நேற்று காவிரிப் பூம்பட்டணம் என்கிற பூம்புகார் அருகே மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். காலைப் பொழுதில் கலந்துரையாடல். மாலை பரிசளிப்பு விழா என முழுநாள் நிகழ்ச்சி. என்னளவில் இது ஒரு புதிய அனுபவம். கூட்டங்களோ, கருத்தரங்குகளோ புதிதல்ல என்றாலும் ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்குவது என்பது முதல். மூவாயிரத்தி ஐந்நூறு மாணவ மாணவிகளுக்கு எதிரே நின்றபோது பழைய ஞாபகங்களைத் தவிர்க்கவே முடியவில்லை. என்னால் பேசவே முடியாது போய்விடுமோ என்று பதற்றமாக இருந்தது.
என் பள்ளி, கல்லூரி நாள்களில் நான் ஒரு நல்ல மாணவனாக நடந்துகொண்டதில்லை. என்னை விரும்பக்கூடிய ஆசிரியர்கள் என்று யாருமிருந்த நினைவில்லை. சக மாணவர்கள் மத்தியிலும் எனக்கு அத்தனை நல்ல பெயர் கிடையாது. மத்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஒரு சமயம், கல்லூரியின் பெயரைக் கெடுப்போர் பட்டியலில் எனக்கு அவசியம் முதலிடம் உண்டு என்று சொல்லியிருக்கிறார். அற்புதமான மாணவப்பருவம் முழுதும் ஊர் பொறுக்கி வீணாக்கியவன் நான். இது பற்றிய வருத்தம் எனக்குண்டு. ஆனால் அர்த்தமற்ற வருத்தம். பொறுக்கிய காலத்தில் முழுத் திருப்தி மற்றும் முழு மகிழ்ச்சியுடந்தான் அதனைச் செய்தேன் என்பதும் உடனே நினைவுக்கு வந்துவிடும். ஒரு மோசமான மாணவன் என்னும் சான்றிதழுடன் வெளியேறியவன் என்கிற நினைவு மட்டும் ஒருபோதும் எனக்கு மறப்பதில்லை. எனவே ஒரு பள்ளி விழாவுக்குத் தலைமை தாங்கச் செல்வது என்பது எனக்கு நியாயமான குற்ற உணர்ச்சியைத் தரக்கூடியதாகவே இருந்தது.
நேற்றைய விழாவில், இந்தியாவின் வெளியுறவுகள் என்னும் தலைப்பில் மாணவர்கள் என்னுடன் கலந்துரையாடத் தயாராக இருந்தார்கள். உரையாடலில் ஈடுபட்டோர் சுமார் ஐம்பதுபேர்தான் என்றாலும் மொத்த மாணவர்கள் மூவாயிரத்தி ஐந்நூறு பேரும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தார்கள். பேசப்படும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்தார்கள். சற்றும் தயங்காமல் சந்தேகம் கேட்கிறார்கள். தமது கருத்துகளை வெளிப்படுத்தவும் யாரும் யோசிப்பதில்லை. ‘இந்தியா செஞ்சது தப்புசார். இலங்கைத் தமிழர்களை நாம ஏமாத்திட்டோம் சார்’ என்று ஒரு ஏழாம் வகுப்பு மாணவன் உணர்ச்சிமயமாக எழுந்து நின்று குரல் கொடுத்தான். ‘பாகிஸ்தான் அடிக்கடி நம்ம நாட்டுக்குள்ள ஊடுருவறதுக்கு காஷ்மீரைவிட எதோ ஆத்துத் தண்ணிப் பிரச்னைதான் மெயின் காரணம்னு சொல்றாங்களே சார்.. அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி கேட்டாள். ‘சீனாவ நம்பக்கூடாது சார். ஃப்ராடு அவங்க’ என்று நாலைந்துபேர் சொன்னார்கள். எதனால் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது அருணாசல பிரதேச ஊடுருவல் செய்திகள் அவர்களை வந்தடைந்திருப்பது தெரிந்தது.அமெரிக்கா பற்றி, ரஷ்யா பற்றி, மியான்மர் பற்றி, நேபாளம் பற்றி, திபெத் பற்றி, தலாய் லாமா பற்றி, ஜார்ஜ் புஷ் பற்றி, ஒபாமா பற்றி, 123 ஒப்பந்தம் பற்றி, ஆஸ்திரேலிய நிறவெறி பற்றி – எதுவும் மிச்சமில்லை. எல்லாவற்றைப் பற்றியும் கேட்டார்கள். எல்லாவற்றைப் பற்றியும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.
பூம்புகார் ஒரு கடலோர கிராமம். சிறு நகரம் அளவுக்கு இருந்தாலும் அது கிராமம்தான். இன்னும் வளரவில்லை. [ ‘வளராது சார். ஜெயலலிதாக்கு கண்ணகிய புடிக்காது. கலைஞருக்கு ராங் செண்டிமெண்ட். இந்த ஊருக்கு எதுனா செஞ்சா உடனே அவருக்குப் பதவி போயிடும்னு பயம். அதனால செய்யமாட்டாங்க யாரும்.’ – ஒரு பத்தாம் வகுப்புப் பையன். ] பெரும்பாலும் மீனவக் குடும்பத்துக் குழந்தைகள். பையன்களைவிடப் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். சீனிவாசா பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் தவிர, பொதுவான புத்தக வாசிப்பின்மீது ஆர்வம் உண்டாக நிறைய மெனக்கெடுகிறது. ‘விழித்திரு’ என்னும் மாணவர் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் கலை, கலாசார நிகழ்ச்சிகள், சமூகச் சேவைகள் செய்ய ஊக்குவிக்கிறார்கள். சென்னை, நெய்வேலி என்று எங்கு புத்தகக் கண்காட்சி நடந்தாலும் வண்டி ஏற்றி அழைத்துச் சென்றுவிடுவார்களாம். எத்தனை மாணவர்கள் எத்தனை புத்தகம் வாங்கினாலும் கண்காட்சியில் அளிக்கப்படும் வழக்கமான தள்ளுபடிகள் தவிர பள்ளிக்கூடம் தன் பங்குக்குத் தனியே இருபது சதவீதம் விலையை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் வைத்திருக்கிறார்கள்.
பள்ளிச் செயலாளர் இரா. ராஜசேகரன் புத்தகப் பிரியர். அவர் வீட்டிலேயே ஒரு பெரிய நூலகம் இருக்கிறது. சைவ சமய வரலாறை ஐந்து பெரும் பாகங்களாக எழுதி வெளியிட்டிருக்கிறார். இணையத்திலேயே சில இலக்கிய வாசகர்களுக்கு இவரது பெயர் பரிச்சயமாக இருக்கக்கூடும். ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தின் மீதான ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டு, நூலாக [ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு பார்வை] வெளியிட்டிருப்பவர் இவர். பெரும்பாலும் படிப்பறிவில்லாத எளிய மீனவக் குடும்பங்களிலிருந்து வருகிற இந்த மாணவர்களின் எதிர்காலத்தை எப்படி செழிப்பாக்குவது என்பது பற்றி நிறையக் கவலைப்படுகிறார். பள்ளியின் தேர்ச்சி விகிதம் அபாரமாக இருக்கிறது. கரும்பலகை அறிவிப்புகள் வியப்பூட்டுகின்றன. தொண்ணூறுக்கும் மேற்பட்ட சதவீதங்களை ஆண்டு தவறாமல் காட்டுகிற பள்ளி. பெரும்பாலும் பெண்கள். ‘ஆனா ப்ளஸ் டூ முடிச்சதும் பொண்ணுங்களுக்குக் கல்யாணம் பண்ணிடறாங்க சார். படிக்கவே விடமாட்டேங்குறாங்க’ என்று கவலைப்பட்டார் ஆர். சுப்பிரமணியன் என்ற ஆசிரியர். ப்ளஸ் டூவுக்குப் பிறகு அவர்கள் தமது இருப்பின், செயல்பாடுகளின் அர்த்தத்தைக் குறைந்தபட்சம் தமது பெற்றோருக்கேனும் புரியவைப்பதற்கான முயற்சிகளை இந்த ‘விழித்திரு’ அமைப்பு மேற்கொள்கிறது.
காலை வேளைக் கலந்துரையாடல் மூன்று மணிநேரம் நடைபெற்றது. வெளியுறவு என்றெல்லாம் எதற்கு சப்ஜெக்ட் கொடுக்கிறீர்கள்? மாணவர்கள் போரடித்து ஓடிவிடமாட்டார்களா என்று அமைப்பாளர்களிடம் முன்னதாக நான் கவலை தெரிவித்திருந்தேன். உண்மையில் ஒருத்தர்கூட இடத்தை விட்டு அசையாமல் இறுதிவரை ஆர்வம் குன்றாமல் அமர்ந்து விவாதித்தது மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் அளித்தது. ‘தெரிஞ்சிக்கணும் சார். இந்தப் புள்ளைங்களுக்கு வேற எக்ஸ்போஷரே இல்லாம போச்சு’ என்று பல ஆசிரியர்கள் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள்.
ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். Prodigy புத்தகங்களை மாணவர்கள் ஆர்வமுடன் ஏராளமாக வாங்கினார்கள். புத்தகம் வாங்குவதை ஊக்குவிப்பதே தலையாய கடமை என்பது போல் பல ஆசிரியர்கள் மைக்கில் தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தார்கள். நிறைய புத்தகங்கள் வாங்கும் மாணவர்களின் ஆசிரியர்களை மேடைக்குக் கூப்பிட்டுப் பாராட்டினார்கள். எந்த நகர்ப்புறப் பள்ளியிலும் நான் இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டதில்லை.
மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளை. மாலை விழா சரியாக மூன்று மணிக்குத் தொடங்கும் என்று செயலாளர் சொல்லியிருந்தார். இடைப்பட்ட நேரத்திலும் மாலை ஆறு மணிக்குப் பிறகும் நிறைய ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டிருந்தேன். கோவலனும் கண்ணகியும் மாதவியும் வாழ்ந்த நகரம். சரித்திரத்தின் நிறையப் பக்கங்களை ஆக்கிரமித்துக்கொண்ட நகரமும்கூட. ஆனால் சமகாலம் அங்கே அத்தனை வளமாக இல்லை. சுற்றுலா வளர்ச்சிக்கான சாத்தியங்கள் இருந்தும் அரசாங்கம் அதனை கவனிக்காதது வெளிப்படையாகத் தெரிகிறது. புகழ்பெற்ற புகார் கடற்கரை குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. தள்ளுவண்டிகளில் மலை மலையாக மீன் பொறித்து விற்கிறார்கள். கழிவுகள் அங்கங்கேயே கொட்டப்படுகின்றன. காக்கைகளும் ஈக்களும் மொய்க்கின்றன. சிலப்பதிகாரக் கண்காட்சிக் கூடம் ஒன்றைத் தவிர பிற எந்தப் பிற்கால ஏற்பாடுகளும் ஒழுங்காகப் பராமரிக்கப்படாமல் சிதிலமாகிக்கொண்டிருக்கின்றன. இதனாலேயே பக்கத்திலுள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி [கேது க்ஷேத்திரம்] கோயிலுக்கு வருகிற மக்களில் பத்து சதவீத அளவில்கூட பூம்புகாருக்கு வருவதில்லை. தப்பித்தவறி யாராவது வந்துவிட்டால் ஒருவேளை சாப்பிட ஒரு ஹோட்டல்கூடக் கிடையாது.
‘கவர்மெண்ட் ஏதாவது செய்யலாம். ஏன் செய்யலைன்னு தெரியலை. எங்களால முடிஞ்சது, எங்க மாணவர்களுக்கு ஒழுங்கா படிப்பு சொல்லித்தரோம். படிப்புக்கு அப்பால் என்னென்ன உண்டுன்னு சொல்லித்தரோம். நல்ல டிசிப்ளின் கத்துக்கிட்டிருக்காங்க’ என்றார் பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன்.
பிராந்தியத்தில் சீனிவாசா மேல்நிலைப் பள்ளிக்கு மிக நல்ல பெயர் இருக்கிறது. இந்தப் பக்கம் மயிலாடுதுறை, அந்தப் பக்கம் சிதம்பரம் வரை இந்தப் பள்ளிக்கூடத்தை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பூம்புகாருக்குப் பத்து கிலோமீட்டர் தொலைவில் கருவாழைக்கரை என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்கே ஒரு காமாட்சியம்மன் கோயில் உண்டு. எங்களுக்கு அதுதான் குலதெய்வம் என்று யாரோ கண்டுபிடித்து எப்போதோ சொல்லியிருந்ததை என் அப்பா ஒரு சமயம் என்னிடம் சொல்லியிருந்தார். எனக்கு நள்ளிரவு பன்னிரண்டரைக்குத் தான் பஸ் என்பதால் நிறைய நேரம் இருந்தது. சரி, அந்தக் கோயில் எங்கே உள்ளது என்று விசாரித்துப் போய்வரலாமே என்று நினைத்தேன். குருக்களுக்கு போன் செய்து விவரம் சொன்னேன். ‘நீங்க எங்க இருக்கீங்க?’ என்று கேட்டார். ‘இங்க பூம்புகார்லேர்ந்து கொஞ்ச தூரம்.. ஒரு ஸ்கூல்ல..’ என்று ஊர் பெயரை ஒரு கணம் மறந்து யோசித்தபோது சட்டென்று கேட்டார், ‘சீனிவாசா ஸ்கூலா? அது ஒண்ணுதான் ஏரியாலேயே உருப்படி’ என்றார்.
மாலை பரிசளிப்பு விழாவில் சுமார் இருபது நிமிடங்கள் பேசினேன். காலைப் பொழுது முழுதும் அயலுறவில் போய்விட்டதால், இந்த சந்தர்ப்பத்தைக் குதூகலமான அனுபவமாக அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, குறிப்பிட்ட பொருள் ஏதுமில்லாமல், பொதுவாக, ஜாலியாகப் பேசினேன். பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது போலிருக்கிறது. விழா முடிந்ததும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் ஆட்டோகிராஃப் கேட்டுச் சூழ்ந்துகொண்ட அனுபவம் நான் சற்றும் எதிர்பாராதது. அவர்களுடைய ஆசிரியர்கள் சற்றுத் தள்ளி நின்று பெருமிதமுடன் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு கணம்தான். கண்ணில் நீர் கோத்துவிட்டது.
நானே இப்போது விரும்பினாலும் அந்தப் பருவம் மீள வரப்போவதில்லை. நான் ஆட்டோகிராஃப் வாங்க விரும்பிய பெரியவர்களும் இப்போது இல்லை. நான் உருப்படாமல்தான் போவேன் என்று சத்தியம் செய்த ஆசிரியர்கள் மட்டும் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களையாவது தேடிச்சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தபடி சென்னைக்கு பஸ் ஏறினேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
எப்போ பார்த்தாலும் யாரிடம் பேசினாலும் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது, எல்லாரும் ஒரே விஷுவல் மீடியாவுக்குப் போய்ட்டாங்க சார் என்று சொல்வதைத் தொடர்ந்து கேட்கிறேன். என்னால் இதை அவ்வளவு முழுமையாக ஒத்துக்கொள்ள முடிந்ததில்லை. நான் பார்க்கும் பழகும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிப்பவர்களாக இருக்கிறார்கள். புத்தக ஆர்வம் இருக்கிறது. குறிப்பாக சிறு நகரங்கள், கிராமங்களில் இருந்து வருபவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் நிறையவே இருக்கிறது. ராகவன் பார்த்த இந்த 3500 மாணவர்களில், நூறு பேர், ஐம்பது பேர் வாசிப்புப் பழக்கம் உடையவர்களாக இருந்தால் கூட போதும். நிச்சயம் இருப்பார்கள். இவர்கள்தான் பின்னாளில் புத்தக அபிமானிகளாக ஆவார்கள்.
🙂 Did you see any ஊர் பொறுக்கி வீணாக்கியவன் payyan in that school ? I mean to ask.. Did you see "yourself" in that crowd? Sir, My mother use to say, Life @ school is NO way a reflection of Life afer school, like life before marriage and life after marriage… I need not tell … these things, you are a writer !!
3 idiots padathula oru song athula .. Give me a sun shine, Give another chance to grow up once again nu varum… this applies to everyone sir..
-kamahade (Twiiter)
நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் உண்மை. கலைஞருக்கு அவரது நம்பிக்கை அம்மா வந்தால் கலைஞரின் ஆட்சியில் செய்யப்பட்ட பணி அதனால் பாராமுகம்.
மீனவ கடைமடை விவசாய பகுதி, சுற்றுலா தளமாவதற்கான எல்லா வாய்ப்புகளிருந்தும் கண்டு கொள்ளப்படாமல் விடபட்ட பகுதி.
கிழக்கு கடற்கரை சாலையின் இணைப்பில் இருக்கும் பூம்புகாரை மேம்படுத்த எந்த அரசுக்கும் அக்கரையில்லை, சட்டமன்ற தொகுதியின் பெயராக மட்டும் வைத்து மகிழ்கிறார்கள்.
நான் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவன் என்பதால் நீங்கள் எழுதியிருப்பதன் வருத்தம் நன்கு புரிகிறது. சீனிவாசா பள்ளிக்கு வெகு நல்ல பெயர் எங்கள் பகுதியில்
நல்ல, நிறைவான பயண அனுபவம். படிப்பதற்கு சந்தோஷமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. நன்றி.
