காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

காசை எண்ணிக் கொடுத்துவிட்டு அரங்கத்தின் வாசலில் அவர் ஆட்டோவிலிருந்து இறங்கும்போது, மிதந்து கடந்த காரில் அமைச்சர் இருந்தார். காத்திருந்த கனவான்கள் பரபரப்படைந்து விரைந்து வந்தார்கள். காற்றில் படபடத்துச் சுருளப் பார்த்த பேனரில், நூற்றாண்டு விழாக் காணும் மேதை, நீல எழுத்துக்களில் பாதி தெரிந்தார்.

அமைச்சருக்கு ஒரு நிமிடம் முன்னதாக வந்திருந்தால் தாம் கவனிக்கப்பட்டிருப்போம் என்று நினைத்தபடி அவர் படியேறினார். நுழைவாயில் அருகே பன்னீர் தெளித்து வரவேற்ற நீலப் பட்டுப்புடைவைப் பெண்ணின் பார்வை கூடத் தன்னைத் தாண்டி, எங்கோ அலை பாய்ந்தது சங்கடமாக இருந்தது. முன்னொரு சமயம் தனக்காக இப்படிக் காத்திருந்த கூட்டம் நினைவுக்கு வந்தது. முகங்கள் ஞாபகம் இல்லை. கூட்டம் தான். எப்போதும் கூடுகிற கூட்டம். நின்று, ஒருதரமும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. புறக்கணித்து நடந்த தருணங்கள் அசந்தர்ப்பமாக நினைவில் நகர, அவசரமாகத் தலை கவிழ்த்து, விரைந்து உள்ளே சென்று அமர்ந்தார்.

ஐம்பதெட்டில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள். மூச்சிறைப்போ, மூட்டு வலியோ வரும்போது ஒய்வு பெறும் விளையாட்டு வீரர்கள். முகச் சுருக்கம் ஒப்பனையை மீறி வெளியே தெரியும்போது ஓய்வு தரப்படும் நடிகர்கள் மற்றும் நடிகைகள். ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிற காலம். எலக்ட்ரானிக் சின்தஸைஸருடன் யார் யாரோ உள்ளே நுழைந்தபோது, தனக்கும் தன் பழைய ஆர்மோனியப் பெட்டிக்கும் கட்டாய ஓய்வு தந்து விட்ட திரை இசை உலகம் அவரளவில் ஒரு நம்பிக்கை துரோகி. ஒதுக்கி ஓரமாக அமரச் செய்துவிட்ட பிறகு, தீபாவளிக்கு இனாம் கேட்க வருகிற கேரியர் தூக்கும் பையன்கள் கூட, கவனமாக அவர் வசிக்கும் தெருவைத் தவிர்த்துவிட்டு, அடுத்த வீதி வழியே சுற்றிக் கொண்டு ஸ்டுடியோக்களுக்குப் போனார்கள்.

புகழ், புளிக்காத விஷயம். வெற்றி ஒரு வசீகரம் மிக்க விஷக்கன்னி. தன் ஆளுமையின் முழுச் சக்தியையும் பிரயோகித்து, வெற்றி வீரனாக வலம் வந்த காலத்தில் உலகமும் அதன் மக்களும் வெகு தூரத்தில் கடந்து மறையும் ரயில் புள்ளி போலவே அவருக்குத் தெரிந்தன.

அப்போதெல்லாம் அவர் வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள்ளே இரவும் பகலுமற்று, ஸ்வரங்களால் நெய்யப்பட்டிருந்தது. சட்டைகளின் அளவுக்கேற்ப உடல்களைத் தயார் செய்வதில் விற்பன்னராக இருந்தார். அவர் பணியாற்றும் அறைக்கு வெளியே தயாரிப்பாளர்கள் எப்போதும் காத்திருப்பார்கள்.

இயக்குநர்கள் கைகட்டி நின்றிருப்பார்கள். விநாடி நேரம் திறந்து மூடும் கதவிடுக்கில் புலப்படும் தரிசனத்துக்காக அவர் மனைவி வந்திருப்பாள். முன்னதாக அவர் வீடு சென்று படுத்துறங்கி சில தினங்கள் ஆகியிருக்கும்.

