே நாக்கு தள்ளி விடுகிறது. அதற்குமேல் அத்தனாம்பெரிய வரிசைகளை முழுதாக ஒரு முறை சுற்றி வந்தால் சுமார் நாலே முக்கால் கிலோ இளைத்துவிடலாம். இந்த இடப்பெயர்ச்சியின் விளைவாக நிறையப்பேர் வருவார்கள் என்று அமைப்பாளர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் ஒரு நாள் வந்தவர் நிச்சயமாக மறுநாள் வர யோசிப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

நிற்க. இடம்தான் மாறியிருக்கிறதே தவிர ஏற்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. அதே படு கேவலமான நடைபாதை. பாதை அகலம் குறைந்திருக்கிறதோ என்னமோ, ரொம்ப அடைசலாக உணர்ந்தேன். இரண்டு மூன்று இடங்களில் கால் தடுக்கி விழப் பார்த்தேன். ஒரே நாளில் நடைக்கம்பளங்கள் பல்லை இளித்துவிட்டன. ஆங்காங்கே மரத்தரையும் தொளதொளத்து இருக்கிறது. கவனமாகத்தான் நடக்க வேண்டும்.

கடைகளின் எண்ணிக்கை கூடியிருப்பதுபோல் பட்டது. ஆனால் பிரமாதமாகச் சிலாகிக்கும்படி புதிதாக புத்தகங்கள் வந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை ஒளிந்திருக்கலாம். என் கண்ணில் படவில்லை. விகடனில் மட்டும் புதிதாகக் கொஞ்சம் பார்த்தேன். கிழக்கின் உள்ளே போக முடியவில்லை. நல்ல கூட்டம். நண்பர்கள் யாராவது கண்ணில் படுகிறார்களா என்றால் அதுவுமில்லை. கிழக்கின் ஏதோ ஒரு கடையில் யாரோ ஒரு புது அம்மணி, கிடைச்சாண்டா கோயிஞ்சாமி என்று என்னை இழுத்து வைத்து டயல் ஃபார் புக்ஸின் அருமை பெருமைகளை விளக்கப் பார்த்தார். நானா சிக்குவேன்? பின்னங்கால் பிடரி.

முழுதாக ஒரு சுற்றுதான் இன்று முடிந்தது. ரொம்ப கவனமாகப் பார்த்தேன் என்று சொல்ல முடியாது. ஆனால் ஏனோ சுவாரசியமாக இல்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு சில நண்பர்களைச் சந்திக்க முடிந்ததுதான் மகிழ்ச்சியளித்தது. சண்டே இந்தியன் அசோகன், குமுதம் தளவாய் சுந்தரம் இருவரும் கண்காட்சியைப் போலவே இடம் பெயர்ந்திருக்கிறார்கள். தளவாய், காட்சிப்பிழை என்ற சினிமா [மக்கள் சினிமா அல்ல; அறிவுஜீவி சினிமா] பத்திரிகையின் ஆசிரியராகியிருக்கிறார். அசோகன், அந்திமழைக்கு. தளவாய், காட்சிப்பிழை இதழொன்றைக் கொடுத்தார். அட்டையில் சமந்தா அழகாக இருந்தார். அறிவுஜீவிகளுக்கும் சமந்தா பிடிக்கும். அசோகன், தனது நாவலொன்று வந்திருக்கிறது என்றும், கிளம்பிப் போவதற்குள் எனக்கொரு பிரதி கொடுத்தாக வேண்டும் என்றும் சொன்னார். 108 ராமஜெபம் செய்து அவர் கண்ணில் படாமல் தப்பித்து வந்துவிட்டேன். ஐகாரஸ் பிரகாஷைப் பார்த்தேன். மூக்குக் கண்ணாடி இல்லாமல் இருந்தார். விசாரித்தால் ரிப்பேருக்குக் கொடுத்திருப்பதாகச் சொன்னார். கண்ணாடியில் ரிப்பேர் செய்யக்கூடிய பாகம் எதுவாயிருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

உள்ளே நுழைந்த கொஞ்ச நேரத்திலேயே கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலும்  நண்பர் குகனின் [நாகரத்னா பதிப்பகம்] தோளில் கைபோட்டு பாதி வெயிட்டை அவர்மீது தள்ளியபடியேதான் நடந்தேன். குகன் ஒரு சமத்துக் குழந்தை. எனவே ஒன்றும் சொல்லவில்லை. ஆர்வமுடன் சில புதிய புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார். அவை நன்றாக விற்று, அவர் மேலும் புத்தகங்கள் வெளியிடும்படியான உற்சாகத்தை இந்தக் கண்காட்சி அவருக்குத் தரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நான் கிழக்கில் இருந்த காலத்தில் குகன் சொல்லிக்கொண்டிருந்த உலக சினிமா புத்தகத்தை இப்போது முடித்து, கொண்டு வந்திருக்கிறார். புரட்டியதில், அவர் குறிப்பிட்டிருக்கும் படங்களில் பாதிக்குமேல் நான் பார்த்ததில்லை என்பதே தமிழ்த் திரையுலகில் எனது கொடி பட்டொளி வீசிப் பறக்கும் என்பதைப் பறைசாற்றுவதாக இருந்தது.

கிளம்புவதற்குக் கொஞ்ச நேரம் முன்னால் கேபிளும் அப்துல்லாவும் எதிரே வந்தார்கள். இந்தக் கண்காட்சியில் கிழக்கு சந்து என்ற ஒன்று இல்லாதபடியால் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் தலையைத் தடவி, அந்தக் கடை வாசலைக் குத்தகை எடுத்திருக்கிறார்கள். சிறிது நேரம் அங்கே நின்று பேசிக்கொண்டிருந்தேன். அப்துல்லா பேண்ட், டி ஷர்ட்டில் வந்திருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அந்த வெள்ளை வேட்டி சட்டைதான் அவருக்கு கம்பீரம். தம்பி நாளைக்கு ஒழுங்காக வேட்டியில் வரவேண்டும் என்று கண்டித்துவிட்டு வந்தேன்.

0


மதி நிலையத்தின் ஸ்டால் இடப்புறமிருந்து முதல் வரிசையிலேயே அமைந்திருக்கிறது. [ஒருவேளை இரண்டாவது வரிசையோ?] என்னுடைய அன்சைஸ் வெளியாகிவிட்டது. அதற்கு அழகாக ஒரு பேனரெல்லாம் வைத்திருக்கிறார்கள். அந்த பேனர் காரணத்தால் மதிநிலையம் ஸ்டாலானது மொத்த கண்காட்சிக்கே ஒளிதரும் சூரியனாகத் தகதகக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

என்னுடைய பல நூல்கள் இக்கண்காட்சியில் மதி நிலையத்தின் மறு பதிப்பாக வெளியாகியிருக்கின்றன. மாயவலை இன்னும் கடைக்கு வந்து சேரவில்லை. ஆனால் விளம்பரம் பார்த்து, பலபேர் வந்து விசாரித்து, போன் நம்பர் கொடுத்துவிட்டுப் போயிருப்பதாகச் சொன்னார்கள். இருந்த கொஞ்ச நேரத்தில் சிலபல ஆட்டோகிராபுகள் போட்டுக்கொடுத்து சமூக சேவையாற்றிவிட்டுக் கிளம்பினேன்.

இக்கண்காட்சியில் நான் விரும்பி வாங்க நினைத்த புத்தகங்கள் இரண்டு மட்டும்தான். ஒன்று பேயோனுடையது. இன்னொன்று மாம்ஸுடையது. இரண்டுமே இன்று வரவில்லை. எனவே ஒன்றும் வாங்கவில்லை.

சாப்பிட வாங்க என்ற பெயருடன் வளாகத்தின் வெளியே பெரிய கேண்டீன் இருப்பதைப் பார்த்தேன். ஆனால் போகவில்லை. நாளைக்கு அநேகமாகப் போவேன் என்று நினைக்கிறேன். மகளும் வருவதாகச் சொல்லியிருக்கிறாள். எனவே திட்டம் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது.

பி.கு:- இங்கே உள்ள படங்களாகப்பட்டவை எனது புதிய ஐபேடில் எடுக்கப்பட்டவை. எனவே அவற்றைத் தனியே சிலாகிக்கவும். இன்னும் நிறைய படங்கள் எடுத்தேன். ஆனால் அப்லோடு செய்ய நேரமெடுக்கிறபடியால் நிறுத்திவிட்டேன்.

4 comments

  • என்னைப் பற்றி ஏன் நீங்கள் விரிவாக எழுதவில்லை.? அவ்வ்வ்வ்.. நான் அழுகிறேன்.:))

  • // குகன் ஒரு சமத்துக் குழந்தை. //

    இப்படி சொல்லி சொல்லியே… என்னை எல்லோரும் நல்லவன பார்க்குறாங்க… 🙁

  • @கேபிள் – ஆமாம். உன்னைப் பற்றி விரிவாக எழுதி இருந்தால் உன் அருகில் கறுப்பு டீஷர்ட்டில் இருக்கும் என்னைப் பற்றியும் விரிவாக எழுதியிருப்பார் # வடை போச்சே!

  • இது போன்ற ஒரு கண்காட்சியில் உங்களை நிச்சயமாக ஒரு நாள் வந்து பார்த்து விடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது. அது சரி புத்தகத்துக்கும் சோட்டா பீமுக்கும் என்ன சம்மந்தம். இதையெல்லாம் புத்தக கண்காட்சியில் விற்க ஆரம்பித்து விட்டார்களா ?

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version