பொன்னான வாக்கு – 42

பெரிய பெரிய சினிமா டைரக்டர்கள், பெரிய பெரிய ஹீரோக்களோடு சேர்ந்து, பெரிய பெரிய படம் எதற்காவது பூஜை போட்டால் அநேகமாக அந்தச் செய்தியோடு இன்னொரு செய்தி சேர்ந்து வெளியாகும். இப்பேர்ப்பட்ட பெரிய நடிகருக்கு வில்லனாக நடிக்க அப்பேர்ப்பட்ட பெரிய வஸ்தாது யாராவது வேணாமா? எனவே இந்தப் படத்துக்காக இஸ்தான்புல்லில் இருந்து இன்னாரைக் கூட்டி வந்திருக்கிறோம்.

ஆர்னால்டு நடிக்கிறார். அயாதுல்லா கொமேனியே நடிக்கிறார். விளாடிமிர் புதின் கால்ஷீட் கிடைக்காததால் பாரக் ஒபாமாவோ பங்காரு அடிகளாரோ கௌரவ வேடத்தில் தலைகாட்டுகிறார்கள்.

என்னத்தையாவது ஒன்றைத் தூக்கிப் போடு. செய்தி முக்கியம். செய்தியில் இருப்பது முக்கியம். செய்தி சில காலமாவது பேசப்படுவது அனைத்திலும் முக்கியம்.

ஷங்கரின் எந்திரன் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய் குமார் நடிக்கிறார் என்றார்கள். இந்த அக்‌ஷய் குமார் என்ன அத்தனை பெரிய வஸ்தாதா? எனக்குத் தெரியாது. நான் ஹிந்திப் படங்கள் பார்ப்பதில்லை. ரொம்பப் பெரிய ஆள்தானோ என்னமோ. நமக்கெல்லாம் வில்லன் என்றால் பிரகாஷ் ராஜ். நடிப்புக்கு வாய்ப்புள்ள வில்லன் கதாபாத்திரமென்றால் அவர்தான் சரி. சும்மா உதை சாப்பிட்டுப் போவதற்கு எந்த மொட்டையன் வந்தாலும் பிரச்னையில்லை.

அந்தக் காலத்தில் எம்ஜிஆர் படங்களென்றால் டீஃபால்ட்டாக நம்பியார் வில்லனாக இருப்பார். மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக இருநூறு வருடங்களுக்கு ஜெஃப் துஜான் இருந்த மாதிரி எம்ஜிஆர் படமென்றால் நம்பியார் ஊறுகாய். தெரிந்த வில்லன். கவர்ச்சிகரமான வில்லன். எப்படியும் இறுதியில் தோற்கத்தான் போகிறார். சமயத்தில் மனம் மாறி மன்னிப்புக் கேட்டாலும் வியப்பில்லை. மக்களை மகிழ்விப்பது அல்லவா நோக்கம்?

ஒரு சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். மேலே சொன்ன மாதிரி வடக்கத்திப் பிரபலங்களையோ அல்லது வேறு எங்கிருந்தாவதோ வாடகைக்கு வில்லன்களைக் கூட்டி வருவார்கள். பில்டப்புகள் பயங்கரமாக இருக்கும். அன்னாரது சீனியாரிடி, வீரதீர பராக்கிரமங்களை மனத்தில் வைத்து, சண்டைக் காட்சிகளில் முதல் நாலைந்து அடிகளைப் போடும் உரிமையை அவர்களுக்குத் தருவார்கள். ஹீரோவைத் தூக்கிக் கடாசும் வில்லன். சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டுக்கொண்டு, ஆளும் தோளும் வேல்முருகா என்று பூமி தடதடக்க ஓடி வரும் வில்லன். நாயகனைத் தூக்கிப் போட்டு நாலைந்து மிதி.

பிறகு ஹீரோவானவர் சுதாரித்து எழுந்து அவரை துவம்சம் செய்வது இருக்கவே இருக்கும். ஆனால் அந்த முதல் நாலைந்து அடிகள் ஹீரோவுக்கு விழும்போது மேற்படி வில்லனாகப்பட்டவருக்கு தியேட்டரில் விழுகிற அர்ச்சனைகள் இருக்கிறதே, காது கொண்டு கேட்க முடியாது. அதுவும் ரஜினி, கமல் படமென்றால் தீர்ந்தது கதை.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நாயகன் படம் ரிலீசாகியிருந்த சமயம். பரோபகாரி வேலுவை அந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் அடித்துத் துவைத்து உதட்டையெல்லாம் கிழித்து ஜீப்பில் ஏற்றிக் கொண்டு வந்து தாராவி மண்ணில் செத்த எலியைப் போல் விசிறிக் கடாசிவிட்டுப் போகிற காட்சி. தியேட்டரில் எனக்கு நாலைந்து சீட்டுகள் தள்ளி அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணி முந்தானையை இழுத்துச் சொருகியபடி எழுந்து நின்றார். நம்ப மாட்டீர்கள். நான் ஸ்டாப்பாக ஏழெட்டு நிமிடங்களுக்கு அந்தத் தமிழ் தெரியாத நடிகரின் வம்சத்தையே இழுத்து வைத்து திட்டித் தீர்த்தார். எப்பேர்ப்பட்ட சொல்லாட்சி! எத்தனை உக்கிரம், எவ்வளவு வீரியம் மிகுந்த கோபம் அது!

அமித் ஷாவுக்கும் ராகுல் காந்திக்கும் நரேந்திர மோதிக்கும் மேடையில் மொழிபெயர்க்கிறவர்கள் மாதிரி யாராவது இந்த ரக அர்ச்சனைகளை சம்மந்தப்பட்ட பாவ்பாஜி வில்லன்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்னால் அடுத்த முறை அவர் கலைச்சேவை செய்ய இங்கே வருவாரா என்று எண்ணிப் பார்க்கிறேன்.

வில்லன்கள் விவகாரமாவது பரவாயில்லை. இந்தத் தலைவர்களுக்கு வாய்க்கும் மொழிபெயர்ப்பாளர்களே பெரும் வில்லன்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. அவர்கள் பேசுகிற ஹிந்தி என்ன, இவர்கள் புரிந்துகொள்கிற ஹிந்தி என்ன, மொழி மாற்றம் செய்யப்படுவதென்ன – ம்ஹும். ஒன்றும் சொல்லுவதற்கில்லை. விழுகிற ஏழெட்டு ஓட்டுகளையும் வழித்துச் சுருட்டி வாராவதியில் எறிந்துவிடுவார்கள் போலிருக்கிறது.

முன்னொரு காலத்தில் ராஜிவ் காந்தி இங்கே வந்து பேசினால் ப. சிதம்பரம் மொழிபெயர்ப்பார். ராஜிவ் காந்தி இத்தனை சங்கீதமாகவா பேசுவார் என்று வியக்கிற அளவுக்கு சிதம்பரத்தின் தமிழ் பரம சுத்தமாக இருக்கும். ஆனால் இன்றைக்குக் கேட்கக் கிடைக்கிற மொழிபெயர்ப்புகள், டப்பிங் சீரியல் மொழிபெயர்ப்புகளையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு திராபையாக இருக்கின்றன.

நரேந்திர மோதி ஒய்யெம்சியே மைதானத்துக்கு வந்து இத்தாலிக்காரர்கள் ஊழலைப் பற்றி இந்தியில் பேசுவதே ஒரு சம்மந்தமில்லாதது என்றால் அதை நீட்டி முழக்கி ஒருவரியை நாலு வரியாக்கித் தமிழில் தருகிறார்கள். மோதி பேசாமல் இங்கிலீஷிலேயே பேசிவிட்டுப் போயிருக்கலாம். கன்யாகுமரியில் பேசிய அமித் ஷாவின் கூட்டத்துக்கு நிறைய நாற்காலிகள்தாம் வந்திருந்தன என்றார்கள். விடியோ பார்த்தபோது அது உண்மை என்றும் தெரிந்தது. நாற்பது வினாடிகளுக்குமேல் என்னாலேயே பொருந்திப் பார்க்க முடியவில்லை. பிரசாரமென்றால் ஒரு சூடு வேண்டாமா? அனல் பறக்க வேண்டாமா? என்னதான் 110 விதியின்கீழ் மட்டும் ஆலாபனை பண்ணுவதென்று இந்தமுறை ஜெயலலிதா விரதம் மேற்கொண்டிருந்தாலும் அந்த ஆமைவடை அத்தனை பேருக்கும் வேகுமா?

மோதி வருகிறார், ராகுல் வருகிறார், அமித் ஷா வருகிறார், சோனியா வருகிறார் என்பதெல்லாம் தமிழ்ப் படங்களில் நடிக்க வருகிற வடக்கத்தி நடிகர்களின் வருகை குறித்த செய்தி போன்றதாகவே உள்ளது. பேஸ்மெண்ட் மிகவும் பலவீனமாக உள்ளதையே நாளது தேதி வரை நடைபெற்ற இன்னார்களின் கூட்டங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஹிந்தி பேசி ஜெயிக்க முடியாது என்னும் குறைந்தபட்சத் தகவலறிவுகூட இத்தலைவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது இங்குள்ள முக்கியஸ்தர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.

இந்த ரீதியில் போனால் அன்புமணி முதல்வரான பிறகுகூட தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்காது என்றே தோன்றுகிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter