
கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் என். சங்கரய்யா காலமானார். ஆழ்ந்த இரங்கல்கள்.
சங்கரய்யா எவ்வளவு பெரிய ஆளுமை என்று தெரியாத வயதில் அவர் வசிக்கும் வீதியில், அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளிக் குடிபோனோம். குரோம்பேட்டை அன்றைக்கு அவ்வளவாக வளர்ந்திருக்கவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் இருக்கும். எங்கெங்கும் சீமைக் கருவேல புதர்களும் புதர் இடுக்குப் பன்றிகளும் இருக்கும். வீதியில் பெரிய நடமாட்டம் இராது. எப்போதாவது ஒன்றிரண்டு பேரைப் பார்க்கலாம். அவ்வளவுதான்.
அப்படி வீதியில் கண்ட சந்தானம் என்ற ஒருவர்தான் (அவர் ஒரு கம்யூனிஸ்ட்) முதல் முதலில் சங்கரய்யா பற்றியும் அவர் உனக்குப் பக்கத்தில்தான் குடியிருக்கிறார் என்றும் சொல்லி, அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்தார். பிறகு சங்கரய்யாவின் மகன் ஷ்யாமுடன் பழக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட எனக்குச் சம வயது. அதன்பின் சங்கரய்யாவின் வீட்டுக்குப் போய்வரத் தொடங்கினேன்.
வணங்கினால் புன்னகை செய்வார். சிறுவன் என்று பாராமல் எழுந்து வணக்கம் சொல்வார். அந்நாளில் அது திகைத்து திக்பிரமை கொள்ளச் செய்துவிடும். பேச்சே எழாது. பேப்பர் படிக்க வந்தேன் என்று சொல்வேன். அவர் வீட்டில்தான் தீக்கதிர் என்ற நாளிதழைப் பார்க்க முடியும். அதுபோக நாலைந்து தினசரிப் பத்திரிகைகளை ஒவ்வொரு நாளும் சேர்ந்தாற்போலப் படிக்கும் வாய்ப்பு அங்கே மட்டும்தான் கிடைக்கும். (எங்கள் வீட்டில் அப்பா தினமணி மட்டும்தான் வாங்குவார்.) செம்மலர், தாமரை எல்லாம் அங்கேதான் படிக்கத் தொடங்கினேன்.
அவருடன் பேசவேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கும். ஆனால் என்ன பேசுவதென்று தெரியாது. பெரும்பாலும் சுற்றுப் பயணங்களில் இருப்பவர் அவர். எப்போதாவதுதான் வீட்டில் பார்க்கக் கிடைப்பார். அந்தத் தருணத்தை வீணாக்காமல் ஏதாவது கேட்டு, எதையாவது தெரிந்துகொண்டுவிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் ஒருபோதும் அது நடந்ததில்லை. காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டபோது முதல் உறுப்பினர்களாக இருந்த முப்பத்தைந்து அல்லது முப்பத்தாறு பேரில் அவர் ஒருவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஒரு சில முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர். ரொம்பப் பெரிய மனிதர். அந்த எண்ணம் அளித்த மரியாதை கலந்த தயக்கத்தில் விலகியே இருந்திருக்கிறேன். (கிழக்கில் பணியாற்றிய காலத்தில் அவரது சகோதரர் என். ராமகிருஷ்ணனுடன் தொடர்பு இருந்தது. அவரைக் கிழக்குக்குப் புத்தகமெல்லாம் எழுத வைத்திருக்கிறேன்.) இப்போது எண்ணிப் பார்த்தால் வீணடித்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. இனி அதற்கு வாய்ப்பும் இல்லை. பேட்டையிலேயே வீடுகள் மாறி, வீதிகள் மாறிச் செல்லத் தொடங்கியபின்பு அவரைப் பார்க்கக்கூட முடியாமல் போய்விட்டது.
எனக்கு அடிப்படையில் கம்யூனிச சித்தாந்தத்தின்மீது பெரிய நம்பிக்கையோ ஈடுபாடோ கிடையாது. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த சில ஆளுமைகள் கம்யூனிஸ்டுகளாக இருந்திருக்கிறார்கள். சங்கரய்யா அவர்களுள் ஒருவர். தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர் என்கிற ஒளிவட்டம் எந்நாளும் அவரைச் சுற்றி இருந்து பார்த்ததில்லை. தமது கடைசிக் காலம் வரை மிக எளிய மனிதராக, இதர அனைத்துக் குரோம்பேட்டைவாசிகளையும் போலவே இருந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
நூற்றிரண்டு வயது வரை வாழ்வது இந்நாளில் ஒரு பெரும் சாதனை. அவரது வாழ்க்கை முறை எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். என்ன சாப்பிட்டிருப்பார், எவ்வளவு ஒழுக்கமாக இருந்திருப்பார் என்றெல்லாம் ஏதேதோ தோன்றுகிறது. நம் காலத்தில் நாம் பார்த்துப் படிக்கக் கிடைத்த மிகச் சில மனிதர்களுள் ஒருவர் என்று எண்ணிக்கொள்கிறேன்.
அஞ்சலிகள்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.