உண்ணாவிரதம்

உண்ணாவிரதம் – சில குறிப்புகள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இரண்டாவது முறையாக உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டேன். பாவமாக இருக்கிறது. ஐம்பது, ஐம்பத்தைந்து வயது தாண்டியவர்கள் திடீரென்று இம்மாதிரியான நடவடிக்கைகளில் இறங்குவது சரியல்ல. எதிர்ப்பைத் தெரிவிக்க, மிரட்டல் விடுக்க வேறு பல வழிகள் உள்ளன. உண்ணாவிரதம் மிகவும் சிரமமானது. அப்படியே அதை இருந்துதான் தீரவேண்டுமானால் சாகும்வரை என்று குறிப்பிடுவதை விட்டுவிட்டு, முடிந்தவரை என்று சொல்லலாம். இதன்மூலம் மீம்களில் இருந்து தப்பலாம்.

நிற்க. இச்சந்தர்ப்பத்தில் உண்ணாவிரதம் இருக்க விரும்புகிறவர்களுக்கு சில வழிமுறைகளைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. உண்ணாவிரதத்தை ஒரு வலுவான ஆயுதமாகப் பிரயோகித்து, கணிசமான வெற்றி கண்டவர் மகாத்மா காந்தி. பொதுவாக சைவ உணவாளர்களுக்கு உண்ணாவிரதம் சிரமம். ஏனெனில் உணவின் முழுப் பகுதியுமே அதில் கார்போஹைடிரேட்தான். உண்டுகொண்டே இருப்பதும், இன்சுலின் சுரந்துகொண்டே இருப்பதும் விரத விரோதச் செயல்பாடுகள். பிறந்தது முதல் தொடரும் இவ்வழக்கத்தைச் சட்டென்று ஒரே நாளில் மாற்ற முடியாது. வயிறு நிறைந்திருக்கும்போது, என்னால் சாப்பிடாமலும் இருக்க முடியும் என்று சொல்வது சுலபம். ஆனால் ஒருவேளை உணவைத் தவிர்த்தாலே மன உறுதி நொறுங்கிவிடும். காந்தியால் இது முடிந்ததற்குக் காரணம், அடிப்படையிலேயே அவர் பெரிய உணவு விரும்பியல்ல. வாழ்நாள் முழுதும் மிக எளிய உணவையே உட்கொண்டு வந்திருக்கிறார். நடுத்தர வயதுக்குப் பிறகு அது இன்னமும் சுருங்கி, எப்போதும் அரை வயிறு உணவு என்பதைப் பழக்கப்படுத்தியிருக்கிறார். விரதம் இருக்க முடிவு செய்தால், அதற்கான முன் தயாரிப்புகளைக் கவனமாக மேற்கொண்டார். தவிர அவர் நிறைய நடந்தார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொண்டார்.

அதெல்லாம் செய்யாமல், திடீரென்று உண்ணாவிரதம், அதுவும் சாகும்வரை என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தால் மட்டும் விரதம் கைகூடிவிடுமா?

ஜீயருக்கு மட்டுமின்றி, விரதம் இருக்க விரும்புகிற அனைவருக்குமான பொதுவான வழிமுறைகள் சிலவற்றைச் சொல்கிறேன். இது முழு சாப்பாட்டு ராமனாக இருந்து ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு மட்டும் உட்கொள்பவனாக மாறியவனின் அனுபவ அறிவு.

1. சாகும் வரை விரதம் என்றெல்லாம் திட்டமிடாதீர்கள். முடிந்தவரை விரதம் என்று சொல்லுங்கள். தாக்குப் பிடிக்கும் தினங்களை அதிகரிப்பது உங்கள் லட்சியமாக இருக்கட்டும்.

2. விரத தினத்துக்குப் பதினைந்து நாள்களுக்கு முன்பிருந்து உங்களை ஆயத்தம் செய்துகொள்ளுங்கள். முதற்கண் சர்க்கரையை அதன் அனைத்து வடிவங்களிலும் தவிர்த்துவிடவும். பால் சேர்த்த காப்பியை சுத்தமாக நிறுத்தவும்.

3. இனிப்பை நிறுத்திய இரண்டு நாள்கள் கழித்து அரிசி, பருப்பு வகை, கோதுமை, எண்ணெய் இவை நான்கையும் ஒரே சமயத்தில் நிறுத்தவும். மூன்று வேளை உணவு என்பதை இரு வேளைகளாக்கிக்கொண்டு மதியத்துக்கு பச்சைக் காய்கறிகளையும் இரவு சமைத்த காய்கறிகளையும் மட்டும் உட்கொள்ளவும். இந்தக் காய்கறிகளில் கிழங்கு ரகங்கள் கூடாது.

4. ஐந்தாம் நாள் முதல் இரவு சமைத்த காய்கறிகளுக்கு பதில் நட்ஸ் எடுத்துக்கொள்ளவும். பாதாம், வால்நட், மகடமியா போன்றவற்றை உண்ணலாம். பிஸ்தா, முந்திரி கூடாது. பசி அடங்கும்வரை சாப்பிடுங்கள்.

5. எட்டாம் நாள் முதல் காலை உணவாக ஐம்பது கிராம் வெண்ணெய் மட்டும் சாப்பிட்டுவிட்டு அதோடு இரவு உணவுக்குப் போய்விட வேண்டும். அதே நட்ஸ். இந்த இரு உணவுகளுக்கும் இடையே பன்னிரண்டு மணி நேர இடைவெளி கட்டாயம்.

6. ஒன்பதில் இருந்து பன்னிரண்டாம் நாள் வரை இந்த உணவுப் பழக்கத்தைச் சற்று மாற்றவும். முதல் உணவு மாலை 4 மணிக்குத்தான். அப்போது கொஞ்சம் வெண்ணெய், ஐம்பது கிராம் நட்ஸ் சாப்பிடுங்கள். சரியாக நான்கு மணி நேரம் கழித்து இரவு எட்டு மணிக்கு பனீர், காய்கறிகள் சாப்பிடுங்கள்.

7. 13, 14ம் நாள் இரவு உணவு மட்டும். பனீர், காய்கறிகள், வெஜ் சூப் என்று இஷ்டத்துக்குச் சாப்பிடவும். ஓரிரவு உண்டால் அதோடு மறுநாள் இரவுதான் அடுத்த உணவு.

8. 15ம் நாள் காலை அரைக் கட்டு கீரை, ஒரு பிடி கொத்துமல்லி, கொஞ்சம் கருவேப்பிலை, ஒரு பிடி புதினா, இஞ்சி, அரை மூடி தேங்காய், ஒரு தக்காளிப் பழம், ஒரு வெள்ளரிக்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து ஸ்மூதி செய்து அருந்தவும். அன்றிரவு ஒரு தம்ளர் பால் மட்டும் அருந்தலாம்.

9. இந்தப் பதினைந்து தினங்களும் தினசரி ஐந்து லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். காப்பி, டீ, பழ ரசங்கள், பால், தயிர், மோர் எதையும் அருந்தாதிருப்பது அதனினும் அவசியம்.

இதன்பின் நீங்கள் ஒரு நல்ல நாள் பார்த்து, கல்யாண மண்டபம் தேர்ந்தெடுத்து உண்ணாவிரதத்துக்கு அமர்ந்தால் குறைந்தது ஐந்து நாள் தாக்குப்பிடிக்க முடியும். இக்கால உண்ணாவிரதங்களில் தண்ணீர் அனுமதி உண்டா என்று தெரியவில்லை. தண்ணீரில் கலோரி கிடையாது. அது காற்றைப் போலத்தான். எனவே தன்ணீர் குடிக்கலாம் என்றால் ஏழு நாள் முதல் ஒன்பது நாள் வரையிலுமேகூட உண்ணாதிருக்க முடியும்.

என்ன ஒன்று, உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் இருக்கக்கூடாது. இந்த இரண்டும் இருப்பவர்களுக்கு இந்தச் சிந்தனையே வரக்கூடாது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணாவிரத மேடைக்குப் போனால் ஹைப்போக்ளைசீமியாவுக்கு ஆளாவார்கள்.

இவ்வாறாக விரதம் இருந்துவிட்டு அதை முடிக்கும்போது ஜூஸ் குடித்து முடிப்பது ஒரு பெரிய கேனத்தனம். அரை தம்ளர் உருக்கிய நெய் அருந்தி விரதத்தை முடிக்கலாம். அல்லது இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சாப்பிட்டு முடிக்கலாம். அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து உப்புப் போட்டு எலுமிச்சை ஜூஸ் அருந்திவிட்டு பிறகு வழக்கம்போல் உண்ணலாம்.

இப்படி இருந்தால் உண்ணாவிரதம் ஓரளவு சாத்தியம். முதல் நாள் வரை மூக்குப் பிடிக்க சாப்பிட்டுக்கொண்டிருந்துவிட்டு, திடீரென்று மறுநாள் முதல் உண்ணாவிரதம் என்றால் இப்படித்தான் எஸ்.வி. சேகர் சொன்னார், ஏஞ்சலினா ஜோலி சொன்னார் என்று ஒண்ணரை நாளில் ஏறக்கட்ட வேண்டி வரும்.

LikeShow more reactions

Com

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி