மயிர் நீத்த காதை

சென்ற நூற்றாண்டில்..

இப்போதெல்லாம் என்னை ஓர் இடைவெளிக்குப் பிறகு பார்க்கிற அத்தனை பேரும் கேட்கிற முதல் கேள்வி பெரும்பாலும் என் சிகையலங்காரம் பற்றியதாக இருக்கிறது. என்ன இது என்னும் வியப்புடன் தொடங்கி, டை போடக்கூடாதா என்னும் அக்கறையுடன் விரிந்து, ரொம்ப வயசாயிட்ட மாதிரி தெரியுது என்று தீர்ப்பு சொல்லி முடித்துவிட்டுத்தான் அடுத்த விஷயத்துக்கே வருகிறார்கள்.

முதலில் ஒவ்வொருவருக்கும் பொறுமையாக விளக்கிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கே போரடித்துவிட்டது. யாராவது என்ன இது என்று ஆரம்பித்தால் இப்போதெல்லாம் மையமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அப்பறம்? என்று நகரப் பழகிவிட்டேன். ஒருத்தராவது ஜெயா டிவியில் வருகிற சோவிடம் அவருடைய சிகையலங்காரம் குறித்துக் கேட்கிறார்களா? நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்?

தலைவிதியைப் பற்றி நினைக்கத் தெரியாத ஒரு காலத்தில் தலைமுடி குறித்து நிறைய யோசித்திருக்கிறேன். பள்ளி நாள்களில் எனக்கு நிறையவே முடி இருந்தது. கல்லூரி முடித்து கல்கி போகும்போதுகூட அப்படித்தான். மாதம் ஒருமுறை கண்டிப்பாக முடி திருத்தம் செய்யவேண்டியிருக்கும். ஆனால் ஒழுங்காகச் செய்வேனா என்றால் மாட்டேன். என் அவ்வப்போதைய விருப்பத்துக்கேற்ப விதவிதமாக மாற்றி மாற்றித் தலைவாரிப் பார்ப்பது எனக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு. அவ்வண்ணமே அடிக்கடி ஷாம்பு போட்டு புசுபுசுவென்று பறக்க விடுவதும், முன் நெற்றியில் வந்து விழும் முடிக்கற்றையை ஸ்டைலாகப் பின்னால் தூக்கிவிட்டுக்கொள்வதும்கூட.

தாடியின்மீதும் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் ட்ரிம் செய்த தாடி என் விருப்பமாக ஒருபோதும் இருந்ததில்லை. வ.வே.சு. ஐயர் மாதிரி, கார்ல் மார்க்ஸ் மாதிரி காட்டுத்தாடி வளர்க்கவே விரும்பினேன். திடீர் திடீரென்று நினைத்துக்கொண்டு ஒரு மாதம், ஒன்றரை மாதங்கள் ஷேவ் செய்யாமல் அலுவலகம் போவேன். தினசரி வீட்டில் அம்மா திட்டிக்கொண்டே இருப்பதும் நான் அதைக் கண்டுகொள்ளாமல், என் வழி தனி வழி என்பதை மௌனமாக நிலைநாட்டுவதும் வழக்கமாக இருந்தது.

என் அம்மா, திட்டுவதை நிறுத்துகிற தினத்தில் சட்டென்று என் மூட் மாறிவிடும். ஒரு மணிநேரம் உட்கார்ந்து மழுங்க சிரைத்து என் தர்பூசனிக் கன்னத்தைத் தடவியபடி அம்மாவின்முன் போய் நிற்பேன். க்ஷணச்சித்தம், க்ஷணப்பித்தம் என்பாள். இதெல்லாம் மாபெரும் இலக்கியவாதியாகப்போவதின் அடையாளம் என்று என் பார்வை அதற்கு பதில் சொல்லும். அம்மாவுக்கு அநேகமாக அது புரியாது.

கிபி 2000வது ஆண்டு திடீரென்று ஒருநாள் என் முகவாய்ப் பகுதி தாடியில் இரண்டொரு நரைமுடிகள் எட்டிப்பார்த்தன. உடனே ஒரு கருப்பு பென்சில் எடுத்து பரபரவென்று தேய்த்து அதை மறைத்தேன். அநேகமாக தினசரி குளித்துவிட்டு வந்ததும் அதுவே என் முதல் வேலையாக இருந்தது. கொஞ்சநாள் அதற்காகக் கவலைப்படவும் செய்தேன். பிறகு ஷேவ் செய்யாமல் இருக்கும் வழக்கத்தைக் குறைத்து, வாரம் ஒருமுறையாவது செய்யத் தொடங்கினேன். காலக்ரமத்தில் காதோர கிருதாவில் ஒரு சில நரைகள் முளைக்கத் தொடங்கின. எனவே கிருதா வைப்பதைத் தவிர்க்கத் தொடங்கி, கரெக்டாகக் காதின் மேல் பகுதிவரை ஷேவிங்கின்போது எடுத்துவிடுவேன்.

குமுதத்துக்குப் போன பிறகு முடியாராய்ச்சி செய்ய எனக்கு நேரம் கிட்டவில்லை. மூன்று வருடங்கள் அங்கே இருந்துவிட்டு வெளியே வந்த பிறகுதான் ஒழுங்காகக் கண்ணாடி பார்த்தேன் என்று நினைக்கிறேன். அதிர்ச்சியாக இருந்தது. தாடியில் பாதியும் மீசையில் பாதியும் தலைமுடியில் பாதியும் வெளேரென்று நரைத்துவிட்டிருந்தன. முடியும் கணிசமாகக் கொட்டியிருந்தது. கடவுளே, என்னை ஏன் இப்படி ஒரு பழுத்த பத்திரிகையாளன் ஆக்கிவிட்டாய் என்று நெஞ்சுக்குள் நெக்குருகியும் பிரயோஜனமில்லை. மேலும் மேலும் நரைத்துக்கொண்டேதான் இருந்தது. நான் டை அடித்தே தீரவேண்டும் என்று என் மனைவி தீர்மானமாகச் சொல்லிவிட்டபடியால் பாக்கெட் ஆறு ரூபாய்க்குக் கிடைக்கும் பச்சிலைக் கரு மையை வாங்கி, பழைய பல் தேய்க்கும் ப்ரஷ்ஷை வைத்து எனக்கு நானே வண்ணம் தீட்டத் தொடங்கினேன்.

இனி நரைக்க ஒன்றுமில்லை

மைபூசி, குளித்து முழுகி மேக்கப்பெல்லாம் போட்டுக்கொண்டு கண்ணாடி முன் நின்று, அ, மன்மதன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனால் அந்தப் பச்சிலை மை பத்து நாள்கூட எனக்குத் தாங்காது. வெளியே கருப்பும் வேரில் வெளுப்புமாக ஒரு மல்டிகலர் எஃபெக்டில்தான் எப்போதும் தெரியும். சமயத்தில் பாதி கருப்பு, பாதி பழுப்பு, பாதி வெள்ளை என்றும் காட்டும்.

ஏதாவது ப்யூட்டி பார்லருக்குப் போய் ஒழுங்காக டை அடித்தால் ஒரு மாதம் தாங்கும் என்று உத்தமோத்தமர்கள் சிலர் சொன்னார்கள். செலவு கருதி வெகுநாள் யோசித்துக்கொண்டே இருந்தேன். அதற்குள் மேலும் முடி கொட்டுவது அதிகரித்துவிட்டது. என் பழைய கார்கூந்தலெல்லாம் எங்கே போனதென்றே தெரியவில்லை. இருந்த கொஞ்சமும் மூவர்ணக் கொடியாகப் பறக்க, வேறு வழியில்லாமல் இறுதி முயற்சியாக எல்டாம்ஸ் ரோடு அம்புலியில் நனைவதென முடிவு செய்தேன். கமலஹாசனுக்கெல்லாம் கரசேவை செய்து அனுபவப்பட்ட ஸ்தலம். நம் தலைக்கு ஒரு நற்கதி காட்டாதா என்ற நப்பாசை.

அம்புலியில் அமர்ந்திருக்கும் சுமார் ஒரு மணிநேரம் மிகவும் சுகமான அனுபவமாக இருக்கும். நல்ல ஏசி. இனிய இசை. சுத்தமான சுற்றுச்சூழல். சுழல் நாற்காலியில் ஏறி உட்கார்ந்து, கழுத்தைச் சுற்றி நீள் வஸ்திரம் சுற்றப்பட்டுவிட்டால் பதினான்காம் லூயி ஆகிவிட்டதுபோல் ஒரு பிரமை உண்டாகும். அப்படியே கண்ணை மூடிக்கொண்டு கனவு காணத் தொடங்கினால் சரியாக நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு அலங்காரம் முடித்து திருப்பள்ளி எழுச்சி பாடுவார்கள். கொஞ்ச நேரம் காயவிட்டு, கழுவிவிட்டு, திரும்பவும் உட்காரவைத்து ஹீட்டர் போட்டு, பளபளவென்று என்னவோ ஒரு க்ரீமையும் தடவி, ஜோராகத் தலைவாரி சும்மா மாப்பிள்ளை கணக்காக அனுப்பிவைப்பார்கள். இலவச இணைப்பாக முடி கொட்டாதிருக்க சில மங்கையர் மலர் டைப் குறுந்தகவல்களும் அங்கே தரப்படும்.

கொஞ்சநாள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்தேன். ஆனால் ஒழுங்காக ஒரு குறிப்பிட்ட தேதியில் இதற்குச் செல்வது என்பது எனக்குச் சாத்தியமாக இல்லை. ஒழுங்கீனங்களால் வடிவமைக்கப்பட்டவன் நான். திடீரென்று அம்புலி ஞாபகம் என்றாவது வந்துவிடும். ஆபீசில் செய்துகொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டுவிட்டு எதிரே ஓடிவிடுவேன். அதுவரை இருந்த பங்கரை கோலத்தைக் கலைத்து மாறுவேஷம் பூண்டவன் மாதிரி ஒரு மணிநேரம் கழித்து அலுவலகம் திரும்பி வந்து, விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்குவேன். அம்புலி வண்ணம் இருபது நாள் தாக்குப் பிடிக்கும். அதுவும் பிறகு அடியில் வெளுக்கத் தொடங்கிவிடும். எனக்கோ குறைந்தது ஐம்பது நாளுக்கொரு முறைதான் அந்த அலங்கார ஜோர் ஆசை மிகும்.

இதனிடையில் ஆரோக்கியம் தொடர்பான சில புத்தகங்களைத் தொடர்ச்சியாக வாசித்ததில், நிறைய தலைமுடி இருப்பது நோய்களுக்கு இன்விடேஷன் கொடுத்து அழைத்து உட்காரவைப்பதற்கு ஒப்பாகும் என்ற ஒரு கருத்து பொதுவாக அனைத்து மருத்துவர்களாலும் ஏற்கப்பட்ட ஒன்றாகத் தோன்றியது. சுதந்தரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவம்கூடத் தன்னுடைய சிறை அனுபவங்களைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

‘கைதி சிறைக்குள் சென்றதும் முழு மொட்டையாக க்ஷவரம் செய்துகொண்டுவிட வேண்டும். அங்கு சாதாரணக் கைதியின் சரீரத்தின் எந்தப் பாகத்திலும் அரையங்குலத்துக்கு மேல் நீளமுள்ளதாக ரோமம் வளரவிடக்கூடாதென்பது வைத்திய விதி. ரோமம் அதிகமாக வளர்ந்துவிட்டால் அழுக்குப் படிந்து நோய் உண்டாகிவிடும்.’

எனக்குக் கொஞ்சம் டஸ்ட் அலர்ஜி உண்டு. ஒரு காலத்தில் தக்காளிப் பழம் சாப்பிட்டால் சகட்டுமேனிக்குத் தும்மல் வந்துகொண்டே இருக்கும். அப்புறம் ஆக்டிஃபெட் போட்டு அடக்கவேண்டிவரும். அதையெல்லாம் நினைவுகூர்ந்து, ஒருவேளை நிறைய முடி இருப்பதால்தான் இந்தப் பிரச்னை இருக்குமோ என்று யோசித்தேன்.

எதற்கு வம்பு? அம்புலிக்கு ஒழுங்காகப் போகமுடிவதில்லை. போய் செலவு செய்து டை அடித்தாலும் கொஞ்சநாளிலேயே வெளேரென்று சிரித்துவிடுகிறது. பேசாமல் ஒட்ட வெட்டிவிடலாம் என்று ஒருநாள் முடிவு செய்து, லோக்கல் கடைக்கே சென்று மிலிட்டரி கட் என்று உத்தரவிட்டேன். அப்போதும்கூட ஒட்ட வெட்டி பழைய பாக்கெட் டை போட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

அதிலும் ஒரு பிரச்னை வந்தது. ஒரு நாளைக்குப் பலமுறை மாவா துப்பி வாய் கொப்பளிக்கவேண்டியிருப்பதால் மீசையில் அடிக்கடி தண்ணீர் பட்டு அது மட்டும் இன்னும் சீக்கிரமே வெளுக்கத் தொடங்கியது. அதற்கு மட்டும் சிறப்பு கவனம் செலுத்தி வாரம் ஒருமுறை கருப்படிக்க வேண்டும்.

இன்று

இது ஏதடா ரோதனை என்று தோன்றிய ஒரு சுப தினத்தில் கார்கூந்தல் மீதான என் காதலை முற்றிலுமாகத் தலை முழுகினேன். எப்போதும் சதுரவட்டை. மீசை இனி இல்லை.

தொடக்கத்தில் வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. மீசை இல்லாத என் முகத்தைப் பார்த்துவிட்டு என் மகள் நீ என் அப்பா இல்லை என்று சொன்னாள். இது எத்தன நாளைக்குன்னு பாப்போம் என்று என் மனைவி தன் வழக்கமான விமரிசனத்தை முன்வைத்தாள். ஆனால் நான் விடவில்லை.

2009 டிசம்பர் 22ம் தேதி தலை முடியை ஒட்ட வெட்டி, டை அடிப்பதை நிறுத்தினேன், மீசையையும் எடுத்தேன் என்று ஒரு நோட்பேடில் எழுதி சேவ் பண்ணி வைத்திருந்ததை இன்று தற்செயலாக எடுத்துப் பார்த்தேன்.

இன்றோடு ஒரு வருடம்.  மயிரே போச்சு.

32 comments

  • சரியான முடிவு. 2011ல் தலைமேல் கொண்டு நிறைவேற்றுவதாக இருக்கிறேன். பைதபை, முடிதிருத்துவோர் சங்கத்தின் லேட்டஸ்ட் தீர்மானம் படித்தீர்களா?

    • ராம்கி: அந்தக் கட்டணத் திருத்த அறிவிப்பும் இக்கட்டுரையும் மிகவும் தற்செயலாக ஒன்றாக வெளியாகியிருக்கிறது. எனக்கே வியப்புத்தான்.

  • ஹிஹி! நானும் ஒவ்வொரு செமஸ்டரின் கடைசி தேர்வு முடிந்தவுடன் மீசையை எடுத்துவிடுவேன். அடுத்த செமஸ்டரில் இப்படி இருக்க கூடாது என்பதற்காக ஒரு மாற்றம். அப்போது அப்பா சொல்லும் குறள்:

    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்த தொழித்து விடின்.

  • பழைய ஃபோட்டா எல்லாம் ஷோக்கா கீது! முப்பது வயசுலயே முடி வெளுத்துப் போனா என்ன பண்ணலாம்? 🙂

    • ஷங்கர்: என் கட்டுரையின் கடைசி இரு சொற்களைத் திரும்பப் படிக்கவும்.

  • முடி’உரை 🙂

    ////ஒழுங்கீனங்களால் வடிவமைக்கப்பட்டவன் நான்////

    இந்த விசயத்தில் உங்களின் ஃபாலோவராக இருக்கலாம் என்று முடி’வெடுத்திருக்கிறேன் !

    • ஆயில்: நீ சென்னைக்கு வராமலா போய்விடுவாய்? ரொம்ப நாளாகவே உனக்காக ஒரு ஸ்பெஷல் ஐட்டம் வைத்திருக்கிறேன். வந்து பெற்றுச்செல்லவும்.

    • வைஷ்ணவி: என் மனைவி அதே அ-வில் ஆரம்பிக்கும் வேறொரு களை தெரிவதாகத்தான் சொன்னார். நீங்கள் ஏதோ எழுத்துப்பிழையுடன் பேசுகிறீர்கள்.

  • கட்டுரையின் கடைசி தத்துவார்த்தமான வாக்கியம்தான் ரொம்ப பிடித்திருந்தது. btw முதல் புகைப்படத்தில் இருப்பவர்களில் யார் கமல் என்பதை கண்டுபிடிப்பதே சிரமமாயிருக்கும் போலிருக்கிறதே? 🙂

    • /கடைசி தத்துவார்த்தமான வாக்கியம்/ சுரேஷ், உங்கள் அக்குறும்புக்கு ஓர் அளவே இல்லையா?

  • எனக்கும் இருபத்தி எட்டு வயது தான் ஆகிறது ஏனோ எனக்கு மட்டும் காதோரமும் தாடியிலும் நரைத்த முடிகள் மிக அதிகமாக இந்த வயதிலேயே. நானும் ஆரம்ப காலத்தில் நீங்கள் நினைத்தது போலவே நினைத்து கொண்டிருக்கிறேன். இதுவே பெரிய கவலையாக இருக்கிறது …

  • இலக்கியவாதி நேர் நிரை பற்றியல்ல மயிர் நரை பற்றி கூட இலக்கியம் படைக்கலாம்ன்னு சொல்லாம சொல்லிட்டீங்க 🙂

  • நீலக்கலர் சட்டையில் ஆங்காங்கு தெரியும் கருநிற தாடியுடன் அழகாக இருக்கிறீர்கள்.

    எனக்கும் என்னுடைய குடும்ப சொத்தான இளநரை தலையிலும் முகத்திலும் அதிகமாகவே இருக்கிறது. “தல போற விஷயம் நிறைய இருக்கும் பொழுது மயிறு எக்கேடு கெட்டால் என்ன?” என்று சமாதானம் ஆகவேண்டியதுதான்…

    :-)))

  • ”இனி நரைக்க ஒன்றுமில்லை” படத்தில்தான் அனுபவக் களை சொட்டுகிறது.

    ”இன்று” போட்டோ ”நானேதானாயிடுக” படம் உயிர் பெற்று வந்ததைப் போல உள்ளது.

    இரண்டவது படத்தில் சூட்கேஸுடன் உட்கார்ந்திருப்பது நீங்களா?

    மற்றபடி கட்டுரை கலக்கல்.

  • நல்ல குணசித்திர நடிகரின் முகவெட்டு உங்களுக்கு….படம் எடுக்கும் போது வந்து கேக்குறேன்…” மையமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அப்பறம்?” என்று நகரப்பிடாது சொல்லிட்டேன் ஆமா

  • முடிக்கு டை அடிப்பதனால் கண்ணுக்கு பிரச்சினை வரும். சில டை வகைகளை பயன்படுத்தினால் அலர்ஜி உண்டாகி முகத்தின் வண்ணம் ஒரு மாதிரியாக வாய்ப்பு உண்டு.

    இப்ப நீங்க அதை விட்டு விட்டதால் இனி பயமில்லை உங்களுக்கு!

    • மிகவும் சரி. இதையும் படித்தேன். விட்டதற்கு இதுவும் ஒரு காரணம். தவிரவும் இயல்பாக இருக்கும்போது லேசாக இருக்கிறது.

  • //ஒரு நாளைக்குப் பலமுறை மாவா துப்பி வாய் கொப்பளிக்கவேண்டியிருப்பதால்//
    மாவா பற்றி எழுதுவதாக சொன்ன ஞாபகம். எப்போ எழுதப்போகின்றீர்கள்?

    • ஒருவாசகன்: நாட்டுக்கு ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி எழுதச் சொல்லிக் கேட்கிறீர்கள். பார்க்கிறேன். ஜன 17க்குப் பிறகு எப்போதாவது எழுதுகிறேன்.

  • ///கண்ணாடி முன் நின்று, அ, மன்மதன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.///

    அந்த மன்மதன் திரிஷாவுக்கு அம்புவிடுகிறார். இந்த மன்மதன்?

    எப்பூடி எல்லாம் கமல் படத்துக்கு விளம்பரம் கிடைக்கிறது.

  • //தினசரி வீட்டில் அம்மா திட்டிக்கொண்டே இருப்பதும் நான் அதைக் கண்டுகொள்ளாமல், என் வழி தனி வழி என்பதை மௌனமாக நிலைநாட்டுவதும் வழக்கமாக இருந்தது//

    //இது எத்தன நாளைக்குன்னு பாப்போம் என்று என் மனைவி தன் வழக்கமான விமரிசனத்தை முன்வைத்தாள். //

    உங்களைப் போன்று முடி விஷய மனோபாவம் உள்ள எனக்கும், ஏன் இப்படிப்பட்ட எல்லோருக்கும் இப்படி அமைவதுண்டு….

    எனினும் காதை வரையும் திறன்….

  • பாரா!, பாரா முகமும் பாரா தலையுமா இருந்துட்டு போங்களேன்

  • ///ஒரு நாளைக்குப் பலமுறை மாவா துப்பி வாய் கொப்பளிக்கவேண்டியிருப்பதால்//
    மாவா பற்றி எழுதுவதாக சொன்ன ஞாபகம். எப்போ எழுதப்போகின்றீர்கள்?//

    ஆம் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றோம்!

    //நீ சென்னைக்கு வராமலா போய்விடுவாய்? //

    வாய்ப்பே இல்லை உடன்பிறப்பு அழைக்கிறார்! & உங்களையும் சந்தித்து நீங்கள் மகிழ்ச்சியுடன் தரப்போகும் பரிசினை பெறவும் கண்டிப்பாக சென்னை வருகை உண்டு 🙂

  • ragav sir my wife also says to me sathuravettai is not good. but i like very mush sathuravettai because this is comercialy and healthy good me.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version