அரசியல்

பொன்னான வாக்கு – 38

1987ம் வருஷம் நான் படித்துக்கொண்டிருந்த கல்லூரியில் மாணவர் மன்றத்துக்குத் தேர்தல் நடத்தினார்கள். கனத்த கலாட்டா. சரவெடி அட்டூழியங்கள். பாட்டில் வீச்சுகள். பிட் நோட்டீஸ் மழை. அடிதடி. கட்சிக்காரர்களின் மறைமுக ஊக்குவிப்புகள். பிரின்சிபாலின் எச்சரிக்கை முழக்கங்கள்.

அந்தத் தேர்தலில் ராமமூர்த்தி என்றொரு பையன் செயலாளர் பதவிக்கோ, துணைத்தலைவர் பதவிக்கோ நின்றான். அவன் ஓர் உத்தம புத்திரன். பொதுவில் வகுப்புகளுக்கு வருவதை அவ்வளவாக விரும்பாதவன். மரத்தடிகளில் அவன் தனக்கான வகுப்புகளைத் தானே நடத்திக்கொள்வதுதான் எப்போதும் நடப்பது. என்னத்தையாவது இழுத்துவிட்டு எப்போதும் மப்பாகவே திரிந்துகொண்டிருப்பான். தவிரவும் சில்லறை கலாட்டாக்கள், அடிதடிகள், கசமுசா விவகாரங்கள் எனப்பலவாறு அவன் தனது ஆளுமையைக் கட்டி எழுப்பிக்கொண்டிருந்த காலம். எதிர்காலத்தில் ஒரு சிறந்த அரசியல்வாதியாக அவன் வரக்கூடும் என்று அன்று பலர் கணித்தார்கள்.

நிற்க. அந்தத் தேர்தலில் ராமமூர்த்தி கண்டிப்பாக ஜெயித்துவிடக்கூடாது என்பதில் பேராசிரியர்கள் உறுதியாக இருந்தார்கள். ‘வெறும் பொறுக்கி’ என்று ஒரு பேராசிரியர் சொன்னார். ‘இவனெல்லாம் எலக்‌ஷன்ல ஜெயிச்சா காலேஜ் சத்தியமா உருப்படாது’ என்று இன்னொருவர் எண்டார்ஸ் செய்தார். தேர்தல் பிரியர்களான மாணவர்கள் கேன்வாஸ் செய்தது ஒருபுறமிருக்க, ராமமூர்த்திக்கு எதிரான பேராசிரியர்களின் ரகசியப் பிரசாரங்கள் படு பயங்கரமாக இருந்தன.

ஒருநாள் பாத்ரூமில் என் பக்கத்தில் வந்து நின்று சிறுநீர் கழிக்கத் தொடங்கிய ஒரு பேராசிரியர், சுவரைப் பார்த்தபடியே கேட்டார். ‘அவன் ஒனக்கு ஃப்ரெண்ட் இல்ல?’

‘எவன் சார்?’

‘அதான் அந்த ராமமூர்த்தி.’

‘எனக்கு எல்லாருமே ஃப்ரெண்டுதான் சார்.’

‘ஆனா அவன் சரியில்ல. ப்ரின்சிபால் அவன காலேஜவிட்டே தூக்கற மூட்ல இருக்காரு.’

‘ஓ.’

‘அவனுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு உன் தரத்த நீயே கெடுத்துக்காத.’

என் தரமா! என்ன பெரிய ஐ.எஸ்.ஐ. தரம் வாழ்கிறது? எனக்கு அப்போது சில பேப்பர்களில் அரியர்ஸ் இருந்தது. ராமமூர்த்திக்குச் சற்று நிறையவே உண்டென்றாலும் அவனளவில் அதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. அவனுக்கு அப்போதே சில லோக்கல் அரசியல்வாதிகளைத் தெரியும். அந்தத் தேர்தலில் அவன் நிற்பதற்கே அவர்கள்தாம் செலவு செய்துகொண்டிருந்தார்கள். நமக்கு அந்த சாமர்த்தியமெல்லாமும் கிடையாது. இருப்பினும் பேராசிரியர் அந்தச் சிறு – நீர் இடைவெளியில் அவனுக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது என்று ஏழெட்டு வரிகளில் விளக்கிச் சொல்லிவிட்டுத்தான் போனார்.

சோதனைச் சாலை வகுப்புகளில், பணிமனைப் பயிற்சி நேரங்களில், வேலையே இல்லாமல் ஸ்டாஃப் ரூமில் பல் குத்திக்கொண்டிருக்கும் சமயங்களில், போகிற வருகிற வழிகளில் – எந்தச் சந்தர்ப்பத்தையும் அந்தப் பேராசிரியர்கள் இழக்க விரும்பவில்லை. அத்தனை பேராசிரியர்களும் அத்தனை மாணவர்களிடமும் தவறாமல் சொன்னார்கள். ராமமூர்த்தி ஜெயித்துவிடக் கூடாது.

ஆனால் அந்தத் தேர்தலில் ராமமூர்த்தி ஜெயித்தான். எதிர்த்து நின்ற மாணவனுக்கு பத்திருபது ஓட்டுகள்தாம் விழுந்திருக்கும். ராமமூர்த்தி சரித்திரம் காணாத பெருவெற்றி கண்டான். நாசமா போங்க என்று பிரின்சிபாலே சொல்லிவிட்டுப் போனார். சரி சார் என்று சொல்லிவிட்டு மாணவர்கள் வகுப்புக்குப் போனார்கள்.

இப்போது எண்ணிப் பார்க்கிறேன். ராமமூர்த்தி ஜெயித்ததற்கு என்ன காரணம் இருக்கும்? மாணவர்களுக்குப் பிடித்தவனாக அவன் இருந்ததில்லை. பேராசிரியர்களுக்குப் பிடிக்காது. பிரின்சிபாலுக்கும் பிடிக்காது. நடவடிக்கைகளில் சுத்தம் கிடையாது. ஒழுக்கம் அறவே கிடையாது. படிப்பு பரம பூஜ்ஜியம். வெறும் பொறுக்கி. அச்சமா, அருவருப்பா என்று சொல்ல முடியாத என்னமோ ஒரு உணர்ச்சி அவன்மீது அனைவருக்குமே இருந்தது. இருப்பினும் அவனை நேரில் பார்க்கும்போது எல்லோருமே புன்னகை செய்வார்கள். நரி இடமாகவோ வலமாகவோ போனால் போதும். நடுவில் நடந்து வரும் நாம் தப்பிப்பதே முக்கியம். தவிரவும் தேர்தலில் நிற்பதற்கும் வெல்வதற்கும் அவசியமான கல்யாண குணங்கள் இவைதான் போலிருக்கிறது.

இதுதான் துயரம். இதுவே இன்று வரையிலும் இங்கு யதார்த்தமாகவும் இருக்கிறது. கல்லூரித் தேர்தலெல்லாம் ஒன்றுமேயில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும்போதும் மக்களின் இந்த மனோபாவம் ஊர்ப்பொதுவாக உள்ளதைக் காண முடிகிறது. கட்சி என்கிறோம். கொள்கை என்கிறோம். முழக்கங்களில் மயங்குகிறோம். வேட்பாளரின் தரம் பார்த்து வாக்களிக்கும் வழக்கம் நம்மிடையே இல்லாதது ஒரு குறையே. அவசியமான நேரத்தில் சிந்திக்க மறுத்து விடுவதன் மோசமான விளைவு.

நான் வாக்காளனாக இருந்தால், நன்னடத்தை பொருந்திய வேட்பாளரை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் என்று மகாத்மா காந்தி எழுதினார் (யங் இந்தியா, ஜூன் 9 , 1920). கட்சி, சாதி, பின்னணி, முன்னணி எதுவும் முக்கியமில்லை. மாற்று சிந்தனையே கிடையாது. குழப்பங்களும் இல்லை. ஒரே தகுதி, நன்னடத்தை. முடிந்தது கதை.

கருத்துக் கணிப்புகள், கட்சி சார்ந்த மனச்சாய்வுகள், இலவச மயக்கங்கள் அனைத்தையும் தூரத் தள்ளி வைத்துவிட்டு உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களைச் சீர்தூக்கிப் பாருங்கள். குற்றப் பின்னணி இருந்தால் முதல் பந்திலேயே போல்ட் என்று சொல்லுங்கள். தகுதிக்கு மீறி சொத்து இருக்கிறதா? நிர்த்தாட்சண்யமாக நிராகரியுங்கள். ஜாதி, மதம் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆள் யோக்கியனா? அதை மட்டும் பார்ப்பதே நமக்கு நல்லது. கருணாநிதியோ ஜெயலலிதாவோ ஜெயித்தால் உங்கள் தெருவோர சாக்கடைப் பிரச்னையை வந்து தீர்த்து வைக்கப் போவதில்லை. உங்கள் தொகுதி வேட்பாளர் ஓடி வந்து உதவுவாரா என்று மட்டும் பாருங்கள்.

தேர்தலுக்கு எண்ணி பன்னிரண்டு நாள்தான் இருக்கிறது. பொறுப்பு உணர்ந்து நடந்துகொள்ள வேண்டிய நேரம் இதுவே. இப்போது கோட்டைவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எள்ளுதான்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி