பொலிக! பொலிக! 90

இது அவமானம். சபை நடுவே ஒரு மன்னன் தனது பிரஜையால் தோற்கடிக்கப்படுவதை நாடாளும் அகந்தை கொண்ட யாரும் ஏற்கமாட்டார்கள். குலோத்துங்கன் திரும்பத் திரும்பக் கேட்டான். உண்மையா? இது உடையவர் இல்லையா?

‘ஆம் மன்னா. இவர் கூரத்தாழ்வான். நான் இவரிடமே சிறிது காலம் பாடம் கேட்டிருக்கிறேன்’ என்றார் நாலூரான்.

‘முட்டாள் வீரர்களே, ராமானுஜரைத் தப்பிக்க விட்டு, யாரோ ஒருவரை இழுத்து வந்திருக்கிறீர்களே, உங்களை என்ன செய்கிறேன் பார்!’ என்று சீறியெழுந்தான் குலோத்துங்கன்.

‘மன்னா, ஒரு நிமிடம். கூரத்தாழ்வான் நீங்கள் நினைப்பதுபோல யாரோ ஒருவரல்லர். சிவனுக்கு விஞ்சிய தெய்வம் வேறில்லை என்று ஒப்புக்கொண்டு ராமானுஜர் கையெழுத்திட்டால் என்ன மதிப்போ, அதே மதிப்பு இவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டாலும் உண்டு’ என்றார் நாலூரான்.

குலோத்துங்கன் ஒரு கணம் வியப்பாகிப் போனான். ‘ஓ, இவர் அத்தனை பெரியவரா!’

‘ஆம் மன்னா. முதலியாண்டானும் கூரத்தாழ்வானும்தான் ராமானுஜரின் இரு கண்களும் கரங்களுமாக விளங்குபவர்கள். ராமானுஜர் ஶ்ரீபாஷ்யம் எழுதப் பக்கபலமாக இருந்து உதவியவரே இவர்தான். உமது வீரர்களை அனுப்பி ராமானுஜரைத் தேடச் சொல்லுங்கள். அதற்கு முன்னால் கூரேசர் இதை ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போடுவதும் நடக்கட்டும். ராமானுஜர் கிடைக்காமலே போனால்கூட கூரேசர் ஒப்புக்கொண்டால் விஷயம் முடிந்தது!’ என்றார் நாலூரான்.

கூரத்தாழ்வான் நாலூரானை அமைதியாக ஒரு பார்வை பார்த்தார். தன்னிடம் பயில வந்த மாணவன்தான். சிறிது காலம் கற்ற கல்வியைக் கொண்டுதான் மன்னனின் சபையில் அமைச்சராக முடிந்திருக்கிறது. ஆனால் அக்கல்விக்கு இது எப்பேர்ப்பட்ட இழுக்கு! பொன்னும் பணமும் வசதியான வாழ்வும் பதவியும் பகட்டும் ஒரு மனிதனின் குணம் மாற்றி இழுத்துச் செல்லுமானால் கற்ற கல்விக்குப் பொருள்தான் ஏது? நல்லவேளை உடையவர் இந்தச் சபைக்கு வரவில்லை என்று அவருக்கு நிம்மதியாக இருந்தது.

‘என்ன யோசனை கூரேசரே? நாலூரான் சொன்னது கேட்டதா? சிவனுக்கு விஞ்சியது ஒன்றுமில்லை என்று எழுதிக் கையெழுத்திடும்!’ எக்காளமாக ஆர்ப்பரித்தான் மன்னன்.

ஓலையும் எழுத்தாணியும் கொண்டுவரப்பட்டது. கூரேசரிடம் அதை நீட்டியபோது அவர் அமைதியாகச் சொன்னார், ‘மன்னா! ஒரு வரியில் முடிவு காணக்கூடியதல்ல இது. உங்களுடைய பண்டிதர்களைக் கூப்பிடுங்கள். அவர்கள் சிவனே பெரிய கடவுள் என்பதை நிறுவட்டும். அது இல்லை என்பதை வேத, புராண, இதிகாச சாட்சிகளுடன் நான் மறுக்கிறேன். இரு தரப்பில் யார் வெல்கிறார்கள் என்று பாருங்கள். அதை ஏற்பதுதான் சரி. பொத்தாம்பொதுவாக ஒன்றை முடிவு செய்வது மன்னனுக்கு அழகல்ல.’

கோபம் உச்சிக்கு ஏறியது குலோத்துங்கனுக்கு. ‘நிறுத்துங்கள் கூரேசரே. இது அரச கட்டளை. உம்முடன் வாதிட இங்கு யாரும் தயாரில்லை. ராஜகட்டளையை நிறைவேற்றுவது உமது கடமை.’

‘முடியாதென்றால்?’

‘உமது கதை முடியும்.’

கூரேசர் புன்னகை செய்தார். அந்த ஓலையை வாங்கினார். விறுவிறுவென்று ஏதோ எழுதிக் கொடுத்தார்.

படித்துப் பார்த்த நாலூரான் திடுக்கிட்டுப் போய், ‘மன்னா, இது பித்தலாட்டம். இவர் மொழி ஆட்டம் ஆடுகிறார். உங்களை மோசம் செய்யப் பார்க்கிறார்!’ என்று அலறினார்.

‘சிவாத் பரதரம் நாஸ்தி’ என்று எழுதிக் கையெழுத்துப் போடவேண்டும் என்பதே மன்னனின் நிபந்தனை.  என்றால், சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என்று பொருள். கூரேசர் அந்தச் சொற்றொடரின் இறுதியில் ஒரு கேள்விக்குறியைச் சேர்த்துவிட்டு அதன் கீழே, ‘த்ரோணம் அஸ்தி தத: பரம்’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார்.

சிவம் என்ற சொல்லுக்குக் ‘குருணி’ என்று ஒரு பொருள் உண்டு. குருணி என்றால் மரக்கால். அது ஓர் அளவு. த்ரோணம் என்பது குருணியைக் காட்டிலும் பெரிய அளவு. இந்த த்ரோணத்துக்கு தும்பைப் பூ என்று இன்னொரு பொருளும் உண்டு. ஆக, சிவனைக் காட்டிலும் தும்பைப் பூ பெரிது என்று எழுதியிருந்தார் கூரேசர்.

துடித்துப் போனான் குலோத்துங்கன். ‘இந்த அகம்பாவம் பிடித்த வைணவன் கண்ணைப் பிடுங்குங்கள்!’ என்று கத்தினான்.

‘சிரமப்படாதீர்கள் மன்னா. உம்மைப் போன்ற ஒரு வைணவ விரோதியைக் கண்ட இந்தக் கண்கள் எனக்கு எதற்கு என்றுதான் நானே நினைத்துக்கொண்டிருந்தேன். இதோ என் கண்கள் இனி எனக்கில்லை’ என்று சொல்லி, தன் விரல் நகங்களால் கண்களைக் குத்திப் பெயர்த்தார்.

வாயடைத்துப் போனது சபை. ‘ஐயோ என்ன காரியம் செய்கிறீர்!’ என்று பெரிய நம்பி அலறினார்.

‘கண்ணே போன்ற கருமாணிக்கம் நெஞ்சில் நிற்கிறான் நம்பிகளே. இந்தப் புறச் சின்னங்கள் எனக்கு எதற்கு? போகட்டும் இவை. ஒழியட்டும் இந்த மன்னனின் ஆணவத்தோடு சேர்த்து.’ என்றபடியே தன் கண்களைக் குத்திக் கிழித்துக் கருமணிகளை வெளியே எடுத்து வீசினார் கூரேசர். ரத்தம் பெருகத் தொடங்கியது. ஓ, ஓ என்று சபை ஆர்ப்பரித்தது. ‘எங்கே, யாரவர், நான் அவரைப் பார்க்கவேண்டும்!’ என்று அத்தனை பேரும் முண்டியடித்து முன்னால் வந்தார்கள்.

ரத்தம் சொட்டச் சொட்ட, வலி பொறுக்கமாட்டாமல், நிலை தடுமாறிக் கூரேசர் மயங்கி விழ, ‘யாரங்கே அந்த இன்னொரு கிழவரின் கண்ணைப் பிடுங்குங்கள்!’ என்றான் குலோத்துங்கன்.

‘நல்ல காரியம் மன்னா. அவரும் லேசுப்பட்ட ஆளில்லை. ராமானுஜருக்கே அவர்தான் குரு!’ என்றார் நாலூரான்.

எங்கே பெரிய நம்பியும் தமது கண்களைத் தாமே பிடுங்கி எறிந்துவிடப் போகிறாரோ என்கிற அச்சத்தில் மன்னனின் வீரர்கள் வேலோடு அவர்மீது பாய்ந்தார்கள். கணப் பொழுதில் அவர் கண்களில் வேலைச் சொருகி, அகழ்ந்து எறிந்தார்கள்.

‘அப்பா…’ என்று அலறிக்கொண்டு அத்துழாய் ஓடி வந்தாள். செய்வதறியாமல் திகைத்துப் போனது சபை. சிவனோ விஷ்ணுவோ யாரோ ஒருவர் பெரியவர்களாக இருந்துவிட்டுப் போகட்டும். மன்னன் சற்று மனிதத்தன்மை உள்ளவனாக இருக்க வேண்டாமா?

ஆனால் கேட்க முடியாது. பெரிய நம்பிக்குக் கண்தான் போனது. இதைத் தட்டிக் கேட்டுவிட்டால், யாரானாலும் உயிர் போய்விடும். ஆகவே, மதமெனும் உக்கிரப் பேய் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிற மன்னனைத் தட்டிக்கேட்க யாருமில்லை. இது விதி. இன்று சபையில் பெருகிய இரு மகான்களின் உதிரம் சோழ வம்சத்தை சும்மா விடப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

மனத்துக்குள் எண்ணிக்கொண்டு அத்தனை பேரும் அவசரமாகக் கலைந்து போனார்கள்.

(தொடரும்)

 

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி