
பஷீரின் நாவல் ஒன்று. அருமையான காதல் கதை. கல்கியில் வையவன் மொழிபெயர்ப்பில் தொடராக வெளி வந்தது. பிறகு அது எப்போது புத்தகமானது என்று எனக்குத் தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அது புத்தகமாக வந்திருக்கிறதா, யாரிடமாவது இருக்கிறதா என்று ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தேன். எப்படியோ தகவல் சென்று சேர்ந்து வையவனே ஒரு பிரதி அனுப்பி வைத்தார். வந்த வேகத்தில் படித்துவிட்டு வைத்தேன். பிறகு மறந்துவிட்டேன்.
இன்று காலை ஒரு நண்பருக்கு அந்தக் கதையின் முன்கதையைச் சொல்லி, ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக உடனே படிக்கச் சொன்னேன். காலச்சுவடு வெளியிட்டிருக்கும் பஷீர் நாவல்கள் தொகுப்பில் அது இருக்கிறது என்று கொண்டு வந்தார். முதல் இரண்டு பக்கங்கள் படிக்கும்போதே நான் படித்த காதல் கதை அதுவல்ல என்று தோன்றியது. ஒரே தலைப்பில் பஷீர் இரண்டு கதைகள் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அல்லது எனக்குத்தான் படித்த கதை மறந்துவிட்டதா?
நிச்சயமாக அதற்கும் வாய்ப்பில்லை. ஓர் எழுத்தாளனாக எனது தரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. நான் சறுக்கும் இடங்களை அறிவேன். ஆனால் நான் மிகத் தீவிரமான, மிக மிக நேர்மையான வாசகன். அப்பழுக்கே இல்லாத வாசகன். எதையும் மேலோட்டமாக மேயும் வழக்கம் இல்லாதவன். அப்படி ஒரு கதை அடியோடு மறந்து போகுமா? அல்லது வேறொரு கதையாக நினைவில் இருக்குமா? குழப்பமாக இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் என் வசம் உள்ள, வையவன் அனுப்பிய பிரதியைத் தேடத் தொடங்கினேன். நெடுநேரம் தேடியும் கிடைத்தபாடில்லை. அப்படி எங்கே வைத்துத் தொலைத்திருப்பேன் என்று தெரியவில்லை. புத்தகங்களின் எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருந்த வரை எந்தப் புத்தகத்தையும் சட்டென்று எடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது வைக்க இடமில்லாமல் என் அறையே ஒரு வில்லன் கொடோன் போலாகிவிட்டது. எடுத்து அடுக்கி வைத்தும் ஆண்டுகளாகிவிட்டபடியால் எல்லாம் கலைந்து அலங்கோலமாகக் கிடக்கிறது. எதைத் தேடினாலும் கிடைப்பதில்லை.
கேவலம்தான். அவமானம்தான். இவ்வளவு மோசமான மனிதனை உலகில் வேறெங்கும் யாரும் பார்க்க முடியாது. என் கணினியில் பல கோப்புகளுக்கு 1 என்று file name அளித்திருப்பேன். அவசரத்தில் டெஸ்க்டாப்பில் சேமிக்க 1 என்று பெயர் வைப்பதே எளிது என்பது எளிய காரணம். ஆனால் பிறகு எடுத்து பத்திரப்படுத்தும்போது சரியான file name தர வேண்டும். ஆனால் அதைச் செய்வதில்லை. விளைவு, எதையாவது தேடப் புகுந்தால் finder windowவில் நூற்றுக்கணக்கான 1 காட்டும்.
வருடம் தவறாமல் ஒழுங்காக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வேன். சட்டென்று ஒரு குறிப்பிட்ட வருடத்தின் விவரம் வேண்டுமென்று தேடத் தொடங்கினால் அகப்படாது. எல்லாம் இருக்கும். ஆனால் எல்லாம் கலந்திருக்கும். இன்சூரன்ஸ் ரசீதுகள், மருந்துச் சீட்டுகள், இதர பல சங்கதிகளிலும் இதுதான் நிலைமை.
இவ்வளவு ஏன்? துண்டுத் துணுக்குகள் தொடங்கி நீண்ட பெரும் கட்டுரைகள் வரை நான் எழுதும் அனைத்தும் என்னுடைய நோட்ஸ் செயலியில் இருக்கும். அதற்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் என் மொத்த எழுத்து சரித்திரமும் இல்லாமலாகிவிடும். அந்தச் செயலியை மிகவும் பயனுள்ள செயலியாகவே வடிவமைத்திருப்பார்கள். அனைத்தையும் தனித்தனியே தொகுத்து, தனித்தனி ஃபோல்டர்களில் தனித்தனித் தலைப்பிட்டுச் சேகரிக்க முடியும்.
செயலி செய்தவன் என்ன வசதி செய்து தந்தென்ன. பயன்படுத்துபவன் பரம ஒழுங்கீனன் அல்லவா? search என்கிற option மட்டும் இல்லாவிட்டால் முடிந்தது கதை. ஒழுங்காகத் தலைப்பைப் போட்டுச் சேமிக்க மாட்டேன். ஹேஷ்டேக் போட்டுச் சேமித்தாலும் தேடுவது சுலபம். அதையும் செய்ய மாட்டேன். பொருள்வாரியாகப் பிரித்து வைத்தால்கூடப் பாதி சுமை குறையும். அதுவுமில்லை. எத்தனைக் காலத்துக்கு முன்னர் எழுதியதென்றாலும் எந்தக் கதை அல்லது கட்டுரையானாலும் அதில் பயன்படுத்திய சில key words எனக்கு நினைவில் இருக்கும். அதைப் போட்டுத் தேடித்தான் எடுப்பேன்.
இதே key word உத்தியைத்தான் வையவன் மொழி பெயர்ப்பில் நான் படித்த காதல் கதைக்கும் பயன்படுத்தினேன். காலச்சுவடு வெளியிட்டிருக்கும் காதல் கடிதத்தில் அது எங்குமே இல்லை. நான் படித்த கதையில் பஷீரேதான் கதாநாயகனாக இருப்பார். இதில் கேசவன் நாயர்.
என்ன பிழை, எங்கே இடறுகிறேன் என்று நெடுநேரம் புரியவில்லை. இறுதியில் என் ஃபேஸ்புக் பக்கத்தில் வையவன் என்று போட்டுத் தேடிப் பார்த்தபோது கிடைத்துவிட்டது.
அது ‘ஒரு காதல் டைரி’. காதல் கடிதம் அல்ல. காலச்சுவடு வெளியிட்டிருப்பது முற்றிலும் வேறொரு கதை.
எனக்கு பஷீரின் கதை நினைவிருந்தாலும் அதன் கதாநாயகன் / நாயகி நினைவிருந்தாலும் கதையில் வரும் பல சம்பவங்களும் நினைவிருந்தாலும் தலைப்பு மறந்துவிட்டிருக்கிறது. கடைசியில் ‘வையவன்’ என்னும் key word தான் கைகொடுத்தது.
இந்தக் குறிப்புக்கு என் நினைவில் சேமித்துக்கொள்ளும் key words இவை:
கேவலம். அவமானம். மோசமான மனிதன். ஒழுங்கீனன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.