பொலிக! பொலிக! 84

வந்திருப்பது எளிய சிக்கல் அல்ல. சிக்கலுக்கு உள்ளாகியிருப்பது சராசரி மக்களும் அல்ல. இது மக்களால் எம்பெருமானுக்கு நேர்ந்திருக்கிற சிக்கல். அடையாளச் சிக்கல். அறிவின்மீது படிந்த பூஞ்சையால் விளைவது. ஆத்திர அரசியல்களால் முன்னெடுக்கப்படுவது. ஒரு மன்னன் கடிதம் எழுதுகிறான். என்னால் இச்சிக்கலைத் தீர்க்க முடியவில்லை; நீங்கள் பார்த்து ஏதாவது செய்யுங்கள் என்று கெஞ்சுகிறான். என்றால் என்ன அர்த்தம்?

மதம் கூர்மையானது. உணர்வுகளின் அடியாழங்களில் நேரே சென்று தைக்கக்கூடியது. மதம் சார்ந்த நம்பிக்கைகளும் அவ்வாறே. இது ஒரு பவுத்தத்தோடோ, சமணத்தோடோ மோதுவதல்ல. ஹிந்து மதத்துக்குள்ளேயே இரு பிரிவினரின் அசைக்க முடியாத நம்பிக்கைகளை முன்வைத்து அலச வேண்டிய விவகாரம்.

‘சுவாமி, பரம்பொருளான ஶ்ரீமன் நாராயணனே அல்லவா திருமலையில் எழுந்தருளியிருக்கிறான்? எதற்காக இவர்கள் இப்படி மாற்றிப் பேசுகிறார்கள்? ஆழ்வார்கள் பாடியிருப்பது ஒன்றே போதாதா?’ என்றார்கள் சீடர்கள்.

‘பேசிப் பார்ப்போமே?’ என்று சொல்லிவிட்டு ராமானுஜர் திருமலைக்குப் புறப்பட்டார்.

கோயில் பிரச்னையைப் பேசுவதற்காக ராமானுஜர் வருகிறார் என்று தெரிந்ததுமே மலை மீதிருந்த சிவாசாரியார்கள் பரபரப்பானார்கள். சைவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ராமானுஜரை எதிர்த்து நிற்க முடிவு செய்து கூடினார்கள். அவர்களுக்கு ராமானுஜரைத் தெரியும். அவரது பராக்கிரமங்கள் தெரியும். தேசமெங்கும் அவர் வாதில் வீழ்த்திய பண்டிதர்களைப் பற்றிய கதைகளை அவர்கள் கேட்டிருந்தார்கள். அனைத்துக்கும் மேலாக கோவிந்தன்!

காளஹஸ்தி சிவாலயத்துடன் சேர்த்தே எண்ணப்பட்ட மாபெரும் சிவபக்தர். எத்தனை ஆண்டுகள்! எத்தனை ஆண்டுகள் அங்கே சிவஸ்மரணையில் தவம் கிடந்திருப்பார்! அது வெறும் பக்தியல்ல. கண்மூடித்தனமான பக்தியல்ல. கோவிந்தன் மெத்தப் படித்தவர். பெரிய ஞானஸ்தர். தன் இருப்பும் இடமும் தீர்மானத்தின் நித்தியமும் உணர்ந்தவர். அப்பேர்ப்பட்ட மகா யோகியே மனம் மாறி வைணவத்தைத் தழுவக் காரணமாயிருந்தவர் வருகிறார் என்றால் இது சிறிய விஷயமல்ல.

கோவிந்தன் திருமலையில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த போதெல்லாம் அவரை அந்த சிவாசாரியர்களுக்கு நன்கு தெரியும். சைவத்தை விடுத்து அவர் வைணவம் ஏற்ற அனுபவத்தை எத்தனையோ முறை அவர் சொல்லியே கேட்டிருக்கிறார்கள். இன்று உடையவருடன் அவரும் வருகிறார். பிரம்ம சூத்திர உரை எழுதி முடித்த கையோடு பாரதமெங்கும் நடந்தே சென்று வைணவ தருமத்தை நிலைநாட்டித் திரும்பி வருகிற அணி. காஷ்மீரம் வரை சென்று வென்ற மகாபுருஷர் தலைமையில் வருகிற அணி. எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

அவர்கள் கூடிக் கூடிப் பேசினார்கள். புராண, சரித்திர, சமகால உதாரணங்களும் சம்பவங்கள் சுட்டும் ஆதாரங்களுமாகத் தங்கள் தரப்புக்கு நியாயம் சேர்க்க என்னென்னவோ சேகரித்து வைத்தார்கள்.

‘என்ன ஆனாலும் சரி, யார் சொன்னாலும் சரி. நாம் கோயிலை விட்டுக் கொடுக்கக்கூடாது. திருமலையில் உள்ளது சிவாலயம்தான். இங்குள்ள பெருமான் பரமசிவனேதான்.’ அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.

ராமானுஜர் தமது குழுவினருடன் மலைக்கு வந்து சேர்ந்தபோது அவர்கள் வாதத்துக்குத் தயாராக நின்றார்கள்.

‘வாரும் ராமானுஜரே! கோயிலை அபகரிக்க வந்தீரா?’

‘அபசாரம். இது எம்பெருமான் ஶ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். ஆழ்வார் பழியாய்க் கிடந்து பவளவாய் கண்ட இடம். என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்!’

‘அதானே பார்த்தோம். உமது எம்பெருமான் இங்கே இல்லை சுவாமி. இக்குன்றில் இருப்பது குமரனின் தகப்பன். மருந்துக்கும் இங்கே வைணவ ஆலயச் சின்னம் என்று ஏதும் கிடையாது. தாழ்சடையும் நீள்முடியும் கொண்ட பெருமானைப் பாரும். வில்வார்ச்சனை நடக்கிற விதம் பாரும். கோயில் மதில் சுவரில் உள்ள சிங்கத்தைப் பாரும். அது சக்தி ரூபம். அனைத்தையும் ஒதுக்கிவிட்டுப் பெருமானுக்கு ஒரு திருமண் இட்டு முகத்தை மறைத்துவிட்டால் கதை முடிந்துவிடுமா?’

ராமானுஜர் நிதானமாக அவர்களிடம் தம் வாதங்களை எடுத்து வைத்தார். காலம் நிர்ணயிக்க முடியாத கோயில். பரிபாடல் புலவர்களில் இருந்து முதலாழ்வார்கள் வரை பாடியதைக் கொண்டே இது ஒரு புராதனமான வைணவ ஆலயம் என்பதைக் கண்டுகொள்ள வேண்டும். ஒன்றல்ல, இரண்டல்ல. பத்து ஆழ்வார்கள் ஒரு சிவன் கோயிலை மங்களாசாசனம் செய்திருப்பார்களா? தவிரவும் சடையும் முடியும் சிவனுக்கு மட்டுமே உரியது என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதம்.

ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார். ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொன்னார். எதிர்வாதங்களுக்கு நிதானமாக பதில் சொன்னார். இங்கே பொறுமைதான் அவசியம்.

‘சிவ பக்தர்களே, நான்காம் நூற்றாண்டுப் பல்லவர்களும் ஐந்திலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு ஆண்ட சோழ யாதவர்களும் இதனை ஒரு சிவாலயமாகக் கருதி வழிபட்டதில்லை. சரித்திரத்தில் அப்படி ஒரு குறிப்பு கூட இல்லை. இது விஷ்ணுவின் ஆலயம் என்று அறிந்துதான் அவர்கள் வழிபட்டிருக்கிறார்கள், கைங்கர்யங்கள் செய்திருக்கிறார்கள். திடீரென்று ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறீர்கள்?’

‘பல்லவர்களும் சோழர்களும் இதை விஷ்ணு ஆலயமாகத்தான் கருதினார்கள் என்பதை உம்மிடம் சொன்னார்களா? கோயிலுக்குச் செய்த கைங்கர்யங்களைக் கல்வெட்டில் பதித்தவர்கள் எங்காவது இது ஒரு வைணவத்தலம்தான் என்று சொல்லி வைத்திருக்கிறார்களா என்று எடுத்துக் காட்டும் பார்ப்போம்!’

வாதம் வாரக் கணக்கில் நீண்டுகொண்டே போனது. அவர்களுக்குத் தெரியும், அது ஒரு வைணவ ஆலயம்தான் என்று. ஆனால் விட்டுக் கொடுக்க யாரும் விரும்பவில்லை. உள்ளே இருக்கும் தெய்வத்தை சிவனென்று நம்பி அவர்கள் பூஜை செய்துகொண்டிருந்தார்கள். பிரச்னை வந்தபோது அதுவும் நின்றுபோனது. மன்னன் தலையிட்டும் தீராத பிரச்னை.

‘இது தீர்க்க முடியாதது ஓய். நீர் கிளம்பி ஊர் போய்ச் சேரும். இது சிவாலயம்தான். நடந்தால் சிவபூஜைதான் நடக்கும். இல்லாவிட்டால் பெருமானுக்குப் பூஜையே கிடையாது!’ தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.

ராமானுஜர் யோசித்தார். கண்மூடிச் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு, ‘சரி. ஒன்று செய்வோமா? இது சிவாலயமா, விஷ்ணுவின் ஆலயமா என்று நாம் முடிவு செய்ய வேண்டாம். உள்ளே இருக்கிற பெருமானே தான் யாரென்பதை நிரூபித்துக்கொள்ளட்டும்.’

திடுக்கிட்டது கூட்டம். ‘அதெப்படி சாத்தியம்? பெருமான் வாய் திறந்து பேசவா செய்வான்?’

‘பேசுகிறானோ, உணர்த்துகிறானோ. பொறுப்பை அவனிடமே விட்டுவிடுவோம். கிடைக்கிற பதில் போதுமா உங்களுக்கு?’

‘அவன் தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்வான் என்றால் அதை நாங்கள் ஏன் மறுக்கப் போகிறோம்? பெருமானே சொல்லிவிட்டால் மறுபேச்சு கிடையாது.’

‘அப்படியானால் இன்றிரவு இப்பிரச்னைக்கு ஒரு முடிவு தெரிந்துவிடும்!’ என்றார் ராமானுஜர்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter