
கீழே உள்ள என்னுடைய ஓவியம், ராஜன் வரைந்தது. இதற்கு முன்பும் என்னை இரண்டு மூன்று முறை அவர் வரைந்திருக்கிறார். ஏனோ இந்தச் சித்திரத்தைப் பார்க்கும்போது ஒரு ஜாடையில் என் அப்பாவைப் போலத் தெரிகிறது. இல்லவே இல்லை என்று எங்கள் இருவரையும் அறிந்தவர்கள் சொல்லக்கூடும். அதனாலென்ன. எனக்கு அது தோற்ற மயக்கமாகவே இருந்தாலும் அப்படி நினைத்துக்கொள்ளப் பிடித்திருக்கிறது. அவ்வளவுதான்.
ராஜன் எனக்கு முப்பத்தைந்தாண்டுக் கால நண்பர். கல்கியில் இருந்து பழக்கம். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பின் முகப்பை அவர்தான் வரைந்தார். ஒன்றிரண்டு தவிர பிற பெரும்பாலான நாவல்கள்-சிறுகதைத் தொகுப்புகளுக்கு அவர்தான் அட்டைப்படம் வரைந்திருக்கிறார். வெளிவர உள்ள சலம் எனக்கு எழுபத்தொன்பதாவது புத்தகம். அதற்கும் அட்டைப்படம் வரைந்திருப்பவர் ராஜன்தான்.
இந்த உலகில் என்னுடைய அனைத்து விதமான இம்சைகளையும் முகம் சுளிக்காமல் சகித்துக்கொண்டு உடன் வரும் நண்பர்கள் மிகச் சிலருள் ராஜன் முக்கியமானவர். அட்டைப்பட விஷயத்தில் நான் பெரிய அறிவாளி எல்லாம் இல்லை. ஓரளவு இலக்கணம் தெரியும். நிறங்களின் சேர்மானம் சார்ந்த சிறிய தெளிவு உண்டு. எது கலை வெளிப்பாடாக இருக்க வேண்டும்; எந்தப் புத்தகத்துக்கு ‘மாஸ்’ சட்டை அணிவிக்க வேண்டும் என்று நான்தான் முடிவு செய்து சொல்வேன். அதிர்ஷ்டவசமாக இதுவரை என் கணிப்பு சரியாகவே இருந்து வந்துள்ளது.
சிக்கல் என்னவென்றால் ராஜன் போன்ற ஓவியர்களுக்கு எழுத்தாளர்களின் கருத்து அநாவசியம். அவர்களைச் சுயமாகச் செய்ய விட்டால் நாம் சொல்லிச் செய்வதைக் காட்டிலும் சிறப்பாகச் செய்வர். இது தெரிந்தும் ராஜனைப் படுத்தி எடுப்பதில் நான் சுணங்கியதே இல்லை. 1992 ஆம் ஆண்டிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பவர் அவர். இந்த ஜென்மம் இனிமேல் திருந்த வாய்ப்பில்லை என்று தெரியாமலா இருக்கும்? மிகக் குறுகிய அவகாசத்தில், சலத்துக்கு மட்டும் அவர் எத்தனை விதமாக எழுதிக் காட்டினார், எத்தனை விதமாக வரைந்து காட்டினார் என்பதற்குக் கணக்கே கிடையாது. ஏதோ ஒரு புள்ளியில் நான் கருத்து சொல்வதை நிறுத்தியதும் அவரே முடிவு செய்து ஒரு ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்தையும் நீரோட்டத்தைக் கண்முன் நிறுத்தும் எழுத்தையும் வரைந்து காட்டினார். அது சலத்தின் ஆன்மாவைத் துலக்கிக் காட்டும் விதமாக அமைந்துவிட்டது. அட்டைப்படம் இப்போது தயார். விரைவில் வெளியாகும்.
மேலே உள்ள என்னுடைய கோட்டுச் சித்திரம், உள் அட்டையில் வைப்பதற்காக அவர் வரைந்தது. சிறிது தாமதமாகிவிட்டதால் அது முடியாமல் போய்விட்டது. அதனாலென்ன. அடுத்தப் புத்தகத்தில் இருக்கும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.