பொன்னான வாக்கு – 43

இந்தத் தேர்தலும் அதன் முடிவுகளும் நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ அதிமுகவையும் திமுகவையும்தான் பாதிக்கப் போகிறது. வழக்கம்போல் போட்டி என்பது இந்த இரு கட்சிகளுக்கு இடையில் மட்டும்தான். மற்ற அத்தனை கட்சிகளும் பந்து எடுத்துப் போடும் பையன்களைப் போல கேலரிக்குப் பக்கத்தில் நின்றிருப்பவர்கள்தாம். ஒரு சிலர் ஒரு சில தொகுதிகளில் வெல்லலாம். அல்லது வெற்றியாளர்களின் வாக்கு சதவீதத்தைக் குறைக்கலாம். திசை மாற்றி அனுப்பி வைக்கலாம். அந்தளவோடு சரி. யாருக்கும் – யாராலும் பெரிய ஆபத்துகள் கிடையாது.

ஆனால் இந்தத் தேர்தல் பிரசார காலம் நமக்கு நெருக்கத்தில் வேறொரு புதிய இம்சையரசர் கூட்டம் உருவாகிக்கொண்டிருப்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது. இந்த ஜனநாயகத்தின் பேஜாரே இதுதான். யார் வேண்டுமானாலும் வரலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

கடந்த சில தினங்களாக இடைவெளி விட்டு விட்டு சீமானின் பிரசார வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் வேலைக்கிடையில் குறு ஓய்வுக்காக இம்மாதிரி கவுண்டமணி செந்தில் படக்காட்சிகளைப் பார்ப்பேன். ஓய்வுக்காகவும் பொழுது போக்குக்காகவும் பார்க்கிற காட்சிகளில் தத்துவார்த்தம் தேடக்கூடாது என்பது தெரியாததல்ல. ஆனால் முன்னாள் சினிமாக்காரரென்றாலும் சீமான் பேசுவது அரசியல். சினிமாவைப் போல் சிரித்துவிட்டு நகர்ந்துவிட முடியாத பிராந்தியம். தவிரவும் தேர்தல் காலம். அவர் சாடுகிற ஜெயலலிதா, அவர் சாடுகிற கலைஞர், அவர் சாடுகிற விஜயகாந்த் உள்ளிட்ட யாருமே திருப்பி அவரைச் சாடுவதில்லை என்பதை விழிப்புடன் கவனிக்கிறேன்.

கண்டுகொள்ளாதிருப்பதைக் காட்டிலும் சிறந்த தண்டனையில்லை என்று அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. நல்லது. ஆனால் நாம் கண்டுகொள்வோம். ஏனெனில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை கொஞ்சம் கருத்தூன்றிப் படிக்க வைத்தது. அபத்தங்கள் இல்லாமல் இல்லை. அபாயங்கள் இல்லாமல் இல்லை. ஆரம்பத்திலேயே, ‘அன்பான சர்வாதிகார ஆட்சி அமைக்க விருப்பம்’ என்று அதில் சொல்லியிருந்தார் சீமான்.

இதெல்லாம் பிரபாகரமேனியா படுத்துகிற பாடு. தெரியாமலில்லை. ஈழத் தமிழர்களே கெட்ட கனவுகளை மறந்துவிட்டு நிம்மதியாக வாழ வழிதேடி நகர்ந்துவிட்ட நிலையில், இங்கே இன்னும் விடாப்பிடியாக மேதகு, மேதகு என்று பிரபாகரனை உரலில் இட்டு ஆட்டி, உளுந்துவடை சுடப் பார்க்கிறார் சீமான். மீசையை எடுத்துவிட்டு காட்டுக்குள் பிரபாகரனைப் பார்க்கப் போன சம்பவத்தை, வசமாகச் சிக்கிய ஒரு அப்புராணிப் பத்திரிகையாளரிடம் சீமான் விவரிக்கும் காட்சி திரும்பத் திரும்ப இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. எத்தனை மீம்கள், எத்தனை நையாண்டி மேளங்கள்!

