எடிட்டர்

சில நாள்களாக அந்த எழுத்தாளருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. தனது கணிப்பொறியைத் தன்னைத் தவிரவும் வேறு யாரோ இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பேயாக இருக்கலாம். அல்லது எங்கிருந்தோ ரிமோட்டில் வேலை செய்யத் தெரிந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர். ஆனால் அப்படி ரிமோட் ஆக்சஸ் எதையும் அவர் யாருக்கும் தந்திருக்கவில்லை ஆதலால் பேயாகத்தான் இருக்கும் என்று வலுவாக சந்தேகப்பட்டார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் ஒரு கதை எழுத ஆரம்பித்தார். அதன் தொடக்கம் இவ்வாறு இருந்தது:

விவாகரத்து செய்துவிடலாம் என்று அவள் முடிவு செய்தாள். இனி அவனுடன் வாழ முடியாது என்று தோன்றிய நாள் முதல் நடந்த அனைத்தையும் வரிசைப்படுத்தி ஒரு தாளில் எழுதினாள். தன் முடிவு சரிதான் என்று தோன்றியது. உடனே அவனுக்கு போன் செய்து, இன்று சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடு; முக்கியமாக ஒரு விஷயம் பேச வேண்டும் என்று சொன்னாள்.

மேற்கண்ட முதல் பத்தியை எழுதிவிட்டு எழுத்தாளர் கணினியை மூடி வைத்துவிட்டு வேறு வேலை பார்க்கப் போனார். மறுநாள் அவர் திறந்தபோது அது கீழ்க்கண்டவாறு மாறியிருந்தது.

திருமணம் செய்துகொண்டுவிடலாம் என்று அவள் முடிவு செய்தாள். இனி தனியாக வாழ முடியாது என்று தோன்றிய நாள் முதல் நடந்த அனைத்தையும் வரிசைப்படுத்தி ஒரு தாளில் எழுதினாள். தன் முடிவு சரிதான் என்று தோன்றியது. உடனே உடன் வேலை பார்க்கும் நண்பனுக்கு போன் செய்து, நீ என்னைக் காதலிப்பது தெரியும்; உன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வா; நாம் உடனே திருமணம் செய்துகொண்டுவிடலாம் என்று சொன்னாள்.

எழுத்தாளர் பயந்துபோனார். எப்படி இது நடக்கிறது என்று அவருக்குப் புரியவில்லை. ஒரு சர்வீஸ் இஞ்சினியரை அழைத்துத் தனது கணினி சரியாகத்தான் இருக்கிறதா என்று பரிசோதிக்கச் சொன்னார். அவரும் சர்வீஸ் செய்து, ஆப்பரேடிங் சிஸ்டத்தை அப்கிரேடு செய்து, குப்பைகளை ஒழித்து, வேகத்தை அதிகப்படுத்திக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

மாறியிருந்த பத்தியை அழித்துவிட்டு எழுத்தாளர் மீண்டும் முதலில் எழுதியதைத் திரும்ப எழுதி சேமித்தார். நாளை என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று அப்படியே விட்டுவிட்டு எழுந்து சென்றார்.

மறுநாள் அவர் கணினியைத் திறந்தபோதும் அவர் எழுதியது மாறி இருந்தது.

‘விருப்பமற்ற வாழ்வை அனுபவித்து முடித்தவனால் இந்தக் கதையை எந்நாளும் முடிக்க முடியாது. வேறு வேலையைப் பார்.’

6 comments

  • இந்த கதையை மாற்றி எழுதுபவர் பெயர் பேய் அல்ல ஹாக்கர். இருக்கும் இடத்திலிருந்து உலகின் எந்த மூலையில் இருக்கும் கணினியையும் இயக்கும் திறன் படைத்தவர்

  • கார்த்திக் காலிங் கார்த்திக் – ஃபரான் அக்தர்???

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version