பாரா – ஒரு மதிப்புரை : ஆர். அபிலாஷ்

ஒரு படைப்பாளியாக பா. ராகவனைப் பற்றி சொல்ல சில நல்ல விசயங்கள் உள்ளன:
1) பா.ரா போனில் யாரைப் பற்றியும் புறம் பேச மாட்டார். அழுத்தமான கருத்துக்களை சொல்வதுடன் நிறுத்திக் கொள்வார். வயிற்றெரிச்சல், பொச்சரிப்பு போன்ற இலக்கிய அரசியல் ஆவலாதிகள் இல்லாதவர்.
2) தன் இயலாமைகள் குறித்த புகார்களை பகிர மாட்டார்.
3) நான் தான் தமிழ் எழுத்துலகின் ஒரே உலக நாயகன் என நிமிடத்துக்கு 60 தடவை சொல்ல மாட்டார். (இதையெல்லாம் ஒரு நல்லியல்பாக இங்கு நான் எடுத்துரைக்க காரணம் இவை தமிழ் இலக்கிய உலகில் அரிதான சங்கதிகள் என்பதே.)
4) பா. ராவுக்கு எழுத்து தன் பணி, தன் அடிப்படை செயல்பாடு, ஒருவித தேடல் எனும் நம்பிக்கை உண்டு. காலை நடை போவது போல, பொங்கல், வடை, சட்னி சாப்பிடுவது போல எழுத்துப் பணியையும் வைத்துக் கொள்கிறார். அதை மிகையாக அனாவசிய அலங்காரங்களுக்கு உட்படுத்துவது இல்லை. தொடர்ச்சியாக நிறைய எழுத இந்த அணுகுமுறை அவருக்கு பயன்படுகிறது.
5) தமிழில் வெகுமக்கள் எழுத்துக்கும் இலக்கிய எழுத்துக்கும் இடையே ஒரு நூலேணி உள்ளது. அதில் கவனமாக அடி மேல் அடி வைத்து மேலேறி சென்று கொண்டிருப்பவர் அவர். இந்த தெளிவு அவருடைய பலம்.
6) எந்த நாவலையும் அதன் வடிவம், தொழில்நுட்பம் சார்ந்து நுணுகி வாசிக்கிற இயல்பு அவருக்குண்டு. இதுவே தன் நாவலில் பல பரீட்சார்த்த முயற்சிகளை செய்ய அவருக்கு வெகுவாக உதவுகிறது. அதாவது தமிழில் வழக்கமாக நடப்பது போல உணர்ச்சிகரமாக மட்டும் அவர் ஒரு புனைவை படிப்பதில்லை. புறவயமான தெளிவான மதிப்பீடுகளை தான் வாசிக்கும் படைப்புகளின் வடிவம் சார்ந்து வைத்திருக்கிறார் என நினைக்கிறேன்.
7) இது நான் புனைவெழுத்து வகுப்பை நடத்திய போது மாணவர்களுக்கு பரிந்துரைத்து வந்த ஒரு விசயம்: நமக்கு இயல்பாக கட்டுரைகளில், கடிதங்களில், பேச்சில் வருகிற மொழியை புனைவிலும் பயன்படுத்தினால் நல்லது. புனைவில் சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்து, நடையை செறிவாக்கலாம். ஆனால் முற்றிலும் மாற்றினால் நாம் வேறு யாரையோ போலச் செய்கிறோம் எனப் பொருள். பா.ரா இவ்விசயத்தில் அசோகமித்திரனின் பிரதான சீடர்: அவருடைய கட்டுரை மொழியை பெரிய மாற்றங்கள் இன்றி அப்படியே நாவலில் கொண்டு வருகிறார். கற்பனையும், பின்நவீன ஆள்மாறாட்டங்கள், ஜித்து வேலைகள் அதை ஒரு நாவலாக்கி விடுகின்றன.
8. பா.ரா உணர்ச்சிகரமான எழுத்தாளர் அல்ல. சதா சிவந்த கண்கள், புடைத்த நரம்புகள், அழுகை, ஆவேசம், ஓலம் என ரத்தக்களரியாக எழுத மாட்டார். உணர்ச்சிகரமான அலைகழிப்புகள் அவருடைய அகச்சித்தரிப்புகளில் உண்டு, ஆனால் இதையும் விட்டேத்தியான தொனியில் தான் எழுதுவார். தக்காளியை அப்படியே அழுத்திப் பிசைந்தால் பீய்ச்சி முகத்தில் அடிக்குமே அப்படி மொழியை பயன்படுத்த மாட்டார். செய்வது சிக்கன் பிரியாணி என்றாலும் பா.ராவின் “சமையலறை மேடை” எப்போதும் சுத்தமாக அமைதியாக இருக்கும். இந்த விதத்தில் அவர் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க படைப்பாளிகளை ஒத்தவர்.
9) பா.ரா எழுதுவது 100% இலக்கியமா? ஆம், ஆனால் அவர் அகம் சார்ந்த உலகை புறவயமாக சின்னச்சின்ன வாக்கியங்கள் வழியாக சித்தரிக்க முயல்பவர். அதனாலே அவருடைய 1000 பக்க நாவலைக் கூட மூன்று நாட்களில் அலுப்பின்றி நீங்கள் வாசிக்க முடியும். அதே நேரத்தில் ஆழமாக பயணிக்க வேண்டிய இடங்களை இடப்பக்கம் இண்டிகேட்டர் போட்டு வலப்பக்கம் வண்டியைத் திருப்பி தவிர்த்து விடுவார். இந்த புறவய எழுத்தே அவரது வலிமையும் பலவீனமும். இந்த தனக்கே ஆன பாதையில் முழுவேகத்தில் வண்டியை செலுத்தி ஆன்மீகம், உளவியல், மதம், அகத்தேடலாலான வாழ்க்கைகளை, சமகால அபத்தங்களை பிரம்மாண்டமாக சித்தரித்துள்ளதே அவருடைய சாதனை.
10) நான் நாகார்ஜுனர் உரைகளுக்காக மெனெக்கெட்ட, ஹைடெக்கர் வாசிப்பில் ஆழ்ந்து கிடந்த நாட்களில், தத்துவம் பயில்வது உன் வேலையல்ல, புனைவெழுது என்று என்னை திட்டுவார் பா.ரா. அதை (என் வழக்கப்படி) அப்போது பொருட்படுத்த வேண்டாம் என நினைத்தாலும் சில நாட்களில் நாவலுக்கு திரும்பி விடுவேன். என் உபமனம் அவருக்கு ஒரு தனி இடம் கொடுத்துள்ளது என பின்னர் நான் புரிந்து கொண்டென்.

பா.ரா இன்னும் பல அற்புதமான படைப்புகளை நமக்கு தரட்டும்! அவருக்கு பிறந்த நாள்

வாழ்த்துகள்

!

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

Add comment

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading