ஆர்.பி. சாரதி

ஆர். பார்த்தசாரதி என்ற இயற்பெயர் கொண்ட ஆர்.பி. சாரதி, 1935 ஆம் ஆண்டு வைகாசி விசாகத்தன்று (மே 18, 1935 – சனிக்கிழமை) பிறந்தார். பெற்றோர் ராகவாச்சாரி – கண்ணம்மாள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமணஞ்சேரி இவரது பூர்வீகம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் குண்டு விழும் பயத்தில் சென்னைக்குக் குடிபெயர்ந்த குடும்பம்.

இவரது தந்தையார் பள்ளி ஆசிரியர். சென்னை சைதாப்பேட்டையில் இன்றும் இயங்கும் கணபதி தேசிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆர்.பி. சாரதிக்கு இரு மூத்த சகோதரர்கள், மூன்று தங்கைகள். வறுமை விளையாடிய வாழ்க்கை. ஆயினும் ராகவாச்சாரி பிள்ளைகளை அக்காலத்தில் ஒழுங்காகப் படிக்க வைத்திருக்கிறார். ஆர்.பி. சாரதி அந்நாளைய ‘பெரிய படிப்பான’ பி.ஏ. பி.எட் முடித்து, தமது தந்தையைப் போலவே ஆசிரியர் பணியில் சேர்ந்தார். (இவரது இரண்டாவது அண்ணன் சௌரி ராஜன் மற்றும் சகோதரிகளில் இருவர்  ஆசிரியர்களே.) தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை முன்னாள் ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரியிடம் பெற்ற சாரதி, தலைமை ஆசிரியராகி, பிறகு மாவட்டக் கல்வி அதிகாரி, மாநிலத் தலைமைக் கல்வி அதிகாரி, கல்வித்துறை உதவி இயக்குநர் என்று பதவி உயர்வுகள் பெற்று, தமிழகக் கல்வித்துறை துணை இயக்குநராக ஓய்வு பெற்றார்.

எழுத்து மற்றும் இலக்கியத்தின்பால் இவருக்கு நாட்டம் வரக் காரணம் இவரது மூத்த சகோதரர் பாரதி சுராஜ். சைதாப்பேட்டையில் பாரதி கலைக்கழகம் என்னும் அமைப்பை நிறுவி ஐம்பதாண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்தவர். (அவரது காலத்துக்குப் பிறகு இன்றுவரை பாரதி கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.) அவரேதான் சாரதியைக் கம்பன், வள்ளுவன்பாலும் ஈர்த்தவர்.

ஆர்.பி. சாரதியின் ஆதர்சம் அவரது மூத்த சகோதரர்தான். தமது இறுதி நாள் வரை மூத்த சகோதரர் சுராஜ் மீது அவர் வைத்திருந்த மரியாதை மாறியதில்லை.

கம்பனிலும் பாரதியிலும் திருக்குறளிலும் ஆழத் தோய்ந்தவர். நிறைய ஒப்பாய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அறுபதுகளில் தினமணி கதிர், அதன்பின் கல்கி, அமுதசுரபி, கலைமகள் போன்ற பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் உந்துதலால் சிறுவர் இலக்கியத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கி, தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அதற்கே அர்ப்பணித்தார். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் விருது பெற்ற குழந்தைக் கவிஞர்.

ஆழ்வார் பாசுரங்கள் பற்றி, அவற்றின் நயம் பற்றி திருமால், சப்தகிரி போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார். நிறைய வானொலி நாடகங்கள் எழுதியிருக்கிறார். சிறந்த மேடைப் பேச்சாளர், மரபுக் கவிஞர். பாரதி கலைக்கழகத்தின் கவிமாமணி விருது பெற்றவர்.

1985 ஆம் ஆண்டு சென்னை, குரோம்பேட்டைக்குக் குடி வந்தவர் மனைவி, மூன்று மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகளுடன் தனது இறுதிக் காலம் வரை அங்கேயேதான் இருந்தார்.

ஆர்.பி. சாரதியின் எழுத்துகளில் மிக முக்கியமானது, அவர் திருக்குறளுக்கு எழுதிய உரை. நாற்பதாண்டுக் காலம் பள்ளி மாணவர்களுடனேயே கழித்தவர் என்பதால் மாணவர்களுக்கு எதை எப்படிச் சொல்லவேண்டும் என்பதைத் துல்லியமாக உணர்ந்து தெளிந்து எழுதப்பட்ட உரை அது.

மொழிபெயர்ப்புகளில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மொழியாக்கங்களுள் அவர் மனத்துக்கு நெருக்கமானது, ராமச்சந்திர குஹாவின் India after Gandhi மொழிபெயர்ப்பு. கிழக்கு பதிப்பகம் மூலம் அந்நூல் இரண்டு பாகங்களாக வெளியானது. வயது முதிர்ந்து, உடல்நலம் குன்றி, எழுதவே முடியாதிருந்த நாள்களில் அவர் செய்யத் தொடங்கிய பணி, பாபர் நாமாவின் மொழி பெயர்ப்பு. முற்றிலுமே எழுத முடியாமல் போனபோதுகூட, மொழியாக்கத்தை வாய்வழியாகச் சொல்லி, தம் மனைவியைக் கொண்டு எழுதி முடித்தார்.

ஆர்.பி. சாரதி, ஜூலை 17, 2017 அன்று காலமானார்.

ஆர்.பி. சாரதி எழுதிய – மொழிபெயர்த்த புத்தகங்களின் பட்டியல் இங்கே உள்ளது.

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி