
கை வைத்தாலே கன கச்சிதமாக எழுத்து அமைந்துவிடுவதெல்லாம் கோடியில் ஒருவருக்கு சாத்தியமாகலாம். உண்மையில், இரு கைகளால் இழுத்துச் சேர்த்துக் கட்டி அணைக்கக்கூடிய பருமன் உள்ள மரத்தைக் குறுக்கு வாட்டில் கொத்தி, முழு ஓட்டை போட்டு முடிக்க ஒரு மரம்கொத்திப் பறவை எத்தனை முறை கொத்த வேண்டியிருக்குமோ அத்தனை முறை திருத்தித்தான் நான் எழுதுகிறேன். பெரும்பாலான எழுத்தாளர்கள் அப்படித்தான் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். கலையெல்லாம் பிறகு. முதலில் இது கழுத்தை உடைக்கும் லேபர். அப்படிச் செய்த பிறகும் ஆறப் போட்டுப் படித்துப் பார்க்கும்போது நூறு இடங்கள் தொளதொளத்துத் தொங்கும். ஒவ்வொன்றாக உருவி எடுத்துத் திருகாணியை இறுக்கி முடுக்க வேண்டும்.
நேற்று முழுதும் இளையராஜா ஒரு மாதத்தில் எழுதி முடித்த சிம்ஃபொனியைக் குறித்தே நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் மொழி அது; என் மொழி இது. எட்டிப் பிடிக்கும் உயரம் மட்டும்தான் கணக்கு. திரும்பத் திரும்ப யோசிக்கும்போது, நேர்த்தி வழுவாமல் கூடும் தவம் ஒன்றே பெருஞ்செயல்களின் அடிப்படை என்று தோன்றுகிறது.
போதி மரத்தடியைத் தேர்ந்தெடுத்த பின்பு புத்தர் தமது தவத்துக்காக எப்படித் தயார் செய்துகொண்டார் என்று படித்திருக்கிறேன். உணவு மற்றும் உறக்கக் கட்டுப்பாட்டுப் பயிற்சிகளின் மூலம் உடலையும் இன்னொன்றில்லா சிந்தனையின் மூலம் மனத்தையும் கூராக்கிச் சேர்த்துக் கட்டிப் பழக்கிய பின்புதான் அவர் உட்காருகிறார்.
ஏழு மணிக்கு இளையராஜா ஸ்டுடியோவுக்குள் நுழைந்து வேலையைத் தொடங்கிவிடுவது பற்றி இங்கே பேசி வியக்காதவர்கள் கிடையாது. அது ஏழா, எட்டா, பத்தா, மதியமா, நள்ளிரவா என்பதல்ல. குறிப்பிட்ட நேரம் என்றால் குறிப்பிட்ட நேரம். கணப் பொழுதும் அதில் மாற்றம் இருந்ததில்லை என்பது மட்டும்தான் முக்கியம்.
நேரம் மட்டுமல்ல. இடமும் இதனைச் சார்ந்ததே. போதி மரத்துக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. சிறப்பெல்லாம் புத்தருக்குரியதே. ஆனால் அவர் தினம் ஒரு மரத்தடியைத் தேடிச் சென்று அமர்ந்திருந்தால் நிச்சயமாக வேலை கெட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.
பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து இளையராஜா இடம் பெயர வேண்டியிருக்கிறது என்கிற செய்தி வந்தபோது, சம்பந்தமே இல்லாத எனக்கு ஏற்பட்ட பதற்றத்தைச் சொன்னால் சிரிப்பீர்கள். புதிய இடத்தில் நிச்சயமாகத் தடுமாறுவார் என்று நினைத்தேன். சொல்லி வைத்தாற்போல எக்கச்சக்கமாகப் பேசி வாங்கிக் கட்டிக்கொண்டார். புதிய இடம் பழகி, அந்தச் சூழல், அந்தக் காற்று, அந்த ஒலி, அந்த வாசனையில் கரைந்து ஒன்றாகி, தனது மொழி என்பது இசை மட்டும்தான் என்பதை அவர் மீள உணர்ந்ததன் பிறகே இந்தச் சாதனையின் பின்னால் உள்ள தவத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கலாம்.
இன்று ஜெயமோகனின் இணையத்தளத்தில் ஒரு கட்டுரை படித்தேன். அதில் ஓரிடத்தில் //ஒவ்வொரு நாளும் நான் எழுதவேண்டியவற்றை எண்ணியபடியே தூங்கி, அதை எண்ணியபடியே விழிப்பதை வழக்கமாக ஆக்கிக்கொண்டிருந்தேன்// என்று குறிப்பிடுகிறார். இதில் சந்தேகத்துக்கு இடமே கிடையாது. அவர் அப்படி இருந்திராவிட்டால் அத்தனை பெரும் படைப்புகள் சாத்தியமாகியிராது. எழுத்து ஒழுக்கம், இசை ஒழுக்கம், பிற அனைத்துக் கலைகள் சார்ந்த ஒழுக்கங்கள் என்று தனியே ஒன்றில்லை. பணி ஒழுக்கம் என்று சொல்வதைக் கூட மறுக்கிறேன். இதன் பெயர் மன ஒழுக்கம்.
எது நம்முடையது என்பதில் தெளிவு வர வேண்டியது முதல் படி. பிறகு அதைத் தவிர மற்ற அனைத்தையும் இரண்டாம்பட்சம் ஆக்கிக்கொண்டுவிடுவது அடுத்த நிலை. எது நம்முடையதோ, அதுவே நாமாகிவிடுவது இறுதி நிலை. இடைவிடாத மனப்பயிற்சிகளின் மூலம் அது கூடும்போது சாதனைகள் நிகழ்கின்றன.
பரவசமெல்லாம் இருக்கட்டும். நேற்று இளையராஜா நிகழ்த்திய பெருஞ்செயலை தியானம் செய்து பாருங்கள். கற்க வேண்டிய ஒன்றிரண்டு பாடங்களாவது நிச்சயமாக அதில் உண்டு. எனக்கு ஒரு வாழ்நாள் பாடம் அகப்பட்டது. படித்து முடித்துத் தேறினால் சொல்கிறேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.