பொலிக! பொலிக! 85

அது மடை திறந்த தருணமல்ல. மலை திரண்ட தருணம். திருமலையில் இருந்த அத்தனை பேரும் கோயில் வாசலில் வந்து கூடியிருந்தார்கள். செய்தி கேள்விப்பட்டு ஏழு மலைகளிலும் வசிக்கும் ஆதிவாசிகளும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். இத்தனைக் காலமாகத் தீராதிருந்த ஒரு பெரும் பிரச்னை இன்று முடிவுக்கு வந்துவிடும் என்று ராமானுஜர் சொல்லியிருக்கிறாராமே? அப்படி என்ன முடிவு கிடைத்துவிடப் போகிறது?

அனைவரும் காத்திருந்தார்கள். இருட்டுகிற நேரத்தில் உடையவர் தமது சீடர்களுடன் கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தார்.

‘வாரும் ராமானுஜரே. ஏதோ பிரமாதமான யோசனை இருக்கிறதென்று சொன்னீரே? அது என்ன?’

சிவாசாரியார்கள் கேட்டார்கள்.

‘யோசனை என்றுதான் சொன்னேன். பிரமாதமான யோசனை என்பது உங்கள் மனம் ஏற்ற வடிவம். எப்படியானாலும் அது நல்லதே. இதோ பாருங்கள், நீங்கள் சைவர்களாக இருக்கலாம். நாங்கள் வைணவர்களாக இருக்கலாம். அதோ அமர்ந்திருக்கும் ஆதிகுடி மக்கள் சக்தி வழிபாட்டை விரும்புவோராக இருக்கலாம். எது எப்படியானாலும் நாம் அனைவரும் நமக்கு மேலான ஒரு சக்தியை நம்புகிறவர்கள். உண்டா இல்லையா?’

‘ஆம். அதிலென்ன சந்தேகம்?’

‘இந்தக் கோயிலுக்குள் இருக்கிற தெய்வம் சிவனா விஷ்ணுவா என்று நாம் சண்டையிட்டுக்கொண்டிருக்க வேண்டாம். அவனே ஒரு தீர்ப்பு சொல்லட்டும்.’

‘அதைத்தான் ஐயா கேட்கிறோம். தெய்வம் எப்படிப் பேசும்?’

‘எப்படியோ பேசிவிட்டுப் போகட்டும். நமக்கென்ன அதைப் பற்றி? தேவை இருந்தால் கண்டிப்பாகப் பேசும். காஞ்சியில் எனது ஆசாரியர் ஒருவர் இருக்கிறார். அவருடன் பேரருளாளன் தினமும்தான் பேசிக்கொண்டிருக்கிறான். எப்படிப் பேசுகிறான், ஏன் பேசுகிறான் என்று நமக்குப் புரியாது. நம் அறிவுக்கு எட்டாத எதுவும் உண்மையில்லை என்று சொல்லுவது அறிவீனமல்லவா?’

‘ஏற்கிறோம் ராமானுஜரே. நீங்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குச் சம்மதம். தெய்வம் தன்னை யாராக வெளிப்படுத்திக்கொள்கிறதோ, அதை ஒட்டியே கோயில் நிர்வாகத்தைக் கொடுத்து விடுவோம்.’

‘மெத்த சரி. உங்கள் சிவனுக்கு உரிய சின்னங்களான மான், மழுவை எடுத்து வாருங்கள்.’ என்று அவர்களிடம் சொல்லிவிட்டுத் தனது சீடர்களை நோக்கி, ‘நீங்கள் சென்று சங்கு சக்கர சின்னம் ஒன்றை எடுத்து வாருங்கள்.’ என்று உத்தரவிட்டார்.

சின்னங்கள் வந்தன.

‘உடையவரே, இவற்றை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?’

‘நான் எதையும் செய்யப் போவதில்லை சுவாமி. இதோ சிவனுக்குரிய மான், மழு. அதோ விஷ்ணுவின் சங்கு சக்கரம். இரண்டையும் நீங்களே எடுத்துச் சென்று சன்னிதியில் பெருமான் பாதங்களில் வைத்துவிட்டு வாருங்கள். இரவு கதவைப் பூட்டிவிடுவோம். காலை சென்று உள்ளே பார்ப்போம்.’

‘பார்த்தால்?’

‘எந்தச் சின்னத்தை அவன் ஏற்கிறானோ அதை வைத்து அவன் யார் என்று தெரிந்துகொள்வோம்.’

‘புரியவில்லையே சுவாமி! பெருமான் என்ன செய்வான் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’

ராமானுஜர் ஒரு கணம் அமைதியாக இருந்தார். பிறகு சொன்னார். ‘இது வைணவத்தலம்தான் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை. அதே நம்பிக்கைதான் இது சைவத்தலம் என்பதில் உங்களுக்கும் உள்ளது. நமது நம்பிக்கைகளுக்கு அப்பால் உள்ளதன் பெயர்தான் உண்மை. உண்மையை உலகுக்கு உணர்த்துவது அவன் பணியல்லவா? அதை அவன் சரியாகச் செய்தால்தானே அவன் தெய்வம்? அவன் செய்வான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கும் அதே நம்பிக்கை இருக்குமானால் நான் சொன்னபடி செய்யுங்கள்!’ என்றார் ராமானுஜர்.

சிறிது நேரம் அனைவரும் ராமானுஜர் சொன்னதை விவாதித்தார்கள். விளைவு என்னவாக இருக்கும் என்று யாருக்கும் புரியாத சூழலில், அந்த யோசனையை வேண்டாம் என்று ஒதுக்கவோ, சரிதான் என்று ஏற்கவோ யாருக்கும் முழு மனமில்லை. இருந்தாலும், இந்த விதத்திலேனும் ஒரு சரியான விடை கிடைத்துவிட்டால் நல்லதுதானே என்று நினைத்தார்கள். உடையவர் சொன்னபடி சிவச் சின்னங்களையும் விஷ்ணுவின் சின்னங்களையும் ஏந்திச் சென்று பெருமானின் பாதங்களில் வைத்தார்கள்.

‘காலை கதவு திறக்கிறோம். உன்னை அப்போது நீ அடையாளம் காட்டு!’ என்று வேண்டிக்கொண்டு நடை சாத்திவிட்டு வெளியே வந்தார்கள். வரிசையாகக் கோயிலின் அனைத்துக் கதவுகளும் இழுத்துப் பூட்டப்பட்டன. பிரதான வாயிலுக்கு வெளியே வந்ததும் அந்தக் கதவும் இழுத்துப் பூட்டப்பட்டது.

ராமானுஜரும் சீடர்களும் கதவருகே ஒருபுறம் அமர்ந்தார்கள். எதிர்ப்புறம் சிவாசாரியர்களும் பிற சைவர்களும் அமர்ந்தார்கள். ஆதிகுடி மக்கள் ஆர்வம் தாங்கமாட்டாதவர்களாக இருபுறமும் பரவி அமர்ந்தார்கள்.

‘ஐயா, இறைவன் தன்னை நிரூபிப்பானா? இது நம்பமுடியாத விஷயமாக உள்ளதே?’

‘நிரூபணம் என்பது அற்பர்களான நாம் நினைத்துக்கொள்வதுதான். அவன் தன் இயல்பை, தன் சொரூபத்தைக் காட்டுவான் என்பதுதான் உண்மை. அதற்கான அவசியம் இருப்பதாக அவன் நினைத்தால் கண்டிப்பாக அவன் அதைச் செய்வான். வேண்டியது நம்பிக்கை மட்டுமே! அனைவரும் கண்மூடி அவனை வேண்டுங்கள்!’

சொல்லிவிட்டு உடையவர் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். ‘பெருமானே! இது உன் கோயில். ஆழ்வார்கள் பாடிய அற்புதத் தலம். காலகாலமாக இருந்து வரும் இந்நம்பிக்கை உண்மையானால் நாளைக் காலை அதை நீ இந்த சிவாசாரியார்களுக்கு எடுத்துச் சொல்லு. என்னால் கேட்கத்தான் முடியும். செய்ய வேண்டியது நீதான். நீ மட்டும்தான்.’

இரவெல்லாம் அவர்கள் விழித்திருந்தார்கள். எல்லா இரவுகளையும்போல் அந்த இரவும் விடிந்தது. விழித்திருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றார்கள். ராமானுஜரும் எழுந்தார்.

‘உள்ளே செல்லலாமா சுவாமி?’

‘ஆம். நேரமாகிவிட்டது. கதவைத் திறவுங்கள்.’

கோயில் கதவு திறக்கப்பட்டது. சைவர்களும் வைணவர்களும் சக்தி வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட ஆதிகுடிகளும் கோயிலுக்குள் நுழைந்தார்கள். அனைவர் முகத்திலும் பதற்றம். நடையில் பரபரப்பு.

‘உடையவரே, இப்போதும் கேட்கிறோம் என்று தவறாக எண்ணாதீர்கள். பெருமான் ஒருவேளை நமக்கு இன்று எதையும் உணர்த்தவில்லை என்றால்?’

ராமானுஜர் புன்னகை செய்தார். ‘அதையும் பார்த்துவிடுவோமே!’

சன்னிதி திறக்கப்பட்டது. அர்ச்சகர் ஒருவர் உள்ளே சென்று திருவிளக்கை ஏற்றினார். ஒரு புறம் ஹரஹர மகாதேவா என்ற கோஷம். மறுபுறம் நாராயணா என்னும் நாமம். அனைவர் கரங்களும் மேலெழுந்து குவிந்திருந்தன. ராமானுஜர் மட்டும் கண்மூடியே நின்றிருந்தார்.

‘அர்ச்சகரே, கற்பூரம் காட்டுங்கள்!’ யாரோ கத்தினார்கள்.

அர்ச்சகர் கற்பூரத்தை ஏற்றி பெருமானை நோக்கி நீட்ட, வெளிச்சத்தில் அது பளிச்சென்று தெரிந்தது.

பெருமான் சங்கும் சக்கரமும் ஏந்தியிருந்தான்! மானும் மழுவும் வைத்த இடத்திலேயே இருந்தன.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter