ஈரோடில் இரண்டு நாள்

09082008938.jpg

அந்தமாதிரி ஒரு தயிரை நான் வேறெங்கும் கண்டதுமில்லை, உண்டதுமில்லை. ஈரோடு வ.ஊ.சி. பூங்காவுக்கு அருகிலுள்ள லீ ஜார்டின் உணவகத்தில் பகலுணவுக்குச் சென்றால் கிட்டும். மண் கலயத்தில் எடுத்து வந்து வெட்டி வெட்டிப் போடுவார்கள். எவ்வளவு கேட்டாலும் போடுவார்கள், எத்தனை முறை வேண்டுமானாலும் போடுவார்கள். சற்றும் புளிக்காத, மென்மை மேவிய இட்லி போல் கனமான தயிர்.

இரு வருடங்களுக்குமுன் முதல்முறை புத்தகக் கண்காட்சிக்காகச் சென்றபோது அறிமுகமானது. வருடம்தோறும் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போதெல்லாம் லீ ஜார்டின் தயிர் நினைவுக்கு வந்துவிடும். இம்முறையும். இரு தினங்களும் புத்தகம். இரு தினங்களும் லீ ஜார்டின் தயிர்.

நியூ ஹொரைசன் மீடியா சார்பில் நெய்வேலியில் செய்தது போலவே ஈரோடிலும் பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் நடத்தினோம். அதற்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை காலை நடந்தது. அரங்கு நிறைந்த மாணவப் பூக்கூட்டம். குட்டிக்குட்டிக் குழந்தைகளெல்லாம் ஆர்வமுடன் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வென்ற காட்சி கண்ணில் நிற்கிறது. இந்த நூற்றுக்கணக்கான ஆர்வலர்களில் ஒன்றிரண்டு பேராவது எழுதும் விருப்பத்தை வளர்த்தெடுத்துப் பின்னால் பிரகாசிக்கக்கூடும்.

09082008919.jpg

பொதுவாகவே ஈரோடில் நிறைய வாசகர்கள் உண்டு. ஏனோ எழுதுபவர்கள் மிகவும் குறைவு. ஒரு கௌதம சித்தார்த்தன். ஒரு க.சீ. சிவகுமார். ஒரு இந்திரா. வேறு யார் என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. கவிஞர்கள் ஒரு சிலர் இருக்கக்கூடும். சட்டென்று நினைவில் தட்டுப்பட மறுக்கிறார்கள்.

ஆனால் ரசனைமிக்க நகரம். அதில் சந்தேகமில்லை. குசேலனை குபேரனாக்கிய கிருஷ்ணர்களே நன்றி என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். இடையறாத இன்பத்துக்கு சப்போட்டா ஜூஸ் அருந்துங்கள், கண்ணொளி பெற பப்பாளிச்சாறு பருகுங்கள், இரும்பு இதயத்துக்கு மாதுளைச் சாறு குடியுங்கள் என்று ஒவ்வொரு பழச்சாறு அருந்தவும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். அதிகாலை நடைப்பயிற்சியாளர்களுக்காக ஆங்காங்கே அருகம்புல் சாறும் கொண்டைக்கடலை சுண்டலும் தயாராக இருக்கின்றன. இரண்டு ரூபாய் டிக்கெட் கொடுத்து பூங்காக்களில் அனுமதிக்கிறார்கள். மிச்சக் காசுக்கு பதில் தண்ணீர் பாக்கெட் கொடுக்கிறார்கள். வீரிய விருத்தி லேகியங்களைக் கூட நாலு வரி மார்க்கெடிங் மெட்டீரியல் எழுதி வைக்காமல் விற்பதில்லை [நாள் முழுதும் செயல்படுவீர்கள், நாங்கள் கேரண்டி!]

புத்தகக் கண்காட்சியைப் பொருத்த அளவில் சட்டென்று இம்முறை கவனத்தை ஈர்த்த அம்சம், வழக்கமான சாமியார் கடைகள் அறவே இல்லை என்பது. கண்காட்சியை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவை இதனை திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கலாம். ஆசுவாசமாக இருந்தது. விடியலில் ஏராளமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்திருந்தன. பாரதி புத்தகாலயத்தில் நூற்றுக்கணக்கான குறுவெளியீடுகள். கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்திருந்த சமையல் புத்தகங்கள் ஒரு புது வேகத்தில் மீண்டும் பீறிடத் தொடங்கியிருக்கின்றன. எதையெடுத்தாலும் பத்து ரூபாய். கையடக்கப் பதிப்புகள். கீரைகள், சாம்பார்கள், வத்தக் குழம்புகள், சித்ரான்னங்கள், பொறியல்கள், கூட்டுகள், பாயசங்கள், பத்தியங்கள், இத்தியாதி.

இந்த பத்து ரூபாய் உத்தி வேறு சில துறைகள் சார்ந்தும் நூல்களாக வெளிப்பட்டிருப்பதைக் கண்டேன். Prodigy போல் இருபத்தைந்து ரூபாய்ப் புத்தகங்களும் முப்பது ரூபாய்ப் புத்தகங்களும்கூட மேலதிகம் தென்பட்டன. எது வந்தாலும் கடல்புறாவை அடித்துக்கொள்ள முடியாது. சாண்டில்யன் புதிய புதிய பதிப்புகளில் இன்றுவரை செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறார். அப்புறம் கல்கி, ரமணி சந்திரன். கொஞ்சநஞ்சமுள்ள கதை வாசிப்பு வழக்கத்தைக் கட்டிக்காத்து வருகிறவர்கள் இவர்களே. விற்பனை ஒப்பீட்டளவில் பிற அத்தனை எழுத்தாளர்களும் வெகு தொலைவில்தான் இருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

ஸ்டாலின் குணசேகரன்

நான்கு வருடங்களாக ஈரோடில் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்திவரும் மக்கள் சிந்தனைப் பேரவை, பேட்டையில் பிரசித்தமானது. நிறைய இளைஞர்கள் பாரதி முகம் போட்ட மஞ்சள் நிற பனியன் அணிந்து தன்னார்வத்துடன் தொண்டுபுரிகிறார்கள். வழக்கறிஞரான இதன் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், எப்படிப் பேசினால் மாணவர்களுக்கு – இளைஞர்களுக்குப் பிடிக்கும் என்று தெரிந்து பேசுகிறார். கண்காட்சி வளாகத்தில் அவர் பார்வையாலும் புன்னகையாலுமே உத்தரவுகள் இடுவதும் இளைஞர்கள் ஓடோடிச் சென்று சொன்னதைச் செய்து முடிப்பதும் ரசனைக்குரிய காட்சியாக இருந்தது. நல்ல ஏற்பாடு, நிறைவான கூட்டம்.

பூங்காவில் எடிட்டோரியல் மீட்டிங்

புத்தகக் கண்காட்சியில் செலவிட்ட நேரம் போக எஞ்சிய நேரத்தை கண்காட்சிக்கு அருகே இருந்த ஓர் அழகான பூங்காவில் பெரிதும் செலவிட்டேன். கிழக்கு – ப்ராடிஜி ஆசிரியர் குழுவினர் அனைவருடனும் சென்றிருந்தபடியால் அங்கே வைத்து எங்கள் எடிட்டோரியல் மீட்டிங் இருமுறை நடந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்த விதத்தைப் பார்த்துவிட்டு, பூங்காவில் இருந்த நபர் ஒருவர் கிட்டத்தட்ட எங்களை ஒரு தீவிரவாதக் குழுவினர் போலவும் ஏதோ பெரிய தாக்குதலுக்குத் திட்டமிடுபவர்கள் போலவும் எண்ணி, அஞ்சி, சண்டைக்கு வந்தது இரு தினங்களில் நடந்தவற்றுள் மிகவும் ரசமான சம்பவம்.

இனி அடுத்த வருடம்தான். என்றாலும் மறக்கமுடியாது – மக்கள் சிந்தனைப் பேரவையும் மண் சட்டித் தயிரும்.

Share

14 comments

  • //மண் கலயத்தில் எடுத்து வந்து வெட்டி வெட்டிப் போடுவார்கள். எவ்வளவு கேட்டாலும் போடுவார்கள், எத்தனை முறை வேண்டுமானாலும் போடுவார்கள். சற்றும் புளிக்காத, மென்மை மேவிய இட்லி போல் கனமான தயிர்//

    இந்த வார்த்தைகளை திரும்ப திரும்ப வாசிக்கிறேன். சொல்லவும், கேட்கவும் இனிமையான வார்த்தைகள் உண்டு. இவ்வார்த்தைகள் குறிப்பாக வாசிக்க இனிமையாக இருக்கிறது 🙂

  • அந்த மண் சட்டி தயிரை ஒரு படம் பிடிச்சிருக்கக் கூடாதா? சரி.. அது எம்புட்டு கலோரி? 🙂

  • அந்த மண் சட்டி தயிரை ஒரு படம் பிடிச்சிருக்கக் கூடாதா? சரி.. அது எம்புட்டு கலோரி? 🙂

    பி-கே : கலோரி -> தமிழில் என்ன? 😉

  • இதைப்போலவே, சேலம், செவ்வாய் பேட்டை சந்தையில், ராசிபுரம் தயிர் கிடைக்கும். ஒரு கலயம், ரூ.5/ ரூ.10 (வருடம் 1987ல்) என விற்பார்கள். தயிர் கிடைக்கும் என்பத்ற்காகவே நான் சித்தியுடன் சென்று காய்கறி மூட்டை தூக்கி வருவேன்.

  • அநியாயத்துக்கு ஆசைப்பட வைத்துவிட்டீர்கள்…

    நான் எப்போது ஈரோடு போவது ? எப்போது மண் சட்டித்தயிர் சாப்பிடுவது ??

  • அந்த ஹோட்டலிலேயே உருப்படியாக இருப்பது அது ஒன்று தான்.
    அது தொடங்கிய காலத்தில் இரண்டு வருடம் கேப்டனாக (ஆர்டர் டேக்கர்)வேலை செய்தேன். பிரமாண்டமும் அழகும் மற்ற குறைகளை தூக்கி சாப்பிட்டு விடும்.
    தற்போதைய ஈரோட்டில் வெளியூர்காரர்கள் ஒரு முறையாவது சாப்பிட்டு செல்லக்கூடிய ஒரு உணவகமாக அது இருக்கிறது.
    இன்னொரு தகவல்
    ஆக்ஸ்போர்டு- அப்பாவது
    லீ ஜார்டின் -மகனுது

  • //அப்படியே கோயமுத்தூர் பக்கம் வந்துவிட்டு செல்லுங்கள்.//

    வரும் வேலை இருக்கிறது. ஆனால் இம்முறை வருவதற்கு வசதிப்படவில்லை. இங்கே சில பணிகள். அடுத்த புத்தகக் கண்காட்சிக்கு அவசியம் வருவேன்.

  • //வீரிய விருத்தி லேகியங்களைக் கூட நாலு வரி மார்க்கெடிங் மெட்டீரியல் எழுதி வைக்காமல் விற்பதில்லை [நாள் முழுதும் செயல்படுவீர்கள், நாங்கள் கேரண்டி!]//

    தயவு செய்து இதனைப் பற்றி புத்தகம் எழுதவும்..

    அதுவும், ‘நாள் முழுவதும் வெற்றிகரமாகச் செயல்படுவது எப்படி?’ என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவித்தீர்களானால், நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு என்பது நடக்காது.. இந்த வரிசையில் நான் விட்டுவிட்ட ‘ஒன்று’ அமோகமாக நடக்கும் என்று நினைக்கிறேன்.

    ‘பாவம்’ உங்களைத்தானே சேரும்.. எங்களுக்கென்ன..?

    ‘இதுக்கு நாங்கள் கியாரண்டி!!!’

  • ஏங்க…எவ்ளோ நாளைக்குத்தான் இந்த தயிர பத்தியே படிச்சுட்டு இருக்கிறது…வேற எதாவது எழுதுங்க…

  • //தயவு செய்து இதனைப் பற்றி புத்தகம் எழுதவும்.. //

    அதையும் எங்கள் சிங்கம் உண்மை தமிழனே ஐந்து அல்லது ஆறு லட்சம் பக்கங்களில் எழுதினால் நன்றியுடையவர்களாக தமிழர்கள் இருப்போம்.

  • //அதையும் எங்கள் சிங்கம் உண்மை தமிழனே ஐந்து அல்லது ஆறு லட்சம் பக்கங்களில் எழுதினால் நன்றியுடையவர்களாக தமிழர்கள் இருப்போம்//

    “உண்மைத் தமிழன் எழுதினால்..” என்று சொன்னாலே போதாதா? அது என்ன ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் ஐந்து, ஆறு லட்சம் பக்கங்கள்?!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி