பொலிக! பொலிக! 33

நேரே போய்க் கதவைத் தட்டி என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கைகூப்பி நின்றிருந்தால் விஷயம் வேறு. முடியாது என்றவரின் நியாயங்களை எண்ணி மனத்தைத் தேற்றிக்கொண்டிருக்கலாம். முதலியாண்டான் அப்படிச் செய்யவில்லை. அவனுக்கு முறை தெரியும். தனது விருப்பமும் அதன் அசாத்தியத்தன்மையும் எப்பேர்ப்பட்டவை என்பதை வெகு நன்றாக அறிந்தவன் அவன். போராடித்தான் திருக்கோட்டியூர் நம்பியின் மனத்தைக் கவரவேண்டும் என்பதை உணர்ந்தேதான் திருவரங்கத்தில் இருந்து கிளம்பிச் சென்றிருந்தான்.

கோயில் மண்டபத்தில் தங்கிக்கொண்டான். தினமும் காலை குளித்தெழுந்து சௌமிய நாராயணப் பெருமாளைச் சேவித்துவிட்டு நேரே ஆசாரியரின் வீட்டுக்குப் போய்விட வேண்டியது. அவர் ஒன்றும் கேட்கவும் மாட்டார், சொல்லவும் மாட்டார். அங்கேயே ஒரு ஓரமாக நின்றுகொள்ள வேண்டியது. எடுபிடி வேலைகளுக்கு இதோ நான் இருக்கிறேன் என்று முந்திக்கொண்டு ஓடுவான். தொண்டைக் காட்டிலும் உளத்தூய்மைக்குச் சிறந்த உபாயமில்லை என்பது அவனுக்குத் தெரியும்.

இந்நாள்களில் திருக்கோட்டியூர் நம்பியின் சீடர்கள் அனைவருக்கும் அவன் நெருங்கியவனாகிப் போனான். அவரது குடும்பத்து உறுப்பினர்களுக்கு முதலியாண்டான் வேண்டப்பட்டவனானான். ஊரில் இப்போது அவனைத் தெரியாதவர்கள் கிடையாது. நம்பியின் சீடர்களுள் ஒருவன் என்றே அவர்கள் எண்ணத் தொடங்கிவிட்டார்கள்.

ஒருநாள் இருநாள் அல்ல. ஆறு மாதங்கள். ஒரு தவமேபோல நம்பிக்கு சிசுருஷை செய்துகொண்டிருந்த முதலியாண்டானிடம் அதன் பிறகுதான் நம்பி வாய் திறந்தார்.

‘யாரப்பா நீ? என்ன வேண்டும் உனக்கு?’

முடியாது என்று ஒரே சொல்லில் குருகைப் பிரான் மறுத்திருந்தால் அதோடு முடிந்திருக்கும். அவரது சுபாவம் அதுதான். திருமந்திர விளக்கம் கேட்கப் போன ராமானுஜருக்கே பதினேழு முறை அதுதான் அவரது பதிலாக இருந்தது. ‘இன்னொரு சமயம் பார்ப்போம்.’ இதற்கெல்லாம் காரணமே கேட்க முடியாது. அவர் அப்படித்தான்.

ஆனால் முதலியாண்டானை அவர் மறுத்தபோது அதனைச் சொன்னார். ‘உமக்கு மூன்று கர்வங்கள் இருக்கின்றன. கல்வி சார்ந்த கர்வம். செல்வம் குறித்த கர்வம். குலத்தைப் பற்றிய கர்வம். இதனை முதலில் ஒழித்துவிட்டு உட்காரும். எம்பெருமானே நல்ல வழி காட்டுவான்.’

ஒரு வகையில் முதலியாண்டானின் ஞானக் கண் திறந்த தருணம் அது. ஆறு மாத சேவைக்குக் கிடைத்த மாபெரும் பரிசு அந்த போதனைதான். சரம சுலோக விளக்கமல்ல. வேறு எதுவுமல்ல. கர்வம் களையச் சொன்ன உபாயம்.

எனக்கு அந்த கர்வங்கள் இருக்கிறதா என்ன? முதலியாண்டானுக்குச் சற்று வியப்பாகத்தான் இருந்தது. உண்மையில் கிடையாது. அவன் மனத்தில் மிச்சம் இருந்த ஒரே பெருமிதம், தாம் ராமானுஜரின் உறவினன் என்பது மட்டுமே. உடையவரின் மிக நெருங்கிய சீடன் என்னும் பெருமிதம்தான் அவனது கல்வி, செல்வ, குல கர்வங்களாக மூன்று வடிவங்களில் உருண்டு திரண்டிருந்தன.

திருக்கோட்டியூர் நம்பி எடுத்துச் சொல்லாவிட்டால் கடைசி வரை அது புரியாமலே போயிருக்கும். நல்லது. ஆறு மாத சேவையின் பலன் ரகஸ்யார்த்தங்கள் அல்ல. ஒரு சுட்டிக்காட்டல். பெரிதுதான். ஒரு விதத்தில் ரகஸ்யார்த்தங்களை விடவுமே.

இல்லை என்று தெரிந்த கணத்தில் முதலியாண்டானுக்குக் கண்ணில் நீர் கோத்துவிட்டது என்றாலும் அவன் அதைத் தோல்வியாக உணரவில்லை. அது ஒரு தருணம். ஞானத்தின் வாசல் திறந்த தருணம். உள்ளுக்குள் அமைதி கண்டு ஒடுங்கி நிற்கிற தருணம். அடைய நினைக்கிற அனைத்தையும் அடைவதற்கு, விலகி நிற்கப் பயில வேண்டுமென்ற பெரும் பாடம் புரிந்த தருணம்.

சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான் முதலியாண்டான். அதற்குமேல் ஒன்றும் பேசாமல் திருக்கோட்டியூர் நம்பியின் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டான்.

இப்போது அவன் மாறியிருந்தான். மகத்தான பெரும் மாற்றம். தனது பிழை புரிந்த மாணவன் அதைக் களைவதிலேயே கவனம் காட்டுவான். முதலியாண்டான் ஒரு மிகச் சிறந்த மாணவன். உள்ளுக்குள் மறைந்திருந்த ஒரு பெரும் ஊற்றின் கண்ணியை நம்பிகள் சுட்டிக்காட்டிவிட்டார். இனிக் குடைந்து வெளியே தள்ள வேண்டியதுதான்.

திருவரங்கம் வந்து சேர்ந்த முதலியாண்டான் நடந்த கதையை ராமானுஜரிடம் விவரித்தான்.

‘எனக்கு ரகஸ்யார்த்தம் கேட்கத் தகுதி வரவில்லை சுவாமி! தகுதியை வளர்த்துக்கொண்டு உங்களிடமே மீண்டும் கேட்பேன்.’

‘என்னிடமா! ஆனால் எம்பெருமானே உனக்கு வழி காட்டுவான் என்றல்லவா குருகைப் பிரான் சொல்லியனுப்பியிருக்கிறார்?’

முதலியாண்டான் புன்னகை செய்தான். ‘உங்களை அவர் எம்பெருமானாரே என்று அழைத்ததை மறந்துவிட்டீர்களா சுவாமி? எனக்கு நீங்கள்தான் அவன்!’ என்று தாள் பணிந்தான்.

வெளியே ஏதோ சத்தம் கேட்டது. யாரோ அழுகிற சத்தம். நாலைந்து பேர் சமாதானப்படுத்துகிற சத்தம்.

‘யார் அங்கே?’ என்றார் ராமானுஜர்.

அத்துழாய் கண்ணைக் கசக்கிக்கொண்டு உள்ளே வந்தாள்.

‘அட, வா அத்துழாய்! எப்படி இருக்கிறாய்? உன் புருஷன் சுகமா? புகுந்த வீட்டுப் பெரியவர்கள் நலமா?’ பாசம் பொங்கக் கேட்டார் ராமானுஜர்.

அத்துழாயை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவள் பெரிய நம்பியின் மகள். துறுதுறுவென்று ஓரிடத்தில் கால் பொருந்தாமல் ஓடிக் களித்துக்கொண்டிருந்த குழந்தை. சட்டென்று ஒருநாள் மணமாகிப் புகுந்த வீடு போய்விட்டவள். இதோ இன்று மீண்டும் வந்து நிற்கிறாள். ஆனால் கண்ணில் எதற்கு நீர்?

‘அழாமல் என்ன செய்வேன் அண்ணா? என் திருமணத்துக்கு அப்பா உரிய சீர் செய்யவில்லையாம். அவரால் என்ன முடியும் என்று தெரிந்துதானே சம்பந்தம் செய்தார்கள்? அதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை. தினமும் என் மாமியார் எதையாவது சொல்லி குத்திக்காட்டிக்கொண்டே இருக்கிறார்!’

‘அடடா..!’

‘நேற்றைக்கு ஆற்றுக்குக் குளிக்கப் போகும்போது துணைக்கு வருகிறீர்களா என்று சாதாரணமாகத்தான் கேட்டேன். அதற்குப் போய் நான் என்ன உன் வேலைக்காரியா என்று சத்தம் போட்டுவிட்டார்.’

‘அட நாராயணா!’

‘அப்பாவை எப்படியெல்லாம் இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள் தெரியுமா? என்னால் தாங்க முடியவில்லை. உனக்குத் துணைக்கு ஆள் வேண்டுமென்றால் உன் அப்பனை ஒரு வேலைக்காரி பார்த்து அனுப்பிவைக்கச் சொல் என்று சொல்கிறார்கள்.’

சீதன வெள்ளாட்டி என்பார்கள். பெண்ணுக்கு மணம் முடித்து அனுப்புகிறபோது உதவிக்கு ஒரு வேலைக்காரியைச் சேர்த்து அனுப்புகிற வழக்கம் இருந்த காலம்.

‘இது ஒரு பிரச்னையா? நீ கிளம்பு அத்துழாய். உன் சீதன வெள்ளாட்டியாக இந்த முதலியாண்டான் உன்னோடு வருவார்!’ என்றார் ராமானுஜர்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி