வெயிலோடு வாழ்

ஹைதராபாத்துக்கு ஒரு குறும்பயணம் நேர்ந்தது. முதல் மனப்பதிவு, சென்னையை விடக் கெட்டுப்போய்விட்ட நகரம். முன்பு சென்றிருக்கிறேன். பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு. நிறைய பச்சை பார்க்க முடிந்தது. நாம்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி எந்தப் பக்கம் போனாலும் நூறடிக்கு ஒரு பூங்கா, வழியெல்லாம் மரங்கள், ஆங்காங்கே புல் திட்டு என்று கண்ட நினைவு அப்படியே இருக்கிறது. சந்திரபாபு நாயுடு காலத்தில் நகரசுத்தி ரொம்ப அற்புதம் என்று அப்போது பத்திரிகைகளில்கூடப் படித்த நினைவு.

இன்றைய ஹைதராபாத் அச்சமூட்டுகிறது. ஒரு சைக்கிள் போகும் இடைவெளி மட்டும் விட்டு எங்கெங்கும் அடுக்குமாடிகள் நடப்பட்டுவிட்டன. அதுவும் அத்தனையும் குறைந்தது பத்தடுக்கு. கண்ணில்படும் விளம்பர ஹோர்டிங்குகள் அனைத்திலும் ஃப்ளாட் வாங்குங்கள்.

சென்னை எத்தனையோ தேவலை. ஒரு நகரை முற்றிலும் காங்கிரீட் மயமாக்குவது என்றால் என்னவென்று ஹைதராபாத்தை இன்று பார்த்தால் புரியும். அடிக்கிற வெயிலுக்கு வெளியெங்கும் புழுதி பறக்கிறது. பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை குளித்தால்கூடப் போதாது. அத்தனை பிசுக்கு ஒட்டிக்கொள்கிறது. தறிகெட்ட டிராஃபிக், சகட்டுமேனிக்கு விபத்துகள், எங்கும் கூட்டம், கூட்டம் மற்றும் கூட்டம்.

ஹுஸைன் சாகர் ஏரிக்குப் போகலாம் என்று எண்ணியிருந்தேன். ரயிலில் வரும்போதே கிடைத்த தரிசனத்தில் வேண்டாம் என்று தோன்றிவிட்டது. பாதி ஏரியைக் காணவில்லை. மீதி ஏரியில் தண்ணீரைக் காணவில்லை. நிறைய சாக்கடைக் கழிவுகள், குப்பை மலைகள்.

தெரியவில்லை. கொஞ்சநாள் வெளியே இருந்துவிட்டுச் சென்னைக்கு வந்தாலும் இப்படித்தான் தோன்றுமோ என்னவோ.

*

ஹைதராபாத் வெயிலைச் சென்னை வெயிலுடன் ஒப்பிட இயலாது. அந்த விஷயத்தில் அங்கே பரவாயில்லை. காற்றில் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கிறது. மின்விசிறி இல்லாமலும் கொஞ்சநேரம் வாழமுடிகிறது. இங்கே இப்போது அடித்துத் தீர்க்கிற வெயில் அடுத்த மாதம் எங்கு போய் நிற்குமோ என்று இப்போதே அச்சமாக இருக்கிறது.

மூன்று கட்டத் தேர்தல்தான் முடிந்திருக்கிறது; இன்னும் தமிழகத்தில் தேர்தல் நடந்தபாடில்லை என்பது ஆற்காடு வீராசாமிக்கு மறந்துவிட்டதா? கோடம்பாக்கத்தில் (மட்டுமா? மற்ற இடங்களிலுமா?) அடிக்கடி பவர்கட். குறைந்தது அரை மணி. அதிகபட்சம் ஒரு மணி. கடந்த பத்து தினங்களில் குறைந்தது பத்து முறையாவது மின்சாரம் போய்விட்டது. அதுவும் நடுராத்திரியெல்லாம்.

எல்லோரும் ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் குடியுங்கள். நார்ச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள் சாப்பிடுங்கள். கூல் டிரிங்ஸ் வேண்டாம். உப்பு, காரம், கரம் மசாலா கசுமாலங்களைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள். கருணாநிதியின் அறிக்கைகளைப் படிக்காதீர்கள்.