நெஞ்சைத் தொடும் கட்டுரை. உள்ளத்தில் இருப்பது உண்மையான உணர்வுகளாய் வெளிவந்திருக்கிறது. இதுபோன்று அக்கறையுடன் உழைக்கும் ராஜசேகரன் போன்றவர்களும் சக ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். சமூகத்தால் ஆதரிக்கப்பட வேண்டியவர்கள். இதே போன்று உழைக்கும் ஜி.வி. சுப்ரமணியம் என்பவரைப் பற்றிய கட்டுரையை இந்தத் தளத்தில் படித்தேன். அது நெஞ்சை நெகிழ வைக்கிறது.
http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=107&cid=3&aid=5915
எழுதுவதோடு நின்றுவிடாமல் உங்களைப் போன்றவர்கள்தான் மாணவர்கள் சமூகத்திற்கு அதன் முன்னேற்றத்திற்கு நிறையச் செய்ய வேண்டும். அது உங்களாலும் உங்கள் குழுவாலும் நிச்சயம் முடியும்.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
வழக்கம் போல அருமையான பதிவு.
இது போல சமூக பொறுப்போடு இருக்கும் மனிதர்களும் பள்ளிகளும் மிக அதிகம். என்ன அவர்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. வர வேண்டும் என்ற ஆசையும் இருப்பதில்லை.
பி.கு
நல்லவங்களை விட கெட்டவங்க கிட்ட தான் நாம நிறைய கத்துகலாம்னு எங்க வீட்ல சொல்வாங்க 😉
இதை வைத்து பாரா கொசுவத்தி சுருள் சிறு கதை எழுதுவதிலிருந்து கண்ணகிதான் தமிழைக் காப்பாற்ற வேண்டும் 🙂
நேர்த்தியான கட்டுரை பா.ரா,
வரலாறு என்பதே "போர்" என்றிருந்த நிலையில், கிழக்கு பதிப்பகம் செய்யும் பணிகள் பாராட்டுக்கு உரியது. எளிய ஆரம்ப நிலை சிறு புத்தகம் முதல் விரிவான ஆதரங்களுடன் பேசும் டாலர் தேசம், மாய வலை ஆகியவை யாவையும் சிறப்பான முயற்சிகள். அது மாணவர்களிடம் சென்று சேர்ந்ததற்கான சான்று இந்த கலந்துரையாடல்.
மெல்லிய விமர்சனத்தோடு நெகிழ்வும் கலந்து இந்த கட்டுரை மிக அழகாய் வந்துள்ளது.
நன்றி,
மதன்.எஸ்
உண்மைதான், நல்ல ஆசிரியர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் கொடுமை என்ன என்றால் அரசு
பள்ளிகளையும் மருத்துவ மனைகளையும்
தனியாருக்கு கொடுத்து விட்டு சாராய விற்பனை
செய்து கொண்டு இருக்கிறது
பாரா,
வழக்கமான கிண்டலுடன் இந்த முறை உங்களை வம்புக்கு இழுக்கத் தோன்றவில்லை. கட்டுரையின் உண்மைத் தெறிப்பு அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அந்த ஏரியா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மாயவரம் – தரங்கம்பாடி ரயிலை எப்போது பிடுங்கி எறிந்தார்களோ, அப்போதே நான் வெறுத்துப் போய் விட்டேன். (என் ப்ளாகில் அது பற்றி ‘கிழக்கே போகாத ரயில்’ என்று புலம்பியிருந்த நினைவு). பசுமை கொழிக்கும் மன்னம்பந்தல், செம்பொன்னார்கோவில், ஆக்கூர், பொறையார், தரங்கம்பாடி, காவேரிப்பூம்பட்டிணம் போன்ற நாகை மாவட்ட சிற்றூர்கள் இன்றும் செயற்கையான சோகையாகவே இருப்பது எந்த ஆட்சியாளர் கண்ணிலும் படுவதில்லை
கருவாழக்கரை காமாட்சி அம்மன் எங்களுக்கும் குல தெய்வம் என்று தான் நினைக்கிறேன். சிறு வயதில் அங்கே குடும்பத்தோடு (எனக்கு மொட்டையா, காதுகுத்தா, ஞாபகமில்லை!) சென்று வந்த அனுபவம் நினைவில் இருக்கிறது. அப்போது நடந்த குதிரை வண்டி கலாட்டாவை வேறு கதைகளில், பதிவுகளில் கொண்டு வந்திருக்கிறேன். கடைசியில், கோவிலுக்குப் போனீர்களா இல்லையா? கிழக்கில் எப்போதுமே நாத்திகக் கும்பலால் சூழப்பட்டிருப்பதாக முன்பு எழுதி இருந்ததையும் படித்தேன். கொஞ்சமாவது ஆன்மீகச் சுடர் அங்கே தெறித்து வளர அந்தக் காமாட்சி அருள் புரியட்டும்.
நல்ல கட்டுரை. உருப்படியான காரியம். பிசினசும் அமோகமென்பதால் எனக்கு சந்தோஷம்.
நல்ல பயணம் மற்றும் சந்திப்பு, பாரா..உணர முடிகிறது.
நெகிழ்வாக உள்ளது ராகவன் சார்..
மயிலாடுதுறையைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், என் மாமா திரு. இராஜசேகரன் அவர்களின் சார்பிலும் நன்றிகள்.. இத்தளத்தில், வயதிலும் அனுபவத்திலும் சிறியவன் என்ற முறையில் அவர்களைக்குறித்து எழுதமுடியாதுள்ளேன்..
செந்தில் குமார்.
பாரா சார், மேலையூருக்குப் பக்கத்திலே இருக்கும் திருவெண்காடு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு ரோல் மாடல் மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி தான். திருவெண்காட்டுப் பள்ளிகளும் நல்ல மதிப்பெண்களைப் பெறுகின்றன. போட்டிப் போட முயற்சிக்கின்றன. ஆனால், இந்த இரண்டு ஊர்களிலும் இருக்கும் பள்ளிகளுமே பசங்களை ரொம்ப போங்காக வளர்க்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்குண்டு.
// கிழக்கில் எப்போதுமே நாத்திகக் கும்பலால் சூழப்பட்டிருப்பதாக முன்பு எழுதி இருந்ததையும் படித்தேன். கொஞ்சமாவது ஆன்மீகச் சுடர் அங்கே தெறித்து வளர அந்தக் காமாட்சி அருள் புரியட்டும்//
தகுதி, திறமை, உழைப்புக்கு மீறி பேரும் புகழும் வந்தால் பலருக்கு ஆன்மீகம் பற்றிய நினைவு எழாது. ’தான்’ என்ற எண்ணமே முன் நிற்கும். அதே போல தகுதி, திறமை, உழைப்பு இருந்தும் முன்னேற்றம் இல்லாவிட்டால் இறைவன் மீது சிலருக்கு வெறுப்பு வரும். ’ தான்’ என்ற ’அகந்தை’ ஒருவனுக்கு இருக்கும் வரை அவன் ஆன்மீகவாதியாகவே இருந்தாலும் கூட அவனால் அவனுக்குப் பலனில்லை. ஆக, எல்லாவற்றிற்கும் காலம் தான் மருந்து. அதுவே கடவுள் இல்லை என்று சொல்பவரையும் கலர் துண்டு போட வைக்கும். கடவுள் உண்டு சென்று சொல்பவரையும் காராக்கிரகத்தில் மாட்ட வைக்கும்.
காலம் என்பது கழங்கு போற் சுழன்று
மேலது கீழாய்; கீழது மேலாய் மாறிடும் தோற்றம் – மனோன்மணீயம்
நல்ல பதிவு பாரா
ஊடகங்களின் தொடர், சினிமாக்களின் பிடியிலிருந்து.. இளைய தலைமுறையினரின் கவனத்தையும், வளர்ச்சியையும் மாற்றிப்பிடிக்கும் வல்லமை புத்தகங்களுக்கும் பரவலான வாசிப்பிற்கும் உண்டு என்பதை உணர்ந்த சீனிவாசா மேல்நிலைப்பள்ளி ஆசியர்களின் பணி மேன்மையானது. அவர்களின் இந்த செயல்பாடுகளுக்கு அனைவரின் வாழ்த்துக்களையும் உரித்தாக்குவோம்…
நல்ல கட்டுரை. பலப் பல ஆண்டுகளுக்கு முன்பு, என் தந்தையோடு பூம்புகாருக்குச் சென்று வந்த நினைவு நிழலாடுகிறது. அற்புதமான, அழகான ஊர். அங்குள்ள பயணியர் விடுதி என்னை மிகவும் கவர்ந்த விடுதிகளில் ஒன்று. ஒரு நாளிரவு அங்கே தங்கியிருக்கிறேன். பதினைந்து வயதில் என்றாலும், இன்னமும் அந்த இரவு மனதை விட்டு அகலவில்லை. அலை கடலின் ஓசையும், மெலிதான குளிரும் அந்த விடுதியை சொர்க்கமாக்கின. அப்போது இந்தியாவின் தேசியப் பறவையான கொசுவின் ஆதிக்கம் அதிகமில்லை.
காவிரி கடலில் கலக்கும் இடம் என்ற ஒன்றைக் காட்டியபோது என்னால் நம்பவே முடியவில்லை. ஏதோ சாய்க்கடை வந்து கடலில் கலப்பது போலத்தான் தோன்றியது. மிகப் பழங்கால நகரக் கடற்கரையில் நிற்கிறோம் என்ற உணர்வு ஊறிக் கொண்டே இருந்தது அன்று. சிதம்பரத்தில் படித்தபோது அவ்வப்போது நண்பர்களோடு போனபோதும் அதன் சரித்திர முக்கியத்துவம் என்னை அதிகமும் பாதித்தது. எத்தனை யவனர்கள் இங்கு வந்து சென்றிருப்பார்கள் ? என்னென்ன பொருட்கள் வாணிபமாகி இருக்கும் ? அகழ்வாராய்ச்சி எல்லாம் கூடப் பூம்புகாரில் செய்து, பெரிய பெரிய தூண்களைக் கண்டுபிடித்ததாகப் பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.
அந்த ஆய்வுகள் இன்று என்னவாயின தெரியவில்லை. மாடங்கள், கூடங்கள், குளியல் குளங்கள் எனப் பொலிவுடன் இருந்திருக்க வேண்டிய பூம்புகார், களையிழந்து கிடக்கிறது. என்ன செய்ய ? வரலாற்று உணர்வே கிஞ்சிற்றும் இல்லையே நம்ம சனங்களுக்கு என்று வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியுமெனத் தெரியவில்லை.
பழைய நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள் பாரா. இன்றைய தூக்கம் கோவிந்தாதான் போங்கள் !!!
அவர்களின் இந்த செயல்பாடுகளுக்கு அனைவரின் வாழ்த்துக்களையும் உரித்தாக்குவோம்…
டூவிடர் வழியே, தன்னேர்ச்சியாக பூம்புகார் பற்றிய இப்பதிவை படித்து உளம் மகிழ்ந்ததனால் நன்றி சொல்ல வேண்டியது கடமையாகிறது.
இது போல பயனுள்ள பதிவுகள் மேலும் வர வேண்டும். துணுக்குத் தோரணங்களும், திரைப்பட, சாதி/மத, ஏனைய பிற கவைக்குதவா பதிவுகளிடையே இது போன்ற பதிவுகள் வரவேற்கப்படவேண்டும்.
மேலையூர் சீனிவாசா பள்ளி கண்டிப்புக்கு பெயர் போனது. 70,80 களில் அங்கு கட்டப்பட்ட கட்டிடங்களின் பொறியாளர்/மேற்பார்வை எனது அப்பா என்ற வகையில், சில எண்ண பின்னோட்டங்களை தந்தமைக்கு நன்றி. பல காலமாய் புலம் பெயர்ந்த எம் போன்றோருக்கு, கருவாழக்கரை என உறவுகள்_வேர்களான ஊர்கள் பெயரை கேட்பதும் கூட சிலிர்ப்பைத் தருவது. அதற்கும் நன்றி.
அன்புள்ள பாராவிற்கு
எனது ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள தரமான பள்ளிகளில் "சீனிவாசா பள்ளிகூடமும்". நானும் சென்ற வருடம் பூம்புகார் சென்று வந்தேன். மனதிற்கு மிக மிக வருத்தமாக உள்ளது. ஒரு காலத்தில் கண்ணகி சிலை, கோவலன் சிலை, மணி மண்டபம், நீச்சல் குளம் எல்லாம் மிக மிக அருமையாக இருக்கும்.
முனைவர் இறையன்புவிடம் சொல்லி அதனை மேலும் மேன்படுத்த வேண்டும்.
நல்ல அருமையான பதிவு, நன்றிகள் பல…
மயிலாடுதுறை சிவா…
PARA, I salute your Thoughts & EFFORTS.
GOD BLESS.
Srinivasan. V.
Sir,
Are you a Central PolyTechnic – Chennai Student? Me too!!!
V.Rajasekar
ஆம். செண்ட்ரல் பாலிடெக்னிக்தான். 86ம் வருடம். நீங்கள்?
இந்த பின்னூட்டத்தில் பிரபு சொல்லியிருப்பதை கடைசியாக முத்தாய்ப்பாக உங்களிடம் விடுத்த விண்ணப்பத்தை உங்கள் தகுதிக்கு எல்லைக்கு உட்பட்டு நிறைவேற்றுவீர்கள் என்பதைத் தான் தொடக்கம் முதல் உங்களிடம் எதிர்பார்த்துக்கொண்டுருக்கின்றேன்.
நிறைய தாக்கத்தை உருவாக்கி உள்ளீர்கள். நீங்கள் சென்ற இடத்தில் 1984 ஒரு நாள் முழுக்க இருந்த நிணைவு வந்து போகின்றது. காலம் கூட அவர்களின் வாழ்க்கையை மாற்றவில்லை என்பதை என்ன சொல்வது. மற்றொரு நண்பர் சொன்னதைப் போல வணிகம் சார்ந்த தொடர்புகள் இன்று அதிகமாக படிக்கும் போது அந்த இடத்தின் மகிமை செண்டிமெண்ட் காரணமாக மறுக்கப்பட்டது தான் நெஞ்சுக்கு நீதி என்பதோ?
நினைவுகளை உருவாக்கியதற்கு நன்றி.
நான் படித்த சீனிவாசா பள்ளியை பற்றி என்றைக்கும் பெருமிதம் உண்டு. உங்கள் பதிவு அதை மேலும் அதிகமாக்கிவிட்டது. விழித்திரு அமைப்பு ஆரம்பிக்க பட்ட பொது அதன் முதல் வருட மாணவர்களில் நானும் ஒருவன். அந்த குழுவில் இன்று பலர் அமெரிக்கா, சிங்கபூர், துபாய் ஏன் சவுத் ஆப்பிரிக்காவிலும் கூட, நான் பெங்களூர். எல்லோரும் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆர்வமாய் பெசிக்கொண்டுள்ளோம் சில மாதங்களாக. பதிவின் போட்டோக்கள் சிலிர்க்க வைத்தது ஒரு கணம். நன்றிகல் பல பாரா
உங்கள் பதிவு என்னை உணர்ச்சிவசப் படவைத்துவிட்டது.
'நீங்களும் நம்ம மாவட்டத்துக்காரர்தானா?
-தோழன் மபா
//பொறுக்கிய காலத்தில் முழுத் திருப்தி மற்றும் முழு மகிழ்ச்சியுடந்தான் அதனைச் செய்தேன் என்பதும் உடனே நினைவுக்கு வந்துவிடும்.//
Time wasted joyfully, is not actually wasted என்று சொல்வார்கள். பிரமாதமா சொல்லியிருக்கீங்க.
http://kgjawarlal.wordpress.com
அன்புள்ள பாரா,
நானும் அந்தப்பக்கம்தான் (மாயவரத்திலிருந்து பூம்புகார் போகும் வழியில் இருக்கிறது எங்களூரான கீழையூர்) என் அண்ணன்களுள் ஒருவரும் அக்காக்களுள் ஒருவரும் அதே சீனிவாசா-வில்தான் படித்தார்கள். பெரும்பாலும் எங்கள் பக்கத்து மக்கள் பெரும்பாலானோர் படிப்பது அங்கேதான். கண்டிப்புக்கு பெயர்போன பள்ளி. (நான் படித்தது மாயவரத்தில்)
ஒவ்வோர் ஆண்டும் புகாரில் நடக்கும் இந்திரவிழாவுக்கு தவறாமல் சென்று வருவதெல்லாம் இன்னும் பெருமூச்செறியும் சந்தோஷம் தரும் நினைவுகள்.
மற்றபடி எங்கள் பக்கத்து ஊர் பெயர்களை எல்லாம் இணையத்தில் – அதிலும் உங்கள் வலைப்பதிவில் பார்ப்பது ஆனந்தமாக இருக்கிறது.
மனமார்ந்த நன்றிகள்
அன்புடன்
முத்துக்குமார்
HELLO SIR , THANKS FOR YOUR GIVING OF NILAMELLAM RATHAM . BUT THERE IS SOME MISTAKES IN . THE HISTORY IS MISWRITTEN IN IT >
அற்புதம் சார்