யாருடைய எலிகள் நாம்?

புத்தக அறிமுகம்

தமிழகத்தில் ஒரு பத்திரிகையாளனாகக் குப்பை கொட்டுவது போன்றதொரு அவலம் வேறில்லை. விதி விலக்குகளை விட்டுவிடலாம். பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்குப் பெரும் பிரச்னை, சம்பளமல்ல. அவர்களது சுய சிந்தனை காயடிக்கப்படுவதுதான். நிறுவனத்தின் குரலைத் தன் குரலாக்கிக் கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்காது. நிறுவனத்தின் குரல் பி. சுசீலா குரல்போல மாறினால் இதழாளன் குரலும் சுசீலா குரலாக மாறும். நிறுவனம் பெங்களூர் ரமணியம்மா மாதிரி பாடினால் அவனும் அங்ஙனமே பாடவேண்டும். அவர்கள் பி.எஸ். வீரப்பா மாதிரி சிரித்தால் இவர்கள் எம்.என். நம்பியார் மாதிரி கூட மாற்றிச் சிரிக்க முடியாது.

மிகவும் அடித்தட்டு தொடங்கி வெகு மேல்மட்டம் வரை இந்தப் போக்கு வேரோடி, புரையோடிவிட்டபடியால்தான் தமிழில் பத்தி எழுத்து என்பது வெகு சமீப காலம் வரை பெரிதாக அங்கீகரிக்கப்படாதிருந்தது. இணையம் – குறிப்பாக சமூக வலைத்தலங்களின் தாக்கம் அதிகரித்து, வாசகன் பத்திரிகையை மட்டுமே செய்திக்கும் சிந்தனைக்கும் நம்பியிருக்க வேண்டிய நிலைமை மாறத் தொடங்கியபோதுதான் பத்திரிகைகள் தம்மை மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன.

ஒரு வகையில் சமஸ் அதிர்ஷ்டசாலி. அவர் இதழியல் துறையில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிய நேரத்தில் நிர்ப்பந்தங்களின் கோரப்பிடி சற்றுத் தளரத் தொடங்கியிருந்தது. சமஸ் போன்ற ஒரு சுய சிந்தனையாளருக்கு இந்த சௌகரியம் அவசியம். ஏனெனில் ஒரு செய்தியை ஜோடனையற்று அவர் காட்சிப் படுத்துவதோடு நிற்பதில்லை. அதன் மீதான தனது விமரிசனத்தை அழுத்தமாக முன்வைத்து முடிப்பதுதான் ஒரு சமூகப் பொறுப்பாளியாகத் தனது கடமையைச் சரியாகச் செய்ததற்குச் சான்று என்று கருதுபவர்.

இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளைக் காட்டிலும் சமஸ் ஒவ்வொரு பிரச்னையின் மீதான தனது கண்ணோட்டத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதையே நான் மிகவும் ரசிக்கிறேன். ஆங்காங்கே கொஞ்சம் இடப்பக்க வாசனை அடிப்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் தும்மல் வரவைப்பது என் பிரச்னை. ஆனால் தான் நம்பும் ஒன்றை சொற்சமரசமின்றி கூர்மை குன்றாமல் முன்வைப்பதில் சமஸ் பின்வாங்குவதே இல்லை. அவருக்கு வசதியாகத் தளங்கள் அமைந்தது அவரது அதிர்ஷ்டம். I repeat, அதிர்ஷ்டம்.

பக்க அளவிலும் கொஞ்சம் கனமான புத்தகம்தான். தினமணி முதல் தி ஹிந்து வரையிலான காலக்கட்டத்தில் அவ்வப்போது சமஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பத்திரிகை செய்திக் கட்டுரைகளுக்கு ஆயுசு அதிகம் கிடையாது என்னும் மூட நம்பிக்கையைத் தகர்க்கும் கட்டுரைகள். உதாரணமாக, கலைஞர் காலத்தில் கட்டப்பட்டு ஜெயலலிதாவால் கிட்டத்தட்ட காலி பண்ணப்பட்ட கோட்டூர்புரம் நூலகத்தைப் பற்றிய ஒரு கட்டுரையைச் சொல்வேன். எழுத்தில் செருப்பால் அடிப்பது என்றால் இதுதான். இத்தனை துணிவாக, வெளிப்படையாக, உண்மையின், சத்திய ஆவேசத்தின் தகிப்புடன் ஒரு வெகுஜன இதழில் இந்தக் கட்டுரை வெளிவந்திருக்கிறது. நியாயமாக நம் சமூகம் என்ன செய்திருக்க வேண்டும்? அல்லது ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்?

அரசு செய்யத் தவறியதை மக்களும் தட்டிக் கேட்பதில்லை. தட்டிக் கேட்டாலும் அரசு காதில் போட்டுக்கொள்வதில்லை என்பதுதான் எத்தனை சௌகரியமான பழைய ஏற்பாடு? இத்தனை காலம் கழித்து இந்தக் கட்டுரையை மீண்டும் வாசிக்கும்போது அன்று ஏற்பட்ட அதே பதைப்பு இப்போதும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. நூலகம் இன்றும் இருக்கிறதென்றாலும் அது கட்டப்பட்டதன் நோக்கம் அழித்துப் புதைக்கப்பட்டுவிட்டதை எண்ணி வருந்தாதிருக்க முடிவதில்லை.

சமஸின் எழுத்தில் நம்மை வசீகரிக்கும் இன்னொரு முக்கியமான விஷயம், அவரது வரலாற்றுத் தெளிவு. சரியான தரவுகளின்றி அவர் எதையும் எழுதுவதில்லை. 2012 அசாம் கலவரங்கள் குறித்து எழுதும்போது (நமக்கு ஏன் உறுத்தவில்லை?) சுதந்தர இந்தியாவின் ஆகப்பெரிய கலவரங்கள் அனைத்தையும் ஒரு பார்வையில் சுட்டிக்காட்டிவிடுகிறார். இந்தக் கலவரதாரிகள் யாரும் எக்காலத்திலும் தண்டிக்கப்படாததைச் சொல்லி, இனப்படுகொலைகளின் நடுவே நமது சுதந்தரத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்று முடிக்கிறார்.

நவீன உலகில் கலவரங்கள் தொடங்கி புரட்சிகள் வரை அனைத்தும் அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப்பட்டு அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டு அரசியல்வாதிகளாலேயே கைகழுவப்பட்டுவிடுபவை. மக்கள் இதில் பகடைக்காய்களாக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால்தான் அரசியல் தளத்தில் நிகழும் எதற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்போ அல்லது கடும் கண்டனமோ எழுவதில்லை. நரி இடமாய்ப் போனாலென்ன; வலமாய்ப் போனாலென்ன; மேலே விழுந்து பிடுங்காது போனால் சரியென்னும் மனோபாவம் உருவாகிவிட்டது. அசாமிய இந்தியனுக்காகத் தமிழக இந்தியன் பெரிய கவலை கொள்ளாததற்கும் தமிழக இந்தியனுக்காக ஒரு பீகாரி இந்தியனோ ஒடிய இந்தியனோ அக்கறையுடன் குரல் கொடுக்காததற்கும் இதுவன்றி வேறு காரணமில்லை. எப்போதாவது பாகிஸ்தான் வடக்கே ஊடுருவத் தொடங்கினால் மட்டும் இந்திய ஒருமைப்பாடு சாகாதிருப்பதை உணர முடிகிறதே தவிர மற்ற தருணங்களில் அதற்குப் பெரிய வேலை கொடுக்காமல் பார்த்துக்கொள்வதில் அரசியல்வாதிகள் விற்பன்னர்களாகவே இருக்கிறார்கள்.

எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் கற்றுக் கொடுத்த பிரித்து வைத்தாளும் உத்திதான். யாரையும் குறை சொல்லிப் பயனில்லை. குறைந்தபட்சம் நமது காலத்தில் என்ன நிகழ்கிறது என்னும் தெளிவாவது தேவைப்படுகிறது. சமஸின் நூல் அதைத்தான் செய்கிறது.

அரசியல், சமூகத் தளங்களில் நிகழும் முக்கியமான எந்த சம்பவத்தையும் சமஸ் விட்டுவைப்பதில்லை. நடப்பதைக் கூர்மையாகக் கவனிக்கிறார். செய்தியை முலாமின்றி முன்வைத்துவிட்டு அதன்மீது தனது கூரிய விமரிசனங்களால் கையெழுத்திடுகிறார். எல்லாம் எல்லாருக்கும் உவப்பானதாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஆனால் என்றாவது ஒரு சமயம் எல்லோரும் நினைவுகூரத்தான் வேண்டும்.

அதற்கு இத்தகைய சமகால வரலாற்று நூல்களன்றி வேறு உதவிக் கருவியில்லை. சமஸின் கருத்துகளை நீங்கள் வெறுக்கலாம், விமரிசிக்கலாம், விவாதித்துக் குப்பை என்று அள்ளிக் கொட்டலாம் அல்லது கொண்டாடவும் செய்யலாம்.

ஆனால் நிச்சயமாக நிராகரித்துவிட்டுப் போகமுடியாது. நடப்புக் காலக்கட்டத்தில் தமிழில் ஆக முக்கியமானதொரு பத்திரிகையாளராக சமஸைத்தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.

யாருடைய எலிகள் நாம்? | சமஸ் | துளி வெளியீடு | தொடர்புக்கு: thuliveliyeedu@gmail.com, samasbooks@gmail.com | பேசி: 9444204501

3 comments

  • சமஸ் அவர்களின் எழுத்தில் உள்ள காரம் போலவே விமர்சனத்திலும் நிறையக் காரம் உள்ளது.இங்கிருந்தும் அங்கிருந்தும் காப்பி அடித்து எழுதுகிற பத்தி எழுத்தாளர்கள் தான் இப்போது நிறைய உள்ளனர்.ச்மஸ் போன்றவர்கள் மிகவும் ஊக்கிவிக்கப்பட வேண்டிய இளைஞர்கள். அந்தப் பணியைச் செய்திருக்கிறீர்கள்.

Leave a Reply