அஞ்சலி

அஞ்சலி: ஜே.எஸ். ராகவன்

மூத்த எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் காலமானார்.

நெடுநாள் கல்கி, விகடன் வாசகர்கள் என்றால் அவர் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நல்ல நகைச்சுவை எழுத்தாளர். மாம்பலம் டைம்ஸ் என்னும் பிராந்தியப் பத்திரிகையில் பல்லாண்டுக் காலமாக இதழ் தவறாமல் ‘தமாஷா வரிகள்’ என்னும் பத்தியை எழுதி வந்தார். விரைவில் அந்தப் பத்தி ஆயிரமாவது அத்தியாயத்தைத் தொடவிருந்தது. ஒரு வார இதழில் ஆயிரம் கட்டுரைகள் – ஓரிதழ் விடாமல் எழுதுவதெல்லாம் இன்னொருவரால் இயலாத காரியம். அவர் அதை ஒரு வேள்வி போலச் செய்துகொண்டிருந்தவர். அது தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கில செய்தித் தாள்களிலும் மாதம் இரண்டு மூன்று கட்டுரைகளாவது எழுதுவார்.

எழுத்து இருக்கட்டும். அவரைப் போன்ற ஒரு மகத்தான மனிதரை நான் சந்தித்ததே இல்லை. எனக்கும் கிரேசி மோகனுக்கும் அவர் ஒரு பவர் பேங்க். மனம் சோர்ந்து விழும் நேரங்களில் எல்லாம் ஒரு போன் செய்துவிட்டு அவர் வீட்டுக்குப் போய்விட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் சக்திமான் ஆக்கித் திருப்பி அனுப்பிவிடுவார். அபாரமான படிப்பாளி. நேற்று முன் தினம் ஒரு நண்பரிடம் இரா. முருகனின் ‘மிளகு’ வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். என்னுடைய ‘எழுதுதல் பற்றிய குறிப்புகள்’ படிக்க வேண்டும் என்று சென்ற வாரம் சொன்னார். ‘சார், நீங்கள் படித்து அறிய அந்நூலில் ஒன்றும் கிடையாது. வேண்டுமானால் கபடவேடதாரியைக் கொண்டு வந்து தருகிறேன்’ என்று சொன்னேன். ‘சரி. ஆனா நான் முதல்ல மிளகு படிச்சி முடிக்கணும். அப்பறம்தான் உங்களோடத தொடுவேன்’ என்றார்.

இனி அதற்கு வாய்ப்பில்லை.

கீழே உள்ளது, எக்ஸலண்ட் புத்தகத்தில் ஜே.எஸ். ராகவனைக் குறித்து நான் எழுதியது. அந்தப் புத்தகத்தையும் அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருந்தேன்.

O

ஜே.எஸ். ராகவன் தனது உன்னதத்தை அடைவதற்குப் பயிற்சி செய்யும் பல வழிகளில் ‘நேர்த்தி’ என்பது மிக முக்கியமானது. அவரிடம் இதைப் பற்றிக் குறிப்பிட்டால் உடனே மறுப்பார். ‘இது பயிற்சியல்ல. ரெஜிமெண்டேஷன்’ என்பார். ராணுவ ஒழுக்கம்.

அவரது வாழ்வில் அவர் கடைபிடிக்கும் நேர்த்திகளை நேருக்கு நேர் பார்த்து சில சமயம் வியந்திருக்கிறேன். பல சமயம் அச்சமடைந்திருக்கிறேன். வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒழுக்கம் அவருடையது.

‘ராகவன், உங்கள பாக்கறதுக்கு இன்னிக்கி வர்றதா சொல்லியிருந்தேன். ஞாபகமிருக்கில்லியா? இப்ப மணி த்ரீ ஃபைவ் ஆறது. த்ரீ நைனுக்கு உங்க ஆஃபீஸ்ல இருப்பேன்.’ என்பார்.

முன்னதாக மாலை மூன்று பத்துக்கு வருவதாகச் சொல்லியிருப்பார். சரியாக மூன்று ஒன்பதுக்கு வரவேற்பரையில் அவரைப் பார்க்கலாம். அங்கிருந்து மாடியேறி வந்து உட்கார ஒரு நிமிடம். சரியாக மூன்று பத்துக்கு ஜே.எஸ். ராகவன் ஆஜர்.

‘ட்வெண்டி மினிட்ஸ் எடுத்துப்பேன். அதுக்குள்ள பேசவேண்டியதைப் பேசிடறேன்’ என்று ஆரம்பித்தால் சரியாகப் பத்தொன்பதாவது நிமிடத்தில் வந்த விஷயத்தை முடித்துவிட்டு, ‘வேறென்ன விசேஷம்?’ என்பார். இருபதாவது நிமிடம் கிளம்பிவிடுவார்.

‘சார், தமாஷா வரிகள் அடுத்த பாகம் ரெடியா? அனுப்பிடுங்களேன்.’

‘ஓயெஸ். நாளைக்கு வந்துடும்.’ என்பார். மாம்பலம் டைம்ஸில் அவர் எழுதும் நகைச்சுவைப் பத்தி அது. மூன்றாண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பது, நாற்பது கட்டுரைகள் சேர்ந்ததும் புத்தகமாக்குவதற்காக என்னிடம் அனுப்புவார்.

பத்திரிகை கட்டிங்குகளை அப்படியே எடுத்து பின் அடித்து அனுப்புவதோ, எழுதிய பிரதியை முனை மடங்கிய நிலையில் கற்பழிக்கப்பட்ட கதாநாயகிபோல் அனுப்புவதோ அவர் சரித்திரத்திலேயே கிடையாது.

இதழ் வெளியானதுமே தனது கட்டுரையை அதிலிருந்து ஒரு ஏ4 சைஸ் தாளில் அழகாக ஜெராக்ஸ் எடுத்து வைத்துவிடுவார். ஒரு புத்தகமளவுக்குச் சேர்ந்ததும் அப்படியே அழகாகக் கொண்டு போய்க் கொடுத்து பைண்ட் செய்துவிடுவார். முன்னதாக, கட்டுரை வரிசை எண்களைச் சரி பார்த்து, பொருளடக்கம் தயார் செய்து, ஒவ்வொரு கட்டுரைக்குமான படங்களைத் தனியே ஜெராக்ஸ் எடுத்து இணைத்து – அந்த மேனுஸ்கிரிப்ட் பிரதியே ஒரு முழுமையான புத்தகம் போலிருக்கும். கம்போஸ் செய்கிறவர்களுக்கு ஒரு சிறு சந்தேகம் கூட வராது.

அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை எழுதியுள்ள அனைத்துக்கும் ஒரிஜினல் – ஜெராக்ஸ் – புத்தக வடிவம் மூன்றும் அவரிடம் உண்டு. எத்தனை ஆயிரம் பக்கங்கள் என்று கணக்கே கிடையாது. ‘இதெல்லாம் என்ன சார்? சின்ன வேலை’ என்று எளிதாகச் சொல்லிவிடுவார். இம்மாதிரியான விஷயங்களில் முழு ஒழுங்கீனம் கடைபிடிப்பதில் முதன்மையானவனான எனக்கு அவமானம் பிடுங்கித் தின்னும்.

அவர் வீட்டுக்குப் போய்ப் பார்க்க வேண்டும். தனது படிப்பறையை – கோயில் மாதிரி என்று சொல்லத் தோன்றவில்லை, எந்தக் கோயிலும் அத்தனை நேர்த்தியாக இருக்காது – அப்படியொரு ஒழுங்கில் வைத்திருப்பார். ஆயிரக்கணக்கான புத்தகங்கள், துறை வாரியாக, ஆசிரியர் வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு, இண்டக்ஸ் செய்யப்பட்டு ஒழுங்காக அணிவகுத்திருக்கும். படிக்கும்போது முக்கியமான வரிகளை அடிக்கோடு இட விரும்பினால், அதற்கென்றே தயாராக ஓர் அரையடி ஸ்கேலும் கூரான பென்சிலும் அவர் டேபிளில் எப்போதும் தயாராக இருக்கும். கண்டபடி புத்தகத்தில் கிறுக்கும் வழக்கம் அவரிடம் அறவே கிடையாது. எந்தப் புத்தகமும் முனை மடங்கியிருக்காது. ஒரு தூசு தும்பு இருக்காது. நடுவே நாலு பக்கம் கிழிக்கப்பட்டிருக்காது. பைண்டிங் பிய்ந்து வந்திருக்காது. ஒரு புத்தகம் – முக்கியமான புத்தகம், ஆனால் மிகப் பழையது, நைந்து போகப்போகிறது என்றால், தேவைப்படும் யாருக்காவதோ, ஏதாவது நூலகத்துக்கோ கொடுத்துவிட்டு, வேறு புதிய பிரதியை வாங்கி வைத்துவிடுவார்.

ஒவ்வொரு நாள் இரவும் படுக்கப் போகுமுன் மறுநாள் செய்யவேண்டிய காரியங்களைத் தனியே ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைப்பார். அப்பாயின்மெண்டுகளுக்காகத் தனியே ஒரு நோட்டு. கட்டுரைகள், கதைகள் அச்சான இதழ், தேதி விவரங்கள், புத்தக வெளியீடுகள் தொடர்பான குறிப்புகளுக்குத் தனி நோட்டு.

ஒரு நாள் திடீரென்று, ‘ராகவன், கிழக்கு ஆரம்பிச்சதுலேருந்து இதுவரைக்கும் எனக்கு எவ்ளோ ராயல்டி வந்திருக்கு தெரியுமா?’ என்று கேட்டார்.

எனக்கெப்படித் தெரியும்? என் பணி ஒரு புத்தகத்தை எடிட் செய்து அனுப்புவதுடன் முடிந்து போகிறது இங்கே.

ஜே.எஸ்.ஆர். சட்டென்று ஒரு நோட்டைப் பிரித்துக் காட்டினார். தேதி, மாதம், வருட விவரங்கள், எந்தப் புத்தகம், எத்தனாவது பதிப்பு, எந்த மாதம் முதல் ராயல்டி, எந்த மாதம் அடுத்த ராயல்டி, வருடாந்திர ராயல்டி என்று சுத்தமாகப் பட்டியல் போட்டு வைத்திருந்தார். எங்கள் அலுவலகத்தில் ஏதாவது கணக்குக் குழப்பம் வந்தால், அந்த நோட்டுப் புத்தகத்தை வைத்துச் சரி செய்துவிடலாம் போலிருந்தது. வியப்பாக இருந்தது. இத்தனை பர்ஃபெக்ட்டான எழுத்தாளர் வேறு யாரையும் நான் சந்தித்ததே கிடையாது.

காலை ஆறு மணிக்கு லெவன்த் அவென்யூவில் வாக்கிங் போவேன் என்று அவர் சொன்னால் சரியாக ஆறு மணிக்கு அங்கே அவரைப் பார்க்கலாம். இந்த வேலையை இன்ன தேதி முடிப்பேன் என்று சொன்னாரென்றால், அந்த வினாடியுடன் அதைப் பற்றிய கவலையை மறந்துவிடலாம்.

தன்னால் முடியக்கூடியதை மட்டுமே சொல்வதும், சொல்லிவிட்டதை எப்பாடு பட்டாவது செய்து முடிப்பதும் அவரது சிறப்பு அடையாளங்கள்.

‘போரடிக்கலியா சார் உங்களுக்கு? இவ்ளோ ஒழுக்கம் உடம்புக்கு ஆகாதே சார்!’ என்பேன் விளையாட்டாக.