மேதின வாழ்த்துகள்.

Share

9 comments

 • சார் , காரைக்குடியில் இரண்டு மணி நேரம். இங்கே ஐந்து மணி நேரம் போனப்போ கூட , சென்னையில் சுகவாசியாக இருந்தீர்கள் நீங்கள் எல்லாம்

 • /கருணாநிதியின் அறிக்கைகளைப் படிக்காதீர்கள்.//
  :)) நல்லா வாய்விட்டு சிரிச்சேன்

 • //கருணாநிதியின் அறிக்கைகளைப் படிக்காதீர்கள்//

  வெயிலப்பத்தி அல்லது க்ளோபல்வாமிங் பத்தி ஏதாவது விசயம் இருக்குமுன்னு நெனச்சா, அங்க சுத்தி இங்க சுத்தி (பயனம்) கடைசியில அரசியல் சாக்கடையில வந்து விழுந்துடுறீங்களே……….போங்க சார்……….
  பேசாமல் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்து அவர்களுக்காக பிரச்சாரம் செய்யுங்கள், வைட்டமின்”ப” கிடைக்கலாம் அடிக்கிற வெயிலுக்கு உடம்புக்கு தெம்பா இருக்கும்.

  • கருணாநிதியை விமரிசிப்போர் எல்லோரும் அ.தி.மு.க. கூட்டணி ஆதரவாளர்கள் என்னும் தங்கள் லாஜிக்கை வியக்கிறேன்!

 • //இன்னும் தமிழகத்தில் தேர்தல் நடந்தபாடில்லை என்பது ஆற்காடு வீராசாமிக்கு மறந்துவிட்டதா? கோடம்பாக்கத்தில் (மட்டுமா? மற்ற இடங்களிலுமா?) அடிக்கடி பவர்கட்.// இங்க மடிப்பாக்கத்திலும் இதே கதைதான். எப்ப வரும், எப்ப போகும்னு புரியாத சூப்பர் ஸ்டார் போல ஆயிருச்சு எலக்டிரிசிட்டி இங்க. நாங்களும் இதே போல எலக்‌ஷன் பத்தின கவலை போயிருச்சு போலன்னு சொல்லி சிரிச்சு சமாதானப் படுத்திக்கிட்டிருக்கோம் அப்பப்ப. 🙂

 • //கருணாநிதியை விமரிசிப்போர் எல்லோரும் அ.தி.மு.க. கூட்டணி ஆதரவாளர்கள் என்னும் தங்கள் லாஜிக்கை வியக்கிறேன்!//
  என்னத்த சொல்றது?, இரண்டு தீமையில் ஒன்றை தேர்ந்தெடுப்பதை விட வேறு வழியில்லையே?

 • //இங்க மடிப்பாக்கத்திலும் இதே கதைதான். எப்ப வரும், எப்ப போகும்னு புரியாத சூப்பர் ஸ்டார் போல ஆயிருச்சு எலக்டிரிசிட்டி இங்க. நாங்களும் இதே போல எலக்‌ஷன் பத்தின கவலை போயிருச்சு போலன்னு சொல்லி சிரிச்சு சமாதானப் படுத்திக்கிட்டிருக்கோம் அப்பப்ப. //

  ஹலோ மேடம்! 🙂

  சும்மா அடிச்சி விடாதீங்க. நாங்களும் மடிப்பாக்கத்தில் தான் இருக்கும். என்னைக்கோ ஒருநாளு கட் ஆவுறது சகஜம் தான் 🙂

 • உடன்பிறப்பே , இதையே காரைக்குடி பக்கத்துல வந்து சொல்லிப்புடாத 😀

 • //சும்மா அடிச்சி விடாதீங்க. நாங்களும் மடிப்பாக்கத்தில் தான் இருக்கும். என்னைக்கோ ஒருநாளு கட் ஆவுறது சகஜம் தான் //

  ஐயன்மீர் 🙂 ,

  ஒரு வேளை திமுக உறுப்பினர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருக்குமோ என்னவோ? 😉

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter