பொலிக! பொலிக! 106

அமைதி.

ராமானுஜர் கண் மூடி வெகுநேரம் யோசித்துக்கொண்டே இருந்தார். கந்தாடையாண்டான் காத்திருந்தார். மடத்தில் இருந்த சீடர்கள், உடையவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறிய சுற்றி வந்து சூழ்ந்து நின்றார்கள். ஶ்ரீபெரும்புதூர் அவர் பிறந்த மண். அந்தத் தலத்தில் உடையவரின் திருமேனிச் சிலையொன்று நிறுவ நினைப்பது நியாயமே. பதிமூன்று ஆண்டுக்காலம் வாழ்ந்துவிட்டுக் கிளம்பிய திருநாராயணபுரத்துக்குத் தனது திருமேனியைச் சிலையாகச் செய்து வைத்துக்கொள்ள அனுமதித்தவர், இதற்கு எதற்கு இவ்வளவு யோசிக்க வேண்டும்?

யாருக்கும் புரியவில்லை. நெடு நேரம் கழித்து ராமானுஜர் கண்ணைத் திறந்தார். ‘சரி ஆண்டான்! உன் விருப்பப்படி நடக்கட்டும்!’

சட்டென்று அங்கே மகிழ்ச்சிப் பெருக்கு நிறைந்து பரவியது. தாமதமின்றி சிற்பி ஒருவர் வரவழைக்கப்பட்டார். உடையவரை நேருக்கு நேர் தரிசித்து அமர்ந்து வரைந்து எடுத்துச் சென்று அவரது தோற்றத்தை அச்சில் வார்த்துக் கொண்டு வந்து சமர்ப்பித்தார். 

‘சுவாமி, தங்கள் திருமேனி. எப்படி இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுங்கள்!’ கந்தாடையாண்டான் முன்னால் வந்து சிலையை ராமானுஜர் முன் நிறுத்தினார். அவர் முகத்தில் புன்னகை விரிந்தது.

‘அடடே, அப்படியே என்னை ஒத்திருக்கிறதே!’

சிற்பிக்குப் பேருவகையாகிப் போனது. விழுந்து பணிந்து வணங்கி நின்றார்.

‘அப்படியானால் இதை ஶ்ரீபெரும்புதூரில் எழுந்தருளப் பண்ணலாம் அல்லவா?’

‘ஒரு நிமிடம். அதை இப்படிக் கொடு!’ உடையவர் கரம் நீட்ட, கந்தாடையாண்டான் அச்சிலையை அவர் அருகே எடுத்து வந்து நீட்டினார்.

ராமானுஜர் அதை வாங்கி அப்படியே தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.

‘சுவாமிக்கு சிலை அவ்வளவு பிடித்துவிட்டது போலும்’ என்று சுற்றியிருந்தவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும்போது உடையவர் அவர்கள் அறியாத வேறொரு செயலில் ஈடுபட்டிருந்தார். காலக் கணக்கற்று, பாற்கடலில் எம்பெருமானைத் தாங்கி நிற்கும் சக்தி. ஞானக் கிடங்காக சேகரித்த பெரும் சக்தி. கருணைக் கடலாக ஊற்றெடுத்த சக்தி. தவம், ஒழுக்கம், சீலம் காத்து ஐம்பெரும் ஆசாரியர்களின் திருவடி நிழலில் தங்கிப் பயின்ற பெரும் பாடங்களின் மூலாதார சக்தி. தானே ஆசாரியராகி, ஜகதாசாரியரென்று வழங்கப்பட்டதன் பின்னணியில் இயங்கிய பரம்பொருளின் அருளாசி வடிவ சக்தி. அனைத்தையும் திரட்டி அந்தச் சிலைக்குள் செலுத்தினார். தன் மானசீகத்தில் அரங்கனை நெக்குருகி வேண்டிக்கொண்டு சிலையைக் கந்தாடையாண்டானிடம் நீட்டினார்.

‘ஆண்டான், இனி இது மக்களுடையது. இதில் நான் இருக்கிறேன். இதன் வடிவில் என்றும் அவர்களோடு இருப்பேன்!’

தானுகந்த திருமேனி என்று பக்தர்கள் கொண்டாடிக் களித்தார்கள். உடையவரே அதைப் பிரதிஷ்டை செய்ய நாள் பார்த்துச் சொன்னார். ‘ தைமாதம் பூச நட்சத்திரத்தில் இது பிரதிஷ்டை ஆகட்டும்.’

‘அப்படியே சுவாமி!’ என்று அதை வாங்கிக்கொண்டு கந்தாடையாண்டான் புறப்பட்டார்.

ஒரு பெரும் வட்டம் சுற்றி வந்து நின்றாற்போலிருந்தது ராமானுஜருக்கு. நூற்றி இருபது வருட வாழ்க்கை என்பது சிறிதல்ல. உடலும் உள்ளமும் சலிக்காது ஒத்துழைக்காமல் இது சாத்தியமும் அல்ல. ஒரு பிரம்மாண்டமான கனவும் அதன் புனிதமும் மேலான மனித குல நேயமும் அதைச் சாத்தியமாக்கியது. பவுத்தமும் சமணமும் தலையெடுத்துப் பரவத் தொடங்கியபோது அவற்றைத் தடுத்து நிறுத்துவது அவசியம் என்று அவர் கருதினார். மக்களை நெருங்குவதில் இருந்த இடர்பாடுகளை உத்தேசித்து சமணர்கள் மன்னர்களைத் தம் பக்கம் ஈர்ப்பதில் மும்முரமாக இருந்த சமயம் அது. ஏனெனில் கடவுள் இல்லை என்று சொல்லுவோரை மக்கள் நிராகரித்துவிடுவார்கள். முற்றிலும் நிராகரிக்காதவர்கள்கூட மனமார ஏற்பதில்லை. எனவே சமணர்களுக்கு மன்னர்களின் துணை அவசியமாக இருந்தது. எளிய பேயோட்டும் வழிமுறைகளே மன்னர்களைக் கவரப் போதுமானதாக இருந்தது. தவிரவும் புராதன வைத்திய உபாயங்கள்.

மாயாவாதப் பரவலுடன்கூட இத்தகு சூனியவாத வீச்சும் தடுக்கப்பட வேண்டும் என்று கருதினார் ராமானுஜர்.

சரணாகதியே சர்வரோக நிவாரணி என்று அவர் முன்வைத்த தீர்வும் பேதமற்ற பேருலகு சார்ந்த பெரும் கனவும் மக்களைக் கவர்ந்தன. தன்னலமற்ற சேவையில் விளைவது வைணவம். பேதம் காணாத விரிந்த மனமே அதன் அடையாளம். இங்கு வாழும் வாழ்வானாலும் சரி. இறந்த பின் அடையும் இடமானாலும் சரி. ஒளி பொருந்தியதாக, திருப்தி தருவதாக, அர்த்தம் மிக்கதாக அமைய எளிய உபாயம் சரணாகதியே என்ற குழப்பமற்ற வழிகாட்டலே அவர் வாழ்வின் சாராம்சமானது.

போதுமே? இனியும் சுமந்து கிடக்க வேண்டாமே என்று அவருக்குத் தோன்றியது. ஒரு கணம்தான். சட்டென்று உடல் நடுங்கித் தளர்ந்துபோனது. அது தைமாதம். அன்று பூச நட்சத்திரம்.

புரிந்துவிட்டது. ஶ்ரீபெரும்புதூரில் அவரது சக்தி வடிவ விக்கிரகப் பிரதிஷ்டை நடந்துகொண்டிருந்தது. மானசீகத்தில் அதை உணர்ந்த ராமானுஜர், உடனே கிளம்பிக் கோயிலுக்குப் போனார். காஞ்சியை விட்டு வந்த நாளாகக் காத்து நிற்கும் கரிய பெருங்கடவுள். கண்ணழகன். கமல இதழழகன். அரவணைத்துக் காக்கும் கரத்தழகன். ஜீவநதியெனப் பொங்கும் கருணை குணத்தழகன். என்றும் பெரியவன். அனைத்திலும் பெரியவன்.

சன்னிதிக்குச் சென்று கரம் கூப்பி நின்றார். ‘பெருமானே! போதுமே?’

என்ன கேட்டாலும் அடுத்த வினாடி பதிலிறுக்கும் அரங்கப் பெருமான் அன்று அமைதியாக இருந்தான்.

‘கடமைப்பட்ட அனைத்தையும் செய்திருக்கிறேன். வைணவ தருமம் தழைக்கப் பொருத்தமான எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளை நியமித்திருக்கிறேன். அந்தத் தலைமுறை காலகாலத்துக்கும் தொடரும். திருக்கோயில் நடைமுறைகள் ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறேன். இதுவும் தழைக்கும். வைணவத் தல ஆக்கிரமிப்புகள் இனி இராது. அப்படியே நிகழுமானால் தட்டிக் கேட்கவும் தடுத்துப் போராடவும் எதிர்வரும் தலைமுறை தயாராக இருக்கும். அதற்கான சித்தாந்த பலத்தை அளித்து, ஆத்ம நிவேதன உபாயங்களைச் சொல்லித் தந்திருக்கிறேன்.’

இப்போதும் அரங்கன் அமைதியாகவே இருந்தான்.

‘எம்பெருமானே, தோள் துவண்டு நான் உன்னிடம் வந்து நிற்கவில்லை. சுமக்க ஏராளமான தோள்கள் காத்திருக்கிறபோது விட்டுத் தந்து அழகு பார்க்க நினைக்கிறேன். கூரேசருக்குக் கேட்டதும் கொடுத்தாயே? அந்த பாக்கியம் எனக்கில்லையா?’

இப்போது அவன் குறிப்பால் உணர்த்தினான். ‘சரி, இன்னும் ஏழு தினங்கள்.’

கரம் குவித்து வணங்கி விடைபெற்றார் ராமானுஜர். மடத்துக்குத் திரும்பும்போது மிகுந்த உற்சாகமாக இருந்தார். இதுதான். இவ்வளவுதான். இன்னும் உள்ளவை ஏழே தினங்கள். இந்த ஏழு தினங்களையும் அர்த்தமுள்ளதாக வாழ்ந்து முடித்தால் போதும். எம்பெருமான் திருவாசல் திறந்துவிடுவான்.

தேசமெங்கும் பரவியிருக்கும் தமது சீடர்கள் அனைவரையும் திருவரங்கம் வரச் சொல்லி செய்தி அனுப்பினார்.

(தொடரும்)

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version