
ஜெயமோகனின் இந்தக் குறிப்பும் இதன் கீழே தரப்பட்டுள்ள இளங்கோ கிருஷ்ணனின் குறிப்பும் மிகவும் முக்கியமானவை. சொல் ஊன்றிப் படித்துப் பாருங்கள். சமூக ஊடகங்களின் மீது கலைஞர்களுக்கு வரக்கூடிய இயல்பான விலகலும் அச்சமும் சந்தேக உணர்வும் சேதாரங்கள் சார்ந்த வருத்தமும் புரிந்துகொள்ளப்படக்கூடியவைதாம். படைப்பூக்கத்தைக் கெடுக்கும் எவ்வித சக்தியானாலும் விட்டு விலகிச் சென்றுவிட விரும்புவதே எந்தக் கலைஞனும் விரும்பக் கூடியது.
ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளமும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதர கலைஞர்கள் செயல்படுவதற்கான இடமல்ல. மாறாக, செய்தவற்றை, செய்பவற்றைப் பற்றிய தகவல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. அதற்காக அவற்றைக் கட்டிக்கொண்டு மாரடிக்க வேண்டுமா என்றால், இன்றைய சூழ்நிலையில் வேறு வழியில்லை. ஓர் எழுத்தாளன், சிறுபான்மை சமூகத்தவரான வாசகர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ள உதவும் ஒரே வழி அதுதான். அதை எதற்கு மூடி வைக்க வேண்டும்?
எழுத்தாளன் என்பவன் ஒரு மனிதனும் கூட. அவன் ஒரு மகன். கணவன். தந்தை. வேலை பார்த்து சம்பளம் வாங்கும் ஊழியன். அதிகாரி. அறிவாளி. அசடன். மூடன். ஞானி. சோம்பேறி. தலைவன். தொண்டன். நண்பன். எதிரி. நல்லவன். கெட்டவன். வாழ்வில் எவ்வளவோ சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப, இடங்களுக்கேற்ப, மனநிலைக்கேற்பத் தயாரித்து அணிந்துகொள்ளும் முகங்களில் ஒன்றாக இதனையும் கருத முடிந்துவிட்டால் போதும். சிக்கலே இல்லை. சமூக வெளியில் கலைஞன் ஒரு வேடிக்கை பார்ப்பவன் மட்டுமே.
நான் சமூக வெளியை எப்படிக் கையாள்கிறேன்?
1. மிக நிச்சயமாக ஒரு ஷோ-கேஸாக மட்டும்.
2. இளைப்பாறலுக்காக மட்டும்.
3. மொழி சார்ந்த சில எளிய பயிற்சிகளைச் செய்து பார்க்க மட்டும்.
4. பொது மனநிலையை அவ்வப்போது மென்மையாகக் கிளறிப் பார்த்து, விளைவுகளைக் கவனிப்பதற்கு மட்டும்.
5. நான் வாழும் காலம் எவ்வாறெல்லாம் உருமாறி வருகிறது என்று தெரிந்துகொள்வதற்காக மட்டும்.
தீவிரமாக எதையும் நான் சமூக வெளியில் எழுதுவதில்லை. முக்கியமாக அரசியலை அறவே தவிர்க்கிறேன். என்னை மீறி ஒரு சில சந்தர்ப்பங்களில் அரசியல் பேசப் போகும்போது பெரும்பாலும் அது கொதிநிலையைத் தாண்டி வெடிநிலையைக் கண்டுவிடுவதை விழிப்புணர்வுடன் கவனித்திருக்கிறேன். அதனாலேயே தவிர்ப்பதில் கவனம் செலுத்துகிறேன்.
அதேபோல, மறுமொழிகளைப் பொருட்படுத்துவதில்லை. பொருட்படுத்தத்தக்க எதிர்வினை என்பது எப்போதாவது வருவது. அவற்றுக்கு உடனடியாக பதிலளிக்கிறேன். மற்றபடி அருமை, சூப்பர், கண்கள் பனித்தன வகையறாக்களை அப்படியே விட்டுவிடுகிறேன். இதை அகம்பாவமாகக் கருதும் பலர் என்னை விட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள். அது குறித்தும் கவலை கொள்வதில்லை. மிக மிகச் சிறிய இவ்வாழ்வில் நாம் செயலாற்றுவதற்கான நேரம் அதனினும் சொற்பமானது. அதையும் இப்படி வீணடிப்பது பாவமென்றே கருதுகிறேன்.
இன்னொன்று. அல்காரித அடிப்படையில் ஃபேஸ்புக்கில் பொருத்தமில்லாத நபர்களுக்கு என் குறிப்புகள் சென்று சேரும்போது வருகிற தடாலடி மறுமொழிகள் சம்பந்தப்பட்டது. உண்மையில் அவை எனக்கு ஸ்டிரெஸ் பர்ஸ்டர். அவற்றை வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது எப்படி அனுபவிப்பேனோ அப்படி அனுபவித்து ரசிக்கிறேன்.
இந்த விஷயத்தில் நகைச்சுவை அம்சத்துக்கு அப்பால் மிகப்பெரிய லாபம் ஒன்றும் உள்ளது. நாம் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்கிற எண்ணம் எல்லா எழுத்தாளர்களுக்கும் எப்போதாவது நிச்சயமாக வரும். அது கணப் பொழுது அகம்பாவமாக உருவெடுத்து நிற்கும். அப்படி அது உருவெடுக்கும்போதெல்லாம் மேற்படி அறியாத வட்டத்துப் புதிய மறுமொழிஞர்களின் சொற்கள் எனக்கு ஞானமளிக்கின்றன.
‘டேய், யார்றா நீ’ என்று தொடங்குவார்கள். சட்டென்று சாதியைத் தாவிப் பிடிப்பார்கள். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் ‘போடா சங்கி’ என்பார்கள். அல்லது இருநூறு ரூபாய் உபி என்பார்கள். ‘யோவ் பெரிசு, அடங்குய்யா’ என்பார்கள். அவர்களிடம் உள்ளதெல்லாம் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று வசைகள்தாம். அவர்கள் வாசகர்கள் அல்லர். தினத்தந்திகூடப் படிக்காதவர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஒவ்வொருவருக்கும் சொரிந்துகொள்வதற்கு ஏதோ ஒரு சுவர் இருக்கும். அதற்கு முதுகையும் நமக்கு முகத்தையும் கொடுத்து நிற்பார்கள்.
உண்மையில் பெரும்பான்மை சமூகம் என்பது அதுவே. ‘என் வாசகர்கள், என் ரசிகர்கள், என் வட்டம்’ என்பதெல்லாம் வெறும் மாயை அன்றி வேறல்ல. மனிதர்களில் சிறுபான்மையினரான வாசகர்களின் கூட்டத்தில் என்னைப் படிக்கவும் ஓரிருவர் உள்ளார்கள் என்ற அளவோடு நிறைவடைந்து விலகிக்கொள்கிறேன். இந்த ஞானம் பெரிதல்லவா? இது சமூக வெளியை அன்றி வேறெங்கும் கிடைக்காது.
என்னுடைய மாணவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இவைதாம்:
1. சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக்கொண்டிருங்கள். ஆனால் உங்கள் செயல்பாடென்பது எழுத்து சார்ந்த உங்களுடைய பயிற்சியாகவும் பரீட்சைகளாகவும் மட்டுமே இருக்க வேண்டும். கோடிக்கணக்கான மனிதர்களால் நிறைந்த அவ்வெளியில் உங்களுடைய பிரத்தியேக வாசகர்கள் வந்து சேரும்வரை பொறுமை காப்பது அவசியம்.
2. விமரிசனம் செய்யாதீர்கள். அரசியல், சினிமா, புத்தகங்கள் எதுவானாலும் சரி. விமரிசன மனோபாவம் எழுத்தாளனைக் கொல்லும். செய்தே தீர வேண்டுமென்றால் சமூக ஊடகங்களில் செய்யாதீர்கள். தனியே வேறெங்காவது ரகசியமாகச் செய்துகொள்ளுங்கள்.
3. நீங்கள் எழுதிப் பார்க்க / பயிற்சி செய்யத்தான் சமூக ஊடகம். அதில் வருகிற பிறவற்றைப் படித்துப் பொழுதை நாசம் செய்யாதீர்கள். அப்படியானால் உன்னை மட்டும் நான் ஏன் படிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் எகிறும். கண்டுகொள்ளாதீர்கள். பயிற்சியாக நீங்கள் எழுதுவது சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்குமானால் திருட்டுத்தனமாகவேனும் வந்து படித்துவிட்டுப் போகத்தான் செய்வார்கள்.
4. யாருமே உங்களைப் படிக்காவிட்டாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் அங்கே இருப்பது, உங்கள் பயிற்சிக்குத்தானே தவிர, அடுத்தவர் அபிப்பிராயத்துக்கல்ல.
5. இறுதியாக. கும்பல் என்றால் இரைச்சல் இருக்கத்தான் செய்யும். சாமர்த்தியம் இருக்குமானால் அதை ஒரு சிறந்த தியானப் பொருள் ஆக்கிக்கொள்ள முடியும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.