ராமானுஜர் திருவரங்கத்தில் இல்லை என்ற விஷயம் தீயைப் போல் பரவிவிட்டது. ஐயோ என்ன ஆயிற்று என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே கூரத்தாழ்வானுக்கும் பெரிய நம்பிக்கும் கண் போன தகவல் வந்து சேர்ந்தது. ஆடிப் போனார்கள். மடத்தில் இருந்த சீடர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், அரங்க நகர்வாசிகள் சிலபேர் உடையவரைத் தேடிக் கிளம்பினார்கள்.
‘சோழன் சும்மா இருக்கமாட்டான். எப்படியும் வீரர்களை அனுப்பி ராமானுஜரைத் தேடிப் பிடிக்கச் சொல்லியிருப்பான். அப்படி அவர் வீரர்களிடம் மாட்டிக்கொண்டால் நமக்கு அதுதான் இந்த ஜென்மத்தில் நிகழும் பேரிழப்பாக இருக்கும். ஒருக்காலும் அதை அனுமதிக்க முடியாது!’ என்று சொல்லிவிட்டு நாலாபுறமும் தேடிக்கொண்டு கிளம்பினார்கள்.
ராமானுஜர் அப்போது சோழ நாட்டின் எல்லை தாண்டி நீலகிரி மலைப்பக்கம் போய்க்கொண்டிருந்தார். கால் சோரும்போது ஓய்வு. வயிறு கேட்கிறபோது உணவு. கண் சொருகும்போது உறக்கம். இடைவிடாத பிரபந்தப் பாராயணத்துடன் உடையவர் குழு வடக்கு நோக்கி நடந்துகொண்டிருந்தது. கூரத்தாழ்வானுக்கு என்ன நேர்ந்தது என்பது மட்டும் தெரிந்தால் போதும். பயணத்தை அமைதியாகவே தொடர முடியும். ஆனால் அத்தகவல் எங்கிருந்து, எப்படி வரும்? அதுதான் தெரியவில்லை.
‘பிரம்ம சூத்திர உரை எழுத ஆரம்பிக்கும் முன் நீங்கள் அரங்கனை விட்டு நகர்ந்ததேயில்லை. கொஞ்சநாள் திருவெள்ளறைக்குப் போய்த் தங்கினீர்கள். முடிந்ததா? திரும்ப வந்துவிட்டீர்கள். ஆனால் எழுதி முடித்ததில் இருந்து ஓய்வே இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறீர்களே சுவாமி?’ என்றார் முதலியாண்டான்.
‘என்ன செய்ய? எம்பெருமான் சித்தம் அதுதான் என்றால் ஏற்கத்தான் வேண்டும்.’
‘ஆனால் இது ஓய்வெடுக்க வேண்டிய வயதல்லவா? இப்படிக் காடு மேடு பாராமல் திரியவேண்டியுள்ளதே சுவாமி! குற்ற உணர்ச்சி எங்களைத்தான் கொல்கிறது.’
ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி யோசித்துப் பார்த்தார். நூறு வயதில் பெரிய நம்பியிடம் உள்ள உற்சாகம் யாருக்கு வரும்? தன்னைவிடச் சில வயதுகள் மூத்த கூரத்தாழ்வான் ஒரு வாலிபனைப் போல் வளையவந்துகொண்டிருக்கிறார். இதோ, தனக்காகப் பரிவு கொள்ளும் முதலியாண்டான் மட்டுமென்ன வயதில் இளைத்தவரா? தமது முதல் தலைமுறை சீடர்கள் அனைவருமே எழுபதைத் தொட்டுத் தாண்டியவர்கள்தாம் என்பதை ராமானுஜர் எண்ணிப் பார்த்தார். புன்னகை வந்தது.
‘என் எண்பது அப்படியொன்றும் ஓய்வு கொள்ளும் வயதல்ல தாசரதி! தவிர, திருமால் அடியார்களுக்கு ஓய்வு என்று ஒன்றேது? ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும். நம்மாழ்வார் நமக்கிட்ட கட்டளை அல்லவா இது?’
‘அதெல்லாம் சரி. இன்றைக்கு இதற்குமேல் தங்களால் நடக்க முடியாது. தயவுசெய்து எங்காவது தங்குவோம் சுவாமி. தாங்கள் சிறிது நேரம் இங்கேயே இருந்தால் நாங்கள் சென்று உண்பதற்கும் உறங்குவதற்கும் அருகே ஏதாவது வசதி இருக்கிறதா என்று பார்த்து வருகிறோம்!’
சீடர்கள் விடாப்பிடியாக அவரை ஓரிடத்தில் அமரச் செய்துவிட்டுப் புறப்பட்டார்கள்.
அது பாலமலை அடிவாரம். சுற்றிலும் அடர்ந்த வனாந்திரம். மரம் அசைந்தாலும் நிலவு தென்படாத பேரிருட்டு. மிருகங்களின் கூக்குரல் மட்டுமே வெளியை நிறைத்திருந்தது. ஒரு மரத்தடியில் ராமானுஜர் உட்கார, துணைக்கு நாலைந்துபேர் மட்டும் அவரோடு தங்கினார்கள். மற்றவர்கள் ஆளுக்கொரு பக்கம் கிளம்பிப் போனார்கள்.
மறுபுறம் உடையவரைத் தேடிக் கிளம்பிய திருவரங்கம் அடியார்களில் சிலர் நீலகிரிச் சாரல் பகுதிக்கும் வந்திருந்தார்கள். அவர்கள் அதே பாலமலை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தபோது சில வேடர்களை எதிர்கொண்டார்கள்.
‘யார் நீங்கள்?’ பாதுகாப்புக்கு வில்லையும் அம்பையும் எடுத்து வைத்துக்கொண்டு அவர்கள் எச்சரிக்கையுடன் கேட்க, ‘நாங்கள் திருவரங்கத்தில் இருந்து வருகிறோம். காட்டில் வழி தெரியவில்லை. மேலே எப்படிச் செல்வதென்று புரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்!’ என்று பதில் சொன்னார்கள்.
‘திருவரங்கத்தில் இருந்தா? உண்மையாகவா? அப்படியென்றால் அங்கே உடையவர் எப்படி இருக்கிறார்?’
வேடர்களில் ஒருவன் கேட்டபோது அரங்கநகர்வாசிகளுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.
‘ஆஹா, உங்களுக்கு உடையவரைத் தெரியுமா! எங்களால் நம்பவே முடியவில்லை ஐயா. இந்தப் பக்கம் அவர் வந்ததே இல்லையே? அவரது சீடர்களும் கூட…’
அவர்கள் பேசி முடிப்பதற்குள் பதில் வந்தது. ‘யார் சொன்னது? உடையவரின் சீடர் நல்லான் சக்கரவர்த்தி எங்களுக்கு ஆசான். அவர் உடையவரைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார் எங்களுக்கு.’
திகைத்துவிட்டார்கள் அரங்கநகர்வாசிகள். இது எம்பெருமான் சித்தமன்றி வேறல்ல. நல்லான் சக்கரவர்த்தி. ஆம். அவரை மறந்தே போனோமே? எப்பேர்ப்பட்ட பாகவத உத்தமர்! உடையவரின் வழியில் சாதி பார்க்காமல், இனம் பார்க்காமல் மனித குலம் மொத்தத்தையும் சமமாகக் கருதுகிற உத்தமர்.
ஒரு சமயம் ஆற்றில் பிணமொன்று மிதந்து வந்தது. நெற்றியில் திருமண் இருந்தது. அவ்வளவுதான். நல்லான் சக்கரவர்த்தி, அந்தப் பிணத்தைக் கரை சேர்த்து, முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
‘இதென்ன அக்கிரமம். அது பிராமணப் பிணம் இல்லை. பார்த்தாலே தெரிகிறதே. அதற்குப் போய் வைதிக முறைப்படி இறுதிக் காரியம் செய்வது அபசாரமல்லவா? ஓய் திருமலை சக்கரவர்த்தி! உம்மை நாங்கள் விலக்கிவைக்கிறோம்!’
அக்ரஹாரத்து மக்கள் கூடி நின்று குற்றம் சாட்டினார்கள்.
சட்டென்று அசரீரி ஒலித்தது. ‘உமக்கு அவர் பொல்லான் என்றால் இருந்துவிட்டுப் போகட்டும். நமக்கு அவர் என்றும் நல்லான்.’
திருமலை சக்கரவர்த்தி அன்று நல்லான் சக்கரவர்த்தி ஆகிப் போனார். கோயில் கோயிலாகச் சுற்றிக்கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில் அவர் சேரிப் பகுதிகளாகத் தேடித் தேடித் திரிபவராக இருந்தார். நன்மை செய்யும் நாராயணன் நாமத்தைப் பரப்புவதே வாழ்வின் ஒரே இலக்காகக் கொண்டு வாழ்ந்த பெரியவர்.
‘இது பெருமான் சித்தம். நீங்கள் நல்லான் சக்கரவர்த்தியின் சீடர்களா?’
‘ஆம் ஐயா. பெரியவர்தான் எங்களுக்குப் பெருமாளைக் காட்டிக் கொடுத்தார். பெருமாளினும் பெரியவர் உடையவர் என்று உணர்த்தியவரும் அவர்தாம். அதைவிடுங்கள். உடையவர் எப்படி இருக்கிறார்?’
திருவரங்கத்து பக்தர்களின் கண்கள் கசிந்தன. நெஞ்சை அடைத்த துக்கத்தை விழுங்கி நடந்த சம்பவங்களை அந்த வேடர்களுக்கு விளக்கினார்கள். ஐயோ என்று துடித்துப் போன வேடர்கள், ‘கவலையை விடுங்கள். இந்தக் கணம் முதல் உங்களுடன் சேர்ந்து நாங்களும் உடையவரைத் தேடுகிறோம். அவரைக் கண்டுபிடிக்காமல் மறுவேலை இல்லை.’ என்று சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு தங்கள் கிராமத்துக்குத் திரும்பினார்கள்.
அங்கே உடையவரின் சீடர்களும் வந்திருந்தார்கள்.
(தொடரும்)