நகைச்சுவை

ஜடாமுடிக்கு வழியில்லை!

பொதுவாக எனக்கு நகை அணிவது என்பது பிடிக்காது. பெண்கள் அணிவது, அவர்கள் பிறப்புரிமை. அது பற்றி இங்கே பேச்சில்லை. நகை அணியும் ஆண்களைப் பற்றியது இது.

மோதிரம், செயின், கம்மல், வளையல் எனப் பெண்களின் பிதுரார்ஜித உரிமைகளில் நான்கினை ஆண்கள் தமக்குமான ஆபரணங்களாக அபகரித்துக்கொண்டது பற்றி நிரம்ப வருத்தப்பட்டிருக்கிறேன். பால்ய வயதுகளில் நகையணியும் ஆண்களைப் பார்க்க நேர்ந்தால் குறைந்தபட்சம் நாலடியாவது தள்ளி நின்றுவிடுவேன். குறிப்பாக, ரயிலில் சீட்டுக்கு அடியே சூட்கேசை வைத்து இழுத்துக் கட்டும் இரும்புச் சங்கிலி கனத்துக்குக் கழுத்தில் செயின் அணிந்து நகர்வலம் வரும் நபர்களைக் கண்டால் எனக்குக் கிலி. அவர்கள் அன்னா ஹசாரே மாதிரி நல்லவர்களாகக் கூட இருப்பார்கள். அந்த வயதில் என் மனத்துக்குள் அங்ஙனம் தாட்டியான செயின் அணியும் ஆண்கள் அத்தனை பேரும் கெட்டவர்கள் என்னும் அபிப்பிராயம் எப்படியோ ஏற்பட்டிருந்தது.Read More »ஜடாமுடிக்கு வழியில்லை!

எனக்கு வேணாம் சார்!

நெடுந்தூரப் பேருந்துப் பயணம் ஒன்றில்தான் முதல்முதலில் அவர் எனக்கு அறிமுகமானார். ரொம்பக் கோபத்தில் இருந்தார். அரசுப் பேருந்துகளின் இருக்கைகள் ஏன் இன்னும் இருபதாம் நூற்றாண்டிலேயே இருக்கின்றன? பயணிகளின் முதுகுகள் மற்றும் முழங்கால்கள் குறித்து முதல்வருக்குப் போதிய அக்கறை இல்லை. தி ஹிந்துவுக்கு யாராவது வாசகர் கடிதம் எழுதிவிட்டு மெரினா கடற்கரையில் ஒரு கண்டன மாநாடு நடத்தினால் அவர் வந்து கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கத் தயார்.Read More »எனக்கு வேணாம் சார்!

பேசு கண்ணா பேசு

பேசிக்கொண்டே வேலை செய்கிறவர்களைப் பார்க்கிற போதெல்லாம் என்னையறியாமல் ஒரு பதற்றம் ஒட்டிக்கொள்ளும். எதிராளியின் வேலையோ, அதன் நேர்த்தி அல்லது பிழையோ எவ்விதத்திலும் என்னை பாதிக்கப்போவதில்லை என்றாலும் அந்தப் பதற்றத்தைத் தவிர்க்க முடிந்ததில்லை.

நான் எழுதுபவன். வேலை செய்துகொண்டிருக்கும்போது, உலகம் அழிய இன்னும் ஒரு வினாடிதான் இருக்கிறது என்று எம்பெருமான் நேரில் வந்து தகவல் தெரிவித்தாலும் அது என் காதில் விழாது. காதில் விழுந்தாலும் வாயிலிருந்து ஒரு சொல்லும் வெளிவராது. இதனாலெல்லாம் என்னை ஒரு உம்மணாமூஞ்சி என்று மதிப்பிடுவீர்களானால் அது சரியல்ல. மணிக்கணக்கில் பேசக்கூடியவன் தான். அர்த்தமற்ற வெறும்பேச்சுகளிலும் ஆர்வம் மிக்கவனே. ஆனாலும் ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது பேசத் தோன்றாது. அல்லது பேச வராது.Read More »பேசு கண்ணா பேசு

ஆயிரம் அப்பள நிலவுகள்

கீதையிலே பகவான் சொல்கிறான், எது ருசியானதோ, அது உடம்புக்கு ஆகாது. எது எண்ணெயில் பொறிக்கப்பட்டதோ, அது கொழுப்பைக் கூட்டி, இடையளவை ஏடாகூடமாக்கும். நேற்று கடைக்காரனிடம் இருந்த அப்பளம் இன்று உன் வீட்டு வாணலியில் பொறிபடும். நாளை அது உன் வயிற்றில் ஜீரணமாகி, நாளை மறுநாள் டாக்டர் பாக்கெட்டுக்குப் பணமாக மாறிச் செல்லும். நீ உன் பெண்டாட்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு, வயிற்றைக் கட்ட வழி தெரியாது விழிப்பது உலக நியதியாகும்.Read More »ஆயிரம் அப்பள நிலவுகள்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

அம்மன், வேப்பிலை, கூழ், கூம்பு ஸ்பீக்கர், மஞ்சள் டிரெஸ், சாமியாட்டம் என்று வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆடி மாதம் அமர்க்களமாக வந்துபோய்விட்டது. வீட்டு வாசலில் ஓர் அம்மன் கோயில் இருக்க விதிக்கப்பட்டவன், இது விஷயத்தில் எம்மாதிரியான உளவியல் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் என்று உங்களால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடியாது. கடந்த மாதம் முழுதும் தினசரி கனவில் எனக்கு யாரோ நாக்கில் அலகு குத்தி, முகத்தில் விபூதியடித்துத் தும்மல் வரவழைத்துக்கொண்டே இருந்தார்கள். நள்ளிரவுக்குப் பிறகு கூம்பு ஸ்பீக்கருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கோயில் பூசாரி வீட்டுக்குப் போனபிறகும் எல்லாரீஸ்வரி என் காதுகளுக்குள் ஓயாமல் செல்லாத்தா செல்ல மாரியாத்தா என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அம்பிகையாகப்பட்டவள் எத்தனையோ பரம சாதுவானவளும்கூட. இப்படியெல்லாம் படு உக்கிர பக்திதான் உனக்கு என்று அழிச்சாட்டியம் பண்ணினால் அவள்தான் பாவம் என்ன செய்வாள்? கூம்பு ஸ்பீக்கரின் ஒலியைத் தாண்டிய கிலியூட்டும் கிறீச்சிடல் வேறொன்றுமல்ல; அவளது அபயக்குரல்தான்.Read More »ஆடி அடங்கும் வாழ்க்கையடா