ஜவஹர்லால் நேரு செத்துப்போனார். பல தேசங்கள் போரிட்டுக் கொண்டன. ராஜ்கபூர் காலமானார். இந்திரா ஆட்சியைப் பிடித்தார். எமர்ஜென்ஸி வந்தது. கம்ப்யூட்டர் வந்தது. வித்வான்கள் அதனை சேவித்தார்கள். வெண்டைக்காய் விலை ஏறியது. பூமி பல முறை சூரியனைச் சுற்றி வந்தது. அவர் அறையை விட்டு வெளியே அனுப்பப்பட்டபோது உலகம் மாறு வேடம் பூண்டிருந்தது. இருபது ஆண்டுகள் உறங்கி எழுந்த ரிப்வேன் விங்கிள் போல மலங்க மலங்க விழித்தார். அவர் மனைவி மட்டும் அப்படியே இருந்தாள். அது ஒன்றுதான் அவருக்கு ஆசுவாசம் தரத் தக்கதாக இருந்தது.

யார் யாரோ, யார் யாரையோ வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். எல்லாம் புதிய முகங்களாயிருந்தன. ஆடை ஆபரணங்கள், புன்னகை, கைகுலுக்கும் விதம், பேச்சுத் தொனி எதனைக் கொண்டும் யார் எந்தத் துறையில் இருக்கிறார் என்று அனுமானம் செய்ய முடியவில்லை. நூற்றாண்டு விழாக் காணும் இசை மேதை, வாழ்வில் சட்டை கூட அணிந்தவரல்லர். வெறும் வேட்டி மட்டும்தான். மேலே ஒரு மெல்லிய அங்கவஸ்திரம் அவரது ஒடுங்கிய மார்பை மூடியிருக்கும். கிண்ணென்று விரைத்து நிற்கும் கட்டுக் குடுமி ஒன்றே அவர் அனுஷ்டித்த ஆசாரத்தைச் சொல்லும், நெற்றியில் தனித் தனியே துலங்கும் மூன்று பட்டைகள் வசீகரித்து, யாரையும் கைகூப்பச் செய்யும். மேடையில் அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தால், நெஞ்சம் இளகிக் கண்கள் சொரியும். அவர் விரல்கள் படுவதனாலேயே வீணையில் தெய்வீகம் கவியும்.

திரை இசை அமைப்பாளராக மாறாமல் இருந்திருந்தால், தானும் ஒரு வைணிகனாகத்தான் அடையாளம் காணப்பட்டிருப்போம் என்பது நினைவுக்கு வந்தது. துவையல் சாதத்துக்குப் பிரச்னையில்லாத கோயில் கச்சேரிகள் கிடைத்திருக்கும். ஆனால், கோயில் கட்டத் தயாராயிருந்த வெகுஜன ரசிகர்கள் அகப்பட்டிருக்கமாட்டார்கள். செய்து கொள்ள வேண்டியிருந்த சமரசங்கள் அப்போது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. இசையில் தாம் செய்த கலப்படங்கள் மீதான விமர்சனங்கள் செவியில் விழவில்லை. தயாரிக்கப்பட்ட வரிகளுக்கு மலினமான மெட்டுகள் சேர்த்தபோது, கிடைக்கப் போகிற கைதட்டல் விசில்களுக்கு மட்டுமே காத்திருந்த தருணங்கள் நினைவுக்கு வந்தன. அவற்றை மறந்துவிட மிகவும் விரும்பினார். விழாவில் கவனத்தைத் திருப்பியபோது, மேடையில் ஒரு பெண் இறை வணக்கம் பாடிக் கொண்டிருந்தாள்.

காலை செய்தித்தாள் பார்த்துத்தான் அவருக்கு விழா விவரம் தெரிந்திருந்தது. வீணைக்கு ஒரு விழா. நூற்றாண்டு கண்டவருக்கு, நேற்று ஆண்டவர்களும் இன்று ஆள்பவர்களும் நடத்துகிற நினைவு அஞ்சலி, நூற்றுக்கணக்கானவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறார்கள். அரங்கம் நிரம்பித் ததும்புகிறது. தனக்கொரு அழைப்பிதழ் அனுப்பலாம் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை?

தாம் வீணை பயின்று, அரங்கேறிய ஆரம்பக் கச்சேரி ஒன்றில் அந்த மேதை பெருந்தன்மையுடன் கலந்து கொண்டு ஆசீர்வதித்த காட்சி அவர் மனத்தில் ஒரு விநாடி மின்னி மறைந்தது. பிறகு திரை இசையில் நுழைந்த பின்னர், சுத்தமான சங்கீதத்துடனான தொடர்பு முற்றிலுமாக அறுந்துவிட்டது. இசையோ, வேறெதுவோ வெறும் பிளாஸ்டிக் வடிவங்களுக்கு மட்டுமே சந்தையில் இடம் என்றான பிறகு செய்யக் கூடியதுதான் என்ன? இந்தப் பிரக்ஞையே கூட ஒய்வு பெற்றபின் தற்செயலாக உதித்த ஒன்றுதான் என்பதை நினைக்க, அவருக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இந்த விழாவுக்கு வருவதையே கூட ஒரு பாப விமோசனமாகத்தான் கருதினார். யாரும் அழைப்பிதழ் அனுப்பாவிட்டாலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றே ஆகவேண்டும் என்று தோன்றியதும் அதனால்தான்.

ஆனால், இத்தனை துப்புரவாகத் தன்னைப் புறக்கணிப்பார்கள் என்று அவர் நினைத்திருக்கவில்லை. வந்து பத்து நிமிடங்களுக்கு மேலாகி விட்டன. ஒருத்தரேனும் வந்து வரவேற்கவில்லை. கடந்து போகிறவர்களும் வருகிறவர்களும் நின்று ஒரு மரியாதைக்கேனும் கைகூப்பவில்லை. முகத்தை நேருக்கு நேர் பார்க்கிறவர்கள் கூட, புன்னகை புரிந்து அங்கீகரிக்கவில்லை.

சட்டென்று தாக்கிய துக்கத்தில் அவர் நிலை குலைந்து போனார். திசை தப்பித் தீவில் ஒதுங்கியவன் போலிருந்தது. இருபது வருடங்கள் முன்பு, தன் கால் பட்ட மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுச் செல்லத் தயாராயிருந்த கூட்டத்துக்கு முகம் மறந்து போகக் கூடுமா? திரை இசை உலகில் அவர் புறக்கணித்து விட்டுப் போக முடியாத ஓர் அதிகார பீடமாக இருந்தார். எத்தனை பாடல்கள் நெக்குருகச் செய்திருக்கின்றன! எத்தனை பாடல்கள் நிலை மறந்து ஆடச் செய்திருக்கின்றன! கடவுளே, என் தலைக்குப் பின்னால் சுழன்று கொண்டிருந்த ஒளிவட்டத்தை எப்போது கழற்றி எடுத்து ஒளித்து வைத்தாய்?

விழாவுக்குத் தம் மனைவியையும் அழைத்து வரலாம் என்று எண்ணியிருந்தார், முதலில். வாழ்வில் ஒருமுறை கூட அவளை எங்கும் உடன் அழைத்துச் சென்றதில்லை அவர். அவளைப் புறக்கணிக்கிறோம் என்று தோன்றாமலே புறக்கணித்த நாட்கள் சில. புறக்கணிப்பதில் திருட்டு சந்தோஷம் அனுபவித்துக் கொண்டே புறக்கணித்த சந்தர்ப்பங்கள் சில. குடும்பப் பற்று, பாசம் இவை கூட இல்லாமல் தொழிலில் கரைந்து போகிறவன் என்று காட்டிக் கொள்கிற விதமாகப் புறக்கணித்த தருணங்கள் சில. அதற்காகவெல்லாம் வருத்தப்பட்டு இத்தனை வருஷங்களுக்குப் பிறகு இன்று வருகிறாயாஎன்று கேட்டபோது, மெளனமாக மறுத்துவிட்டாள். விருப்பமில்லை என்றாவது சொல்லியிருக்கலாம். வழக்கமில்லை என்றபோது வலிக்கத்தான் செய்தது.

ஆனால், அவருக்கு அதுவே இப்போது நிம்மதியாகவும் ஆறுதலாகவும் கூட இருந்தது. இங்கே தன் அனுமதியின்றி யாரோ தன் ஆடைகளை உருவிக் கொண்டிருப்பதாகப்பட்டது. தான் சாதித்தது, சாதித்தாக நினைத்துக் கொண்டிருப்பது எல்லாமே ஒன்றுமில்லாதவை என்று சுட்டிக்காட்டுவதாக இருந்தது இந்தப் புறக்கணிப்பு.

அவராகத் தேர்ந்தெடுத்து, சிலருக்கு வணக்கம் சொன்னார். கிடைத்த பதில் வணக்கங்களில் வெறும் கடமைதான் இருந்தது. விசை அழுத்தினால் ஓடத் தொடங்கும் இயந்திரங்கள்போல் ஒரு பாவனை. உலர்ந்த பூமி போல் வறண்டு கிடந்த முகங்கள்.

மேலும் யாரையும் பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக் கொண்டார்.

முன்னெல்லாம் வருஷம் தவறாமல் அவருக்கு யாரேனும் பாராட்டு விழா நடத்துவார்கள். அரசாங்கமோ, அமைப்பு சார்ந்த பிரபலங்களோ கூப்பிட்டு விருதளிப்பார்கள். இரண்டு முறை இசை வேந்தனாகவும் மூன்று முறை மன்னனாகவும் ஒரு முறை சக்கரவர்த்தியாகவுங்கூட உயர்த்தி, சால்வை போர்த்தி, கேடயம் தந்து, காலில் விழுந்திருக்கிறார்கள். புகழ், மாலை ரூபத்தில் தோளை அழுத்த, பீறிடும் கர்வமும் மேலோட்டமான அடக்கமுமாக மேடையைவிட்டு இறங்கும்போது, மோதியடித்துக் கொண்டு முகம் பார்க்க முந்தும் கூட்டம். தாங்கவொண்ணாத தன்னடக்கம் கவிந்து, அவர் தலை குனிந்தது போன்ற பாவனையில் நீந்திக் கடந்து, விரைந்து போய் காரில் ஏறிக் கண்ணாடித் திரையிட்ட தருணங்கள். பிரபலமாயிருந்த காலங்களில் பிரசுரமான புகைப்படங்களில் கூட, நேர்த் தோற்றம் ஒருபோதும் இருந்ததில்லை. யாரோ சொன்னார்களென்று எப்போதும் பக்கவாட்டுத் தோற்றத்தை மட்டும் படமெடுக்க அனுமதித்திருக்கிறார். அதனால்தான் அடையாளம் தெரியவில்லையா என்று இப்போது நினைத்தார்.

சமாதானம் கொள்வதற்கான காரணங்கள். அவற்றைத் தேடும்போதே அபத்தம், நெருஞ்சி முள்ளாகக் குத்தத் தொடங்கி விடுகிறது.

மேடையில் மேதையின் படத்தைத் திறந்து வைத்து அமைச்சர் பேச ஆரம்பித்தார். மிகவும் யோக்கியமானவர். தமக்கும் இசைக்கும் தொடர்பேதும் இல்லை என்று முதலிலேயே சொல்லிவிட்டார். அதனாலென்ன? பெரியோரைப் போற்றலாம்; தப்பில்லை. நல்லவர், வல்லவர், நாளைய தலைமுறை கற்றுக் கொள்ள நிறைய விட்டுச் சென்றவர்.

அவருக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. சின்ன வயது ஞாபகம். அப்பாதான் சொன்னாரா? அப்படித் தான் இருக்க வேண்டும்.

திருக்கண்ணபுரம் உடையவர் சந்நிதியின் வெளிக் கூடத்தில் இவர் கச்சேரி. கூட்டமான கூட்டம். பனி பொழியும் மார்கழி இரவில் போர்வையும் சால்வையும் போர்த்திக் கொண்டு, உஸ் உஸ் என்று காற்றை ஊதிக் குளிரை விரட்டிக்கொண்டு காத்திருந்த கூட்டம்.

அதே கட்டுக்குடுமி. பட்டைத் திருநீறு. மீட்டும் விரல்களால் உயிர் பெறும் வீணை. மணி ஒன்றா? இரண்டா? மங்களம் ஆனதும் கண் சொருகிக் கலைந்து போன கூட்டம்.

கோயிலை ஒட்டிய மானிய வீடுகளுள் ஒன்றில்தான் தங்கியிருந்தார் வித்வான். போற்றித் துதித்துவிட்டு, கச்சேரி முடிந்ததும் அழைத்துப் போய் விட்டு விட்டுத் திரும்பிய நிர்வாகிகள், மறுநாள் காலை எழுப்பச் சென்றபோது அதிர்ந்து நின்றார்கள்.

என்னண்ணா இது? இப்படிப் பண்ணிட்டேளே…?

தீயில் தகித்தெடுத்த அவரது இடது கைப் பெரு விரல் ரணமாகிக் கசிந்திருந்தது.

ஒண்ணுமில்லை, விடுங்கோ. நேத்து வாசிக்கறப்போ ஓரிடத்திலே விரல் கொஞ்சம் தப்பிப் பட்டுடுத்து. யாரும் கவனிக்கலே! கவனிக்காததாலேயே தப்பு சரியாயிட்டதா நான் எடுத்துண்டுடக் கூடாதில்லையா? காயம் ஆற ஒரு மாசம் ஆகுமோ? அதுவரைக்கும் மறக்காது! அப்புறமும் மறக்கக் கூடாது இல்லையா?’’

அமைச்சர் திறந்து வைத்த படத்தில் அசையாமல் புன்னகை செய்து கொண்டிருந்தவரைப் பார்த்தார் அவர். வாழ்வில் சில அழுத்தமான கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டு வாழ்கிறவர்கள் எப்போதும் ஏற்றம் பெறுகிறவர்களாகவே இருக்கிறார்கள். ராட்சஸத் தோற்றத்தில், காலமெல்லாம் பயமுறுத்தும் வறுமையும் ஏழைமையும் ஒரு நிலைக்கு மேல் பொருட்படுத்தத் தேவையில்லாதவையாகிவிடும் போலும். உபாசிக்கிற உன்னதமே உயிரோடிருக்கப் போதுமானதாயிருக்கிறது. எத்தனை காலதாமதமாக இது புரிகிறது! இன்னுமொரு நூற்றாண்டு போன பிறகும் யாராவது இவருக்கு அஞ்சலி செய்து கொண்டுதானிருப்பார்கள் என்று தோன்றியது.

தனக்கென்ன வயது என்று அவர் நினைத்துப் பார்த்தார். எழுபத்தொன்பது? அல்லது எண்பது. இன்னும் சில நாட்களில் விடைபெற்று விடக்கூடும். அடுத்த இருபது வருடங்கள் நினைவில் வைத்திருந்து தனக்கு யார் நூற்றாண்டு விழா கொண்டாடுவார்கள்? அனிச்சையாக அவர் விழிகள் ஒருதரம் அரங்கைச் சுற்றிப் பார்த்தன. அவரும் ஒர் இசை மேதை என்று சொல்லப்பட்டவர்தான். ஆனால், வாழும்போதே கல்லறை எழுப்பி விட்டாற் போலிருந்தது, வந்திருந்தோரின் புறக்கணிப்பு. ஒருகணம் எழுந்து நின்று, புகழ் பெற்ற தம் பாடல்களுள் ஒன்றை உரக்கப் பாடி, ‘நான்தான்! நான்தான்!’ என்று அலறலாம் போலிருந்தது.

இனி ஒருகணமும் அங்கே அமர்ந்திருக்க இயலாது என்று தோன்றவே, எழுந்து கொண்டார். மேடையில் யார் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். எதுவும் பொருட்படுத்தும்படி இல்லை. தடியை மெள்ள ஊன்றி, முன்னேறிக் கடந்து வாசலை அடைந்தார்.

இருளில், ஒளிச் செவ்வகங்களாக விரைந்து கொண்டிருந்த வாகனங்களில் ஆயிரக்கணக்கான மக்கள். யார் ஒருத்தரும் அவரது பாடல்களைக் கேட்காமலிருந்திருக்க முடியாது. அரச பீடத்தில் அவர் இருந்த நாட்களின் ஞாபகம் அழியக்கூடியதல்ல. பீடம் இப்போதும் இருக்கிறது. அரசர்கள்தான் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

நீண்டதொரு பெருமூச்சு வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டார். வழியோடு சென்ற ஆட்டோவை நிறுத்தி, வீட்டு விலாசம் சொல்லி ஏறிக் கொண்டபோது, உற்றுப் பார்த்த டிரைவர் அடையாளம் கண்டு கொண்டாற் போலத் தோன்றியது அவருக்கு. ‘சார், நீங்களா?’ என்று கேட்டுவிடப் போகிறானே என்று அஞ்சி, அவசரமாகத் தலையைக் குனிந்து கொண்டு, ‘போகலாம்!’ என்றார்.

நூற்றுக்கணக்கான வாகனங்களின் நடுவே கலந்து, ஆட்டோ வேகமெடுத்த போதுதான் அவருக்கு நிம்மதியாக இருந்தது.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version