தாள் பணியும் இடம்

இளையராஜாவின் பழைய கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். ஜெர்மனி இரண்டாக இருந்த காலத்தில் பாக்கின் கல்லறையைத் தேடி அவர் கிழக்கு ஜெர்மனிக்குச் சென்ற அனுபவத்தைப் பற்றியது.

லைப்ஸிக் நகரில் பாக் வாசித்துக்கொண்டிருந்த தேவாலயம் இருக்கிறது. அங்கே அவருக்கு ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கே இருந்தவர்களுக்கு பாக் என்கிற கலைஞனைத் தெரிந்திருக்கவில்லை. அவர் எங்கே தங்கியிருந்தார் என்று இளையராஜா கேட்கிறார். தெரியாது என்கிறார்கள். அவரது கல்லறை எங்கே என்று கேட்கிறார். தெரியாது. அவர் யாரென்றாவது தெரியுமா என்றால் தெரியாது.

தாங்க முடியவில்லை ராஜாவால். ஆனால் என்ன செய்ய முடியும்? அந்த தேவாலய வளாகத்திலேயே சுற்றிச் சுற்றி நடக்கிறார். நீ நடந்த இடம். நீ நின்ற இடம். உன் மூச்சுக் காற்று பரவிய இடம். இதோ நான் வந்திருக்கிறேன். உன்னைத் தேடி வந்திருக்கிறேன் என்று உள்ளுக்குள் கதறுகிறார்.

அவரோடு அங்கே சென்றிருந்த சுற்றுலா வழிகாட்டிக்கும் அந்த தேவாலய ஊழியருக்கும் அவரது பரவசம் புரிவதேயில்லை. யார் இந்தக் கிறுக்கன், என்ன செய்கிறான் என்று திகைத்துப் போய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாக் வாழ்ந்த மண்ணில் மூன்று நாள் இருக்கலாம் என்று திட்டமிட்டுக்கொண்டு சென்றிருந்தவரால் முதல் நாளையே தாக்குப் பிடிக்க முடியாமல் போகிறது. வருத்தத்துடன் திரும்பிவிடுகிறார்.

இது சம்பவம். இந்தச் சம்பவத்தின் முன்னும் பின்னுமாக இளையராஜா, பாக்கின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களைச் சொல்கிறார். சிறு வயதில் ஓர் இசைப் புத்தகத்தைப் படிப்பதற்கு அவர் பட்ட கஷ்டம். இசையைக் கற்றுத் தேர்வதற்குப் பட்ட எண்ணிலாக் கஷ்டங்கள். கச்சேரிகளைக் கேட்பதற்காக ஐம்பது மைல், நூறு மைல் தொலைவெல்லாம் நடந்து சென்ற ஆர்வம். பசி பொறுக்க மாட்டாமல் யாரோ தின்று வீசிய பழங்களின் கொட்டைகளை, அவை கொட்டைகள் என்றே தெரியாமல் எடுத்து உண்ட அவலம், ஏழைமை. புறக்கணிப்புகள் இன்னபிற.

ஓரிடத்தில் திருவையாறில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டை இங்கே எவ்வளவு மோசமாகப் பராமரிக்கிறார்கள் என்று வருத்தப்படுபவர், இந்த இடத்தில், தியாகராஜர் எவ்வளவோ பரவாயில்லை; சமாதியாவது மிச்சமிருக்கிறது என்கிறார்.

எத்தனையோ முறை இதைப் படித்திருக்கிறேன். இப்போது படிக்கும்போதும் சிலிர்த்துப் போகிறது. ஐரோப்பிய இசை மேதைகளை இளையராஜா அளவுக்கு இங்கே சரியாக, கூர்மையாக அறிமுகம் செய்த இன்னொருவர் கிடையாது. How to name it இல் I met bach in my house, And we had a talk எல்லாம் எத்தனை பேருக்கு அர்த்தம் புரிந்திருக்கும் என்று உண்மையிலேயே தெரியவில்லை.

ஒரு கலைஞனைக் கலையிலேயே வாழ விடுவது என்பது அவன் வாழும் சமூகத்தின் கடமைகளுள் ஒன்று என்று திடமாக நம்புகிறேன். இளையராஜாவையெல்லாம் பேச வைத்துப் பார்ப்பது சாடிச மனநிலையின் வெளிப்பாடு மட்டுமே. நமக்கு எப்படிப் பறக்கத் தெரியவில்லையோ அப்படித்தான் அவருக்குப் பேசத் தெரியவில்லை. அதை மட்டுமே முன்வைத்து அவரை அகங்காரம் கொப்பளிக்கும் மனிதராகச் சித்திரிப்பது அருவருப்பாக இருக்கிறது.

பாக் (Johann Sebastian Bach)

அகங்காரமில்லாத மனிதர் யாருமில்லை. ஆனால், ஒவ்வொரு கலைஞனுக்கும் அகங்காரம் தாள் பணியும் இடம் ஒன்று நிச்சயம் உண்டு. தான் பணியத் தகுந்த பாதங்களைத் தேர்ந்தெடுப்பதில் அவனது மேதைமை புலப்படும். கீழே அந்தக் கட்டுரையின் ஒரு பகுதியைத் தருகிறேன். இளையராஜாவின் இடம் தெரிகிறதா பாருங்கள்.

‘…முக்கியத்துவம் வாய்ந்த அந்த செயிண்ட் தாமஸ் சர்ச்சுக்கு வந்து சேர்ந்தோம். நல்ல, மிகப் பெரிய உயரத்தில் அமைந்திருந்த பாக் உருவச் சிலை என்னை வரவேற்றது.

கம்பீரமாக நின்றிருந்த அவர் என்னைப் பார்த்து, ‘வாடா சிறுவா! என்னைப் பார்க்க உனக்கு இவ்வளவு நாட்கள் ஆயிற்றா?’ என்று கேட்பது போல இருந்தது. உடம்பெல்லாம் அதிர்வு ஆரம்பமானது.

சர்ச்சின் கோட்டைக் கதவு போன்ற மிகப் பெரிய கதவுகள் மூடியிருந்தன. உள்ளே போவதற்காகக் கையை வைத்துக் கதவைத் தள்ளினேன். பெரிய கீச் மூச் சத்தத்துடன் கதவு எனக்கு வழி விட்டது. 6-7 அடி தூரத்தில் மறுபடியும் அதே அளவு பெரிய கதவு மூடி இருந்தது. அதைத் திறந்ததுதான் தாமதம்.

பெரிய பைப் ஆர்கன் ஒலி இதயத்தைக் கலக்கியது. பாக் கம்போஸ் செய்தவற்றை யாரோ வாசித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர வேறொருவரையும் அங்கு காணோம்.

அந்த அமைதியான சூழ்நிலையும் பைப் ஆர்கனின் இசையும் பாக் இந்த சர்ச்சில்தான் 27 ஆண்டுகள் இருந்திருக்கிறார் என்ற எண்ணமும் என்னால் வாய்விட்டு வர்ணிக்க முடியாத, மொழி, மனம் கடந்த நிலைக்கு அழைத்துச் சென்று அதிர்வுகளை ஏற்படுத்தின. ஒவ்வோர் அடியையும் சப்தம் செய்யாமல் மெதுவாக எடுத்து வைத்து நடந்தேன். அந்தப் பெரிய ஹாலில் நடந்து சென்று பீடத்தின் அருகில் நின்றபோது அதிர்வுகள் அதிகமாக ஆகி உடலிலும் மனத்திலும் ஒருவித நடுக்கம் தோன்ற ஆரம்பித்தது.

‘நாத தேவனே, நான் நடந்து வந்த இந்தப் பாதையில் நீ எத்தனை முறை நடந்திருப்பாய். என்னென்ன கற்பனை செய்து என்னென்ன இசைகளை எங்களுக்காக உருவாக்கினாயோ என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே கண்களில் நீர் வழிய ஆரம்பித்துவிட்டது.

என்னை அழைத்து வந்த டிரைவருக்கும் அந்தப் பெண்மணிக்கும் ஒன்றும் புரியவில்லை. நம் முறைப்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன். வியப்போடு பார்த்தார்கள்…’

O

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading