பொன்னான வாக்கு – 41

இலவச ஃப்ரிட்ஜ், இலவச வாஷிங் மெஷின், இலவச ஏர் கண்டிஷனர், இலவச வாட்டர் ப்யூரிஃபையர், இலவச குட்டி கார், இலவச மாதாந்தர மளிகை சாமான், இலவச தினசரி காய்கறி, அனைத்து மருந்துக் கடைகளிலும் இலவச மருந்து மாத்திரைகள், எந்த ஓட்டலுக்குப் போனாலும் உணவு இலவசம், எல்லா பேருந்து, ரயில் பயணங்களும் இலவசம், அனைத்து டாஸ்மாக்குகளிலும் அவை மூடப்படும் வரை சரக்கு இலவசம், மின்சாரம் இலவசம், குடிநீர் இலவசம், சமையல் எரிவாயு இலவசம் என்று என்னென்னத்தையோ எதிர்பார்க்கவைத்துவிட்டு இறுதியில் மொபைல் போன் இலவசத்தோடு நிறுத்திக்கொண்டது அதிமுகவின் தேர்தல் அறிக்கை. இதனைத் தாண்டியும் பல சலுகை அறிவிப்புகள் இருந்தாலும் ‘அம்மாவின் பிச்சை’ என்று அடிப்பொடிகள் வருணிப்பதற்கு அதிகமில்லை பாருங்கள். அந்த வரைக்கும் சந்தோஷம்.

கடந்த சில தினங்களாக இந்தத் தேர்தல் அறிக்கைகளை முன்வைத்து, இங்குமங்குமாகச் சில புதிய மற்றும் இளம் வாக்காளர்களோடு பேசி வருகிறேன். சர்வே எல்லாம் இல்லை. சும்மா கொஞ்சம் விஷய ஞானத்துக்காக. பெரும்பாலும் நகர்ப்புற வாக்காளர்கள். ஒருசில கிராமப்புற இளைஞர்களுடனும் பேசினேன். அடிப்படையில் இவர்களது சிந்தனை ஓட்டத்தில் நகர – கிராம வித்தியாசங்கள் அதிகம் தெரியவில்லை. வெளிப்பாட்டு முறையில் இக்கால அரசியல் சார்ந்த மெல்லிய ஏளனம் கலந்த விரக்தி இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இவர்கள் யாரும் தப்பித்தவறிக்கூட அரசியலுக்கு வர விரும்பவில்லை என்பது முக்கியமாகப் பட்டது.

அரசாங்கத்திடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதே நான் முன் வைத்த வினா. தேர்தல் அறிக்கைகள் திருப்தி தருகிறதா என்பது உபவினா. இரண்டாவது கேள்வியை அநேகமாக அத்தனை பேருமே சாய்ஸில் விட்டுவிட்டார்கள். உத்தமோத்தமர்கள் யாரும் எதையும் படிக்கவில்லை போலிருக்கிறது. ஆனால் முதல் கேள்விக்கு பதில் கிடைத்தது. கிடைத்ததைச் சுருக்கி பன்னிரண்டு பாயிண்டுகளாக்கியிருக்கிறேன்.

1. இன்றைக்குப் பெரும் தொழில் என்றால் ஐ.டிதான். ஆனால் அத்தனை கம்பெனிகளும் தலைநகரத்திலேயே அமைந்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல், தண்ணீர் பற்றாக்குறை. நகர்ப்புற விரிவாக்கம் என்பது விளைநிலங்களை ப்ளாட் போட்டு விற்பதல்ல என்பதை அரசு உணரவேண்டும். குடிநீர் பிரச்னைக்கு உருப்படியான வழி தேடவேண்டும்.

2. ஆளும் வர்க்கம் எதுவாக இருந்தாலும் அதைப் பொதுமக்கள் சந்திக்கவோ, பிரச்னைகளைப் பேசவோ முடிவதில்லை. வம்படியாக முயற்சி செய்து சந்தித்துப் பேசினாலும் பயன் இருப்பதில்லை. ஆட்சியாளர்களுக்கும் பொது மக்களுக்குமான இடைவெளி அயனாவரத்துக்கும் அண்டார்டிகாவுக்குமான இடைவெளியைவிடப் பெரிதாக உள்ளது. இது மாறவேண்டும்.

3. எம்.எல்.ஏக்கள் கட்சித் தலைவர்களுக்காகத்தான் உழைக்கிறார்கள். மாதம் ஒருமுறையாவது மக்களுக்காக உழைக்கலாம்.

