எடிட்டர் டாவிதார்

பிம்பங்கள் உடைவதைப்போல் வலி மிகுந்த சுவாரசியம் வாழ்வில் வேறில்லை. இன்றைய என் காலை பெங்குயின் எடிட்டர் டேவிட் டாவிதார் மீதான பாலியல் வழக்குச் செய்தியுடன் விடிந்தது. டாவிதார், என் மானசீகத்தில் என்னைக் கடந்த ஆறேழு ஆண்டுகளாக வழி நடத்திக்கொண்டிருந்தவர். அவர் பெங்குயின் இந்தியாவிலிருந்து மாற்றலாகி, பெங்குயின் கனடாவுக்குச் சென்று, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகி எக்செல் ஷீட்டுகளுடன் வாழத்தொடங்கிய பிறகும் எனக்கு எடிட்டர்தான்.

பத்திரிகை உலகிலிருந்து பதிப்புத் துறைக்கு இடம் பெயர்ந்ததும், குறைந்தது இரண்டு மூன்று பதிப்பக எடிட்டர்களையாவது நான் கூர்மையாக கவனிக்கத் தொடங்கினேன். மேல் பார்வைக்கு, பத்திரிகை – புத்தக எடிட்டிங் ஒன்றே என்று தோன்றலாம். நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரு பிரதியை அணுகும் விதத்திலிருந்தே அந்த வேறுபாடுகள் தொடங்கிவிடும். ஒரு புத்தகத்தின் தொடக்கம், எழுச்சி, அடங்கல் என்பது பத்திரிகைக் கட்டுரையின் தொடக்கம், எழுச்சி, அடங்கலிலிருந்து மாறுபட்டது.

இதனை மிக எளிமையாகச் சொல்லித்தரக்கூடியவை, பெங்குயின் இந்தியா கடந்த இருபதாண்டுகளில் வெளியிட்ட பல புத்தகங்கள். சரித்திரம், சமூகம் சார்ந்த புத்தகங்களை எடிட் செய்வதைக் காட்டிலும் இவ்வகையில் சமகால நிகழ்வுகளைப் புத்தகமாக்கும்போது ஓர் எடிட்டருக்கு எழக்கூடிய குழப்பங்கள் நிறைய உண்டு. இன்றைய அதிபரபரப்புகளுக்கு நாளை என்ன இடம் இருக்கும் என்று யூகிப்பது சவாலான விஷயம். பத்திரிகை என்பது ஒரு நாளில், ஒரு வாரத்தில், மிஞ்சினால் ஒரு மாத காலத்துக்குள் காலாவதியாகக் கூடியது. புத்தகம் அப்படியல்ல. இன்றைய பரபரப்பு, அதன் தீவிரம் குறையாது வெளிப்பட்டாக வேண்டிய அதே சமயம், எத்தனை ஆண்டுகள் கழித்து வாசிக்கும் வாசகனுக்கும் அது சரித்திரமாக உருமாறித் தென்படவேண்டும். பெங்குயின் இந்தியாவின் பல அரசியல் புத்தகங்கள் இதை வெகு அநாயாசமாகச் செய்திருக்கின்றன. உடனடியாக நினைவுக்கு வருபவை ஹுசைன் ஸெய்டியின் Black Friday – ஜூலியோ ரிபைரோவின் Bullet For Bullet [தன்வரலாறே என்றபோதும்.]

பெங்குயின் எடிட்டர்களுக்கு இந்த வித்தையைக் கற்றுக்கொடுத்தவர் டாவிதார். காட்சிகளை விவரிக்கும்போது சமகாலத்தன்மையை எழுத்தில் ஏற்றி, தகவல்களை, விவரங்களை, விமரிசனங்களை முன்வைக்கும்போது என்றைக்குமான மொழிக்குச் சட்டென்று மாறுகிற வித்தை அது. வாசகனுக்கு அந்த மாற்றம் தெரியாது. அவன் தன்னையறியாமல் பிரதியின் சாசுவதத்தன்மையை உணரத் தொடங்கியிருப்பான். இந்தக் காரணத்துக்காகவே நான் பெங்குயின் இந்தியாவின் அரசியல் புத்தகங்களைப் பெரும்பாலும் தவறவிடமாட்டேன்.

