கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 1)

ஒரு பூரணத்தில் இருந்து இன்னொரு பூரணம் பிறப்பதாய் சொல்கிறது கீதை. அந்தப் பூரணத்தில் இருந்து பூரணத்தைப் பிரித்தால் பிறப்பவன் நான் என சூனியனைச் சுய அறிமுகம் செய்கிறார் பா. ரா. அந்த அசத்தல் அறிமுக வரிகளின் ஊடாக அவர்களின் உலகத்திற்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறார்.

அந்த உலகில் சிறை வைக்கப்படும் முறை, பறக்கும் தட்டு, விச நாக பற்கள், ஒளிச்சவரம், தண்டனை விதிக்கப்படும் விதம் பற்றிய விவரணைகளை வாசித்துக் கடக்கும் போதே அது நம் மனதினுள் சித்திரமாய் விரிவதை தவிர்க்க முடியவில்லை. காமிக்ஸ் நூல்கள் தூரிகையின் சலன ஓவியமாய் காட்டுவதை தன் சொற்களால் சித்திரமாக்கி விடுகிறார்.

ஒரு குழுவானது அழிப்பு நடவடிக்கைகளுக்காக ஒருவரைத் தயார் செய்யும் போது அதிலிருந்து அவர் விலகவோ, பின் வாங்காமலோ இருப்பதற்காக முழுமையான தயாரிப்புக்கு மனதளவில் உருவாக்கப்படுவர். சூனிய உலகத்துக்கும் அது பொருந்தும் போல! துவாரயுகத்தில் யாதவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட வரலாறு வழியாக சூனியனும் உருவாக்கப்படுகிறான்.

தனக்குத் தரப்பட்ட இலக்கினை அடையும் முயற்சியில் சூனியன் ஏன் துரோகியாக்கப்பட்டான்? அந்த துரோகத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவன், “ஒரே இலக்கிற்காக அனுப்பப்பட்ட இருவரில் ஒருவர் செயல் மட்டும் நியாயமாகி அதற்காக அவர் நியாய கோமானாகவும் ஆகிறார். இன்னொருவர் குற்றவாளியாக்கப்படுகிறார் என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது?” எனக் கேட்கும் கேள்விக்கு யூதாஸிடம் பதில் இல்லாதது போலவே நம்மிடமும் இல்லை.

ஒருவேளை அந்த கேள்விக்கான முடிச்சில் தான் சூனியன் நம்மை நகர்த்திப் போக இருக்கிறானோ என்னவோ? காத்திருப்போம்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version