பொன்னான வாக்கு – 34

என்னவொரு அனல்; எப்பேர்ப்பட்ட தகிப்பு! ஒரு ஜெயலலிதாவால் உருவாக்க முடியாத பரபரப்பை, ஒரு கருணாநிதியால் ஏற்படுத்த முடியாத திடுக்கிடும் திருப்பத்தை, கடலைமிட்டாய் க்ஷேத்ரமாம் கோயில்பட்டியில் இருந்து வைகோ சாதித்திருக்கிறார்.

தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவிக்கப் போன அந்த வீடியோவைப் பார்த்தேன். சூடும் ருசிகரமும் உணர்ச்சிமயமும் தாண்டவமாடிய கண்கொள்ளாக் காட்சி. கருப்பு சால்வையும் பச்சைத் தலைப்பாகையுமாக எழுந்து நின்று மைக்கைப் பிடித்து ஒரு வீர முழக்கம் செய்தார் பாருங்கள், சிலிர்த்துவிட்டது. கலவரவாதிகளை நோக்கி, ‘உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு, பரபரவென்று இறங்கி வந்த வைகோ, தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுத் திரும்பவும் வேனுக்கு வந்து வீர உரை ஆற்றிய காட்சி எந்த ஒரு திரைப்பட ஹீரோ அறிமுகக் காட்சியைக் காட்டிலும் சிறப்பானது.

ஆனால் இந்த வீரத்தைக் கண்டு வியந்திருக்க அவரால் அதிக அவகாசம் தரமுடிவதில்லை. வேட்பு மனு தாக்கல் செய்யப் புறப்பட்டு ஊர்வலம் கிளம்பும்போது கலவரமாகிவிடுகிறது. தன் பொருட்டு சாதி மோதல்கள் ஏற்படாதிருப்பதற்காக வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவில்லை என்று சொல்லிவிடுகிறார். வசூல் ராஜாவில் கமலஹாசனுக்கு பதிலாக கிரேசி மோகன் பரீட்சை எழுதுவது போல இங்கே வைகோவுக்கு பதிலாக யாரோ ஒருவர்.

காரணங்களும் விளைவுகளும் ஒருபுறம் இருக்கட்டும். மெல்ல அலசிப் பிழிந்துகொள்ளலாம். ஆனால் இந்த பாவப்பட்ட மக்கள் நலக்கூட்டணிக்கு ஏன் இப்படியெல்லாம் சோதனை வரவேண்டும்? அறிவுஜீவிகளும் இடது சாரிகளும் எதை ஆதரித்தாலும் அது உருப்படாது போகத்தான் வேண்டும் என்பது எந்த சாத்தானின் சாபமோ தெரியவில்லை.

ஒரு வேகத்தில் விஜயகாந்தை அழைத்து வந்து தலைவர் நாற்காலியைக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் கூட்டணியில் இருக்கிற தலைவர்களில் இப்போது திருமாவளவனைத் தவிர யாருமே தேர்தலில் போட்டியிடவில்லை என்பதைப் பார்க்கும்போது இவர்களெல்லாம் விஜயகாந்தின் புரட்சி அரசியலுக்கு பயந்துதான் பின்னங்கால் பிடறியில்பட எகிறிக் குதித்து ஓடுகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. கட்டக்கடைசியில் ஒட்டிக்கொண்ட வாசன், முதலிலேயே தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டதும், முதல் முதலில் கூட்டணிக்குக் கொடி பிடித்த வைகோ கட்டக்கடைசியில் நழுவிய மீனாகியிருப்பதும் மட்டும்தான் வித்தியாசம்.

பாவம் அண்ணியார். நான் இனி அண்ணி இல்லை; அம்மா என்று விருப்ப இடம் சுட்டிப் பொருள் விளக்கியெல்லாம் பார்த்தார். ம்ஹும். கடலை மிட்டாய் வடிவில் வைகோ கொடுத்திருப்பது கடுக்காய் மட்டுமே.

தமது இந்த முடிவுக்கு திமுகதான் காரணம் என்று வைகோ சொல்லியிருக்கிறார். தேவர் – நாயக்கர் சாதி மோதல்களை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த இரு சாதிகளுக்கும் இதற்குமுன் மோதலெல்லாம் நடந்ததில்லை. அதற்கான சமூக, அரசியல் சூழ்நிலை சரித்திரத்தில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை.தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றபோது கெட்ட கோஷம் எழுப்பியவர்களை மனத்தில் வைத்து அவர் இப்படிச் சொல்லியிருப்பாரோ என்னமோ. அவர் வேட்பு மனு தாக்கல் செய்யப் போனபோது எதிர்ப்புக் கோஷமிட்டு வழி மறித்தவர்கள் அத்தனை பேரும் தார்மீக அடிப்படையிலாவது அதிமுகவை ஆதரிக்கிற சாதி அமைப்புக்காரர்கள்தாம் என்று தெரிகிறது.

அட அப்படியே பத்திருபது பேர் எதிர்க்கட்டுமே? அது திமுகவினராகவேதான் இருந்துவிட்டுப் போகட்டுமே? யாராவது எதிர்த்தால் உடனே பின்வாங்கிவிடுவதா புறநாநூற்றுப் புலியின் வீரம்? சாதிக்கலவரம் வரும் என்று வைகோ சொல்வதெல்லாம் சற்று மிகையாகவே தெரிகிறது. அதுதான் காரணம் என்பது உண்மையானால் அவர் தொகுதி மாற்றிக்கொண்டிருக்கலாம். அட, அவர் கொளத்தூரில் களமிறங்க யார் தடுக்கிறார்கள்? அல்லது திருவாரூரில்? பேச்சளவில் அவர் சொல்லிக்கொண்டிருக்கும் ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலை செயலளவில் நிரூபிக்க ஆர்கே நகரிலேயேகூடப் போட்டியிட முடியும். வசந்திப் பாட்டியைத் தூக்கிக் கோயில்பட்டியில் போடுவதா கஷ்டம்?

வேட்பாளர்களைக் கட்டக்கடைசி வினாடி வரை மாற்றிக்கொண்டிருப்பதுதான் இந்தத் தேர்தலில் ஃபேஷன் என்றாகிவிட்ட சூழ்நிலையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?

மக்கள் நலக்கூட்டணி என்ற ஒன்று தொடங்கப்பட்டு, அது தேர்தலாட்டம் ஆட ஆரம்பித்தபோதே இது விளங்காது என்று இந்தப் பத்தியில் எழுதினேன். அதற்கு நாயே பேயே என்று நாலாயிரம் கடுதாசிகள். அடிப்படையில் நோக்கத் தெளிவு இல்லாமல், வழிமுறைத் தெளிவு இல்லாமல், திட சித்தம் இல்லாமல் ஒரு காரியத்தில் இறங்கினால் இப்படித்தான். தமது இந்த அபாரமான புரட்சிகர விலகல் நடவடிக்கையின்மூலம் வைகோ தனக்குப் பதவி ஆசை பெரிதல்ல என்று காட்டிக்கொண்டிருக்கிறாரா, அல்லது இந்தக் கூட்டணி ஆசாமிகளிடம் மிச்சம் மீதி இருக்கும் பதவி இச்சையை அழுத்தித் துடைத்து ஆட்டத்தை முடித்து வைத்திருக்கிறாரா என்பதுதான் எஞ்சியுள்ள ஒரே கேள்வி.

தமிழக பாஜகவுக்கு பலம் சேர்க்க பவர் ஸ்டார் சீனிவாசன் அக்கட்சியில் சேர்ந்திருப்பதைக் காட்டிலும் நகைப்புக்கிடமாகியிருக்கிறது வைகோவின் மேற்படி கைங்கர்யம்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version