விலகியிருத்தல்

சில தினங்களாக நண்பர்கள் பலர் அடிக்கடி நலம் விசாரிக்கிறார்கள். உடம்புக்கு ஒண்ணும் இல்லியே? ஏன், நல்லாத்தான் இருக்கேன். ஃபேஸ்புக்ல காணமேன்னு கேட்டேன்.

உண்மையில், மணிப்பூர் கலவரம் புத்தகத்துக்கான எழுத்துப் பணி தொடங்கியதில் இருந்து என் அன்றாட ஒழுங்கு அல்லது ஒழுங்கின்மை முற்றிலும் மாறிவிட்டது.  முன்போல இப்போதெல்லாம் இரவு நெடுநேரம் கண் விழித்து எழுத முடிவதில்லை என்பதால் பகலிலும் சிறிது நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அதிகாலை, பின்மதியம் என்று நான் பார்த்திராத வேளைகளில் எல்லாம் இப்போது படிக்கிறேன், எழுதுகிறேன். மதியம் சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அடித்துப் போட்டாற்போலத் தூங்குவது வழக்கம். இப்போது முக்கால் மணி நேரத்தில் விழிப்பு வந்துவிடுகிறது. 

இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று புரியவில்லை. வயது ஒரு காரணம் என்று நம்புவதற்கு விருப்பமில்லை. உணவுக் கட்டுப்பாடு, நடைப் பயிற்சி என்று என் இயல்புக்கு விரோதமான பலவற்றைச் சிலகாலம் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஆரோக்கியமாகவே இருந்ததையும் விழிப்புடன் குறித்துக்கொள்கிறேன். இந்நாள்களில் காலை நடை என்ற ஒன்றைச் செய்கிறேன் என்றாலும் அதில் எனக்கே திருப்தி ஏற்படுவதில்லை. ஏதோ ஒப்புக்கு நடப்பது போலத்தான் நடக்கிறேன். 

வழக்கமாகச் செய்கிற அனைத்தையும் விலக்கி வைத்துப் பார்த்தாலென்ன என்று அடிக்கடி தோன்றுகிறது. அப்படி விலக்கியதுதான் ஃபேஸ்புக். எண்ணிப் பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் அநேகமாக நாள்தோறும் அங்கே எதையாவது எழுதி வந்திருக்கிறேன். ஃபேஸ்புக்கில் எழுதுவது என் வேலையையோ, பிற நியமங்களையோ பாதிக்காமல் இருந்தவரை அங்கே எழுதுவதில் எனக்குப் பிரச்னையே இல்லை.  நான்கைந்து பணிகளை ஒரே சமயத்தில் செய்த காலத்தில்கூட ஒரு நாளில் ஏழெட்டு போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தேன். அது எனக்கு நானே அளித்துக்கொண்ட ஒரு சிறிய உல்லாசம் என்பது தவிர வேறொன்றுமில்லை.

ஆனால் அதை ஒரு கடமை போலச் செய்யவேண்டாம் என்று தோன்றிவிட்டது. இதற்கு இன்னொரு காரணம், எழுதப் போகும்போது கண்ணில் படுகிற ஏதாவது சில போஸ்ட்கள். அரசியல் காழ்ப்பு. சாதிக் காழ்ப்பு. சுய புலம்பல்கள். அக்கப்போர்கள். அத்துமீறல்கள். இவற்றைத் தவிர மனித வாழ்வில் வேறு எதுவுமே இல்லையா? திகைப்பாக உள்ளது. அப்படித் தோன்றிய ஒருநாளில்தான் ட்விட்டரை அடியோடு விட்டு விலகினேன்.

இருப்பின் அடையாளமாக நான் எப்போதும் நினைப்பது எழுத்தை மட்டுமே. அதற்கு ஊறாக இருக்கும் என்று எது குறித்துத் தோன்றினாலும் உடனே விலகிவிடுகிறேன். ஃபேஸ்புக் என்றில்லை. மனிதர்கள் உள்பட எல்லாமேதான். என்னால் இப்படித்தான் இருக்க முடிகிறது. இப்படி மட்டும்தான். முட்டி மோதிச் சண்டையிட்டு, வாதம் செய்து வென்று கொடி நாட்டும் வேட்கை அறவே இல்லை. ஏனெனில் செய்வதற்கு எனக்கு எப்போதும் நிறைய உள்ளன. செயலால் மட்டுமே வெளிப்பட நினைப்பவன் இப்படித்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

சமூக ஊடகங்கள் இக்காலத்தின் கொடை. அதில் சந்தேகமில்லை. இங்கே வாசகர்களுடன் மிக நேரடியாக உரையாடக் கிடைக்கிற வாய்ப்பு இதற்கு முன் தலைமுறை எழுத்தாளர்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. பரஸ்பரம் ஆரோக்கியமான உரையாடல்களின் மூலமாக எவ்வளவோ இங்கே சாதிக்க முடியும். என்னாலேயே முடிந்திருக்கிறது. ஆனால் இன்று  நடப்பது அதுவல்ல. படிக்கக்கூடப் பிடிக்காமல் ப்ளாக் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது என் மன ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று தோன்றியது. மனிதர்களிடம் இருந்து விலகியிருப்பதும் மனிதர்களை வெறுத்து ஒதுங்குவதும் ஒன்றா என்ன?

புத்தகங்கள், பத்திரிகைகளுக்கு அப்பால் வேறு எதாவது எழுதத் தோன்றினால் இங்கே எழுதுகிறேன். எப்போதாவது யார் கண்ணிலாவது தென்பட்டுப் படித்தால் படிக்கட்டும். யாருமே படிக்காவிட்டாலும் வருந்த மாட்டேன். ஏனெனில், நான் செய்ய நினைப்பதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்கு அப்பால் எது ஒன்றனைக் குறித்தும் எனக்கு அக்கறை கிடையாது. இப்போதைக்கு அறிவிப்புகளுக்கு மட்டும் ஃபேஸ்புக் பக்கம் போனால் போதும் என்று நினைத்திருக்கிறேன்.

பார்க்கலாம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter