About

para

 

English Version

பா. ராகவன் (Pa Raghavan) தமிழின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார். அக்டோபர் 8, 1971ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இதுவரை பதிமூன்று நாவல்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு:

பா. ராகவனின் தந்தை பெயர் ஆர். பார்த்தசாரதி. தாயார், ரமாமணி பார்த்தசாரதி. பாராவின் தந்தை, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வழி வழியாகப் பள்ளிக் கல்வி ஆசிரியர்களாக இருந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். தலைமை ஆசிரியராக, மாவட்டக் கல்வி அதிகாரியாக, பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரும் ஓர் எழுத்தாளர் ஆவார். ஆர்.பி. சாரதி என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் பல எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பில் தீவிர நாட்டம் கொண்டவர். பாபர் நாமாவைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான ராமச்சந்திர குஹாவின் ‘India after Gandhi’ நூலைத் தமிழாக்கம் செய்தவர். இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகாவம்சத்தையும் தமிழாக்கம் செய்துள்ளார். பணி மாறுதல்களின்போது அவர் இடம் பெயர்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று பா. ராகவன் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பிறகு சென்னை தரமணி மத்திய தொழில் நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பயின்றார். அச்சமயமே பா. ராகவனின் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்து, சென்னையை நிரந்தர வசிப்பிடமாக்கிக்கொண்டது.

பள்ளி நாள்களிலேயே எழுத்தார்வம் ஏற்பட்டு, பத்திரிகைகளில் கவிதைகள், துணுக்குகள் எழுத ஆரம்பித்தார் பா. ராகவன். இவரது முதல் எழுத்து முயற்சியான ஒரு குழந்தைப் பாடல் கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார். ஆனால் எதுவும் பிரசுரமாகவில்லை. 1989ம் ஆண்டு எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் தொடர்பும் நட்பும் கிட்டிய பின்பே எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டதாகச் சொல்கிறார்.

1990ம் ஆண்டு கி. கஸ்தூரி ரங்கன் ஆசிரியராக இருந்த கணையாழி மாத இதழில் இவரது சிறுகதை ஒன்று பிரசுரமானது. எழுத்துலகில் பா. ராகவன் கவனம் பெற அதுவே காரணமாக இருந்தது. 1992ம் ஆண்டு இறுதியில் கல்கி வார இதழில் இவர் எழுதிய ‘மொஹஞ்சதாரோ’ என்ற சிறுகதை அன்றைய ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி தொடர்பாக எழுந்த கலவரங்களை மையப்படுத்தி, நையாண்டி கலந்த விமரிசனத்தை முன்வைத்தது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அச்சிறுகதையின் வாயிலாகவே பா. ராகவன் பத்திரிகைப் பணிக்குள் நுழைந்தார்.

1992ம் ஆண்டு டிசம்பர் முதல் 2000வது ஆண்டு வரை கல்கி வார இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு குமுதம் வார இதழில் மூன்றாண்டுக் காலம் பணி புரிந்தார். குமுதம் ஜங்ஷன் இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார்.

2004ம் ஆண்டு பத்திரிகைத் துறையை விட்டு விலகி, பதிப்புத் துறையில் பணி புரியத் தொடங்கினார். ‘நியு ஹொரைசன் மீடியா’ நிறுவனத்தின் கிழக்கு பதிப்பகம் தொடங்கப்பட்டபோது அதன் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று, அந்நிறுவனத்தின் ‘நலம்’, ‘வரம்’, ‘ப்ராடிஜி’ உள்ளிட்ட அனைத்துத் தமிழ் பதிப்புகளையும் திறம்படத் துலக்கம் பெறவைத்தார். தமது பதிப்பாசிரியர் பணிக்காலத்தில் சுமார் ஆயிரம் புத்தகங்களைக் கொண்டு வந்தார். தமிழ் பதிப்புத் துறையில் ‘கிழக்கு பதிப்பக’த்தின் தோற்றமும் பா. ராகவன் அதில் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட புத்தகங்களும் இன்றும் பிரபலமாகப் பேசப்படுபவை.

2011ம் ஆண்டின் மத்தியில் பதிப்புத் துறையில் இருந்து விலகிய பா. ராகவன் அதன்பின் முழு நேர எழுத்தாளராகப் பணி புரியத் தொடங்கினார். இதுவரை பதிமூன்று நாவல்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

மீண்டும் பத்திரிகைப் பணி:

2021ம் ஆண்டு BukPet என்னும் டிஜிட்டல் பப்ளிஷிங் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் வாயிலாக எழுத்தார்வம் மிக்க இளையோருக்கு ஆன்லைன் மூலம் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் நடத்த ஆரம்பித்தார்.

இப்பயிற்சி வகுப்புகளில் பயின்று, தேர்ச்சி பெற்றவர்களை ஒருங்கிணைத்து எழுத வைக்கவென்றே மெட்ராஸ் பேப்பர்என்ற ஆன்லைன் வார இதழை ஜூன் 1, 2022 அன்று தொடங்கி, அதன் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். மெட்ராஸ் பேப்பர் மிகக் குறுகிய காலத்தில் தமிழின் மிக முக்கியமான புதிய வரவாக வாசகர்களால் அங்கீகரிக்கப்பட்டது. ஏராளமான புதிய எழுத்தாளர்கள் இந்த வார இதழின் மூலமாகத் தமிழுக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

எழுத்துப் பணிகள்:

இரண்டாயிரமாவது ஆண்டு வரை சிறுகதைகளும் நாவல்களும் மட்டும் எழுதிக்கொண்டிருந்த பா. ராகவன், குமுதம் வார இதழில் பணி சேர்ந்த பின்பு பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றினை ஒரு தொடராக எழுதினார். அதன் வெற்றிக்குப் பின்பு டாலர் தேசம் [அமெரிக்க அரசியல் வரலாறு], நிலமெல்லாம் ரத்தம் [இஸ்ரேல்-பாலஸ்தீன் சிக்கல்களின் வரலாறு], மாயவலை [சர்வதேச தீவிரவாத வலைப்பின்னல் குறித்த விரிவான ஆய்வு நூல்] உள்ளிட்ட ஏராளமான அபுனை நூல்களை எழுதினார்.

லட்சக்கணக்கான தமிழ் வாசகர்களுக்கு சர்வதேச அரசியல் விவகாரங்களை சிக்கலற்ற எளிய மொழியில் விவரிப்பவர் என்று பெயர் பெற்றார்.

பல்லாண்டுக் காலமாக அரசியல் நூல்களை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த பா. ராகவன், 2017ம் ஆண்டு தமது ‘பூனைக்கதை’ என்ற நாவலின் மூலம் மீண்டும் படைப்பிலக்கியத்துக்குள் திரும்பினார்.

“பூனைக்கதை கலைத்துறை சார்ந்த ஒரு நாவல். ஆனால் வண்ணமோ வாசனையோ சற்றும் இல்லாத அதன் ஒரு பகுதியை மட்டும் இது சித்திரிக்கிறது. கண்ணீரும் இல்லாத, புன்னகையும் இல்லாத ஒரு பேருலகம். இங்கும் மனிதர்கள் வசிக்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். கஷ்டப்படுகிறார்கள். சமயத்தில் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். இருப்பதும் இறப்பதும் இங்கும் நிகழ்கிறது. கலையுலகம்தான். ஆனால் இதன் முகமும் அகமும் வேறு. நீங்கள் இதுவரை இந்த உலகத்துக்குள் நுழைந்து பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பார்க்கலாம்.” என்று தமது பூனைக்கதை குறித்து பா. ராகவன் குறிப்பிடுகின்றார்.

நெடுங்காலமாகத் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வசனகர்த்தாவாகப் பங்கேற்று வந்த தமது அனுபவங்களின் அடிப்படையில் தொலைக்காட்சித் தொடர்களின் உலகினை, அதன் இருள் மூலைகளை இந்நாவலில் காட்சிப் படுத்தியிருக்கிறார்.

பூனைக்கதைக்குப் பிறகு யதி என்ற நாவலினை எழுதி வெளியிட்டார். இது சன்னியாசிகளின் உலகில் சுற்றிச் சுழலுகின்ற கதை. தனது கல்லூரிக் காலத்துக்குப் பின்பு சிறிது காலம் தீவிர ஆன்மிக வேட்கை உண்டாகி, பல சாதுக்கள், சன்னியாசிகளுடன் சுற்றித் திரிந்தவர் பா. ராகவன். மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைமைத் துறவியாக அப்போதிருந்த சுவாமி தபஸ்யானந்தாவின் சந்திப்புக்குப் பின் அவரால் அமைதிப்படுத்தப்பட்டு, துறவைக் காட்டிலும் எழுத்தே மீட்சிக்கு வழியென உணர்ந்து திரும்பியதாகக் கூறுகிறார்.

எழுத்து, இதழியல் பணிகளுக்கு அப்பால் தனக்கு வேறு எதிலும் கவனமோ ஆர்வமோ இல்லை என்று சொன்னாலும், முறைப்படி கர்நாடக இசை பயின்றவர். வீணை வாசிக்கத் தெரியும். மதம், அது சார்ந்த அரசியலில் சற்றும் நம்பிக்கையோ அக்கறையோ அற்றவர். தீவிர ஆன்மிக நாட்டமும், சித்தர் மரபில் நம்பிக்கையும் உள்ளவர்.

In English

ஆசிரியரின் ‘தன் வரலாற்றுச் சுருக்கம்’ இங்கே உள்ளது.

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!