4. உடனடித் தீர்வுகள், குறுகிய காலத் தீர்வுகள், கொஞ்ச நாள் எடுத்துச் செய்யவேண்டிய பணிகள், நீண்டநாள் திட்டங்கள் என்று பிரித்து வேலை செய்யத் தெரிந்த அரசு வேண்டும். சும்மா அறிக்கை பஜனையெல்லாம் உதவாது.

5. இலவசங்களும் ஓட்டுக்குப் பணமும் மக்களைச் சிறுமைப்படுத்தும் செயல். இல்லாதவர்களின் பலவீனங்களைக் குறிவைத்துத் தாக்குவது ஒருவித சாடிசம். அவர்களை இல்லாதவர்களாகவே ‘வைத்திருப்பதற்கான’ முயற்சி.

6. ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். ஆட்சியாளர்கள் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பேட்டியளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். பொதுமக்கள் போன் செய்து கேள்வி கேட்கும் வசதி உள்ள லைவ் நிகழ்ச்சியில் மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது முதல்வர் கலந்துகொள்ள வேண்டும்.

7. அமைச்சர்கள், முதல்வருக்காக டிராஃபிக்கை நிறுத்தும் அவலம் ஒழிக்கப்படவேண்டும்.

8. மழை நீர் சேகரிப்பு என்பது பேச்சளவில்தான் இருக்கிறது என்பதைக் கடந்த மழைக்காலம் புரியவைத்துவிட்டது. மாநிலத்தை ஒரு குப்பைத்தொட்டியாகவும் சாக்கடையாகவும் வைத்திருப்பது மாறவேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

9. முதல்வராலும் அமைச்சர்களாலும் ரெகுலராக மக்களைச் சந்திக்க முடியாது என்னும் பட்சத்தில் மக்கள் சந்திப்புத் துறை என்றொரு அமைச்சகம் உருவாக்கப்பட்டு, மக்கள் பிரச்னைகளைக் கேட்டு வாங்கி உரிய துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கவே ஒரு அமைச்சரை நியமிக்கலாம்.

10. குறைந்தது ப்ளஸ் டூ படித்தவர்களை மட்டுமே அமைச்சர்களாக்க வேண்டும். கைநாட்டுகளுக்கு ஐஏஎஸ் ஆபீசர்கள் கைகட்டி பதில் சொல்வது கேவலமாக இருக்கிறது. உடனே காமராஜரை உதாரணம் சொல்லாதீர்கள். இன்று யாரும் இங்கே காமராஜர் இல்லை.

11. விவசாய ஊக்குவிப்பு என்பது கடன் ரத்துகள் மட்டுமல்ல. விளைநிலங்களில் வீடுகள் கட்டப்படுவதைத் தடுக்க சட்டம் வேண்டும். படித்த இளைஞர்கள் விவசாயம் செய்யத் தயார். ஆனால் கிராமப்புற மேம்பாடு என்பது வெறும் பேச்சாக மட்டுமே உள்ளது. அரசுத்தரப்பு ஒத்துழைப்பு என்பது எங்குமே இல்லை.

12. காலில் விழுவது, துதி பாடுவது, கூழைக்கும்பிடு போடுவது, ஜாதி-மத உணர்வுகளைச் சீண்டிப் பேசுவது, எல்லாம் அருவருப்பாக இருக்கிறது. ஆட்சியாளர்கள் ப்ரொஃபஷனல்களாக இருக்க வேண்டும்.

இளைஞர்கள் இப்படியெல்லாம் ஆசைப்படுகிறார்கள் என்பது நமது வேட்பாளர்களுக்குத் தெரியுமா? தலைவர்களுக்குத் தெரியுமா? தேர்தல் பக்கத்தில் வராவிட்டால் ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் செய்திருப்பாரா என்றும், மழை வெள்ளம் ஊரையே கொள்ளை கொண்டு போனபோதும் ஜெயலலிதா வீட்டைவிட்டு நகரவில்லை என்பதையும் கிட்டத்தட்ட அத்தனை பேருமே சொன்னார்கள். அப்துல் கலாம் மறைவுக்கு ஜெயலலிதா அஞ்சலி செலுத்தப் போகவில்லை; அதனாலேயே நான் அந்தம்மாவுக்கு ஓட்டுப் போடமாட்டேன் என்று ஓர் இளைஞர் சொன்னார்.

அப்துல் கலாமால் எப்படி ஓர் ஆதர்சமாக முடிந்தது, நம்மால் ஏன் அது முடியவில்லை என்று அத்தனை பேருமே யோசிக்கத் தொடங்கவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த 2021 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தினமலர் கருத்துக் கணிப்பு நடத்துமானால் மாண்புமிகு நோட்டா அத்தனை கட்சிக்காரர்களையும்விட சதவீதம் மற்றும் சதவீதப் புள்ளி அடிப்படையில் மேலே வந்துவிடுவார்!

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி