‘உண்மையாகவா?’ நம்பமுடியாமல் கேட்டான் மன்னன் கட்டிதேவ யாதவன்.
‘ஆம் மன்னா. எங்களாலேயே நம்ப முடியவில்லை. இரவு சன்னிதிக்குள் சிவச் சின்னங்களையும் விஷ்ணுவின் சின்னங்களையும் பெருமான் திருவடிகளில் வைத்துவிட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு வந்தது நாங்கள்தாம். கோயிலுக்குள் ஒரு ஈ, கொசுகூட இல்லை என்பதை உறுதி செய்த பிறகே கதவைப் பூட்டினோம். விடிய விடிய நாங்களும் ராமானுஜரும் கோயில் வாசலிலேயேதான் அமர்ந்திருந்தோம். உள்ளே சென்று பார்த்தால் பெருமான் கரங்களில் சக்கரமும் சங்கும் காட்சியளிக்கின்றன. இனி இதில் வாதத்துக்கு இடமில்லை. அது மகாவிஷ்ணுதான். திருமலை ஒரு வைணவத் தலம்தான்.’
சொல்லிவிட்டு வணங்கி விடைபெற்றுப் போனார்கள் சைவர்கள்.
மன்னன் உடனே தனது பரிவாரங்களுடன் கிளம்பினான். பல்லக்குத் தூக்கிகள் மன்னனைச் சுமந்துகொண்டு பாதையற்ற மலைப் பாதையில் ஓட்டமாக ஓடினார்கள். அதற்குமுன் மன்னர் மலைக்கு வந்துகொண்டிருக்கிறார் என்ற விவரத்தை மேலே உள்ள ராமானுஜரிடம் தெரிவிக்க நாலைந்து வீரர்கள் விரைந்துகொண்டிருந்தார்கள்.
மறுநாள் மதிய நேரம் கட்டிதேவ யாதவன் திருமலை வந்தடைந்தான். நேரே ராமானுஜரைச் சந்தித்து கைகூப்பி வணங்கினான்.
‘இதற்காகத்தான் சுவாமி தங்களை இந்த விஷயத்தில் தலையிடச் சொன்னேன். ஆண்டாண்டுக் காலமாக இருந்து வந்த பெரும் குழப்பம் இன்று நீங்கிவிட்டது. திருமலையப்பனுக்கு இனி பூஜைகள் தடைபடாது. உற்சவங்கள் தடைபடாது. என் பெரிய கவலை விட்டது! உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?’
ராமானுஜர் புன்னகை செய்தார்.
‘உங்களிடம் எனக்கு இன்னொரு கோரிக்கை இருக்கிறது சுவாமி.’
‘சொல் மன்னனே.’
‘நீங்கள் உடனே ஊருக்குக் கிளம்பிவிடாதீர்கள். இங்கேயே சிறிது காலம் இருந்து கோயில் நடைமுறைகளை ஒழுங்கு செய்து கொடுத்தால் நல்லது என்று படுகிறது. இனி எக்காலத்திலும் இங்கு சமயச் சண்டைகள் வரக்கூடாது. அதேபோல் வழிபாட்டு முறையில் நெறிகள் வகுக்கப்பட வேண்டும். எக்காலத்துக்கும் அதுவே நிரந்தரமாகவும் இருக்க வேண்டும்.’
ராமானுஜர் அதைச் செய்தார். திருமலையிலேயே சிலகாலம் தங்கியிருந்து வைகானச ஆகம முறைப்படி கோயில் இயங்க வழி செய்து கொடுத்தார். ஆனந்த நிலைய விமானம் அமைத்தது, வாரம் தோறும் வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் என்று ஏற்பாடு செய்தது, வியாழன் மட்டும் பூ அலங்காரத் தோற்றம் என்று நியமித்தது, நாச்சியார் திருமொழி பாடுகிற வழக்கம் ஏற்படுத்தியது, பெருமானுக்கு பூஜை தொடங்குமுன் வராக சுவாமிக்கு முதல் பூஜை என்னும் புராதனமான வழக்கத்தை மீளக் கொண்டுவந்தது, இன்னும் எத்தனையோ. பெருமாளின் நெற்றியில் பட்டையாகச் சுடர்விடும் பச்சைக் கற்பூரத் திருமண்ணை அறிமுகப்படுத்தியதும் அவரேதான்.
கட்டிதேவ யாதவன் நெஞ்சம் குளிர்ந்து போனான். ‘சுவாமி! தாங்கள் என் வேண்டுகோளை ஏற்றுத் திருமலையில் தங்கியது நாங்கள் செய்த புண்ணியம். பதிலுக்கு நான் தங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் என்று தெரியவில்லை.’
ராமானுஜர் புன்னகை செய்தார். ‘அவசியம் கைம்மாறு செய்யத்தான் வேண்டுமா?’
‘செய்ய முடிந்தால் மகிழ்வேன் சுவாமி.’
‘அப்படியானால் தில்லை கோவிந்தராஜனைத் திருமலை அடிவாரத்தில் கோயில் கொள்ள வழி செய்வாயா ராஜனே?’
கட்டிதேவனுக்குப் புரியவில்லை. தில்லைக்கும் திருமலைக்கும் என்ன தொடர்பு? ‘நான் செய்யக்கூடிய எதுவானாலும் தயங்காமல் செய்வேன் சுவாமி. ஆனால் எனக்குத் தாங்கள் சொல்வது புரியவில்லை. தயவுசெய்து விளக்க வேண்டுகிறேன்.’
ராமானுஜர் சொல்லத் தொடங்கினார். குளறுபடியாகிக்கொண்டிருக்கிற சோழர் சாம்ராஜ்ஜியத்தின் இறுதிக் காலம் நடந்துகொண்டிருக்கிறது. ஆட்சியில் காட்டவேண்டிய அக்கறையை மத துவேஷத்தில் காட்டிக்கொண்டிருக்கிறான் குலோத்துங்கன். சைவம் தழைக்க வேண்டுமென்று எண்ணுவது தவறில்லை. அதற்காக வைணவ ஆலயங்களை எதற்கு முடக்க வேண்டும்? ஆனால் அவன் அதைத்தான் செய்கிறான். அதுவும் ஆத்மசுத்தியுடன். தில்லை கோவிந்தராஜப் பெருமாள் அநாதியானவர். ஒரு விதத்தில் திருமலை வேங்கடவனுக்கு அண்ணா முறை. இங்கே வேங்கடவன் சிக்கல்கள் நீங்கி சௌக்கியமாக இருக்கிறான். அவனது அண்ணாவுக்கோ அமர்ந்து அருளாட்சி புரிய ஒரு கோயில் இல்லை.
‘ஐயோ!’ என்று நெஞ்சில் கைவைத்தான் கட்டித்தேவன்.
‘மன்னா! திருமலை அடிவாரத்தில் காட்டுக்கு நடுவே இருக்கு விஷ்ணு கோயில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அந்தக் கோயிலை உன்னால் புனருத்தாரணம் செய்ய முடியுமா? நான் கோவிந்தராஜரை அங்கே எழுந்தருளச் செய்கிறேன். வேங்கடவனின் அண்ணாவுக்குத் திருமலை அடிவாரத்திலேயே நாம் இருக்க ஓர் இடம் உருவாக்குவோம். கோயிலைச் சுற்றி ஒரு நகர் நிர்மாணிப்போம். சோழன் ஒதுக்கிய தெய்வத்தை நீ கொண்டாடத் தயாரென்றால் காலகாலத்துக்கும் உன் பெயர் நிலைத்திருக்கும்!’
‘உத்தரவிடுங்கள் சுவாமி. இதைவிடப் பெருமகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் எனக்கு வேறில்லை. எப்போது கோவிந்தராஜர் இங்கே வருவார் என்று மட்டும் சொல்லுங்கள். அதற்குள் நான் நகரத்தை எப்படி நிர்மாணிக்கிறேன் என்று பாருங்கள்!’
கண்மூடித் திறக்கும் நேரத்தில் உத்தரவுகள் பறந்தன. திருமலை அடிவாரத்தில் இருந்த பெரும் கானகம் திருத்தி அமைக்கப்பட்டது. பாழடைந்து, கேட்பாரற்றுக் கிடந்த பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் இடிபாடுகள் சரி செய்யப்பட்டன. எங்கெங்கிருந்தோ ஆட்கள் வேலைக்கு வந்தார்கள். கற்களும் மண்ணும் மலையெனக் கொண்டு குவிக்கப்பட்டன. இரவு பகல் பாராமல் பணி நடந்தது. தீரத் தீர மன்னன் பொன்னும் மணியும் அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தான்.
கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கான அடிப்படை வடிவத்தைத் தீர்மானித்து அளித்தது உடையவர்தான். மேலிருந்து பார்த்தால் ஒரு கிருஷ்ணப் பருந்தின் தோற்றத்தில் இருக்கிற கோயில்.
‘பக்தர்கள் எப்போது கோயிலுக்கு வந்தாலும் பிரசாதம் இல்லாமல் இருக்கக்கூடாது’ என்றார் ராமானுஜர். ‘இங்கே திருப்தியாகப் பிரசாதம் சாப்பிட்டுவிட்டுப் பசியின்றி மலையேறட்டும்.’
‘உத்தரவு சுவாமி. தங்கள் விருப்பம் என்றும் தொடரும்.’ என்றான் கட்டித்தேவன்.
நல்ல நாள் பார்த்து கோவிந்தராஜ பெருமாளைத் திருமலை அடிவாரத்துக்கு எழுந்தருளச் செய்தார் உடையவர். கோலாகல உற்சவம். ஆரவாரமான குடமுழுக்கு. ‘எம்பெருமானே! என்றென்றும் இங்கிருந்து ஏழுலகையும் காத்து நில்!’ மனம் குவிந்து வேண்டினார்.
மன்னனுக்குப் பெருமகிழ்ச்சி. மக்களுக்குத் திகட்டாத பேரானந்தம். ‘ராமானுஜரே, நீங்கள் இங்கேயே இருந்துவிட மாட்டீர்களா?’ ஏங்கிப் போய்க் கேட்டார்கள்.
‘அது சிரமம். நமது பணி திருவரங்கத்தில் உள்ளது. அரங்கன் திருப்பணிக்குக் காலமும் அரசும் சாதகமாக இல்லாத சூழலில் நான் இத்தனை ஆண்டுகள் வெளியேறிக் கிடந்ததே தவறு.’
விடைபெற்றுக் கிளம்பினார். திருவரங்கம் வந்து சேர்ந்தபோது நிலவரம் அவர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சற்றுக் கலவரமாகித்தான் இருந்தது.
(தொடரும்)