முன்னாள் பெரியாரிஸ்ட், முன்னாள் விஜயகாந்த் கட்சிப் பிரசாரகர், முன்னாள் பிரபாகர விசுவாசியாகவும் தன்னை அறிவித்துக்கொள்ளப் போவது எப்போது என்று கூசாமல் கேட்கிறார்கள். ஏனெனில், நிலைபாடுகளை மாற்றிக்கொள்வதற்கு சீமான் தயங்குவதே இல்லை. சாதி மதமெல்லாம் என்னத்துக்கு? தமிழினம் என்ற அடையாளம் போதும் என்றவர்தான், இன்று பிரசித்தி பெற்ற சாதிக் கட்சித் தலைவர்களைக் காட்டிலும் சாதி வெறிப் பேச்சுகளில் சிக்சர் அடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பக்கம் ராமேஸ்வரம் கோயிலை இடித்துவிட்டு ராவணனுக்குக் கோயில் கட்டுவேன் என்று சொல்லிவிட்டு அந்தப் பக்கம் முப்பாட்டன் முருகனுக்காக முறுக்கு பிழிகிறார். கலைஞருக்கு இந்து மதம் மட்டும்தான் ஒவ்வாது; நமக்கு எந்த மதமும் தேவையில்லை என்றவர், மறக்காமல் போனில் கிறிஸ்தவப் பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் கேட்டுவிடுகிறார். வாட்சப் ஆடியோக்களின் வடிவில் வையம் சுமக்கிறது வம்பு. ஆட்சிக்கு வந்தால் தலைநகரை ‘சோழப்பாட்டன் ஆண்ட’ உறையூருக்கு மாற்றுவேன்; அங்குதான் தலைமைச் செயலகம் அமையும் என்றெல்லாம் கலவரப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்கிறார்களா என்றால் அதான் இல்லை. அன்னிய முதலீடுகளைத் தடை செய்து, ஆடுமாடு மேய்ப்பதை அரசு உத்தியோகமாக்குவோம் என்று கூசாமல் பேசுவோரை என்ன செய்ய?

சந்தேகமின்றி சீமான் ஒரு நகைச்சுவைக் கலைஞர். அவரது கட்சி ஆசாமிகளும் அவரை அடியொற்றியேதான் பேசுகிறார்கள். ஆனால் என் கவலையெல்லாம் அவர் பின்னால் ஓடுகிற இளைஞர்களைப் பற்றியது. முன்னொரு காலத்தில் திராவிட இயக்கத் தலைவர்களின் தமிழில் கட்டுண்டு பின்னால் போன கூட்டம் அளவுக்கு இல்லையென்றாலும் இந்தத் தமிழுக்கும் ஒரு கூட்டம் சேரத்தான் செய்கிறது. சும்மா சொல்லக் கூடாது. சீமான் பிரமாதமாகவே பேசுகிறார். தங்கு தடையற்ற வளமான மொழி அவரிடம் இருக்கிறது. மேடைக்குத் தேவையான ஆக்ரோஷம் அமர்க்களமாகக் கூடி வருகிறது. ஆனால் மொழியின் பூப்பந்தலுக்குள் அவர் மூட்டை மூட்டையாகக் குப்பைக் கழிவுகளைச் சேகரித்து வைப்பதுதான் இம்சிக்கிறது.

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் இடம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும் ஒரு புதிய அரசியல் சக்தியாக அவரைக் கருத விரும்புகிற, அதிகம் படிக்காத, சூதுவாது தெரியாத அப்பாவி இளைஞர்களுக்கு ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன். சீமான் திறந்திருப்பது ஒரு டி ஷர்ட் கடை. அங்கு பெரியார் படம் போட்ட டி ஷர்ட்டும் கிடைக்கும். விஜயகாந்த் படம் போட்ட டி ஷர்ட்டும் கிடைக்கும். பிரபாகரன் டி ஷர்ட்டும் கிடைக்கும். நாளைக்கு டிரெண்ட் மாறுமானால் திருப்பதி வெங்கடாசலபதி படம் போட்டதும் கிடைக்கும்.

ஆளுமைகளை டி ஷர்ட்டிலும் அபத்தங்களை நெஞ்சுக்குள்ளும் சுமந்து திரிவதில் என்ன இருக்கிறது? சொன்னேனே, கௌண்டமணி செந்திலின் இடம்தான். சும்மா சிரித்துவிட்டுக் கடந்து போவதே தேச நலனுக்கு உகந்தது.

Share