இன்றைக்குப் படு பயங்கர சீரியசான ஒரு சமாசாரத்தைப் பற்றி எழுதப் போகிறேன். யாராவது தப்பித்தவறி சிரித்து வைக்காதீர்கள். இது சிரிக்கிற சங்கதியல்ல. உன்னதமான ஆன்மிக மேட்டர்.
நீங்கள் தியானம் செய்திருக்கிறீர்களா? தவம்? இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. என்னவாவது ஒரு சமாசாரத்தை மனத்தில் நிலைநிறுத்தி, அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதற்குப் பேர்தான் தியானம். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். கடந்த இரண்டு நாள்களாக எனக்கு சகிக்க முடியாத வேலை நெருக்கடி. வீட்டுக்கே போக முடியவில்லை. வேகாத வெயிலில் பிசாசு மாதிரி அலைச்சல் ஒரு பக்கம். உட்கார்ந்து எழுதவேண்டிய கொடூரக் குடைச்சல் இன்னொரு பக்கம். உள்துறை அமைச்சருக்கு ஒரு போன் செய்து பேசக்கூட முடியாமல் புருஷ லட்சணம் காத்துக்கொண்டிருந்தேன். சரியான சாப்பாடு இல்லை. ஓட்டலில் கொறிப்பதெல்லாம் நெஞ்சைக் கரிக்கிறபடியால் வெளியே சாப்பிடுவதை நினைத்தாலே மரண பயம் வந்துவிடுகிறது. காயப்போடு காயத்தை.
எப்படியோ சமாளித்து ஒன்றரை நாள் தாக்குப் பிடித்துவிட்டேன். நேற்று மதியம் தொடங்கி வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. ஆ, மனைவி கையால் ஒரு நல்ல சாப்பாடு! எனக்குப் பிடித்த ஐட்டங்களின் அணிவகுப்பு. உடம்பை வருத்தாத ஒப்பற்ற உணவு. சாப்பிட்டுவிட்டு ஜில்லென்று ஏசியைப் போட்டுக்கொண்டு பிரமாதமாக ஒரு தூக்கம்!
இந்த நினைப்பு வந்தபிறகு வேலை கெட ஆரம்பித்தது. செய்த அனைத்தையும் சுத்தபத்தமாக சொதப்பத் தொடங்கினேன். மனமெங்கும் தர உணவு. கமகமவென நாசியில் நர்த்தனமாடும் வெங்காய சாம்பார் வாசனை. கண்ணில் நீர் சொட்ட, நாக்கு சப்புக்கொட்டி, இழுத்து இழுத்து உறிஞ்ச ஒரு பூண்டு ரசம். பொன்னிற வறுவலாக ஒரு உருளைக்கிழங்கு. சாஸ்திரத்துக்கு ஒரு கீரை. சகாயத்துக்குச் சில அப்பளங்கள். கட்டித் தயிர். ஆவக்காய் ஊறுகாய்.
எளிய விருப்பங்கள்தாம். ஆனாலும் மனத்தில் இது ஏறி உட்கார்ந்துவிட்ட பிறகு வேலை ஓடவில்லை. எப்படா வீட்டுக்குப் போவோம் என்பதைத் தாண்டி சிந்தனைச் சிற்பியால் வேறெதையும் செதுக்க முடியவில்லை. அப்படி அலைந்து திரிந்து வீடு போய்ச் சேர்ந்த பிற்பாடு உப்புக் குறைச்சலாக ஒரு துவையலும் சுமாருக்குப் பத்து பர்சண்ட் கம்மியாக ஒரு ரசமும் மட்டும் இருக்குமானால் அது மனைவியின் பிழையல்ல. தியானத்தின் பிழையே. இன்னும் உக்கிரமாக உணவை நினைத்திருக்கவேண்டும்.
தவம் வேறு. அது தியானத்துக்கு நேர் எதிர் கோஷ்டி. தியானம் அதிமுக என்றால் தவம் திமுக.
ஒன்றைக் குறித்து இடைவிடாமல் சிந்தித்துக்கொண்டிருப்பது தியானம் என்றால், எதைப் பற்றியும் லவலேசமும் அலட்டிக்கொள்ளாதிருப்பதே தவம். தவம் என்பது செயல் அல்ல. அது ஒரு நிலை. அமைதி நிலை. பேரமைதி நிலை. இருபத்தி நாலு மணி நேரமும் என்னத்தையாவது யோசித்துக்கொண்டே இருக்கும் நமது மூளையானது பொதுவாக 15 முதல் 40Hz பீட்டா அலைவரிசையில் இயங்கும் என்கிறது அறிவியல். இதைப் படிப்படியாகக் குறைத்து 9-14 ஆல்பா அலைவரிசைக்கு இறக்கி வந்து நிறுத்துவதற்குப் பேர்தான் தவம். அதாவது, தந்தூரி அடுப்பு மாதிரி எப்பவும் சுடச்சுட இயங்கிக் கொண்டிருக்கும் மூளையை மெல்ல மெல்லக் குளிர்வித்து அமைதிப் படுத்தி, ஃப்ரிட்ஜில் வைத்த பால் பாக்கெட் போலாக்குவது.
இதனை இன்னும் கீழே இறக்குவது பெரும்பாடு. இந்த பூமி இருக்கிறதே பூமி! அதற்கும் நமது இதயத் துடிப்பு மாதிரி ஒரு துடிப்பு உண்டு. 7-11Hz என்பது பூமியின் அதிர்வு எண். நமது மூளை மற்றும் இதய அதிர்வெண்ணை புவியின் அதிர்வெண்ணுக்குச் சமமாகக் கொண்டுவர முடிந்துவிட்டால் தீர்ந்தது விஷயம். அதற்கப்புறம் அமைதிதான். பேரமைதிதான். உள்ளூர ஜல்சாதான்.
அந்நாளைய சூப்பர் ஸ்டார் முனிவர்களெல்லாம் மலைப்பகுதிகளில் சஞ்சாரம் செய்து இதற்காகத்தான் மெனக்கெட்டார்கள். எதற்காக மலைக்குப் போய்த் தவம் என்றால் பிராந்திய அதிர்வு என்பது அங்கு ஒரே சீராக இருக்கும். டைவர்ஷன் கிடையாது. திடுக்கிடும் திருப்பங்களுக்கு வாய்ப்பில்லை. சூனிய தவம், குண்டலினி தவம், கிரியா யோகம், விபாசனா யோகம், ராஜ யோகம் என்று சகாயமாகப் புழக்கத்தில் உள்ள பலவித தவ உத்திகளில் எதையாவது ஒன்றைப் பயிற்சி செய்து பலம் பெறுவார்கள்.
இப்போது புரிகிறதா ஜெயலலிதா எதற்காகக் கொடநாட்டில் எஸ்டேட் வாங்கினார் என்று? மலை வாசஸ்தலம். பேரமைதிப் பிராந்தியம். அவ்வப்போது அங்கே போவதால்தான் அவரால் தவம் புரிய முடிகிறது. இது புரியாத ஸ்டாலின் என்னடாவென்றால், அந்தப் பிராந்தியத்து மக்களுக்கே ஜெயலலிதா ஒன்றையும் செய்யவில்லை என்று குற்றப்பாட்டு படிக்கிறார். ஜெயலலிதாவின் நோக்கம் தவம் அல்லவா? மக்களுக்கு சேவை செய்ய மண்வெட்டி எடுத்துக்கொண்டா அவர் அங்கே போகிறார்?
மக்களால் நான். மக்களுக்காக நான். மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது தான் என் தவ வாழ்வு என்கிற அவரது சமீபகால முத்தாய்ப்பு முழக்கத்தைக் கேட்கும்போதெல்லாம் சிலிர்த்துவிடுகிறது. எல்லா அரசியல்வாதிகளும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு இப்படி எங்காவது மலைப்பக்கம் போய் தவமிருக்க ஆரம்பித்துவிட்டால் நாடு எத்தனை சுபீட்சமாகும்?
கருணாநிதிக்கு இந்தத் தவத்தின் அருமை தெரியவில்லை. அதனால்தான் அவர் தண்டத்துக்கு யோகா செய்துகொண்டிருக்கிறார். முதல் நாள் கூட்டத்தில் எனக்கு ஓய்வு கொடுங்கள் என்று பேசிவிட்டு மறுநாள் 103 வயது வரைக்கும் உங்களுக்காக உழைக்கப் போகிறேன் என்று பீதி கிளப்புகிறார்.
ஒன்றும் சரியில்லை. ஆகவே நாமும் தவம் செய்ய ஆரம்பித்துவிடுவோம். மலையேறித்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. மனம் மாறியும் செய்யலாம்.