இதேபோல, திரைத்துறை தொடர்பான புத்தகங்களில் பெங்குயின் இந்தியா கடைப்பிடிக்கும் மொழியையும் நினைவுகூர வேண்டும். ஜிலுஜிலுப்பான மொழிநடை, கூடுமானவரை மிகச்சிறிய சொற்றொடர்கள் என்பதே அந்நூல்களின் அடிப்படை இலக்கணமாக இருக்கும். இந்தி திரைப்படப் பாடல்களின் வரலாறு குறித்து ஓரிரு வருடங்களுக்கு முன்னர், கணேஷ் அனந்தராமன் என்பவர் எழுதிய  A History of the Hindi Film Songs என்னும் புத்தகத்தைத் தற்செயலாக வாசித்தேன். இந்த எழுத்தாளரின் வேறு எந்தப் புத்தகத்தையும் நான் படித்ததில்லை. அவர் வேறு ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்றும் தெரியாது. நான் ஹிந்திப் பாடல்கள் கேட்பவனும் அல்லன். ஆனாலும் அப்புத்தகம் என்னைக் கவர்ந்தது. வேகமாகப் படிக்க வைத்தது. ஒரே காரணம், நேர்த்தியான எடிட்டிங். புத்தகத்தின் தன்மைக்கு ஏற்ற மொழி. டாவிதார் சொல்லிக்கொடுத்தது.

இப்படியே வரலாறு, கலை, கலாசாரம், தொன்மம், தத்துவம் என்று பல்வேறு துறைகள் சார்ந்து எழுதப்படும் கதையல்லாத புத்தகங்களின் வாசிப்பு சுவாரசியத்துக்கு அந்த மனிதர் உட்கார்ந்து யோசித்து எடிட்டிங் உத்திகளை உருவாக்கியவர். சரியான அளவில் தகவல்கள், நேர்த்தியான வெளிப்பாட்டு முறை என்று எளிதில் சொல்லிவிடலாம். இந்த விகிதத்தை வகுப்பது எளிதல்ல. ஒவ்வொரு துறை சார்ந்தும் எழுதப்படும் புத்தகங்களுக்கென்று தனித்தனி மொழிப்பிரயோகம் உண்டு. அந்தக் குறிப்பிட்ட மொழியில் பிரதி இருந்தால்தான் வாசிப்பு எளிதாக இருக்கும். நூலாசிரியர் ஓரெல்லைவரை அதைப் புரிந்துதான் எழுதியிருப்பார். ஆனால் அபுனைவின் வெற்றி என்பது பெருமளவு அதன் எடிட்டருடைய பங்களிப்பு சார்ந்தே அமையும்.

இந்திய புத்தகப் பதிப்புத்துறையில் டேவிட் டாவிதார் என்ற மனிதரின் வருகையும் செயல்பாடும் இல்லாது போயிருந்தால் இவை குறித்த விழிப்புணர்வு நமக்கு உண்டாகவே இன்னும் காலதாமதமாகியிருக்கும் என்பது என் கருத்து.

நான் டாவிதாரின் ரசிகன். எப்படி இளையராஜாவுக்கு ரசிகனோ அப்படி. அதனால்தான் இன்றைய இந்தச் செய்தி என்னை மிகவும் பாதித்தது. அவரது ஹவுஸ் ஆஃப் ப்ளூ மேங்கோஸை அதன் பல கட்டுமான ஓட்டைகளையும் தாண்டி ரசிக்க முடிந்தது என்னால். ஒரே காரணம், நான் அவருடைய ரசிகன். தலைப்பு வைப்பது, பின் அட்டை வாசகங்கள் எழுதுவது, அத்தியாயத் தலைப்புகளில் சிறு புன்னகையை ஒளித்துவைப்பது, அட்டை வடிவமைப்பு, உள் பக்கங்கள் வடிவமைப்பு எனப்பல விஷயங்களில் டாவிதார் என்ன செய்கிறார் என்று பார்த்துப் பார்த்துப் பயின்றிருக்கிறேன்.

பெங்குயின் இந்தியாவில் பல எடிட்டர்கள் உண்டு. ஆனால் அத்தனை பேரும் அவருடைய வார்ப்புகள் என்பதனால் எல்லாப் புகழையும் அவருக்கே அளிப்பதில் எனக்கு எவ்வித மனச்சிக்கலும் கிடையாது.

இந்தப் பாலியல் வழக்கின்மூலம் டாவிதார் என்னும் மனிதர் எனக்கு வெளிப்பட்டிருக்கிறார். ஒன்றும் பிரச்னையில்லை. நான் ரசிப்பது டாவிதார் என்னும் எடிட்டரைத்தான்.

Share

11 comments

  • இன்போசிஸ் கேஸ் ( இப்போ ஐ கேட் மூர்த்தி) தெரியுமா? சும்மாவே பெண்களை வேலை விட்டு தூக்கினால், திருப்பி அவர்கள் கேஸ் போடுற நாடுங்க அது.

    அமெரிக்கா காண்டினண்டில் வாழ்க்கை நல்லது என்று… அதனால் தான் நீங்கள் அமேரிக்கா போக கணேஷ் சந்திராவை தொங்குகிறீர்கள் என்று நண்பர்களிடம் சொல்கிறாரோ? பஸ்சிலும் டிவிட்டரிலும் பட்சி சொல்கிறது என்று அவரே எழுதுறார்.

    ஜெயமோகன் போல ஒரு முறை சென்று வாருங்கள்.

    நல்ல பாரா. நல்ல பதிவு.

    • நண்பன்: எனக்கு அமெரிக்காவின்மீது ஒரு போதும் மோகமிருந்ததில்லை. இப்போது அங்கு போகிற திட்டமோ, விருப்பமோ சுத்தமாகக் கிடையாது. கணேஷ் எழுதுவதெல்லாம் சும்மா தமாஷுக்கு. தவிரவும் இலக்கிய சுற்றுப்பயணமெல்லாம் மேற்கொள்ள நான் என்ன இலக்கியவாதியா? அநியாயமாகப் பழி சுமத்தாதீர்கள்!

  • டாவிதாரைப் பற்றினதொரு பதிவை எழுத இந்தச் சர்ச்சையை ஒரு சாக்காக கையாண்டுள்ளீர்கள் என்பதாக இந்தப் பதிவை புரிந்து கொள்கிறேன். மற்றபடி கடைசி பத்திதான் முதிர்ச்சியான அணுகுமுறை.

    • சுரேஷ், டாவிதாரைப் பற்றி நான் எழுதுவேன் என்று நினைத்திருக்கவில்லை. மிகவும் பிரத்தியேகமாக உணரக்கூடியவற்றைப் பற்றிப் பெரும்பாலும் பொதுவில் பேசமாட்டோமல்லவா? இப்போது யோசித்தால் அப்படித்தான் தோன்றுகிறது. பத்ரி உள்ளிட்ட ஒன்றிரண்டு பேருக்கு மட்டும்தான் நான் டாவிதார் ரசிகன் என்பதே இதுவரை தெரியும். நேற்று செய்தி கண்டபிறகுதான் இதனை எழுத நினைத்தேன். இன்னும் ஆறவில்லை.

  • நல்ல பதிவு, நன்றி பா.ரா. என்று சொல்லமாட்டேன். டாவிதாரை தில்லியில் ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன். இப்போது தான் தெரியும் அவர் கன்யாகுமரியில் பிறந்தவராம்.

    பாரதி மணி

    • பாரதி மணி சார்! நல்வரவு. நான் ஒரே ஒருமுறை அவரை டெல்லியில் தூர இருந்து பார்த்திருக்கிறேன். சந்தித்ததில்லை. உண்மையிலேயே பிரமிக்கத்தக்க ஆளுமைதான். சந்தேகமில்லை. இப்போதும் பிரமிக்கத்தான் செய்கிறேன். ஆனால் வேறு விதமாக.

  • ” பிம்பங்கள் உடைவதைப்போல் வலி மிகுந்த சுவாரசியம் வாழ்வில் வேறில்லை”

    ” நர” கல் பதிவரை பத்தி எழுதபோறீன்கலோனு , பயந்துட்டேன் ,,,

    “தலைப்பு வைப்பது, பின் அட்டை வாசகங்கள் எழுதுவது, அத்தியாயத் தலைப்புகளில் சிறு புன்னகையை ஒளித்துவைப்பது, அட்டை வடிவமைப்பு, உள் பக்கங்கள் வடிவமைப்பு எனப்பல விஷயங்களில் டாவிதார் என்ன செய்கிறார் என்று பார்த்துப் பார்த்துப் பயின்றிருக்கிறேன்”

    எங்களுக்கும் கத்து கொடுங்க, ப்ளிஸ்

  • தலைப்பு வைப்பது, பின் அட்டை வாசகங்கள் எழுதுவது, அத்தியாயத் தலைப்புகளில் சிறு புன்னகையை ஒளித்துவைப்பது, அட்டை வடிவமைப்பு, உள் பக்கங்கள் வடிவமைப்பு எனப்பல விஷயங்களில் டாவிதார் என்ன செய்கிறார் என்று பார்த்துப் பார்த்துப் பயின்றிருக்கிறேன்

    அப்படியா செய்தி.குரு தட்சணை கேட்டு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறோம்,ஒழுங்காக தட்சணை தராவிட்டால் கேஸ் போடுவோம் 🙂

  • //இந்தப் பாலியல் வழக்கின்மூலம் டாவிதார் என்னும் மனிதர் எனக்கு வெளிப்பட்டிருக்கிறார். ஒன்றும் பிரச்னையில்லை. நான் ரசிப்பது டாவிதார் என்னும் எடிட்டரைத்தான்.//

    வழிமொழிகிறேன்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி