புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை குறித்து நிறைய படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம். சில பலருடன் பழகவும் செய்கிறோம். என்றாவது அந்த வாழ்க்கையை, அதன் சிரமங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறோமா? குடியுரிமை பெற்று இன்னொரு தேசத்தில் வாழ்வது வேறு. அகதி வாழ்க்கை என்பது வேறு. அதிலும், நகரில் வாழும் அகதிகளின் வாழ்வும் முகாம்களில் வாழ்வோரின் வாழ்வும் வேறு.
வாசு முருகவேலின் ‘மூத்த அகதி’, சென்னையின் ஒன்றிரண்டு பேட்டைகளில் வசிக்கும் ஈழ அகதிகளின் வாழ்க்கையைப் பேசுகிறது. சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிறம் உண்டு. வாசனையும் உண்டு. உங்கள் நாசி சரியாக இயங்குகிறது என்றால் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டின் வாசனைக்கும் விருகம்பாக்கம் மார்க்கெட்டின் வாசனைக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியும். அது கேகே நகர் சரவண பவன் காப்பிக்கும் அசோக் நகர் சரவண பவன் காப்பிக்கும் உள்ள ருசி பேதம் நிகர்த்தது. வேறு வேறு உணவகங்கள் அல்ல. ஒரே உணவகம்தான். வேறு வேறு கிளைகள். ஒன்றிரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளவை. காப்பியின் ருசி, மாஸ்டரின் கைத்தரம்.
காப்பிக்கும் வாழ்க்கைக்கும் என்ன பெரிய வித்தியாசம்? அகதி வாழ்வே என்றாலும் ஐரோப்பிய தேசங்களில் உள்ளதற்கும் சென்னையில் உள்ளதற்கும் இருக்கக்கூடிய இடைவெளி புரியக் கூடியதே.
ஆனால் அகதி என்பது ஒரு ஸ்டிக்கர்தான். பிய்க்காதிருந்து, பிய்க்க முடியாது போகிற அவலம் அகதி அல்லாதோருக்குப் புரிவது சிரமம். ஆயினும், மனிதர்களல்லவா? உணர்ச்சிகள் உண்டல்லவா. ஆசைகள், கனவுகள், விருப்பங்கள், ஏக்கங்கள், லட்சியங்கள் எல்லாம்தான். இன்னொரு மண்ணின் நெடிக்குப் பழகி, அதைத் தனதாக்கிக் கொள்ளவும் முடியாமல் மீட்சி கொள்ளவும் வழியற்றுப் போகிறபோது வாழ்க்கை சார்ந்த பார்வையில் ஒரு வறட்சி தோன்றுகிறது. கலைஞன் அதில் சிறிது ஈரத்தைத் தக்க வைக்கப் பாடுபடுகிறான். அது இருள் புன்னகையாகிறது.
இந்நாவலின் மிக முக்கிய அம்சமாக நான் கருதுவது, ஒரு மண்ணின் பண்பாடு, கலாசார அடையாளங்கள் இன்னொரு மண்ணின் பண்பாடு மற்றும் கலாசார அடையாளங்களில் இரண்டறக் கலக்கவும் முடியாமல் தனித்திருக்கவும் முடியாமல் தத்தளிப்பதன் குரூரக் கவித்துவம். காலம் தோறும் பல்வேறு தேசங்களில் பல்வேறு மக்கள் அகதிகளாக்கப்படும்போது இது நிகழும். பாலஸ்தீன், சிரியா, ஆப்கனிஸ்தான் எங்கில்லை? யுத்தங்களும் அவற்றின் நோக்கங்களும் விடுதலை வேட்கையுமேகூடப் பொருள் இழந்து ஓய்ந்து போய்விடுகின்றன. பாதிப்புக்கு உள்ளானோரின் வேதனை ஒன்றே கந்தல் சாட்சியமாக மிச்சம் இருக்கிறது.
வாசுவின் பலம், தீவிரமான விஷயங்களைப் பேசும்போது அவருக்கு மிக இயல்பாக வருகிற அங்கதம். முன் சொன்ன இருள் புன்னகையின் ஊற்று. நாவலின் பல இடங்கள் சட் சட்டென்று ஆவணத் தோற்றம் கொண்டுவிடுகிறபோது – அது பிழையில்லை என்றாலும், இந்த அங்கதமே இந்நாவலை நிறுத்தாமல் வாசித்து முடிக்க வைக்கிறது.
நாவல் என்ற வடிவம் சார்ந்து இதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் அது பொருட்படுத்தத் தகுந்ததல்ல. பிசிறுகளற்ற கலை என்ற ஒன்றில்லை. ஏனெனில் வாழ்க்கை பிசிறுகளற்று இருப்பதில்லை. வாசுவின் முந்தைய நாவல்களைக் காட்டிலும் (நான் புத்திரன் மட்டும் இன்னும் படிக்கவில்லை) இது அழுத்தமாக வந்திருக்கிறது என்பது என் அபிப்பிராயம்.
மூத்த அகதி | வாசு முருகவேல் | ஜீரோ டிகிரி பப்ளிஷிங் |நூலை வாங்க
அகதி..படித்தேன்..புரிகிறது.! ஆனால் உறவுகள்/ நண்பர்கள் .. குறிப்பாக மனைவி. நம் (கணவன்) ப்ரச்சனைகளை புரிந்து கொள்கிறார்களா! என்றால்..இல்லை ..பல நேரம் / விஷயங்களில் விட்டு கொடுப்பது என வாழ்ந்து ..S அகதியாய்/ மனதளவில் / சமூகத்தில்…நட்புகளும் நம்மை அகதியாக்கி விடுகின்றனர். பலர் வாட்ஸ் பேபுல் வாழும் வாழ்க்கையை ரியல் லையில் வாழ்வதில்லை ..
தொடர்ச்சி..பிரச்சனைகளை!! ரியல் Life ல் நன்றி../ மனைவி புற்றுநோயில் மரணித்து 8 வரு ஆகிறது.