
உள்ளம் விரும்பும் ஒன்றனுக்கு எதிராக மட்டுமே நம் வாழ்க்கை இறுதி வரை இருந்துவிட முடியுமா? பணம், பணி, குடும்பம், சூழல் உள்ளிட்ட புறக் காரணங்களால் நமது திட்டங்கள் தகர்க்கப்படுவதைப் புரிந்துகொள்ளலாம். மேற்சொன்ன எந்தக் காரணமும் கிடையாது. எதையும் தடுப்பதற்கு யாரும் இல்லை. நான் ஒன்றை விரும்புகிறேன். நான் அதனை அடைகிறேன் என்கிற இரண்டு நிலைகளுக்கு நடுவே எந்தத் தடுப்புச் சுவரும் இல்லை என்றபோதிலும் அப்படி ஆகுமா?
என்றால், ஆகும்.
நேற்று விமலாதித்த மாமல்லனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக அரவிந்தாட்ச மேனனைக் குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் அவர் எதையோ எழுதியிருப்பதைத் தெரிந்துகொண்டேன். கடந்த மூன்று நாள்களாக ஃபேஸ்புக் பார்க்க முடியவில்லை. சலம் இறுதிக்கட்டப் பணிகளில் இருந்ததால், நானாக எழுத நினைப்பதை எழுதுவதற்கல்லாமல், பிறவற்றைப் படிப்பதற்காக அங்கே செல்லாதிருந்தேன். மேனனின் பெயரை மாமல்லன் சொல்லிவிட்டதால் என்னையறியாமல் அந்தக் குறிப்பிட்ட போஸ்டுக்குச் சென்று படித்துவிட்டு வந்தேன்.
சொல்வதற்கு வெட்கமாக இருந்தாலும் உண்மை இதுவே. மனத்தளவில் நான் அரவிந்தாட்ச மேனனைவிட ஒழுக்கம் மிகுந்தவன். செய் நேர்த்தியில் மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டவன். நான் எப்படி இருக்க வேண்டும், என் இருப்பிடம் எப்படி இருக்க வேண்டும், என் படிப்பறை எப்படி இருக்க வேண்டும், நான் பயன்படுத்தும் கருவிகள் எப்படி இருக்க வேண்டும், என் கணினி எப்படி இருக்க வேண்டும், எழுதும்போது எப்படி அமர வேண்டும், படிக்கும்போது எந்த அளவுக்குச் சாய்ந்து அமர்ந்து படிக்க வேண்டும், எப்போது உடற்பயிற்சி செய்ய வேண்டும், வீட்டு வேலைகள் செய்ய வேண்டும், எப்போது, எப்படி ஓய்வெடுக்க வேண்டும், எப்படி உறங்க வேண்டும், உறங்கும்போது என் தோற்றம் எப்படி இருக்க வேண்டும், விழித்தெழும்போது தலை வகிடு கலையாதிருக்கும்படி பார்த்துக்கொள்வது எப்படி என்றெல்லாம் கற்பனை செய்து மனத்துக்குள் சேகரித்து வைத்திருக்கிறேன்.
தினமும் முகச் சவரம் செய்துகொள்வது, வாரம் ஒரு முறை நகங்களை நறுக்குவது, செருப்புகளைக் கழுவி, எப்போதும் பளிச்சென்று வைத்துக்கொள்வது, குறிப்பு நோட்டுப் புத்தகங்களில் தேதி போட்டுத் தலைப்பிட்டு எழுதுவது, கோப்புகளை ஒழுங்காகப் பராமரிப்பது, மாதம் ஒரு முறை குடும்பத்தோடு எங்கேயாவது வெளியே சென்று வருவது என்று என் திட்டங்களின் முழுமையான பட்டியலைப் பார்த்தீர்களென்றால் திகைத்துப் போய்விடுவீர்கள்.
விவகாரம் என்னவெனில், மேற்சொன்ன எதையுமே, எக்காலத்திலும் நான் ஒழுங்காகச் செய்ததில்லை, ஒழுக்கமாக இருந்ததில்லை. எழுதுவது என்னும் செயலுக்கு அப்பால் வாழ்வில் வேறு எதற்குமே நேர்மையாக இல்லை என்பது இந்நாள்களில் மாபெரும் அவமான உணர்வாகத் திரண்டெழுந்து வந்து அவ்வப்போது பழிப்புக் காட்டிவிட்டுச் செல்கிறது. என் வாழ்நாளில் நான் கண்ட ஒரே பெரிய அரவிந்தாட்ச மேனனாகிய அமரர் ஜே.எஸ். ராகவனை அவர் இருந்த காலத்தில் அடிக்கடி சென்று சந்தித்ததும், அப்படியாவது திருந்துகிறேனா என்று பார்க்கத்தான்.
நேர்த்தியின் நியதிகள் என்று லாசரா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் (சிந்தா நதி தொகுப்பில் உள்ளது). அவர் கடைப்பிடித்த நேர்த்தி முறை பற்றியது அது. அரவிந்தாட்ச மேனன் அளவுக்குத் தீவிரம் இருக்காது என்றாலும் லாசராவின் நேர்த்தியில் விலை மதிப்பற்ற எளிமை கூடிய கவித்துவம் இருக்கும். அதைப் படிக்கும்போதெல்லாம் என் கண்கள் நிறைந்துவிடும்.
என் அப்பா தான் இருந்த காலம் வரை தனக்கென வகுத்துக்கொண்ட எந்த ஒழுக்க விதிகளையும் மீறியதில்லை. அருகிருந்து பார்த்ததால் சொல்கிறேன். அவரது ஒழுக்கம் அரவிந்தாட்ச மேனனுடையதைக் காட்டிலும் உக்கிரமானது. ஒரு முழு திருப்பதி லட்டைக் கையில் கொடுத்தாலும் ஒரே ஒரு பூந்தியை உதிர்த்து வாயில் போட்டுக்கொண்டு மீதியைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்.
இவர்களையெல்லாம் பார்த்துத்தான் எனக்கான ஒழுக்க விதிகளை நான் வகுத்தேன். என்ன வித்தியாசமென்றால், என்றுமே நான் வகுத்த விதிகளை என்னால் கடைப்பிடிக்க முடிந்ததில்லை. ஒப்பீட்டளவில் எனக்குப் புறத் தடைகள் பெரும்பாலும் இராது. என் மனைவியோ மகளோ, அப்பாவைப் போலவே என் சுதந்தரத்தில் பெரும்பாலும் தலையிட மாட்டார்கள். எனவே எப்போதும் ஒரு குடிகாரனைப் போல ‘நாளை முதல் ஒழுக்கம்’ என்று சொல்லிச் சொல்லி, வாழ்வில் பெரும் பகுதியை நானேதான் வீணடித்து வந்திருக்கிறேன்.
ஜேஜே சில குறிப்புகளில் அரவிந்தாட்ச மேனனே ஓரிடத்தில் ஜேஜேவின் நேர்த்தி குறித்துச் சொல்வார்.
அவனுக்காவது, அவன் எதிர்பார்த்த நேர்த்தி கூடாமல் போனதற்குப் புறக்காரணங்கள் இருந்தன. எனக்கு நிச்சயமாக அப்படி ஒன்றில்லை. நான் விரும்பினால் செய்துகொள்ள முடியும். சிக்கல் என்னவென்றால், நான் விரும்புகிறேன். ஆனால் செய்ய மறுக்கிறேன்.
என் வினா இதுதான். மனம் விரும்பும் ஒன்றனைப் புறத் தடைகள் இல்லாத நேரத்திலும் நடைமுறைப்படுத்த முடியாமல் தடுக்கும் காரணி எது? ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் சோம்பல் இதன் அடிப்படையாக இருக்கும் என்று தோன்றுகிறது. எதையும் தள்ளிப்போடும் குணம் என்பது மேல்மட்டக் காரணம். அதன் அடிப்படை சோம்பல்தான். சந்தேகமின்றி நான் ஒரு சோம்பேறி. நான் செயலாற்றாமல் இருக்கும் நேரத்தைத் தொகுத்தால் குறைந்தது இன்னும் பத்து யதிகள், சலங்கள், இறவான்களை எழுதியிருக்க முடியும். இது தெரிந்தும் ஏன் இப்படியே இருக்கிறேன் என்பதுதான் புரிவதில்லை.
என் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களில் பெரும்பாலும் யாரும் இப்படி இல்லை. ஜெயமோகன் தனது நேர்த்தி குறித்து எழுதும் குறிப்புகளைப் படித்துப் பார்க்கிறேன். அவரது செயல்பாடும் அந்நியதிகளும் சமமாகப் பொருந்தி அமர்வதைக் காண்கிறேன். எஸ்ரா தன்னைப் பற்றிய விவரங்களை உளவுத் துறை ரகசியங்களைப் போலப் பாதுகாப்பவராக இருந்தாலும் அவரது output அதை மறைமுகமாகச் சொல்லிவிடுகிறது. பெருமாள் முருகனும் அப்படித்தான். இவர்கள் அனைவரைக் காட்டிலும் எனக்கு ஓரளவு நல்ல பரிச்சயமுள்ள மாமல்லனின் வீட்டுக்கு ஒரே ஒருமுறை சென்றிருக்கிறேன். அவரது எழுத்தில் உள்ள நேர்த்தி அப்பட்டமாக அங்கே ஸ்தூல வடிவம் கொண்டு துலங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு திகைத்திருக்கிறேன். என்னால் மட்டும் அது முடியாமல் போகிறது. இந்த வருத்தம் இறுதி வரை என்னை விடாது என்று நினைக்கிறேன்.
ஆனால் என்னிடம் ஒரு குணம் உண்டு. வாழ்வில் எதையாவது ப்ராஜக்டாக எடுத்துக்கொண்டு விட்டால் அதில் என் முழுக் கவனத்தையும் குவித்துத் தவமாக்கி, வெற்றியைக் காணாது ஓய்ந்ததில்லை. 113 கிலோ எடையில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு கட்டத்தில், இக்கணம் முதல் டயட் என்று முடிவு செய்து நான்காண்டுகளில் 84 கிலோவாகக் குறைத்தது உடனே நினைவுக்கு வருகிறது. டயட்டைக் கைவிட்டதற்கு வேண்டுமானால் புறக்காரணங்களின்மீது பழி சொல்லலாம். இதர விஷயங்கள் அப்படியல்ல.
என் மனைவி எப்போதும் சொல்வது ஒன்றுண்டு. எதையும் அளவுடன். உணவு தொடங்கி உணர்ச்சிகள் வரை அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சூத்திரம்தான். ஆனால் அது எத்தனை பெரிய சிரமம் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னால் நூறு சதவீத அர்ப்பணிப்பைத் தர இயலாத எது ஒன்றின் மீதும் விரைவில் அக்கறை இழந்து போய்விடுகிறேன். நேர்த்தி குலைவதென்பது அதனால்தான் நிகழ்கிறது.
வருத்தமெல்லாம் இல்லை. ஆனால் இது ஒரு குறை. மிகப் பெரிய குறைதான். சந்தேகமில்லை. என்னால் அரவிந்தாட்ச மேனனாகவோ ஜே.எஸ். ராகவனாகவோ, ஜேஜேவாகவோ, மாமல்லனாகவோ, ஜெயமோகனாகவோ என்றுமே ஆக முடியாமல் போகலாம். ஆனால் அதன் காரணத்தை நான் அறிந்துகொண்டேன். சில குறிப்பிட்ட அம்சங்களைத் தேர்ந்தெடுத்து ப்ராஜக்ட் ஆக்கிக்கொண்டால் நிச்சயமாக வெல்கிறேன். அதற்கு வெளியே தோற்றுவிடுகிறேன்.
எனவே, இனி செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். மொத்த வாழ்க்கையை ஒரு ப்ராஜக்ட் ஆக்கிக் கொண்டுவிடுவது. எண்ணிப் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஐம்பத்து நான்கு வருடங்களாக உதிர்ந்து, சிதறிக் கிடப்பனவற்றையெல்லாம் முதலில் எடுத்துக் கோத்துக் கட்டியாக வேண்டும். அதுதான் மலைப்பாக இருக்கிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.