சிரிப்பார். ஆனால் ஒருபோதும் தன் இயல்பை அவர் மாற்றிக்கொள்ள மாட்டார். தனி வாழ்விலும் எழுத்து வாழ்விலும் அலுவலகத்திலும் மிக உயர்ந்தபட்ச ஒழுக்கங்களை மட்டுமே இன்றுவரை கடைபிடித்து வரும் ஜே.எஸ். ராகவனுக்கு திடீரென்று ஒருநாள் இதயம் தொடர்பான பிரச்னை வந்தது.

ஆச்சர்யமாக இருந்தது. புத்தகங்களையே அத்தனை அக்கறையுடன் பராமரிப்பவர் தன்னைப் பராமரிக்காமல் இருப்பாரா? ஆனாலும் வந்தது. டாக்டர் சிவகடாட்சத்திடம் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர், ரெகுலர் செக்கப்புக்காக அடிக்கடி டாக்டரைச் சந்திப்பார் போலிருக்கிறது.

ஒரு சமயம் டாக்டர் ஏதோ ஒரு பழைய விவரத்தைக் கேட்க, ஜே.எஸ். ராகவன் தாம் பிறந்தது முதல் அன்றைய தேதி வரையிலான தனது மருத்துவப் பரிசோதனை விவரங்களை ஒரு ஃபைலாக அவரிடம் நீட்டியிருக்கிறார்.

டாக்டர் மிரண்டு போய்விட்டார். ஒரு பெரிய ஹாஸ்பிடல் கூட அத்தனை ரெக்கார்டுகளை ஒழுங்காகப் பராமரிக்குமா என்பது சந்தேகமே.

வேறு வேலையே இல்லாமல் முழுநேர ஒழுக்கவாதியாக இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்று எனக்குத் தோன்றும். ஆனால் அவரோ, ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி. ஊர் ஊராகச் சுற்றுபவர். உட்கார நேரமில்லாமல் அலைபவர். அலுவலகம் – வீடு என்ற பாகுபாடு இல்லாமல் தனது ஒழுக்க விதிகளை எல்லா இடங்களிலும் கடைபிடிப்பவர்.

இது எப்படி சாத்தியம், எப்படி சாத்தியம் என்று ஒவ்வொரு முறையும் நான் அவரைப் பார்த்துப் பார்த்து மலைத்துப் போவேன். மிகுந்த மனச்சோர்வோ, வெறுப்போ, களைப்போ, வேலை செய்ய முடியாத மன நெருக்கடிகளோ இருக்குமானால் ஒரு போன் செய்துவிட்டு நேரே அவர் வீட்டுக்குப் போய்விடுவேன். ஒரு மணிநேரம் அவரது அறையில் உட்கார்ந்திருந்தாலே போதும் எனக்கு. அந்தக் காற்றை சுவாசித்தாலே புத்துணர்ச்சியும் உத்வேகமும் பொங்கிவிடும். கூடுதலாக, ஜே.எஸ். ராகவனின் நகைச்சுவை கொப்பளிக்கும் இதமான பேச்சு. அதிர்ந்து ஒரு சொல் பேசமாட்டார். அறையில் ஒருவர்தான் இருக்கிறார் என்றால் ஒருவருக்கு மட்டும் கேட்கக்கூடிய தொனியில் பேசுவார். நான்கு பேர் இருப்பார்களேயானால், நான்கு பேருக்குக் கேட்கக்கூடிய குரல் வரும். எப்போதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பாசிடிவான சிந்தனைகளை மட்டுமே அவர் வெளிப்படுத்துவார். அது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

ஜே.எஸ். ராகவனைப் போன்ற ஓர் ஒழுக்கவாதி ஒரு நல்ல எழுத்தாளராகவும் இருப்பது அபூர்வமானது. இதில் எனக்குச் சந்தேகமே இல்லை. தனது அதி உன்னதத்தை அடைவதற்குத் தனது ஒழுக்கத்தை அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார். இதை ஒரு ராணுவ நேர்த்தியுடன் பல்லாண்டு காலமாக ஒருவர் பயிற்சி செய்வது என்பது எப்பேர்ப்பட்ட விஷயம்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி