கோபியுடன் எனக்கு நேர்ப்பழக்கம் கிடையாது. ஏதோ ஒரு தமிழ் இணைய மாநாட்டில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான். ஆனால் யுனிகோட் புழக்கத்துக்கு வருவதற்கு முந்தைய திஸ்கி காலத்தில் [கிபி 2000] இரா. முருகன் நடத்தி வந்த ராயர் காப்பி க்ளப் மூலம் அவரை எனக்குத் தெரியும். கணினியில் தமிழில் எழுதுவது – வாசிப்பது சார்ந்த சிக்கல்கள் அதிகம் இருந்த அக்காலத்தில் கோபி சலிக்காமல் மின்னஞ்சல்கள் மூலம் எல்லோருக்கும் உதவி செய்வார்.
அப்போது ஒவ்வொரு இணையத்தளமும் தனக்கென ஓர் எழுத்துருவை வைத்திருக்கும். குமுதம்.காம் படிக்க வேண்டுமென்றால் உங்கள் கணினியில் குமுதம் எழுத்துரு இருக்க வேண்டும். விகடன் படிக்க வேண்டுமென்றால் விகடன் எழுத்துரு. தினமலருக்கொன்று, தினமணிக்கொன்று, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களும் தவறாமல் தனியாவர்த்தனமே செய்துகொண்டிருந்தன. இதில் ஈழத்து இதழ்கள் யாவும் பாமினி என்று தனியொரு எழுத்துருவில் வரும். திஸ்கி எத்தனைக் காலம் உயிர்த்திருக்கும் என்ற சந்தேகம் உலவத்தொடங்கியிருந்த அந்நேரத்தில் தமிழக அரசு தம்பங்குக்கு டேம், டேப் என்று இருவித என்கோடிங்களை ஆதரித்து அறிவித்தது.
எங்கும் சிக்கல், எதைப் படிக்கவும் சிக்கல். அந்நாள்களில் யாருக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் மறக்காமல் எழுத்துருவை அட்டாச் செய்து அனுப்பியதெல்லாம் நினைவுக்கு வருகிறது.
ஒருமுறை இதைப் பற்றி சலிப்புற்றுப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் கோபி சொன்னார், ‘கொஞ்சம் பொறுங்கள், தீவிரமாக வேலை நடந்துகொண்டிருக்கிறது. யுனிகோட் வந்துவிடும். இனி அதுதான் ஆளும்.’
அப்போது அவருக்கு நான் சொன்ன பதில் இன்றும் நினைவில் உள்ளது. ‘கெட்டுது குடி. இருக்கறது பத்தாதுன்னு இன்னொண்ணா?’
ஆனால் அவர் சொன்னதுதான் நடந்தது.
0
இன்று கோபிக்கு நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் என்னால் முழுதும் இருக்க முடியாமல் போனது. இருந்து கவனித்தவரை பத்ரி பேசியது, ஆழி செந்தில் பேசியது இரண்டும் பிடித்தது. தமிழ் உணர்வு என்பது தமிழில் எழுதுவதும் பேசுவதும் சிந்திப்பதும் மட்டுமா? நீங்களும் நானும் இணையத்தில் இன்று எவ்விதச் சிக்கலுமின்றி நமது மொழியில் உரையாட, அடுத்தத் தலைமுறைக்கு எதையாவது சேகரித்து வைத்துவிட்டுச் செல்ல வழியமைத்துக் கொடுப்பதல்லவா கணினி யுகத்தின் தலையாய மொழித் தொண்டு?
கோபி போன்றவர்கள் அதைத்தான் செய்தார்கள். அதனாலேயே நாம் எந்தக் கட்சி, எந்த சாதி, மதம், இனம் சார்ந்தவராயினும் , தமிழ் பேசுபவராக, எழுதுபவராக இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு நித்யக் கடன் பட்டுவிடுகிறோம்.
போய்வாருங்கள் கோபி. உங்கள் ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.