
மனிதன், சார்ந்திருக்கும் இயல்புடையவன். குடும்பம், மதம், தெய்வம், சித்தாந்தம், கட்சி, தலைவர், நட்பு, புத்தகங்கள், திரைப்படங்கள், போதை, இதர கேளிக்கைகள் என்று ஏதோ ஒன்று. சார்பில் பிழையில்லை. அது எவ்வளவு ஆழம் செல்கிறது என்பது முக்கியம். அதைக் கவனிக்க வேண்டும். அது உருமாற்றம் பெற்று ரசிக நிலைக்கும் பிறகு வழிபடு நிலைக்கும் அதற்கும் பிறகு அடிமை நிலைக்கும் இட்டுச் செல்கிறதா என்பது அதனினும் முக்கியம்.
சமீப காலங்களில் சார்பு என்பது அடிமை நிலை மட்டுமே என்பதாக வெளிப்படுவதைச் சமூக ஊடகங்களில் காண முடிகிறது. அரசியல் கட்சிகள், தலைவர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் எதுவானாலும் யாரானாலும் தாம் சார்பெடுக்கும் இடத்துக்கு அருவருப்பூட்டத்தக்க விதத்தில் விசுவாசம் காட்டும் போக்கு அதிகரித்திருக்கிறது. இது சிந்திக்கும் திறனை முற்றிலுமாகச் சிதைத்துவிடும். இதைச் சொன்னால்கூட, ‘நான் ஏன் சிந்திக்க வேண்டும்? எனக்காக என் தலைவன் சிந்திக்கிறான்’ என்று சொல்லிவிடுகிறார்கள். உண்மையில், இதன் மிகப்பெரிய ஆபத்தென்பது அவர்களைக் காட்டிலும் அத்தலைவர்களுக்குத்தான் அதிகம்.
ஆதியில் மனிதன் சிறு சிறு குழுக்களாக வலம் வந்தான். குழுவுக்கொரு தலைவன். அவனது கட்டளைகளை எடுத்துச் சொல்லும் தொண்டர்கள். கேட்டு நடக்கும் மக்கள். பிறகு சிறிய குழுக்கள் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டன. நிலங்கள் அபகரிக்கப்பட்டன. செல்வங்கள் அபகரிக்கப்பட்டன. இருப்பிடம் பெரிதானது. எல்லைகள் வகுக்கப்பட்டன. நண்பர்களும் எதிரிகளும் உருவானார்கள். குழுத் தலைவர்கள் மன்னர்களானார்கள். மன்னர்கள் நிகரற்றவர்களாக, வணங்கப்படவேண்டியவர்களாகக் கருதப்பட வேண்டியதன் அவசியத்தை மதியூகிகள் பல விதங்களில் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். அதற்கு வலுவூட்டும் விதமாக குருமார்கள் தெய்வங்களையும் அவை சார்ந்த கதைகளையும் சிருஷ்டித்தார்கள். மதம் அவற்றைக் கவசமாகப் பொருத்திக்கொண்டு திரண்டெழுந்து நின்றது. புலப்படும் இறைவனை மன்னனிடத்திலும் புலப்படா தெய்வங்களை இயற்கையிடத்திலும் காணக் கற்றுக்கொடுத்தன.
வழிபாட்டின் இடத்தை மெல்ல மெல்லச் சடங்குகள் ஆக்கிரமித்தன. புதிய புதிய நம்பிக்கைகள் உற்பத்தி செய்யப்பட்டன. மக்களின் அச்சங்களை அடித்தளமாக அமைத்து அதன்மீது விசுவாசத்தினால் கோட்டை எழுப்பக் கற்றுத் தந்ததே இவை அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாக இருந்தது.
காலம் மாறி, கல்வி வளர்ந்து, நாகரிக வளர்ச்சியுற்று, பகுத்தறியப் பயின்ற பிறகும்கூட மேற்சொன்ன அச்சமும் விசுவாசமும் அடிப்படைக் குணங்களாக இருப்பதைக் காணும்போது அதைப் படைப்பின் பிழையாகவே கருதத் தோன்றும். உண்மையில் மதம் என்னும் கட்டமைப்பின் பண்புகள் மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் காற்றைப் போலப் பரவி நிறைந்திருப்பதே இந்தச் சிக்கலின் அடிப்படை.
விசுவாசம் அல்லது அடிமைத்தனத்தின் மூலம் தாற்காலிக லாபம் பெறுவோர் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானவர்களே. கும்பல் மனநிலையுடன் ஒருமித்த குரலில் ஒலிக்கும்போது கிடைக்கும் அற்பக் கிளர்ச்சியே பெரும்பாலானோருக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது. இது தனது தனித்துவத்தைக் கண்டறிய முடியாமையின் சோகம் அல்லது தனக்குத் தனித்துவம் உள்ளதென்றே உணர முடியாமையின் அபத்தம். எழுத்து, இசை, ஓவியம் போன்ற நுண் கலை உலகங்களிலும் இத்தகைய விசுவாசம் அல்லது அடிமை மனநிலை கொண்டவர்களைக் காணும்போது திகைப்பாகிவிடுகிறது. சிந்தித்துத் தெளிவதெல்லாமே அடிமைத்தனத்துக்குத்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.
இந்த உலகில் யாரும் யாருக்கும் விசுவாசமாகவோ அடிமையாகவோ இருக்க வேண்டிய அவசியமே இல்லை. மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்ததைப் பார்த்திருக்கிறோம். மிகப்பெரிய நம்பிக்கைகள் சிதைந்து சின்னாபின்னமானதைக் கடந்து வந்திருக்கிறோம். தனி நபர்களும் தத்துவங்களும் சித்தாந்தங்களும் காலந்தோறும் தமது பொலிவை உதிர்த்து வந்திருப்பதைக் காணாதோர் இல்லை. நிலைத்திருப்பதெல்லாம் ஒன்றுதான். தக்கன பிழைக்குமென்ற மூதுரை.
நமது இருப்பின் நியாயம் என்பது நாம் சுயமாகச் சிந்திப்பது மட்டும்தான். அது பிழைபட்டுப் போனாலுமே தவறில்லை. எப்போதும் திருத்திக்கொள்ள இயலும். ஆனால் பல்லக்குத் தூக்கிப் பழகிவிட்டால் தோள்கள் காய்ப்புக் கண்டு போவதொன்றே நிகர லாபமாக இருக்கும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.