மூக்குப் பொடி

கொடியணி மாடமோங்கிக் குலவுசீ ரானைக் காவில்
படியினி லுள்ளார்செய்த பாக்கிய மனையான்செங்கைத்
தொடியினினர் மதனன்சோம சுந்தரன் கடையினிற்செய்த
பொடியினைப் போடாமூக்கு புண்ணியஞ் செய்யாமூக்கே.

மேற்படி பாடல், திருவானைகாவில் மூக்குப் பொடிக் கடை வைத்திருந்த சோமசுந்தரம் என்பவரையும் அவரது மூக்குப் பொடியின் பெருமையையும் சொல்கிறது. இந்தப் பாடலை உ.வே. சாமிநாதய்யரும் அவரது ஆசிரியர்களுள் ஒருவரான தியாகராஜ செட்டியாரும் சேர்ந்து இயற்றியதாக அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் (பொடி விஷயம்). உ.வே.சா பொடி போடுவாரா என்று தெரியாது. ஆனால் தியாகராஜ செட்டியார் பொடிப் பிரியர்.

இன்றைக்கு மூக்குப் பொடி போடுவோர் அதிகமில்லை. இருப்பவர்களும் குறைந்தது எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நானறிந்து என் தாய்வழித் தாத்தாவும் என் அப்பாவின் மூத்த சகோதரரும் டி.ஏ.எஸ். ரத்தினம் பொடியின் ரசிகர்களாக இருந்தார்கள். தாத்தா, பொடி போடுவதை ஒரு கலையாகச் செய்வார். அந்தச் சிறிய டப்பாவில் இருந்து அதை அவர் எடுப்பதே ஒரு நடன நாரீமணியின் அபிநயம் போல இருக்கும். பிறகு அண்ட சராசரங்களையும் அளந்து முடித்த ஒருவர் ஓய்வெடுப்பது போன்ற பாவனையில் ஆகாயத்தைப் பார்த்தவாறு, பாதி கண் மூடி உறிஞ்சுவார். அதற்கென்றே வைத்திருக்கும் துண்டால் மூக்கைத் துடைத்துக்கொண்டு பூமிக்கு இறங்கி வரும்போது அவர் கண்கள் கலங்கியிருக்கும். அது காரத்தால் வருவதல்ல. நிச்சயமாக ஆனந்தக் கண்ணீர்தான்.

பெரியப்பாவும் ரசித்துப் போடுகிறவராகத்தான் இருந்தார். ஆனால் அவரது அளவு கடந்த ரசனையின் விளைவாகப் பொடியை மேலெல்லாம் சிந்திக்கொள்வார். டி.ஏ.எஸ். ரத்தினம் தொழிலை மூடிவிட்டுப் போய்விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் ஆள்காட்டி விரல் நகத்துக்கடியில் எப்போதும் ஒரு சிட்டிகை ஸ்டாக் வைத்திருக்கிறாரோ என்று நினைப்பேன். (இம்மாதிரிப் பழக்கம் ஏதுமில்லாத என் தந்தை, இன்னொரு முறை ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருபதாண்டுக் காலம் சார்பிட்ரேட் மாத்திரையை இடுப்பு பெல்ட்டில் ஸ்டாப்ளர் அடித்து வைத்திருந்தார்.)

புகையிலை, பொடி, பீடி, சிகரெட், கைனி, மாவா எல்லாம் நமது நாட்டில் உள்ள பல்வேறு சாதிகளைப் போலத்தான். இது இல்லை என்றால் அது என்ற பரந்த மனப்பான்மை அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் வந்துவிடாது. அலைந்து திரிந்து எங்காவது தேடிப் பிடித்தேனும் தன் விருப்பத்துக்குரியதைப் பெற்றுவிடும் வேட்கை இருக்கும். எல்லாம் கெட்டது என்பது யாருக்குத்தான் தெரியாது? இந்த உலகில் பரிபூரண நல்லது என்ற ஒன்றை யாராவது சுட்டிக் காட்டிவிட்டால் இதிலிருந்தெல்லாம் விடுதலை பெற்றுவிடலாம்.

ஆனால் ‘பொடியினைப் போடாமூக்கு புண்ணியஞ் செய்யா மூக்கே’ என்பது போன்றதொரு வரி அதன்பின் எந்த ஜென்மத்திலும் ரசிக்கக் கிடைக்காது.

நான் மூக்குப் பொடி முயற்சி செய்து பார்த்ததில்லை. விருப்பமும் இருந்ததில்லை. ஆனால் மாவாவைக் குறித்து முன்பொரு சமயம் எழுதிய கட்டுரை இங்கே உள்ளது. ஒரு ரயில் பயணத்தின்போது மாவா தீர்ந்து போய், ஒரு பிகாரியிடம் புகையிலைச் சக்கை (பதப்படுத்தாத, காயவைத்த நீளமான இலைச்சுருள்) வாங்கி மென்ற அனுபவத்தைக் கொண்டு காம்யுவின் வாசனை என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி