சென்னை புத்தகக் காட்சி 09 – நாள் 1

முப்பத்தி இரண்டாவது சென்னை புத்தகக் கண்காட்சி மழைப் பிரச்னையில்லாமல் நல்லபடியாக இன்று தொடங்கியது. அப்துல் கலாம் வரவில்லை. ஏதோ சரும நோய். வைரஸ் தாக்குதல். மருத்துவமனையில் இருக்கிறார். இரண்டு நாள்கள் முன்னதாகத் தேதியிட்ட அவருடைய வாழ்த்துச் செய்தி மட்டும் வந்திருந்தது. பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் அதை மேடையில் படித்தார்.

வழக்கம்போல் விழாத்தலைவராக நல்லி குப்புசாமி செட்டியார். ஆய்த்தொள்ளாயித்தி எழுவத்தேழுல என்று ஆரம்பித்து, தனது பத்து நிமிட உரையில் பத்துப் பதினைந்து வருடங்களை நினைவுகூர்ந்தார். இப்போதெல்லாம் அவர் பேசத் தொடங்கும்போதே, எந்த வருடத்திலிருந்து தொடங்குவார் என்று புத்தி கணக்குப் போட ஆரம்பித்துவிடுகிறது. கலைஞர் கருணாநிதி பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். கிரிஷ் கர்னாடை நல்லியார் சற்று வேறு விதமாக அறிமுகப்படுத்தியிருக்கலாம். நீங்கள்ளாம் காதலன் படம் பாத்திருப்பேள். அதுல கவர்னரா வரவர் இவர்தான் என்று சொன்னார். நல்ல நாடகாசிரியர். பெரிய கலைஞர். ஏனோ எனக்குத்தான் மனசு அடித்துக்கொண்டது.

எதிர்பார்த்த வி.ஐ.பி. வராதபடியால் விழா சுருக்கமாக முடிந்துவிட்டது. பெரிய கூட்டம் என்று சொல்லமுடியாது. முதல் நாள் என்பது தவிர, நகரில் எந்த இடத்திலும் விளம்பரம் எதையும் பார்க்க முடியவில்லை. எல்டாம்ஸ் சாலையில் இருந்து பச்சையப்பன் கல்லூரி வரை போகிற வழியெல்லாம் பார்த்துக்கொண்டே போனேன். ஒரு சிறு விளம்பரத் தட்டிகூட இல்லை. ரொம்ப ரகசியமாக நடத்தினால் போதும் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

நேற்றைய மழைக்கு முதல் வரிசை அரங்குகளில் தண்ணீர் ஒழுகியதாகச் சொல்லப்பட்டாலும் பதிப்பாளர்கள் சுதாரித்து, இன்றைக்கு ஒழுங்கு செய்துவிட்டார்கள். பரபரவென்று பெரும்பாலான கடைகளில் இன்று இரவு வரையிலுமே காட்சிப்படுத்தும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. நாளை முதல் அனைத்துக் கடைகளும் இயல்பாகச் செயல்பட ஆரம்பித்துவிடும்.

அனைத்துக் கடைகளுக்கும் இன்று நான் செல்லவில்லை. சுமாராகத்தான் சுற்றிவந்தேன். கண்ணில் பட்டவற்றுள் புதிதாக இருந்தது க்ரியாவின் அரங்கு. க்ரியாவை நான் கண்காட்சிகளில் கண்டதில்லை. இம்முறை சில புதிய புத்தகங்களுடன் வந்திருக்கிறார்கள். ந. முத்துசாமியின் சிறுகதைத் தொகுப்பு அவற்றில் ஒன்று. அந்த அரங்கில் முத்துசாமியின் மகன் நடேஷ் இருந்தார். தனது தந்தையின் புத்தகத்தை அப்போதுதான் முதலில் பார்க்கிறார் போலிருக்கிறது. ‘பாருங்க, யார் யாரையோ நினைவுகூர்ந்து நன்றி சொல்லியிருக்காரு. இதுலகூட நான் ஒருத்தன் இருக்கறதை மறந்துட்டார்’ என்று யாரிடமோ வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். சிறுகதை!

அரங்க வடிவமைப்பு என்கிற விஷயத்தில் இம்முறை நக்கீரனை கலைஞன் பதிப்பகம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. கொலு மண்டபத் தூண்களென்ன, காற்றில் ஆடும் சல்லாத் துணிகளென்ன, புத்தகங்களை அடுக்கியிருக்கும் அழகென்ன – ஏ கிளாஸ். [துரதிருஷ்டவசமாக, நான் எடுத்த புகைப்படம் சரியாக வரவில்லை. ஆப்போசிட் லைட். நாளை வெளியிடுகிறேன்.] காலச்சுவடில் கறுப்பு நிற தீம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உள்ளே போய்ப் பார்க்கவில்லை. நாளை பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

ஆனால் புத்தக டிஸ்பிளே என்கிற வகையில் – நான் பார்த்தவற்றுள் என் வோட்டு பாரதி புத்தகாலயத்துக்குத்தான். பல நூறு புத்தகங்களில் எது ஒன்றும் வாசகர் கண்ணிலிருந்து தப்பி விடாதபடி, அட்டைகளின் நிறச் சேர்க்கை, புத்தகங்களின் கனம், நீள அகல சாத்தியங்கள், முக்கியத்துவம் என்று அனைத்து அம்சங்களையும் மிகக் கூர்மையாக கவனித்து, பார்த்துப் பார்த்து அடுக்கியிருக்கிறார்கள். லே அவுட் விஷயங்களில் சற்று ஞானமுண்டு என்கிறபடியால் உண்மையிலேயே பிரமித்துப் போனேன்.

இந்த வகையில் இன்று கிழக்கின் டிஸ்பிளே எனக்கு பலத்த ஏமாற்றம். எந்த வண்ணத்துக்குப் பக்கத்தில் எது உட்காரும், எது உட்காராது என்று சற்றும் யோசிக்காமல் அடுக்கியிருந்தார்கள். சில முக்கியமான புத்தகங்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் சுற்றி வந்து தேடித்தான் எடுக்க வேண்டியிருந்தது. நாளைக்குச் சரி செய்யச் சொல்லவேண்டும். ஆனால் நலம், பிராடிஜி அரங்குகள் வழக்கம்போல் ஜொலித்தன. [எங்களுடைய நலம் வெளியீடு முதல் முறையாக இந்தக் கண்காட்சியில்தான் தனிக்கடை காண்கிறது.]

பொதுவாக முதல் நாளில் கேண்டீனில் ஒன்றும் இருக்காது. ஒரு மாறுதலுக்கு இம்முறை இன்றே கேண்டீன் சுறுசுறுப்பாக இயங்கியது. நல்ல விஸ்தாரமான இடம். நிறைய கடைகள். ஏகப்பட்ட வெரைட்டி. புதிதாக கிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆவக்காய் ஊறுகாய், புளியோதரை மிக்ஸ், சுக்கு கஷாயப்பொடி என்று என்னென்னவோ அறிமுகப்படுத்தியிருக்கிறது.  புத்தகக் கண்காட்சிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்கக்கூடாது. ஏலக்காய், உலர் திராட்சை, பட்டை, லவங்க பாக்கெட்டுகள் கூடத்தான் கிடைக்கின்றன. தினசரி ஒரு மணிநேரம் எல்லோரும் படித்தே ஆகவேண்டும் என்று அப்துல் கலாம் சொல்லிவிட்டார். எனவே மிச்ச நேரங்களை அர்த்தமுள்ளதாக்கப் புளியோதரை மிக்ஸும் லவங்க பாக்கெட்டுகளும் அவசியமே அல்லவா?

ஒரு கடையில் ஞான அருள் குரு பரத்வாஜ் சுவாமிகள் என்றொரு புத்தகத்தைப் பார்த்தேன். சட்டென்று உசிலை மணி ஞாபகத்துக்கு வந்துவிட்டார். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே என்று எடுத்துப் பார்த்தால், ஒரு காலத்தில் நான் தாயில் எழுதிக்கொண்டிருந்தபோது அங்கே மேட்டர் கொடுக்க வருகிற என் பழைய சிநேகிதர் பரத்! நல்ல பத்திரிகையாளராக வரவேண்டும் என்று அப்போது அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். இப்படி சாமியாராகி, சொந்த பிசினஸில் இறங்குவார் என்று கனவில்கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை.

வழக்கம்போல் கழிப்பிட வசதி திராபை. முதல் நாளே குடலைப் பிடுங்கிவிட்டது. நாற்றத் துழாய்முடி நாராயணனே வந்தாலும் நாற்றம் தாங்காமல் ஓடிப்போய் விடுவான். அப்புறம் குடிநீர். கண்காட்சி அரங்கத்துக்குள்ளே நுழைந்துவிட்ட வாசகர் ஒருவருக்கு விக்கல் எடுத்தால்கூட அருகே தண்ணீர் வசதி கிடையாது. ஆப்பிள் ஜூஸ் இருக்கிறது. தம்ளர் பத்து ரூபாய். எனவே மறக்காமல் கையில் ஒரு தண்ணீர்ப் போத்தலுடன் வாருங்கள்.

மிகவும் தாமதமாகிவிட்டபடியால் அரைகுறையாகவே இதனை எழுதியிருக்கிறேன். இன்னும் சில முக்கியமான விஷயங்கள் சொல்லவேண்டியிருக்கிறது. நாளைக்கு நிதானமாக.

Share

10 comments

  • —-எனவே மிச்ச நேரங்களை அர்த்தமுள்ளதாக்கப் புளியோதரை மிக்ஸும் லவங்க பாக்கெட்டுகளும் அவசியமே அல்லவா?—

    —–வாசகர் ஒருவருக்கு விக்கல் எடுத்தால்கூட அருகே தண்ணீர் வசதி கிடையாது. ஆப்பிள் ஜூஸ் இருக்கிறது. தம்ளர் பத்து ரூபாய். —-

    —-உசிலை மணி ஞாபகத்துக்கு வந்துவிட்டார். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே என்று எடுத்துப் பார்த்தால், —-

    அமர்க்களம்! நன்றி

  • //தனது தந்தையின் புத்தகத்தை அப்போதுதான் முதலில் பார்க்கிறார் போலிருக்கிறது. ‘பாருங்க, யார் யாரையோ நினைவுகூர்ந்து நன்றி சொல்லியிருக்காரு. இதுலகூட நான் ஒருத்தன் இருக்கறதை மறந்துட்டார்’ என்று யாரிடமோ வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். சிறுகதை!//

    எழுத்தாளருக்கே உரிய அவதானிப்பு 🙂

  • புத்தகக் காட்சியின் முதல் நாள் நிகழ்வுகளைப் பற்றிய சுவாரசியமான பதிவு ! மிக்க நன்றி பாரா !

  • எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததற்கு பெட்ரோல் -டீசல் வறட்சி ஒரு காரணமாக இருக்கக் கூடும். வண்டிக்ளை வெளியே எடுக்க முடியவில்லை. அந்தப் பகுதிக்கு தென் சென்னையின் புற நகர் பகுதிகளிலிருந்து உள்ள பேருந்து வசதிகள் அதிகமில்லை.

    பொதுவாக முத்ல் நாள், இறுதி நாள் இவற்றை தவிர்த்து விடுவது நல்லது.கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள்.முதல் நாள் போனால் வி.ஐ.பி.களின் அராத்துக்களை வேறு எதிர்கொள்ள வேண்டும். ஒரு புத்தகத்தையும் நிம்மதியாக புரட்ட முடியாது
    =மாலன்

  • //எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததற்கு பெட்ரோல் -டீசல் வறட்சி ஒரு காரணமாக இருக்கக் கூடும்//

    இது முற்றிலும் உண்மை. எழுத நினைத்து, தூக்கக் கலக்கத்தில் நேற்று மறந்துவிட்டேன். கண்காட்சியில் பலபேர் இதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். வாசகர்கள் அதிகமுள்ள தென் சென்னையிலிருந்து கண்காட்சிக்கு வரக்கூடியவர்களுக்குச் சரியான போக்குவரத்து [நேர்] வசதி இல்லை. இரு சக்கர வாகனங்களில்தான் வந்தாகவேண்டும். நேற்றைக்கு வண்டி நிறுத்துமிடத்தில் இருந்த வண்டிகள் வெகு சொற்பம். எந்தத் தள்ளுமுள்ளும் இல்லாமல், ஓடாத படத்தின் காலைக்காட்சி தியேட்டர் ஸ்டாண்ட் மாதிரி காற்றோட்டமாக இருந்தது.

  • More buses should be plied for the convenience of book lovers to reach the book fair venue. Earlier, when it was held in Govt Arts College, this was not at all an issue, now since the venue is quite far from South Chennai, it will be great if MTC runs special buses from depots in South Chennai and outskirts.

  • நல்ல வர்ணனையுடனான பதிவு. புத்தக காட்சி அல்லாத அடிப்படை தேவைகளின் வசதியைபற்றியும் எழுதியுள்ளீர்கள். – சென்னைத்தமிழன்

  • //அங்கே மேட்டர் கொடுக்க வருகிற என் பழைய சிநேகிதர் பரத்! நல்ல பத்திரிகையாளராக வரவேண்டும் என்று அப்போது அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். இப்படி சாமியாராகி, சொந்த பிசினஸில் இறங்குவார் என்று கனவில்கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை.//

    நல்ல வேளையாக அவர் பத்திரிக்கைக்காரராகவோ, அல்லது எழுத்தாளராகவோ ஆகவில்லை.

    அப்படி எழுத்தாளராக ஆகியிருந்தால் குழந்தைகளைக் கூட கொல்ல தயங்காத ஆபிரகாமிய தீவிரவாதிகளை நல்லவர்கள், வல்லவர்கள் என்று எழுதி பிழைக்கவேண்டி வந்திருக்கும்.

    அதற்குப் பதிலாக, அன்னை புவனேஷ்வரியை நம்பி, நம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்துங்கள் என்று சொல்லும் தொழில் சிறந்தது என்றுதான் பொதுமக்கள் நினைக்கிறார்கள்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி