ஆன்மாவும் அவரைக்காயும்

எனக்கு பீன்ஸ் பிடிக்கும். கொத்தவரங்காய் தவிர பீன்ஸ் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான காய்களும் உவப்பானவையே. வேறு வழியில்லை என்றால் கொத்தவரங்காயையும் சாப்பிடுகிறேன். ஆனால் காய்கறி வாங்கக் கடைக்குச் செல்வது நானாக இருந்தால் நிச்சயமாக அதை மட்டும் வாங்க மாட்டேன்.

பொதுவாகத் தாவர உணவு மட்டும் எடுத்துக்கொள்பவர்களுக்கு வேண்டுதல் வேண்டாமை கூடாது. இருக்கிற சொற்பத்தில் கிடைப்பன அதனினும் சொற்பம். இதில் தேர்வு செய்து உண்பதெல்லாம் அடாது என்று நினைப்பேன். ஆனால் நியாயங்களும் நாவும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை.

இருக்கட்டும், சொல்ல வந்தது வேறு. எனக்குக் கொத்தவரங்காயை எப்படிப் பிடிக்காதோ, அதே போலப் பித்தகோரஸுக்கு அவரைக்காய் பிடிக்காது. பீன்ஸ் குடும்பத்தில், கொத்தவரங்காயாவது மெல்லிய கசப்புச்சுவை கொண்டது. அவரை என்ன பாவம் செய்ததென்று தெரியவில்லை. ஆனால் என்னைப் போலவே மிகத் தீவிரமான தாவர உணவுக் கொள்கை கொண்ட ஒரு மனிதர், வாழ்நாள் முழுவதும் அவரைக்காயை வெறுத்து வந்திருக்கிறார் என்றால் அதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

படிக்கிற காலத்தில் பித்தகோரஸ் தியரம் என்ற பதம் என் வாழ்வின் குறுக்கே வந்திருக்கிறது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இவ்வாறு எது எதிர்ப்பட்டாலும் நகர்த்திவிட்டு நகர்ந்துவிடுபவனாக இருந்ததால் அப்போது நான் பித்தகோரஸைப் பொருட்படுத்தவில்லை. அது பெரும்பிழை என்று பின்னாள்களில் உணர்ந்தேன்.

அவர் கணித மேதை மட்டுமல்ல. தத்துவவாதி. தன்னைப் பின்பற்றவும் வழிபடவும்கூட ஆயிரக் கணக்கானவர்களைக் கொண்டிருந்தவர். பித்தகோரியம் என்று அவரது கொள்கைகளின் அடிப்படையில் அக்குறுங்குழுவினர் ஒரு மதத்தையே உருவாக்கி, பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள். அப்பேற்பட்டவரின் வாழ்க்கையில் அவரைக்காய் ஏதோ விளையாடியிருக்கிறது. இல்லாவிட்டால் அவர் அதை அவ்வளவு வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டியதில்லை.

கிமு 570இல் கிரேக்கத்தில் பிறந்த பித்தகோரஸ், எகிப்திலும் இராக்கிலும் தனது இளமைக்காலத்தைக் கழித்திருப்பதாகத் தெரிகிறது. கணிதம், தத்துவம், வானியல், விவசாயம் என்று ஏகப்பட்ட துறைகளில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. ஆர்வம் இருந்த அனைத்துத் துறைகளிலும் தீவிரமாக இறங்கி அகழ்ந்தெடுக்கப் பார்த்திருக்கிறார். என்ன எடுத்தார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்திலும் அவருக்கு ஏதோ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்து இருந்திருக்கிறது. தனது கருத்துகளை வாழ்நாள் முழுதும் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.

எனவே அவருக்கு எல்லா துறைகளிலும் ஏராளமான எதிரிகளும் இருந்திருக்கிறார்கள். பித்தகோரஸ் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேச எங்கும் எப்போதும் ஒரு கூட்டம் தயாராக இருந்திருக்கிறது. எப்போது அவர் தனது சித்தாந்தங்களைத் தொகுத்து ஒரு மதமாக்கப் பார்த்தாரோ, அப்போது அந்த எதிரிகள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு எதிர்க்கத் தொடங்கினார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்தபடி (க்ரோடொனா என்ற நகரில் குடியிருந்திருக்கிறார்) மரணம்-மறுபிறப்பு குறித்தெல்லாம் அவர் பேசியிருக்கிறார் என்பதைப் படித்தபோது வியப்பாக இருந்தது. இறந்தவரின் ஆன்மாவுக்கு அழிவில்லை என்கிற இந்து மதக் கொள்கைதான் பித்தகோரஸுக்கும் இருந்திருக்கிறது. அழிவற்ற ஆன்மா உடனடியாக இன்னொரு உடலைத் தேடிக்கொண்டு விடுகிறதென்று அவர் சொன்னார். அன்றைய ஐரோப்பாவில் இதையெல்லாம் யாரும் நம்பத் தயாராக இல்லை. அவரைப் பைத்தியம் என்றும் பித்தலாட்டக்காரன் என்றும் இடைவிடாமல் எதிர்ப்பிரசாரம் செய்துகொண்டிருந்தார்கள்.

பித்தகோரஸ் அதையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இசைக்குள்தான் கணிதம் வாழ்கிறது என்றார். எண்கள்தாம் எல்லாம்; அவற்றுக்கு மாய சக்தி உண்டு என்றார். கணிதத்தையும் இசையையும் ஒரு காக்டெய்ல் ஆக்கி வானியல் சார்ந்த தரிசனங்களைப் பெற முடியும் என்று வாழ்நாள் முழுதும் தீவிரமாக அவர் நம்பியிருக்கிறார். அது சார்ந்த பல பரீட்சார்த்த முயற்சிகளையும் செய்து பார்த்திருக்கிறார். அவை என்னவென்ற விவரம் சரியாகக் கிடைப்பதில்லை.

இந்த மனிதர் ஏன் இலக்கியத்தை விட்டு வைத்தார் என்றுதான் அவரைப் பற்றிப் படிக்கும்போது தோன்றியது. ஏ ஸ்கொயரும் பி ஸ்கொயரும் எக்கேடு கெடட்டும். இவ்வளவு ஆர்வங்கள் உடைய ஒருவர், எழுதலாம் என்று நினைக்காமல் மதம் தொடங்கி போதிக்க நினைத்ததைப்  புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அப்புறம் அந்த அவரைக்காய்.

பித்தகோரஸுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவரைக்காய் ஒரு கெட்ட காய். அசப்பில் அது மாமிசம் போலவே தோற்றமளிக்கிறது. என்றால், அது தாவரமே என்றாலும் உண்ணத்தகுந்ததல்ல என்று தீர்மானமாகச் சொன்னார். பித்தகோரஸுக்கு இந்து மதத்தில் உள்ளதைப் போல மேல் உலகம்-பூமி-கீழ் உலகம் என்கிற கருத்தக்கத்தில் தீவிர நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்த அவரைக்காய், பூமிக்கும் அதற்குக் கீழான உலகங்களுக்கும் வேர்களின் வழியே பாதை அமைக்கிறதென்று அவர் மனப்பூர்வமாக நம்பினார். தாம் நம்பியதைத் தமது சீடர்களுக்கும் சொல்லி, போகிற இடங்களில் பார்க்கிற அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்; யாரும் அவரைக்காயைச் சாப்பிட வேண்டாம் என்று அச்சுறுத்தி அனுப்பி வைக்கும் அளவுக்கு அதில் அவர் தீவிரம் கொண்டிருந்தார்.

அவரது மரணம் குறித்துத் தெளிவான சரித்திரத் தகவல்கள் இல்லை. ஆனால் பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவற்றுள் அவரைக்காய் கதையும் ஒன்று.

பித்தகோரஸின் கருத்துப்படி, அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் குறுக்கே கடந்து போகக் கூடாது. அந்த வயலைக் கடப்பது என்பது முன்னோர்களின் ஆன்மாவை மிதித்துச் செல்வது போன்றது என்று அவர் சொன்னார்.

அப்படிப்பட்டவர் ஒரு சமயம் அவரது எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார். வாழ்க்கை முழுவதும் பல்வேறு தரப்பட்ட எதிரிகளால் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த பித்தகோரஸை அவரது சீடர்கள்தாம் ஆபத்தின்றி பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பம். எங்கோ ஓரிடம். சீடர்களுடன் அவர் சென்றுகொண்டிருந்தபோது எதிரிகள் சுற்றி வளைத்துவிட்டார்கள். கைது செய்து இழுத்துச் சென்று அடைத்து வைத்தார்கள்.

விடிந்தால் கொன்றுவிடுவார்கள். எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று சீடர்கள் முடிவு செய்து, ஏதோ ஓர் உபாயத்தைக் கண்டறிந்து பித்தகோரஸின் கட்டுகளை அவிழ்த்து, அவரைத் தப்பித்து ஓடிவிடச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஓடிக்கொண்டிருந்த பித்தகோரஸ், ஓரிடத்தில் மிகப்பெரிய அவரைத் தோட்டம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.

அதைக் கடந்தால், உயிர் பிழைத்துவிடலாம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கொள்கை என்ன ஆவது? அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் கடந்தால் அது முன்னோரின் ஆன்மாவை மிதிப்பதற்குச் சமமல்லவா?

செய்வதறியாமல் பித்தகோரஸ் குழப்பத்துடன் அப்படியே நின்றுவிட்டார். இப்போது, துரத்தி வந்த எதிரிகள் தாவிப் பிடித்து அவரைக் கொன்றுவிட்டார்கள்.

இது வெறும் கதையா, உண்மையிலேயே பித்தகோரஸின் முடிவு இப்படித்தான் நேர்ந்ததா என்று தெரியாது. ஆனால் சாகவிருக்கும் தறுவாயிலும் கொள்கையை விட்டுத்தர மனமில்லாத ஒரு மனிதன் எப்பேர்ப்பட்டவனாக இருந்திருப்பான்!

எனக்குக் கணக்கு வராது. அறிவியல் பிடிக்காது. வானியலெல்லாம் மழை வருமா வராதா என்று வெதர் ஆப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அளவோடு சரி. தத்துவங்களை முற்றிலுமாக வெறுப்பவன். மதத்தின் மீது  அறவே நம்பிக்கை இல்லாதவன். எனவே, எந்த விதத்திலும் பித்தகோரஸை நினைத்துக்கொள்ள நியாயமே இல்லாதவன் ஆகிறேன். ஆயினும் இந்த ஒரு கதை என்னை அவர்பால் சுண்டி இழுத்துக்கொண்டே இருக்கிறது.

என்றைக்காவது பித்தகோரஸை அல்லது அவரைப் போன்ற ஒருவனை வைத்து ஒரு நாவல் எழுதலாம். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும், ஒருவேளை அது நடக்குமானால் என் நாவலின் நாயகன் அவரைக்காயை வெறுக்க மாட்டான்.  கொத்தவரங்காயைத்தான் வெறுப்பான்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading