காகிதப் படகில் சாகசப் பயணம்

கருணாகரனை முதல்முதலில் பார்த்தபோது இந்த ஆசாமி கொஞ்சம் முசுடு என்று தோன்றியது. ஹலோ என்றால் ஹலோ என்பார். ஏதாவது கேட்டால் எத்தனை சொற்களில் கேட்கிறோமோ, அதில் சரி பாதி சொற்களில் பதில் சொல்வார். குமுதம் அலுவலகத்தில் என் கேபினுக்குப் பக்கத்து கேபினில் அவர் இருந்தார். ஒரு நாளில் நூறு முறையாவது நான் அந்தக் கண்ணாடிச் சுவரைத் திரும்பிப் பார்ப்பேன். ஒருமுறையும் அவர் நிமிர்ந்தோ, திரும்பியோ பார்த்ததில்லை. எப்போதும் டேபிளுக்கு மட்டுமே தலைகாட்டி என்னத்தையாவது எழுதிக்கொண்டோ, எடிட் செய்துகொண்டோ இருப்பார்.

கருணாவுக்கு பக்கத்து சீட்டில் இருந்த சிவகுமார் (என்கிற வாசுதேவ்) அவருக்கு முற்றிலும் நேரெதிர். கண்ணாடி அறைக்குள் இருந்து அவர் குரல் கொடுத்தால் குமுதம் ஆபீஸ் தாண்டி பக்கத்து அபிராமி தியேட்டர் வரைக்கும் கேட்கும். இருபத்தி நாலு மணிநேரமும் ஜோக்கடித்துக்கொண்டு, யாரையாவது கிண்டல் செய்துகொண்டு, எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பவர். அவருக்கு அத்தனை நெருக்கத்தில் இருந்தும் கருணாகரன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்? குறைந்தபட்சம் சிவகுமார் அடிக்கும் ஜோக்குகளுக்குக் கூட சிரிக்க மாட்டார். முட்டைக் கண்ணாடிக்குள்ளிருந்து ஒரு முறைப்பு.

என்னால் அப்போது புரிந்துகொள்ளவே முடியாததாக இது இருந்தது. பிறகும் புரிந்ததில்லை. இத்தனை வருடங்கள் கழித்து கருணாகரனின் பத்திரிகை அனுபவங்கள் அடங்கிய ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ நூலை இன்று வாசித்தபோது அதற்கான காரணத்தைக் கண்டேன். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. வருத்தமாகவும். கருணா எனக்கு நண்பராகி நெருக்கமாகப் பேசிப் பழகத் தொடங்கிவிட்ட பிறகும் தனது சொந்தக் கஷ்டங்களை ஒருபோதும் சொன்னதில்லை. வலிகளைக் காட்டிக்கொண்டதில்லை. அது அவரது சுபாவம்.

என் சமகாலப் பத்திரிகையாளர்கள் பலரைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். பிரமித்திருக்கிறேன். மனமாரப் பாராட்டியிருக்கிறேன். ஆனால் யாரைக் கண்டும் பொறாமை கொண்டதில்லை. பத்திரிகை வாழ்வில் நான் ரகசியப் பொறாமை கொண்ட ஒரே திறமைசாலி கருணா. பணியில் அவரது வேகமும் தீவிரமும் உள்ளார்ந்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும் யாரையும் வெட்கமுற வைக்கும். நாங்கள் குமுதத்தில் ஒன்றாகப் பணியாற்றிய காலங்களில் கருணாகரன் இஷ்யு என்றால் அதற்குத் தனியொரு வாசனை இருக்கும். அவரைப் போன்ற ஒரு தேர்ந்த மசாலா விற்பன்னரை நான் இதுகாறும் சந்தித்ததில்லை. ஒரு வாரப் பத்திரிகைக்கு என்ன தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் எது எத்தனை சதவீதம் என்கிற சூட்சுமமே இங்கு முக்கியம். கருணா அதில் மன்னன்.

இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் ரஜினி, கமல் தொடர்பான சம்பவங்களை அருகிருந்து பார்த்தவன் நான். இந்த வரிசையில் இன்னொரு செம ஜாலி விஷயத்தை எழுதுவார் என்று எதிர்பார்த்து மிகவும் ஏமாந்தேன். என்றைக்காவது இம்மாதிரி நான் ஒரு புத்தகம் எழுத நேர்ந்தால் அவசியம் அதைக் குறிப்பிடுவேன் (அது ஒரு பிரபல பெண் எழுத்தாளர் சம்மந்தப்பட்ட விஷயம்!)

கருணாவின் பலம் அவரது பிசாசு வேக மொழி. இந்தப் புத்தகத்தை வாசிக்க உங்களுக்கு ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகிறதென்றால் நீங்கள் தமிழில் வீக் என்று பொருள். கருணா மட்டும் ஒரு ரிஸ்க் எடுத்து பத்திரிகை வேலையைத் துறந்து முழுநேர எழுத்துக்கு வந்திருந்தால் இந்நேரம் அவர் இருந்திருக்கும் இடமே வேறு. மொழியை அவர் கையாளும் லாகவத்தை நான் எப்போதும் ரசிப்பேன்.

இந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயம் – அவரது மகளுக்கு இருந்த மருத்துவக் குறைபாடு பற்றியது – படித்தால் உங்களுக்கு நான் சொல்லுவது புரியும். முழுப் புத்தகத்துக்கும் அவர் தேர்ந்தெடுத்த மொழியை இந்த ஓர் அத்தியாயத்து மொழி வாரிச் சுருட்டித் தூர அடித்துவிடுகிறது.

எழுத்தில் கண் கலங்க வைப்பது பெரிய விஷயமல்ல. அது ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. ஆனால் தான் கதறியழுத தருணங்களை அழுகையின் தடத்தை மட்டும் தொட்டுக்காட்டி ரிப்போர்ட் செய்வது ஒரு சாகசம். இது உங்களை அழவைக்காது. ஆனால் செயல்படாமல் அடித்துவிடும். இதனை இராம திரு. சம்மந்தத்திடம் பயின்ற பாடம் மூலம் கருணா கற்றிருக்கலாம். அல்லது பெண்ணை ஏன் தேவதையாக்குகிறாய் என்று மாலன் கேட்டதில் இருந்து பெற்றிருக்கலாம். புதிய எழுத்தாளர்களுக்கு இந்த அத்தியாயம் நிச்சயமாக ஒரு பாடம்.

பத்திரிகைத் துறையை விரும்பக்கூடிய, ஒரு பத்திரிகையாளனின் அவஸ்தைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய, பத்திரிகையாளராக ஆகவேண்டும் என்று நினைக்கக்கூடியவர்களுக்கு இந்தப் புத்தகத்தில் சில நல்ல பாடங்கள் உள்ளன. கருணா இன்னும் விரிவாகவே எழுதியிருக்கலாம். ஆனால் இந்தப் புத்தகம் தன்னளவில் ஒரு முழுமையைக் கொண்டிருக்கிறது. இதழியலைப் பொறுத்தவரை தொடரும் என்பதுதான் முழுமையின் நிறைவுச் சொல்.

காகிதப் படகில் சாகசப் பயணம் | பெ. கருணாகரன் | குன்றம் பதிப்பகம், 73/31, பிருந்தாவனம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600033 | தொபே: 9940010830

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி