சேட்டுக் காகங்கள்

சனிக்கிழமைகளில் மட்டும்தான் இந்தக் காக்கைகள் வருகின்றன என்று அம்மா சொன்னாள்.

வாரம்தோறும் அலாரம் வைத்தாற்போலச் சரியாகக் காலை எட்டு மணிக்கு அவை வீட்டு வாசலில் ஆஜராகிவிடுகின்றன. தயாராக, தடிதடியாக நாலு சப்பாத்திகளைச் சுட்டு எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்துவிடுகிறாள் அம்மா. பெரிய பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடப் போட ஒவ்வொரு காக்கையும் வரிசையில் வந்து ஒரு துண்டு எடுத்துக்கொண்டு போகிறது.

எண்ணி நாலு சப்பாத்திகள். இருபது துண்டுகள். அந்தக் காக்கைகளின் எண்ணிக்கை கூடுவதுமில்லை; குறைவதுமில்லை. ஆளுக்கொரு துண்டாக எடுத்துக்கொண்டு விடைபெற்றுவிடுகின்றன. மீண்டும் அடுத்த சனிக்கிழமை காலை அதே நேரம் வந்துவிடுகின்றன.

சில மாதங்களாக இந்த வழக்கம் தொடர்கிறது. இந்தக் காகங்கள் சாதம் சாப்பிடுவதில்லை. இட்லி, தோசை, பொங்கல் என்று வேறெதை வைத்தாலும் உண்பதில்லை என்று அம்மா சொன்னாள். சப்பாத்தி மட்டுமே உண்ணும் சேட்டு பித்ருக்கள்.

நமது வம்சத்தில் வடக்கத்திய சம்பந்தம் கொண்டவர் யாராக இருக்கலாம் என்று அம்மாவிடம் கேட்டேன். என் அம்மாவின் மாமா ஒருவர் சேட்டுக்கடையில் கணக்கராக வேலை பார்த்திருக்கிறார். ஆனால் கணக்குப் பிள்ளையின் மருமாள் வீட்டுக்கு வந்து அந்த சேட்டுக் காகம் சப்பாத்தி சாப்பிடும் என்று தோன்றவில்லை.

தாத்தா [அம்மாவின் அப்பா] ஓர் உல்லாசி. வாழ்வின் ருசியை சைதாப்பேட்டை மாரி ஓட்டல் வடைகறியிலும் மதுரை சோமு, மாரிமுத்தாப்பிள்ளை போன்ற இசை விற்பன்னர்களின் நட்பிலும் அனுபவித்தவர். மணிக்கட்டில் மல்லிகைச் சரம் கட்டிக்கொண்டு சுற்றியிருக்கிறாரா என்று தெரியவில்லை. அம்மாவிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது.

ஒரு தவமேபோல ஒவ்வொரு சனிக்கிழமையும் அம்மா சப்பாத்திகள் இட்டு, காக்கைகளுக்கு வைத்துக்கொண்டிருக்கிறாள். நான் என்னவாவது கேட்டுத் தொலைத்து, கடுப்பில் அந்த வழக்கம் நின்றுவிட்டால் சேட்டுக் காக்கைகள் சனிக்கிழமை விருந்தை இழக்க நேரிடலாம்.

நான் முன்னர் குடியிருந்த கோடம்பாக்கம் வீட்டு பால்கனிக்கும் ஒரு காக்கை வரும். அது தமிழ்க் காக்கை. என்ன வைத்தாலும் உண்ணும். நான் வெகு அருகில் சென்று நின்றுகொண்டாலும் நகராது. நான் பேசுவதெல்லாம் அதற்குப் புரியும் என்றொரு நம்பிக்கை எனக்கு இருந்தது. [கோடம்பாக்கத்துக் காகத்தைப் பற்றிய குறிப்பு இங்கே உள்ளது. ] ஆனால் அம்மா வளர்க்கும் காக்கைகளை இன்று கண்டபோது, அவை ஏதோ தண்டம் வசூலிக்க வந்தவை போலப் பட்டன. சனிக்கிழமை எட்டு மணியானால் எனக்குச் சப்பாத்தி போடுவது உன் கடமை என்று மௌனமாக மிரட்டிக்கொண்டிருப்பது போல.

படமெடுக்கப் பார்த்தால் ஒத்துழைக்க மறுத்துவிட்டன. மொபைலை பாக்கெட்டில் போட்டால் மட்டுமே சப்பாத்தியின் அருகே வந்தன. சரி போ என்று விட்டுவிட்டேன்.

என் கோடம்பாக்கத்துக் காகம் இப்போது என்னைத் தேடி இங்கே வந்தால் அதற்குப் பனீர் புர்ஜி கிடைக்கும். அது என் தாத்தாவா, மாமனாரா என்று அப்போது எனக்குச் சந்தேகம் இருந்தது. இப்போது இல்லை.

மாமனார்தான்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version