மிருது – புதிய நாவல் அறிவிப்பு

சலத்தின் தீவிரத்தில் இருந்து விடுபட எனக்குள்ள ஒரே வழி, உக்கிரம் இல்லாத, மிருதுவான வேறொன்றை எழுதிக் கடப்பதுதான். எனவே, அடுத்த நாவல் ‘மிருது’வைத் தொடங்குகிறேன்.

இது என்னுடைய வாட்சப் சேனலில் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தினமும் பிரசுரமாகும். பிரசுரமாவதிலிருந்து எட்டு மணி நேரங்களுக்கு இருக்கும். பிறகு எடுத்துவிடுவேன். இது திட்டம். இதர விவரங்களை சேனலில் கொடுத்திருக்கிறேன்.

உண்மையில், இப்படி எதையாவது இப்போது எழுதாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது. யதி உள்பட வேறெந்த நாவலும் சலம் அளவுக்கு என்னைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியதில்லை. தன்னேரில்லாப் பெருவலி.

வரலாறே இல்லாத ஒரு காலக்கட்டத்தினை முற்றிலும் கற்பனையில் கட்டுவேன் என்று எண்ணிப் பார்த்ததில்லை. சலத்தின் முதல் வரைவாக மனத்தில் இருந்தது சலம் என்கிற சொல்லும் அதன் அசைவும் மட்டும்தான். அதிலிருந்து அதர்வன் எழுந்து வந்தான். குத்சன் எழுந்து வந்தான். சாரன் வந்தான். காமாயினி வந்தாள். கன்னுலா வந்தாள். அதர்வன் வாழ்ந்த காலத்தில் இல்லவே இல்லாத அங்கீரசன் எழுந்து வந்தான். எப்படியோ சலம் பொங்கிப் பெருகிப் பரவி நிறைந்து அடங்கியது.

பொதுவாக எந்த நாவலை எழுதி நிறைவு செய்யும்போதும் ஓரிரு நாள்களில் அதன் உலகிலிருந்து முற்றிலுமாக வெளியேறி விடுவது என் வழக்கம். ஏனோ சலத்தில் அது முடியவில்லை. எழுதி முடித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. எடிட் செய்து அச்சுக்குக் கொடுத்துவிட்ட பின்பும் மனமும் புத்தியும் அதிலேயே உழன்றுகொண்டிருக்கிறது.

நான் குடியிருக்கும் வளாகத்தில் மூங்கில்கள் கொத்தாக இரண்டு இடங்களில் செழித்து வளர்ந்திருக்கும். உள்ளதிலேயே மிக உயரமான மூங்கில் மரம் ஒன்றை தினமும் காலை நடையின்போது நின்று பார்த்துக் கடப்பேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அது எனக்கு அதர்வனாகத் தோற்றமளிக்கும். நாவலுக்குள் அதர்வனின் தோற்றம் பற்றிய சித்திரம் ஓரிடத்தில் வரும். எண்ணிப் பார்த்தால் நான் அதர்வனை அல்ல; அம்மூங்கில் மரத்தினைத்தான் அவ்வரிகளில் விரித்துக்காட்டியிருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. அவனைப் போலவே அதுவும் வளையாத மூங்கில். பாய்வதற்குத் தயாராக நிறுத்தப்பட்ட ராக்கெட் போல இருக்கும்.

நேற்று நடைப் பயிற்சிக்குச் சென்றபோது அம்மரத்தின் பாதிதான் இருந்தது. அதிர்ச்சியடைந்து அப்படியே நின்றுவிட்டேன். எப்போதும் நடப்பதுதான். நன்கு வளர்ந்ததும் வெட்டி எடுத்துக் கொண்டுபோய்விடுவார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளில் அது குறித்து எழாத அற்பப் பதற்றம் இம்முறை எதனாலோ ஏற்பட்டது. அதர்வன் போனான், அதுவும் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டு நகர்ந்த கணத்தில் ‘மிருது’வுக்கான கருப்பொருள் தோன்றிவிட்டது.

காலம் உள்பட எதுவும் எதற்காகவும் நிற்பதில்லை, காத்திருப்பதில்லை. அசைந்துகொண்டும் நகர்ந்துகொண்டும்தான் இருக்கிறது. போகிற வழியில் அடையாளத்துக்கு ஒரு கல்லை வைத்துவிட்டுப் போவது போல எதையாவது எல்லாவற்றின் மீதும் வைத்துச் செல்கிறோம். எண்ணிப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. மனித குல வரலாற்றில் நமது இடம் என்பது துரும்பினும் கோடியில் ஒரு துளியாக இருக்கலாம். இருப்பினை நிரூபிக்க அல்ல; அதற்கு நியாயம் செய்யவே எதையாவது செய்துகொண்டிருக்கிறோம். எழுதுகிற ஒவ்வொரு சொல்லையும் அப்படித்தான் எண்ணிக்கொள்கிறேன்.

தனிப்பட்ட முறையில் சலம் எனக்கு மிகவும் உதவியது. நான் எழுதிய ஒன்று எனக்கே உதவுவதென்பது இதுதான் முதல் முறை. இந்நாவலுக்காகப் படிக்கத் தொடங்கிய பல மூலப் பிரதிகளைத் திரும்பத் திரும்ப எடுத்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். மீண்டும் மீண்டும் படிக்கும்போது புதிது புதிதாகப் பொருள் தோன்றுகிறது. தோன்றுவதை எழுதி வைக்கிறேன்.

நாவலுக்குள் இருந்து வெளியேறிவிட்டேன் என்று சொன்னேன். அது முடிந்தது. ஆனால் உள்ளுக்குள் நிறைந்த அதன் கனல் இப்போதைக்குத் தணியும் என்று தோன்றவில்லை. ஒரு வரி நினைவுக்கு வருகிறது. சலத்தில் எழுதியதுதான்.

நதி என்பது அதன் மேற்பரப்பல்ல. நதி என்பது அதன் ஆழமுமல்ல. நதி என்பது உண்மையில் அதன் ஆழத்துக்குள் புதைந்திருக்கும் அக்னி.

அது அணைய வாய்ப்பில்லை.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading