வெயிலுக்கு பயந்து பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயேதான் இருக்கிறேன். இருந்தாலும் விதியின் சதியால் திடீர் திடீரென்று எங்காவது கிளம்பவேண்டியதாகிவிடுகிறது. போன மாதமெல்லாம் பறக்கும்படை வாகனங்கள் ஆக்கிரமித்திருந்த சாலைகளை இப்போது பெரும்பாலும் பிரசார ஆட்டோக்கள் பிடித்துவிட்டன. பிரமாதமான ஊர்வலங்களெல்லாம் இல்லை. ஒரே ஆட்டோ. உள்ளே ஒரு டேப் ரெக்கார்டர். முயல் காது மாதிரி முன்னால் பறக்கும் கட்சிக்கொடிகள். பின்பக்க ஒலிபெருக்கியில் பதிவு செய்யப்பட்ட பிரசார உரைகள். பாரதிய ஜனதா ஆட்டோக்களில் மட்டும் பிரசார டேப் ரெக்கார்டர் இல்லாமல் யாராவது ஒருத்தர் அப்பாவியாக பின்சீட்டில் உட்கார்ந்து எழுதி வைத்து மைக்கில் படிக்கிறார். அடுத்த தேர்தலுக்குள் அவர்களும் வயசுக்கு வந்துவிடுவார்கள்.
கொஞ்சம் கவனமாக, கிட்டத்தட்ட அத்தனை கட்சிப் பிரசார உரைகளிலும் சில சாம்பிள்கள் கேட்டுப் பார்த்தேன். மேடைக் கூட்ட வசவுகள் எப்படியோ. இந்த ஒலிப்பதிவுப் பிரசாரங்கள் கொஞ்சம் சுத்தபத்தமாகத்தான் இருக்கின்றன. எந்தத் தேர்தலுக்கும் பொருந்தக்கூடிய தலைவர்களின் பிரபலமான உரைகளை ஒலிக்கவிட்டுப் போவது இருக்கவே இருக்கிறது. ஆனால் இந்தத் தேர்தலுக்காகவே சில கட்சிகள் ஐந்து நிமிட பைட், பத்து நிமிட பைட் எல்லாம் ரெடி பண்ணியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் இந்த ரெக்கார்டட் பிரசாரத்தின் ஆகப்பெரிய பிரச்னை, பிராந்திய முக்கியத்துவம் அறவே இல்லாது போய்விடுவது.
உதாரணமாக, கோடம்பாக்கத்தில் நான் கேட்ட ஒரு பிரசாரப் பதிவுரையில் மூலக்கடை, கல்மண்டபம் போன்ற பகுதிகளின் பிரச்னைகளை யாரோ நல்லவர் பேசிக்கொண்டிருந்தார். வாகனம் ஆர் 2 ஸ்டேஷன் தாண்டி சாமியார் மடத்தை நெருங்கும்போது உரை அம்பத்தூர் எஸ்டேட்டுக்குப் போயிருந்தது. பகுதிவாழ் மக்களின் பிரச்னைகளைப் பேசுவது ஒருபுறமிருக்க, ஒரு மாறுதலுக்கு இவர்கள் ஏன் பெண் குரல்களைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்று தோன்றியது. ஸ்ரேயா கோஷல் ரேஞ்சில் இல்லாவிட்டாலும் பெங்களூர் ரமணியம்மாள் குரலிலாவது – பாட வேண்டாம் – பேசினால்கூட அடிக்கிற வெயிலுக்குக் கொஞ்சம் காது குளிரும். கட்சிகள் பரிசீலிக்க வேண்டுகிறேன்.
நிற்க. சொல்ல வந்த விஷயம் வேறு. இந்தத் தேர்தலை ஒட்டி எடுக்கப்பட்ட கணக்கின்படி தேசமெங்கும் சுமார் 1.8 கோடி புதிய வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பன்னிரண்டரை லட்சம் பேர். அதாவது முதல் முறை ஓட்டுப் போடப் போகிறவர்கள். கல்லூரிப் படிப்புக்குள் காலெடுத்து வைக்கிறவர்கள்.
இவர்களோடு சென்ற தேர்தல் சமயம் புதிய வாக்காளர்களாகச் சேர்ந்தவர்களையும் சேர்த்து ‘இளைய தலைமுறை’ என்று வகைப்படுத்த முடியுமானால், இப்பெரும் கூட்டத்துக்கு நமது தலைவர்களும் பிரசாரகர்களும் பேசுகிற பெரும்பாலான விஷயங்கள் அநேகமாகப் புரியாது.
சில உதாரணங்கள் பார்க்கலாம். அண்ணா நாமமும் புரட்சித் தலைவர் நாமமும் வாழ்ந்துவிட்டுப் போவதில் இவர்களுக்குப் பிரச்னை கிடையாது. ஆனால் ‘எம்ஜிஆர் ஃபேக்டர்’ என்பது இவர்களிடம் எடுபடாது. அதாவது எம்ஜிஆர் பேர் சொல்லி இவர்களிடம் ஓட்டு வாங்க முடியாது. எம்ஜிஆருக்காக, அவர் முகத்துக்காக, அவர் நிறத்துக்காக, அவர் ஸ்டைலுக்காக, அவரது இருப்புக்காக, நினைப்புக்காக ஓட்டுப் போட்ட தலைமுறை இன்று ஈசிசேரில் உள்ளது. அவர்கள் ஓட்டுகள் இருக்கவே இருக்கும். ஆனால் புதிய வாக்காளர்களை எம்ஜிஆர் சேர்த்துத் தர வாய்ப்பில்லை என்பதைப் பிரசார பிரகஸ்பதிகள் மறந்துவிடுகிறார்கள்.
இதே மாதிரிதான் மாநில சுயாட்சி, கச்சத்தீவை மீட்போம் கோஷங்கள். இதெல்லாம் என்ன என்று கேட்கக்கூடிய தலைமுறை மிகப் பெரிது. அப்படியெல்லாம் இல்லை என்று தடாலடியாக மறுத்துப் பேசிப் பயனில்லை. யதார்த்தப் பதார்த்தங்கள் பிடிக்காது போனாலும் விழுங்கப்படவேண்டியவை.
சேது சமுத்திரத் திட்டம் என்று ஒன்று இருக்கிறது. அத்திக்கடவு – அவிநாசித் திட்டம் என்று இன்னொன்று இருக்கிறது. நான் தொளதொள அரை டிராயர் போட்டுக்கொண்டு திரிந்த காலத்திலிருந்து இந்த இரு திட்டங்களைப் பற்றியும் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் யாராவது பேசாதிருப்பதில்லை. இதோ ரிசல்ட் வந்து ஆட்சி அமைந்த அடுத்த முகூர்த்தத்தில் இதெல்லாம் நடந்துவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தால் முடிந்தது கதை. உங்கள் மகன், உங்கள் பேரன், உங்கள் கொள்ளுப் பேரன், அவனுடைய மகன், பேரன், கொள்ளுப்பேரன் காலம் வரைக்கும் இவை சொற்களால் கட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். உடனே உடனே தீர்ந்துவிட்டால் அது எப்படி ஒரு பிரச்னையாகும்? உலகுள்ள வரையிலும் நீடித்திருந்தால்தான் ஒரு சுவாரசியம்.
வாழ்க்கை மெகா சீரியல் போன்றதோ இல்லையோ. அரசியல் அப்படியானதுதான்.
அப்புறம் மது விலக்கு. சும்மா பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்தபோது ஒரு 23 வயசுப் பையன் சொன்னான்: ‘மது விலக்கு வந்துவிட்டுப் போகட்டும். ஆனால் பீரெல்லாம் மதுவாகாது.’
திறந்து வைத்த கடைகள் கெடுத்து வைத்த சமூகம் இது. அரசியல்வாதிகள் திடீர் யோக்கிய சிகாமணிகளாகிவிடுவதன் இருப்பியல் சிக்கல்கள் அநேகம். ஒரு விஷயம் யோசித்துப் பாருங்கள். திமுகவோ, அதிமுகவோ ஆட்சிக்கு வந்ததும் போடுகிற முதல் கையெழுத்து மது விலக்குதான் என்று சொன்னார்களா? அப்படிச் சொன்னால் ஒட்டுமொத்தக் குடிமகன்களின் ஓட்டுகளும் இல்லாது போய்விடுமோ என்கிற அச்சம் எல்லோருக்கும் கட்டாயம் இருக்கவே செய்யும். ஏனெனில் இந்த வாக்காளர்களின் சதவீதமானது மேற்சொன்ன புதிய வாக்காளர்களின் சதவீதத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம்.
நமது கட்சிகள் இன்னும் புதிய, இளம் வாக்காளர்களை நோக்கிச் சிந்திக்க ஆரம்பிக்கவில்லை. லேப்டாப், டேப்லட், 3ஜி என்று ஒன்றிரண்டைத் தூக்கிப் போட்டால் போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இளைய தலைமுறை ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கிற விஷயங்களே வேறு. சற்று விரிவாகவே பார்க்கலாம் – அடுத்த கட்டுரையில்.