ஜேகே – அஞ்சலி

ஐந்தரைக்கு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சார், ஒரு ரெண்டவர் டைம் தர முடியும். அர்ஜெண்ட்டா ஒரு கதை தேவைப்படுது. சொல்ல முடியுமா?’

இந்தத் துறையில் இந்த அவசர அழைப்புகளுக்குப் பெரும்பாலும் எந்தப் பொருளும் கிடையாது. எதற்கு எப்போது விதித்திருக்கிறதோ, அப்போது அது தன்னால் நடக்கும். கதை என்ன, எதுவுமே இல்லாவிட்டாலும் நடக்கும். விதிக்கப்படவில்லையென்றால் என்ன முட்டுக் கொடுத்தாலும் அரை அங்குலம் கூட நகராது. நிறைய பார்த்திருக்கிறேன்.

இருந்தாலும் ஜேகே அப்படித்தான் கேட்டார். மிகவும் அவசரம்.

அப்போது நான் அவருக்கு வேறொரு தொடருக்கு எழுத ஒப்பந்தமாகியிருந்தேன். அந்தப் பணிகள் இன்னும் ஆரம்பித்திருக்கக்கூட இல்லை. அதற்கு இயக்குநர்கூட முடிவாகியிருக்கவில்லை. அதற்குள் இன்னொரு தொடருக்குக் கதை கேட்கிறார்.

ஆனால் கேட்பவர் என் மதிப்புக்குரியவர் என்பதால் சரி என்று சொன்னேன். உண்மையில் என்னிடம் அப்போது எந்தக் கதையும் இல்லை. அவர் அளித்த நேரத்துக்குள் முடிந்தவரை யோசித்து ஒரு கதையைத் தயார் செய்துகொண்டு சென்றேன். அதைப் பதினைந்து நிமிடங்களில் அவருக்குச் சொன்னேன். கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தவர், சொல்லி முடித்ததும் எழுந்து உள்ளே சென்று இருபத்தையாயிரம் ரூபாய் எடுத்து வந்து கையில் கொடுத்தார். ‘ஏ க்ளாஸ். இதத்தான் முதல்ல பண்றோம்’ என்று சொன்னார்.

அதன் பிறகுதான் அந்தக் கதைக்கு எனக்குத் திருப்தியாக ஒரு வடிவமே தரத் தொடங்கினேன். இரண்டு மூன்று நாள்களில் ஒரு நெடுந்தொடருக்குத் தேவையான ஆழ அகலங்களை வகுத்துக்கொண்டு நான் தயார் என்று சொல்வதற்குள் அவர் நடிக நடிகைகளை ஒப்பந்தம் செய்துவிட்டிருந்தார். சுந்தர் கே விஜயன் இயக்குகிறார் என்று அறிவித்துவிட்டார். படப்பிடிப்புக்கு நாள் குறித்தாகிவிட்டது. எல்லாம் நினைத்துப் பார்க்க இயலாத வேகம். கதை வேண்டும் என்று அவர் கேட்டதற்கும் முதல் நாள் படப்பிடிப்புக்கும் நடுவே மிஞ்சிப் போனால் ஐந்தாறு நாள்கள்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எஸ்கேவி ஏற்கெனவே அப்போது இரண்டு சீரியல்களை இயக்கிக்கொண்டிருந்தார். இது மூன்றாவது. ஒரே சமயத்தில் நான் நான்கைந்து சீரியல்களுக்கு எழுதியிருக்கிறேன். ஆனால் ஒரே சமயத்தில் ஒரு இயக்குநர் மூன்று சீரியல்களை இயக்க முடியும் என்பதை அப்போதுதான் பார்த்தேன். ஒவ்வொன்றுக்கும் தலா பத்து நாள்கள் ஒதுக்கிக்கொண்டு பிசாசு வேகத்தில் வேலை செய்வார். ஆனால் நேர்த்தியில் பங்கமே இராது. நம்ப முடியாத திறமைசாலி.

அந்தத் தொடரின் படப்பிடிப்பின்போதுதான் யோசனை வந்தது. எஸ்கேவியிடம் இணை இயக்குநராக அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த நீராவி பாண்டியனை நான் ஏற்கெனவே ஜேகேவிடம் ஒப்பந்தமாகியிருந்த தொடருக்கு இயக்குநராக்கினால் என்னவென்று. பாண்டியனிடமும் அதே வேகமும் நேர்த்தியும் உண்டு. முன்னதாக, முத்தாரத்தில் அதனைப் பார்த்திருக்கிறேன். சொன்னதும் ஜேகே ஒப்புக்கொண்டார். கையோடு அந்தத் தொடருக்கு தேவதை என்று பெயரிட்டு பூஜை போட்டு படப்பிடிப்பு ஆரம்பமானது.

எல்லாமே உடனடியாக. எல்லாமே அப்போதைக்கப்போதே.

தேவதை ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னதாகவே அதன் ஒளிபரப்புத் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே ஓடிக்கொண்டிருந்த ஜேகேவின் ‘வெள்ளைத் தாமரை’ முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள். ஆனால், தேவதைக்கு முன்னால் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட ‘வளையோசை’க்குத் தேதி கிடைக்கவில்லை. அதன் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்புகூட நடந்தது என்று நினைக்கிறேன்.

சொன்னேனே. விதிக்கப்படவில்லை. எனவே அரை அங்குலம் கூட நகரவில்லை.

முப்பது எபிசோடுகள் வரை எடுக்கப்பட்டும் அந்தத் தொடர் ஒளிபரப்பாகாமல் போய்விட்டதில் அவருக்கு மிகவும் வருத்தம். நிறைய செலவு செய்திருந்தார். எதுவுமே திரும்பி வராத செலவு.

இதற்கெல்லாம் ஏதோ ஒரு காரணம் இல்லாதிருக்காது. எல்லா காரணங்களும் எளிதில் புரிந்துவிடுவதில்லை.எல்லோருக்கும் புரிந்துவிடுவதில்லை. காரணம் இருந்தாலுமே ஏற்க முடியாதிருப்பது மரணம் ஒன்றைத்தான். இன்று காலை செய்தி கேள்விப்பட்டதில் இருந்து மிகவும் வருத்தமாகிவிட்டது.

ஜேகே என்கிற ஜே. கிருஷ்ணசாமி அவர்களுக்கு அஞ்சலி.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி