ருசியியல் 19

ம்ஹும், இவன் சரிப்பட மாட்டான். நாக்குக்குச் சேவகம் பண்ணிக்கொண்டிருந்த பிரகஸ்பதி தேக சௌக்கியத்துக்கு உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டானே என்று நினைப்பீர்களானால் சற்று அவசரப்படுகிறீர்கள் என்று அர்த்தம். வேகம் குறைய ஆரம்பித்த கணிப்பொறியை ஃபார்மட் செய்து வேகம் கூட்டுவது போல, செயற்பாட்டு வீரியம் மட்டுப்பட்ட இல்லத்தரசி, அம்மா வீட்டுக்குப் போய்த் தங்கி சார்ஜ் ஏற்றி வருவது போல, காய்ந்த கண்டலேறில் கடல் மாதிரி பக்கத்து மாநிலத்து நதி பெருக்கெடுத்தாற்போல, ஒரு விரதமானது நமது ருசி நரம்புகளை எத்தனை உத்வேகத்துடன் தூண்டிவிடும் என்பதை லேசில் சொல்லிவிட முடியாது.

உடனே ஞாபகத்துக்கு வருகிற ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன். சமீபத்தில் ஒரு நாள் நான் விரதம் முடிக்கிற நேரம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும்படி ஆனது. வீடு ஒரு சௌகரியம். இஷ்டப்பட்ட மாதிரி என்ன வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். உண்ணுவதில் அளவு காக்க வேண்டிய அவசியம் கிடையாது. தவிர நமது மெனுவை முன்கூட்டித் தீர்மானித்து, அதற்கான அலங்கார விசேஷங்களை நாமே பார்த்துப் பார்த்துச் செய்து புசிக்கலாம். ஓட்டலுக்குப் போனால், பிரகஸ்பதி என்ன வைத்திருக்கிறானோ அதுதான். அது என்ன லட்சணத்தில் உள்ளதோ, அதுவேதான். இதனாலேயே பெரும்பாலும் என் உணவு வேளை என்பதை வீட்டில் உள்ளது போலப் பார்த்துக்கொள்வேன்.

அன்றைக்கு விதியானது என்னை வெளியே கொண்டு போய்ப் போட்டது. சரி பரவாயில்லை; ஓட்டல்காரர்களும் ஜீவராசிகள்தானே; பேசி சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்து ஓர் உணவகத்துக்குச் சென்று உட்கார்ந்தேன். சப்ளையர் சிகாமணி வந்தார்.

‘சகோதரா, நான் சற்று வேறு விதமாகச் சாப்பிடுகிற வழக்கம் கொண்டவன். மிரளாமல் சொல்லுவதை முழுக்க உள்வாங்கிக்கொள். உன் ஓட்டலில் இன்றைக்கு என்ன காய்கறி, கூட்டு வகையறா?’ என்று ஆரம்பித்தேன்.

அவன் முட்டை கோஸும் முருங்கைக்காய் கூட்டும் என்று சொன்னான்.

‘நல்லது. பனீர் புர்ஜி அல்லது பனீர் டிக்கா இருக்கிறதா?’

‘புர்ஜி இல்லை. டிக்கா உண்டு’ என்றான்.

‘நான் தனியாகக் காசு கொடுத்துவிடுகிறேன். எனக்கு ஒரு ஐம்பது கிராம் வெண்ணெய் வேண்டும். கிடைக்குமா?’

மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தான். நான்மறைகளுள் ஒன்று கழண்டவன் என்று எண்ணியிருக்கக்கூடும். கிடைக்கும் என்று சொன்னான்.

‘அப்படியானால் ஒன்று செய். ஒரு பெரிய கப் நிறைய முட்டை கோஸ். இன்னொரு பெரிய கப்பில் முருங்கைக் கூட்டு. ஒரு கப் வெண்ணெய். ஒரு பனீர் டிக்கா. இவற்றோரு ஒரு கப் தயிர். இதை முதலில் கொண்டு வா’ என்று ஆணையிட்டேன்.

‘சாப்பாடு?’ அவன் சந்தேகம் அவனுக்கு.

இதுதானப்பா சாப்பாடு என்று சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். சற்று நேரத்தில் முட்டை கோஸை முதலில் எடுத்து வந்து வைத்தான். அளவெல்லாம் போதுமானதுதான். ஆனால் அந்தத் தாவர உணவானது தனது தன் மென் பச்சை நிறத்தை முற்றிலும் இழந்து, மஞ்சள் பூசிக் குளித்துவிட்டு செங்கல் சுவரில் முதுகைக் கொண்டுபோய்த் தேய்த்த நிறத்தில் இருந்தது.

இந்த முட்டை கோஸ் ஒரு வினோதமான காய். குக்கரிலோ, மைக்ரோ வேவ் அடுப்பிலோ அதை வேகவைத்துவிட்டால் தீர்ந்தது. நிறம் செத்துவிடும். என்னளவில் ஓர் உணவின் ருசி என்பது அதன் சரியான நிறத்துக்குச் சமபங்கு தருவது. உண்மையிலேயே, நிறமிழந்த காய்கறிக்கு ருசி மட்டு. மேலுக்கு நீங்கள் என்ன மசாலா போட்டு அலங்காரம் செய்தாலும் அது விளக்குமாத்துக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டிய மாதிரிதான்.

இதை என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, உத்தமன் அந்த முருங்கைக் கூட்டைக் கொண்டுவந்து வைத்தான். அநியாயத்துக்கு அதன் மேற்புறம் சூழ்ந்த பெருங்கடலாக ஓர் எண்ணெய்ப் படலம். வடக்கத்திய சப்ஜி வகையறாக்களை எண்ணெயால் அலங்கரித்து எடுத்து வந்து வைப்பார்களே, அந்த மாதிரி. எனக்கு உயிரே போய்விடும் போலாகிவிட்டது. ஏனென்றால் மூன்று அல்லது நான்கு பிறப்புகளுக்குத் தேவையான எண்ணெய் வகையறாக்களை உறிஞ்சிக் குடித்து முடித்துவிட்டு, இனி எண்ணெய் என்பதே வாழ்வில் இல்லை என்று முடிவு செய்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன.

ஆனாலும் என்ன செய்ய? அங்கு வாய்த்தது அதுதான்.

அடுத்தபடியாக பனீர் டிக்கா வந்தது. இந்த பனீர் டிக்காவில் சேர்மானமாகிற தயிரின் அளவு, தன்மை பற்றியெல்லாம் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறேன். மேற்படி உணவக மடைப்பள்ளி வஸ்தாதுக்கு பனீர் டிக்கா என்பது பனீரில் செய்யப்படுகிற பஜ்ஜி என்று யாரோ சொல்லியிருக்க வேண்டும். எனவே பனீரை வேகவைத்து, மிளகாய்ப்பொடி சேர்த்த தயிரில் நன்றாக நாலு புரட்டு புரட்டிக் கொடுத்தனுப்பிவிட்டார்.

மொத்தத்தில் அன்றெனக்கு வாய்த்தது பரம பயங்கரமான பகலுணவு. இருபத்தி நான்கு மணி நேர விரதத்தை அப்படியே நாற்பத்தியெட்டு மணி நேரமாக நீட்டிவிடலாமா என்று நினைக்க வைத்துவிட்டது. ஆனால் நான் கலைஞனல்லவா? கண்ணராவிக் கசுமாலங்களுக்குக் கவித்துவப் பேரெழில் கொடுப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

‘தம்பி, உங்கள் ஓட்டலில் சீஸ் இருக்குமா?’

‘இன்னாது?’

‘சீஸப்பா! பாலாடைக்கட்டி. துண்டுகளாகவோ கூழாகவோ அல்லாமல் ஸ்லைஸாக வரும். சாண்ட்விச்சில் உபயோகிப்பார்கள்.’

போய் விசாரித்துவிட்டு இருக்கிறது என்றான். ‘அப்படியானால் அதில் ஒரு ஏழெட்டு ஸ்லைஸ்கள் வேண்டும்’ என்று வம்படியாகக் கேட்டு வாங்கினேன். வண்ணமிழந்த முட்டை கோஸைப் பிடிப்பிடியாக அள்ளி ஒவ்வொரு ஸ்லைஸுக்குள்ளும் வைத்து, பூரணக் கொழுக்கட்டை போலப் பிடித்தேன். சூப்புக்கு வைத்திருந்த மிளகுத் தூளை மேலுக்குக் கொஞ்சம் தூவி சாப்பிட்டுப் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது.

அதேபோல, அந்த எண்ணெய் முருங்கைக் கூட்டை ஒரு தட்டில் சுத்தமாக வடித்துக் கொட்டிவிட்டு ஐம்பது கிராம் வெண்ணெயை அதன் தலையில் கொட்டி நன்றாகக் கலந்து உண்டு பார்த்தபோது இன்னொரு கப் கேட்கலாம் என்று தோன்றியது.

அந்தப் பனீர் டிக்காவைத்தான் பரதேசி கிட்டத்தட்ட வன்புணர்ச்சி செய்திருந்தான். சகிக்க முடியாத காரம் மற்றும் வாயில் வைக்கவே முடியாத அளவுக்கு உப்பு. ஒரு கணம் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதன்மீது படிந்திருந்த தயிர்ப்படலத்தை மொத்தமாக வழித்துத் துடைத்தெறிந்துவிட்டு ஒரு அவகேடா ஜூஸ் வாங்கி (பட்டர் ஃப்ரூட் என்பர்) அதில் தோய்த்து உண்ண ஆரம்பித்தேன். எனக்கே சற்றுக் கேனத்தனமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு நீண்ட விரதத்துக்குப் பிந்தைய அந்த உணவு கண்டிப்பாக எனக்கு ருசித்தாக வேண்டும். திருப்தி என்பது பசியடங்குவதில் வருவதல்ல. ருசி அடங்குவதில் மட்டுமே கிடைப்பது.

இதற்குள் ஓட்டலுக்குள் ஏதோ ஒரு வினோத ஜந்து நுழைந்துவிட்டது என்ற தகவல் பரவி பலபேர் நான் சாப்பிடும் சௌந்தர்யத்தை நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். இவனுக்கு என்னவிதமாக பில் போடுவது என்று ஓட்டல் நிர்வாகம் கூடி ஆலோசிக்கத் தொடங்கியது. நான் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, பரபரவென்று அனைத்தையும் உண்டு முடித்தேன். விரதம் முடித்ததல்ல என் மகிழ்ச்சி. மிக மோசமான ஓர் உணவை எளிய பிரயத்தனங்கள் மூலம் ருசி மிக்கதாக மாற்ற முடிந்ததே சாதனை.

இந்தப் பின்னணியை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது முழு இருபத்தி நாலு மணி நேரம் உண்ணாதிருப்பது எப்படி என்று பார்த்துவிடலாம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி